எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

சனி, 5 அக்டோபர், 2019

அன்பாலே ஆண்டவனைக் கட்டிய பூசலார். தினமலர் சிறுவர்மலர் - 36.

அன்பாலே ஆண்டவனைக் கட்டிய பூசலார்.
ஒருவர் தன் வாழ்க்கையில் நிறைய உதவி செய்தவர்களை நினைத்து ”உங்களுக்கு மனசுக்குள்ள கோயில் கட்டிக் கும்பிடுறேன்” என்று புகழாரமாகச் சொல்வார்கள். நிஜமாகவே மனசுக்குள் கோவில் கட்டினார் ஒருவர். அதுவும் மாபெரும் ராஜா ஒருத்தர் கஷ்டப்பட்டுக் கட்டின நிஜக்கோயிலுக்குக் கூடப் போகாமல் அன்பாலே அமைந்த இந்த ஆலயத்துலதான் முதல்ல எழுந்தருள்வேன். ராஜாவே கட்டினதா இருந்தாலும் எல்லாம் அடுத்தபடிதான்னு சிவனே கனவுல சொன்னாராம். அது என்னன்னு பார்ப்போம் வாருங்கள் குழந்தைகளே.
காஞ்சி மாநகரம். கைலாசநாதருக்காகக் கற்றளியில் மாபெரும் கோவில் அமைத்துக் கொண்டிருந்தான் மன்னன் காடவர்கோன். பார்ப்பவர் அனைவரும் வியக்கும் வண்ணம் மாபெரும் யாளிகளும் சிம்மங்களும் நந்திகளும், யானைகளும் கொண்டதாக உருப்பெற்றுக் கொண்டிருந்தது அந்தக் கோவில். அதன் கொடுங்கைகள் எல்லாம் கல்லாலே அமைக்கப்பட்டு பார்ப்பவர்க்கு அதுதான் உண்மையான கைலாயமோ என்று மயக்கம் ஏற்படும் அளவுக்கு இருந்தது.
அதே சமயம் தொண்டை நாட்டில் திருநின்றவூர் என்ற ஊரில் வாழ்ந்து வந்த பூசலார் என்ற எளியவர் இறைவனுக்குக் கோயில் கட்ட விரும்பினார். ஆனால் அவரிடம் அதற்கேற்ற பொருள் வசதி இல்லை.  ஆனால் மனதிலேயே கோவிலுக்குத் தேவையான கற்கள், மரம் ஆகியன இருப்பதாக எண்ணி பூமி பூஜை செய்து திருக்கோயில் கட்டும் பணியை ஆரம்பித்தார்.

மனக்கண்ணிலேயே கருவறை, விமானங்கள், பிரகாரங்கள், கல் சிற்பங்கள், கொடுங்கைகள், புஷ்கரணி, ஸ்தலவிருட்சம், மதில்கள் என விமரிசையாக எண்ணியது எண்ணியபடி கோவிலைத் தினம் தினம் உருவாக்கிக் கொண்டே வந்தார். அங்கோ காஞ்சிபுரத்திலே இவர் மனத்தில் நினைத்தது போல் உண்மையான கோவில் தத்ரூபமாக நிஜமாக எழும்பிக்கொண்டே வந்தது.
ராஜா காடவர்கோன் தன் கருவூலத்தைக் கரைத்துப் பெரும் பொருட்செலவில் தான் கட்டிவந்த மாபெரும்கோவிலைப் பெருமிதமாக நிமிர்ந்து பார்த்தான். இறைவன் திருவுருவச்சிலையைப் பிரதிஷ்டை செய்து குடமுழுக்கு செய்யவேண்டியதுதான் பாக்கி. கும்பாபிஷேகத்துக்கு நாள் குறித்து யாகசாலை பூஜை எல்லாம் செய்ய ஏற்பாடு செய்துவிட்டான்.
அன்றிரவு அவன் கனவில் சிவபெருமான் தோன்றி, “ காடவர் கோனே, நீ செய்யும் குடமுழுக்கை நாளை நடத்தாமல் இன்னொரு நாள் நடத்து. திருநின்றவூரில் என் அன்பன் பூசலார் கட்டிவரும் கோவிலில் நாளை நான் குடிபுக வேண்டும். அன்பாலே ஆலயம் அமைத்து வருகிறான் அவன். என்றும் அவன் அன்புக்கு நான் அடிமை. “ என்று சொல்லி மறைந்தர்.
மன்னனுக்கு அடுத்து தூக்கம் ஏது ? விழித்து எழுந்து அமர்ந்தான். தன் பொக்கிஷத்தில் இருந்த நவநிதியத்தைக் கொட்டி மன்னனாகிய தான் கட்டிய கோவிலை விட அந்தப் பூசலார் கட்டிய கோவில் பெரிய கோவிலாயிருக்குமோ என்ற ஐயம் அவன் மனதை அரித்தது. விடிந்ததும் விடியாததுமாக அப்பல்லவ மன்னன் தன் குதிரையில் புறப்பட்டு வாயுவேகம் மனோவேகமாக திருநின்றவூர் சென்றடைந்தான்
அங்கே சாலையில் சென்று கொண்டிருந்த மக்களிடம் ”இங்கே பூசலார் என்பார் கட்டிக் கொண்டிருக்கும் கோயில் எங்குள்ளது” என வினவினான்.
அவர்கள் மன்னனைப் பணிந்து வணங்கி ,” இங்கே பூசலார் என்ற வேதியர் உள்ளார். ஆனால் அவர் கோவில் ஏதும் கட்டவில்லையே ?” எனக் கூறினர்.
குழம்பிய மன்னன் பூசலார் இருக்குமிடம் விசாரித்துச் சென்றடைந்தான். அங்கே சென்றால் பூசலார் ஒரு எளிய குடிலில் கண்மூடி அமர்ந்திருந்தார். மன்னன் அவரருகில் சென்று ,” ஐயா பூசலாரே. நீங்கள் இங்கே ஏதோ கோவில் கட்டுவதாகச் சொன்னார்களே. எங்கே அந்தக் கோவில்” எனக் கேட்டான்.
தான் கட்டிய கோவிலைவிட சிவன் கூறிய அப்பேர்ப்பட்ட பெருமை உடைய கோவிலைக் காணும் ஆவல் அவன் விழிகளில் மின்னியது. மன்னனைப் பார்த்த பூசலார் நாணிக் குனிந்தார். “ மன்னர்பிரானே, நான் கோவில் கட்டியது உண்மைதான் அது உங்களுக்கு எப்படித் தெரியும் “ என்று கேட்டார்.
”சிவனே சொன்னார். அக்கோவிலில் இன்று குடமுழுக்கு எனவே அங்கே தான் செல்லவேண்டும் என்று சொல்லி நான் கட்டிய மாபெரும் கோவிலுக்கு இன்னொரு நாள் குடமுழுக்கை வைக்கும்படிக் கூறினாரே. “ என்று கூறிய மன்னனுக்கு இப்போது குழப்பம் அதிகமாகிவிட்டது.
இதைக் கேட்ட பூசலார் கண்களில் ஆனந்தக் கண்ணீர் நிற்காமல் சொரிந்தது. ” ஆகா பொருள் வசதியின்றி என் உள்ளத்திலேயே சிவனுக்குக் கோவில் கட்டி இன்றைக்குக் கும்பாபிஷேகத்துக்கு நாள் குறித்திருந்தேன். இறைவன் நான் கட்டிய கோவிலில் குடிபுகுவதாக மன்னராகிய உங்களிடம் கூறியுள்ளாரே. என் அன்புதான் ஆலயம். உள்ளம்தான் கோவில். அதன் எல்லைக்கு அளவில்லை. என்னே பெரும்பேறு “ என்று புளகாங்கிதமடைந்தார்.
இதைக் கேட்ட மன்னனுக்கு மெய்சிலிர்த்துவிட்டது.  ’பொருளால் தான் எவ்வளவு பெரிய ஆலயம் அமைத்தாலும் சிவனருளோ அன்பாலயத்தின்பால் சென்று கட்டுப்பட்டுவிட்டதே. எனவே பொருளைவிட அன்பே மதிப்புமிக்கது , வணங்கத் தக்கது ’ என்று எண்ணிய அவன் பூசலாரை வணங்கிச் சென்றான்.
எனவே ஆடம்பரத்தைவிட உண்மையான அன்புதான் என்னிக்குமே ஜெயிக்கும். பொய்யா அன்பு செலுத்தாம நாம் அனைவரிடமும் உண்மையான அன்பைச் செலுத்துவோம் குழந்தைகளே. 

டிஸ்கி 1 :-  இந்தக் கதை இதிகாச புராணக் கதைகள் என்ற தலைப்பில் 27 . 9. 2019  தினமலர் சிறுவர்மலர் இதழில் இடம்பெற்றுள்ளது. நன்றி தினமலர் சிறுவர் மலர், தனது அழகான ஓவியங்களால் கதைக்கு எழில்கூட்டும் ஓவியர்கள் அஷோக் &  ரஜனி & எடிட்டர் தேவராஜன் ஷண்முகம் சார்.
டிஸ்கி 2 :- இதிகாச புராண கதைகளைப் பாராட்டிய வாசகர்கள் ஆடுதுறை ச. ராம்சுதன், மணச்சநல்லூர் பால அபர்ணா, வந்தவாசி காசிநாதன் ஆகியோருக்கு நன்றி. 

2 கருத்துகள்:

  1. கோடி கொடுத்து ஆண்டவனை தரிசிக்க அவசியமில்லை. மனமது செம்மையானால் மந்திரங்கள் செபிக்க வேண்டாம் என்றார்களே. தெரிந்த கதை ஆனாலும் குழந்தைகளுக்கு அவசியமானது. தொடர்க பணி

    பதிலளிநீக்கு
  2. நன்றி கௌசி

    வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...