”வில்லுக்கொரு விஜயன்” என்று நாம் அர்ஜுனன் பற்றிப் பெருமையாகக் கூறுகிறோம். இயற்கையாகவே பாண்டவரிலும் கௌரவரிலும் அவன் திறமையானவனாக இருந்தாலும் அவனை இன்னும் ஜொலிக்கச் செய்ய துரோணர் சில சோதனைகளைச் சந்திக்க வேண்டி வந்தது. அதுமட்டுமல்ல. அவர் வாழ்வே சோதனை மயம்தான் அது என்ன என்று பார்போம் குழந்தைகளே.
பரத்துவாஜ முனிவரின் புதல்வர் துரோணர். அவரின் தாய் பெயர் கிருதசி. துரோணருக்கும் கிருபாசாரியாரின் தங்கை கிருபிக்கும் திருமணம் முடிந்து அஸ்வத்தாமன் என்ற அழகான குழந்தை பிறந்தது. அவன் சிரஞ்சீவியாக இருப்பான் என்று ஈசனிடம் வரம் பெற்றுப் பிறந்தவன். துரோணர் பரசுராமரிடம் வில் வித்தை பயின்றவர். என்ன இருந்து என்ன துரோணரை வறுமை வாட்டியது.
சிறு குழந்தையான அஸ்வத்தாமன் பாலுக்கு அழும்போதெல்லாம் சாதக்கஞ்சியைப் பால் என்று புகட்டும் துயரத்துக்கு ஆளானாள் கிருபி. அப்போதுதான் துரோணருக்குத் தன் குருகுல நண்பரான துருபதன் என்ற பாஞ்சால தேச அரசன் தான் பட்டத்துக்கு வந்ததும் தன் நாட்டில் பாதியைத் தருவதாக நட்புமுறையில் சொன்ன வாக்கு நினைவு வந்தது.