எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

செவ்வாய், 31 அக்டோபர், 2017

அசடன் – ஒரு பார்வை.

அசடன் – ஒரு பார்வை.



மொழிபெயர்ப்பு நூல்களை விமர்சிக்கும்போது மொழிபெயர்ப்பை விமர்சிப்பதா அல்லது நூலை விமர்சிப்பதா என்ற குழப்பம் அடிக்கடி ஏற்படுவதுண்டு. ஏனெனில் மொழிபெயர்ப்பை விமர்சிக்க அது பற்றி வெவ்வேறு மொழிகளிலோ அல்லது ஆங்கிலத்திலேயே வெவ்வேறு ஆசிரியர்களாலோ எழுதப்பட்டதை வாசித்திருக்க வேண்டும். நூலை விமர்சிக்கும்போது அந்நூலின் மூலக்கதை ஆசிரியர் எழுதிய காலகட்டத்தை ஒட்டியும் தெரிந்திருக்க வேண்டும். மொழிபெயர்ப்பாளர் மிகச் சரளமாக மொழிபெயர்த்திருந்தால் அது அவர் எழுதியதோ என்னும் இலக்கியமயக்கம் நம்மை ஆட்கொண்டுவிடும்.

 

இந்நூலும் அப்படித்தான் , குற்றமும் தண்டனையும், அசடன் ஆகிய இரு நாவல்களும் மொழிபெயர்ப்பு நாவல்கள். ரஷ்யாவை பின்புலமாகக் கொண்ட கதைகள். ஆசிரியர் ஃபியோதர் தஸ்தயேவ்ஸ்கி. இதன் தமிழ் மொழிபெயர்ப்பாளர் சுசீலாம்மா. ஆனால் படிக்கும் ஒவ்வொரு கணமும் தஸ்தயேவ்ஸ்கியும் சுசீலாம்மாவும் சேர்ந்தே கதை சொல்வது போல உணர்வேன்.



கிட்டத்தட்ட அசடனைப் படிக்க ( நிறைய இடைவெளிகள் விட்டு ) ஐந்து ஆண்டுகள் ஆயிற்று. ஆனால் குற்றமும் தண்டனையையும் நூலை பத்தே நாட்களில் படித்து முடித்தேன். ஒரு வகையில் அது ரஸ்கோல்னிகோவ் என்ற மனிதனின் ஆழ்மன விகாரங்கள் பற்றியது. மேலும் சோனியா துனியா ஆகிய இருபெண்களின் துயரக்கதைகளும் அடக்கம். ஆனால் அசடனில் மிஸ்கின், நஸ்டாஸியா, அக்லேயா, ரோகோஸின், ஆகியோரின் எண்ணக் கலவை, உரையாடல்களின் உண்மைத்தன்மை, யதார்த்தம் பல்வேறு இடங்களில் ஒருவரைப் பற்றி ஒருவர் அறிந்துகொண்டதை வாக்குமூலங்களாகவும் உண்மைகளாகவும் விவரிப்பது நிகழ்ந்துகொண்டே இருக்கிறது. ( எண்ட்லெஸாக )  

 

மிஸ்கின் தூய உணர்வுகளும் தூய எண்ணங்களும் கொண்ட புனித பிம்பம், அக்லேயாவும் அப்படியே ஆனால் மிஸ்கினும் அவளும் சூழ்நிலையாலும் உணர்ச்சிகளாலும் ஆட்டுவிக்கப்படுகிறவர்கள். நஸ்டாஸியா பாவப்பட்ட ஆன்மாவாக தன்னை நினைத்துத் துன்புறுத்திக் கொள்கிறாள். ரோகோஸினோ கடவுள் பாதி மனிதன் பாதி கலந்து செய்த கலவையாக கடைசியில் மிருகமாகவும் மாறிவிடுகிறான்.



அங்கே சுவிட்ரிகைலோஸ் போல் இங்கே டாட்ஸ்கி, இளவயதில் நஸ்டாஸியாவின் வாழ்வை நாசமாக்கிய மனிதர் , இவர் உண்டாக்கிய மன உளைச்சல்களே அவளது இறப்புவரை தொடர்கிறது. இபான்சின், இவோல்ஜின் இருவரும் இருவேறு குணம் கொண்ட ராணுவத் தளபதிகள், லிசாவெதா , நீனா இவர்களின் மனைவிகள். லிசாவெதா அடிலெய்டா, அக்லேயா, அலெக்ஸாண்ட்ரா  ஆகிய தன் மூன்று பெண்களின் நலனில் அக்கறை கொண்ட தாய். பெலோகான்ஸ்கி இவர்களின் ஞானத்தாய். கன்யா, வார்வரா, கோல்யா நீனாவின் பிள்ளைகள், லெபதேவ், ஆண்டிபர்தோவ்ஸ்கி, ஃபெர்ட்டிஷ்சென்கோவ், கெல்லர் ஆகிய நெகட்டிவ் காரக்டர்களும் உண்டு. யெவ்கெனி பாவ்வோவிச், ப்டித்சின் போன்ற நேர்மறை மனிதர்களும் உண்டு.



நம் சராசரித்தனங்களுடன் கூடவே நுண்ணிய உணர்வுகளையும் ஒவ்வொருவரும் உணர்ந்திருக்கிறார்கள், யாருமே முட்டாள் அல்ல என்பது கதையின் மைய இழை. தஸ்தயேவ்ஸ்கியின் கதைகள் மன ( அவசங்கள், எழுச்சிகள் ) உணர்வுகளையும் சிறிது மனநிலைப் பிறழ்வுகளையும் சராசரித்தனங்களையும் அதிமேதாவி எண்ணங்களையும் பேசக்கூடியவை.

 

நல்லவர்கள் அசடர்களாகக் கருதப்படுவதும், அசடர்கள் எளியவர்களாக இருப்பதும் அவர்கள் சிறிது மனநிலை தப்பியவர்களாகப் பார்க்கப்படுவதும் சமூகத்தில் காணக்கூடிய ஒன்றுதான். எல்லாவற்றுடனும் சமரசம் செய்து ஒத்துப் போபவர்களை அசடர்கள் என்று பிரித்து விடுகிறது சமுதாயம். அதற்கு மிஸ்கினும் விதிவிலக்கல்ல. சொல்லப்போனால் எல்லாருக்கும் நன்மை செய்யும் ( நல்லவர்களைஅசடர்களை சமூகம் எள்ளியே வந்திருக்கிறது. முடிவில் மனநிலை பிறழ்ச்சியில் ஆழ்ந்து போவதையே நல்ல தன்மையாக, களங்கமுறாத தன்மையாகக் காட்டி முடிந்திருக்கிறது கதை. மிஸ்கினுக்கு வேறு பல முடிவுகளை, தீர்வுகளை அளித்திருக்கலாம்.



ஆனால் ஆண்களின் உலகம் இன்றைக்கும் ( இரண்டு நூற்றாண்டுகளுக்கு முன்பிருந்ததை விட ) இன்னும் நெருக்கடி மிகுந்ததாக மாறி விட்டது. அவர்களின் பக்கத்தைப் பேசும் நாவல்களில் ஒன்றாக இது விளங்குகிறது. இந்நாவலில் வரும் காதல் போல் இன்றைய திருமண பந்தங்கள் இன்னும் அவர்களின் அக உலகையும் புற உலகையும் நாசம் செய்துகொண்டுதான் இருக்கின்றன.

   

யாரும் முழுமையான நல்லவர்களும் இல்லை. முழுமையான கெட்டவர்களும் இல்லை. சந்தர்ப்ப சூழ்நிலைகளே அவற்றை முடிவு செய்கின்றன என்று கூறுகிறது கதை .



இரண்டு நூற்றாண்டுகளுக்கு முந்தைய காலகட்டத்தின் ருஷ்ய வாழ்க்கை முறை , மேல்மட்டத்தின் பகட்டுகள், பிரபுக்களின் போலியான வாழ்க்கை முறைகள், அதிகார வர்க்கத்தின் அடக்குமுறைகள், கயமைகள் , கீழ்மட்டத்தின் நிறைவேறா ஆசைகள், ஏக்கங்கள், அத்துமீறல்கள், மதியதரவர்க்கத்தின் சமரசங்கள், என அனைத்தையும் உடைத்துச் சொல்லிச் செல்கிறார் தஸ்தயேவ்ஸ்கி.

 

நிறைய உரையாடல்கள் தத்துவார்த்தம் மிகுந்தவை. சிலவற்றில் தெய்வபக்தியும் பலவற்றில் தன்னையறிதலும் அறிவித்தலும் நிகழ்கிறது. தன்னைச் சுற்றி நடக்கும் பல விஷங்களையும் உலக அறிவையும், அரசியல் சித்தாந்தங்களையும் இப்போலிட் பாத்திரம் வெளிப்படுத்துகிறது.  நோய்க்கூறு பாதித்த ஒருவனின் கடைசி ஆசைகளும் எண்ணங்களும் பேப்பர் வடிவிலும்  அர்த்தம் தோய்ந்த உரையாடலாகவும் 20 நிமிடங்கள் நீடிப்பது அன்றைய காலகட்டத்துக்கே சாத்தியம். இன்று 30 செகண்டில் எதையும் அறிய விரும்பும் வாட்ஸப் வாசகர்களுக்கு இது சரிப்படாது.


குற்றமும் தண்டனையும் அளவுக்குக் கதை இருண்மையாக இல்லாவிட்டாலும் இறப்பு என்பதையும் மனநிலை சமன் தவறுதல் என்பதையும் மீட்சி என்கிறாரா என்ற குழப்பம் கடைசியில் ஏற்பட்டது உண்மை. அன்பு அனைத்தும் ஆக்கும் . ஆனால் இங்கே தனித்தும் விடப்படுகிறது

சமயம், அரசியல், சமூகம், தனிமனித உணர்வுகள், ஆகிய எல்லாவற்றிலும் முகத்தில் அறையும் யதார்த்தத்தை முன்வைக்கிறார் என்பதால் அசடன் இன்னும் கூட வாசிக்கப்படுபவனாக இருக்கிறான்.

 

இதில் நான் ரசித்த சில இடங்கள்


அப்படி என்னைப் பலி கொடுக்க என்னால் முடியாது. ஒரு காலத்தில் நான் அப்படி நினைத்திருக்கலாம். இப்போதும் கூட அதற்கு நான் ஆசைப்படலாம். ஆனால் என்னுடன் இருந்தால் அவள் தன்னைத்தானே அழித்துக் கொண்டுவிடுவாள் என்பது எனக்கு உறுதியாகத் தெரியும். அதனாலேயே  நான் அவளிடமிருந்து விலகிப் போகிறேன். இன்று காலை ஏழு மணிக்கு அவளைப் பார்த்திருக்க வேண்டும். ஆனால் ஒருவேளை நான் இப்பொழுது அப்படிப் போகாமலும்கூட இருக்கலாம். அவள்மீது நான் வைத்திருக்கும் அன்பை ஏற்றுக்கொள்ள அதைத் தாங்கிக் கொள்ள அவளது அகந்தை அவளை ஒருபோதும் அனுமதிக்காது. அதனாலேயே அவளால் என்னை மன்னிக்கவே முடியாது. முடிவில் நாங்கள் இருவருமே அழிந்துதான் போவோம்

--
நஸ்டாஸியா பற்றி அக்லேயாவிடம் மிஷ்கின்

* ”
எனக்குப் பின்னால் என் நினைவாக ஒரு சிறிய நினைவுச்சுவட்டைக்கூட விட்டு விட்டுப் போவதற்கு எதுவுமே இல்லாதவனாக, ஒரு சின்ன ஓசையோ. ஏதேனும் ஒரு சின்னத் தடமோ, தடயமோ, ஒரு சிறிய நற்செயலோ - இது போல எதையுமே விட்டு விட்டுச் செல்லாதவனாகவே நான் போகப் போகிறேன்.” -- இப்போலிட் 

ஹ்ம்ம் நானும் கூட அப்படித்தான்.

*.
திடீரென அனைத்திலிருந்தும் தொலைந்துபோய்விடும் ஏக்கம் இவருக்கு மட்டுமா. எனக்கும்தான்.  :)

சிலசமயம் அங்கிருந்து சென்றுவிட வேண்டும் என்றும், ஒட்டுமொத்தமாக அங்கிருந்தே அகன்று போய்விட வேண்டுமென்றும் அவனுக்கு ஏக்கமாக இருந்தது. எவருமே இல்லாத ஒரு இருட்டான இடத்திற்குச் சென்று தன்னுடைய எண்ணங்களோடு மட்டுமே தனித்திருக்க முடியுமானால், அவன் எங்கிருக்கிறான் என்பதைப் பற்றி எவருக்குமே தெரியாமல் அவன் மட்டும் அங்கே இருக்க முடியுமானால் - தான் அப்போது மிக மகிழ்ச்சியாக இருக்கக்கூடும் என்று அவனுக்குத் தோன்றியது. .................... இந்த இடத்தில் அவன் அடியோடு மறக்கப்பட்டாக வேண்டும். ஆமாம், நிச்சயமாக அவனை அங்கிருப்பவர்கள் மறந்துவிடவேண்டும். இங்கே இருப்பவர்கள் எல்லோருமே அவனை அறியாதவர்களாகவும் நடந்ததெல்லாம் ஒரு கனவாக மட்டுமே இருந்தாலும் கூட எவ்வளவு நன்றாக இருக்கும்

--
மிஸ்கின்

.    

நூல் :- அசடன்

ஆசிரியர் :- ஃபியோதர் தஸ்தாயெவ்ஸ்கி

தமிழில் :- எம்..சுசீலா

பதிப்பகம் :- பாரதி புக் ஹவுஸ்.

பக்கங்கள் :- 672

விலை:- ரூ 600/-

4 கருத்துகள்:

  1. அருமையான விமர்சனம்
    நன்றி சகோதரியாரே

    பதிலளிநீக்கு
  2. வித்தியாசமான நூல், மதிப்புரை. பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு
  3. நன்றி ஜெயக்குமார் சகோ

    நன்றி ஜம்பு சார்

    வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

    பதிலளிநீக்கு
  4. //மொழிபெயர்ப்பு நூல்களை விமர்சிக்கும்போது மொழிபெயர்ப்பை விமர்சிப்பதா அல்லது நூலை விமர்சிப்பதா என்ற குழப்பம் அடிக்கடி ஏற்படுவதுண்டு. ஏனெனில் மொழிபெயர்ப்பை விமர்சிக்க அது பற்றி வெவ்வேறு மொழிகளிலோ அல்லது ஆங்கிலத்திலேயே வெவ்வேறு ஆசிரியர்களாலோ எழுதப்பட்டதை வாசித்திருக்க வேண்டும். நூலை விமர்சிக்கும்போது அந்நூலின் மூலக்கதை ஆசிரியர் எழுதிய காலகட்டத்தை ஒட்டியும் தெரிந்திருக்க வேண்டும். மொழிபெயர்ப்பாளர் மிகச் சரளமாக மொழிபெயர்த்திருந்தால் அது அவர் எழுதியதோ என்னும் இலக்கியமயக்கம் நம்மை ஆட்கொண்டுவிடும்.//

    மொழிபெயர்ப்பு நூல் எம்மொழியில் பெயர்க்கப்படுகின்றதோ அதைத் தாய்மொழியாக (இங்கே தமிழ்) கொண்டு, எம்மொழியில் அம்மூலநூல் எழுதப்பட்டதோ (இங்கே உருசிய மொழி - ஆங்கில மொழிபெயர்ப்பிலிருந்து என்றால் ஆங்கிலம்) அம்மொழி தெரியாதவர்களுக்காக மட்டுமே. இருமொழிகளும் நன்கு தெரிந்தவர்களுக்கு மொழிபெயர்ப்பேன்? எனக்கு உருசிய மொழி தெரிந்திருந்தால் நானேன் ''அசடனை'' வாங்கி படிப்பேன்? தமிழ்தெரிந்தால் திருவாசைத்தையும் திருக்குறளையும் நானாகவே படிப்பேன். ஏன் ஜி யு போப்பின் ஆங்கில மொழியாக்கத்தைப்படிப்பேன்? அம்மொழியாக்கம் ஆங்கிலேயர்களுக்காக பண்ணப்பட்டது. உங்கள் குழப்பம் காரணமேயில்லாதது. ஒன்று மூலநூலின் மொழி; அல்லது அதை பெயர்க்கப்பட்ட நூலில் மொழி (இங்கே முறையே உருசிய, ஆங்கில மொழிகள்) இதில் இரண்டிலொன்றைத் தெரிந்து அதில் வாசித்துவிட்டு அசடனை நீங்கள் மொழிபெயர்ப்பு சரியாக வந்திருக்கிற்தா என் விமர்சிக்க வேண்டுமா? அப்படித்தான் சொல்கிறீர்கள். ஏன் காலகட்டம் மட்டும்? அந்நூலில் பிற்புல பண்பாடும் தெரிந்திருந்திருப்பது நல்லது. ஆனால் அது முடிவென்றால், மொழிபெயர்ப்பு நூல்களை எவரும் வாசிக்க முடியாது. நூலை வாசிக்கும்போதே அக்காலமும் அப்பணபாடும் தானாகவே வந்து நிற்கும்படியே எழுதியிருப்பார். அதையும் நாம் சேர்த்தே இரசிப்போம். எனவே அசடனை வாசிக்க எனக்கு உருசியாவின் 19ம் நூற்றாண்டு வரலாறோ, வாழக்கை பணபாடோ முன்னரே தெரியவேண்டியதில்லை !.

    அப்படி அவர் எழுதியதோ என்ற இலக்கிய மயக்கம் தோன்றினால், மொழிபெயர்ப்பு மோசம் என்று பொருள். ஒரு மொழிபெயர்ப்பாளனின் முதலும் கடைசியுமான கடமை - மூல நூலை அப்படியே தருவது. தான் எதையுமே கலக்கக்கூடாது. அப்படி கலக்கும் போது, ஒரு மூலக்கதையெடுத்து பற்பல கற்பனைகள் கலந்து இல்லாத கதாபாத்திரஙகளை புதியதாகச் சேர்த்து, அல்லது இருக்கும் கதாபாத்திரங்களை அழித்துவிட்டு படைப்பதுவே. எ.கா. ப்ரண்டியின் ஆங்கில நாவல் ஜேன் ஐயரை மூலக்கதையாக எடுத்து வந்த திரைப்படம் ''சாந்தி நிலையம்''. செகப்பிரியரின் ஒதெல்லோ நாடகத்தை ''நிச்ச்ய தாம்பூலம்'' இப்படி நாவல்களும் உண்டு. இவை தழுவலகள் எனப்படும்.

    ஒன்று மட்டும் தெரியவேண்டும். எவ்வளவுதான் சிற்ப்பாக மொழிபெயர்ப்பு இருந்தாலும், மூலநூல வாசிப்பு இன்பம் முழவதும் மொழிபெயர்ப்பில் வராது. திருவாசகத்தைத் தமிழில் வாசிக்கும்போது, அதன் உயிர் - மணிவாசகரின் ஆழ்ந்த சிவபக்தியிலும், அவரின் மொழி அப்பக்திய எப்படி நமக்கு நல்க பயன்படுத்தப்படுகிறது என்பதையுன் உணர்கிறோம். மொழிக்கென்றே ஓர் அழகுண்டு. மொழிபெயர்ப்பில் அதைக்கொண்டுவர முடியாது. குறிப்பாக இங்கே அசடன் மூல மொழி உருசியனினிலிருந்து பெயர்க்கப்படவில்லை. அதன் ஆங்கில மொழியாக்கத்திலிருந்தால். எப்படி மூல நூலில் மொழியழகைத் தரமுடியும்?

    கதை மட்டுமே மொழிபெயர்ப்பில் சாத்தியம்.

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...