கூண்டுக்கிளி:-
=================
அவள் தங்கக் கூண்டுப் பறவை. விநாயகா மில்ஸின் ஓனர் விஸ்வநாதனின்
மகள் விசித்ரா.
அந்த ஆவேசக் கோஷங்கள் அவளுக்குப் புதியவை. அவளுக்கு ரொம்பவும்
ஆச்சர்யமாய் இருந்தது இப்படியெல்லாம் கொடுமைகள் உண்டாவென்று. தானும் ஊர்வலம் போகும்
அந்தப் பெண்களுடன் சேர்ந்து நடப்பதாய் நினைத்துப் பார்த்தாள். அது சுலபத்தில் நடக்கக்
கூடியதில்லை. டாடி பார்த்தால் தன் மானமே போய்விட்டதாக வானத்துக்கும் பூமிக்கும் குதிப்பார்.
மம்மியை நினைத்தவுடன் பிடரியில் வியர்த்தது அவளுக்கு.
அந்தப் பெண்கள் ‘லோயர் மிடில்’ வகுப்பைச் சார்ந்தவர்கள்.
சேலை அணிந்து கொண்டிருந்த அவர்கள் பெண் எரிப்பையும் வரதட்சணையையும் கண்டனம் செய்து
கொண்டு சென்றார்கள்.
போர்டு வாசகங்கள், “ பெண் எரிப்பை ஒழிப்போம்” எனக் கூப்பிட்டன.
“ வாங்காதே.. வாங்காதே.. வாலிபமே.. வரதட்சணை வாங்காதே. “
கொடுக்காதே கொடுக்காதே பெண்குலமே வரதட்சணை கொடுக்காதே.. “
”பொறுத்தது போதும் பெண்ணே பொங்கி எழு..”
”பெண்களைக் கேவலப்படுத்தும் ஆபாசப் புத்தகங்கள் விளம்பரங்கள்
படங்களைக் கொளுத்து. “
அவர்களின் வார்த்தைகள் சத்தியமானவையாய் வந்து காதை அறைந்தன.
டிரைவர் வண்டியை ஸ்டார்ட் பண்ணியதும்தான் தான் உறைந்து போயிருப்பது அவளுக்கு உறைத்தது.