உணவுப் பயணங்கள்.:- நியூ தில்லி
தில்லியின் அனலடிக்கும் கனல் கத்திரி வெய்யிலில் நடந்தால்
நாமே கத்திரி வற்றலாகிவிடுவோம். அங்கே சாலைகளில் விற்கும் ஜல்ஜீரா, குல்ஃபி, சேமியா
கலந்த பலூடா, கலர் குச்சி ஐஸ் , பானி பூரி இதெல்லாம் சாப்பிட்டா கோடையைச் சமாளிக்கலாம்.
தில்லியின் கரோல்பாக் சப்ஜி மண்டியருகில் நாங்கள் இருந்தோம்.
தினம் பகலில் இந்த ஜல்ஜீரா வண்டி வரும் . ஒரு க்ளாஸ் 2 ரூபாய் இருக்கும். கொத்துமல்லி
புதினா மிளகாய் போட்டு அரைத்த தண்ணீரில் எலுமிச்சை பிழிந்து இந்துப்பு கலந்தது போல்
ஒரு ருசி. நாக்கின் சுவைமொட்டுக்கள் சொட்டாங்கி போட்டு குடிக்கலாம். தாகமும் அடங்கும்.
அதே மதியத்தில் ஐஸ்வண்டி வரும். அதில் விதம் விதமான சிரப்புகள்
இருக்கும். நாம் ஐஸ் கேட்டால் நன்கு சீய்த்த வழுவழுவென்ற மரக்குச்சிகளை எடுத்து ஒரு டம்ளரின் நடுவில் வைப்பார். ஐஸ்பாக்ஸ் உள்ளேயிருந்து ஒரு ஐஸ் பாரை எடுத்து காய்
சீவுவது போன்ற ஒரு சீவியில் சீய்த்து அந்தக் குச்சி வைத்த டம்ளரில் போடுவார். ஐஸ்காரர்.
அதில் திராக்ஷை, மாங்கோ, பைனாப்பிள் இன்னபிற
கலர் சேர்த்த எசன்சுகளை லேயர் லேயராக ஊற்றி உருட்டிச் சேர்த்துக் கொடுப்பார். மேல்வீட்டு,
கீழ்வீட்டு எங்கவீட்டுப் பிள்ளைகளுடன் சேர்ந்து டம்ளர் சைஸ் குச்சி ஐஸ் தின்றது விநோதமான
அனுபவம்.