செவ்வாய், 9 டிசம்பர், 2014

நிலவுத் தேனீயும் சூரியப் பட்டாம்பூச்சியும்.

1.உன் நினைவு மகரந்தத்தோடு
பட்டாம் பூச்சிகள் சுற்றுகின்றன..
சேகரிக்கும் பூவாகிறேன்.

***********************************

2. உன்னைத் தேடித்தேடிக்
களைக்கும் இமைகள்
உன் வருகைப் பூ மலர்ந்ததும்
படபடத்து பட்டாம்பூச்சியாகின்றன..


**************************************
 
3. தங்கப் பட்டாம்பூச்சியாய் சூரியனும்
வெள்ளிப் பட்டாம்பூச்சியாய் நிலவும்
பூமிப்பூவை மாறி மாறி மொய்த்தபடி..

***************************************


4. எதிர்வீட்டுக் குழந்தை
அனுப்பிய முத்தப் புறாக்கள்
காற்றில் சப்தமிட்டு
கன்னத்தில் எச்சமிடுகின்றன..

**************************************

5. இரவுப் பூவை
உறிஞ்சியபடி பறக்கிறது
நிலவுத்தேனீ..

***************************************

6. இசைத் தேன்..
******************

வண்ணங்களின் இசையை
சிறகசைத்து  இசைத்தபடி
வருகின்றன பட்டாம்பூச்சிகள்..
மயங்கி விரிகிற பூவின் காதில்
தேன் சுரக்கத் துவங்குகிறது..

****************************************

7. ஓவிய வகுப்பில்
கரும்பலகையில்
பெரிதாய்ப் பிறக்கும்
பட்டாம்பூச்சியோடு
நோட்டுப்புத்தகங்களில் பிறக்கும்
குட்டிப் பட்டாம் பூச்சிகள்
கைகோர்க்கத் துவங்குகின்றன..

**************************************

8. உன் பார்வைப்பூக்கள்
என்னை நோக்கி விரிய விரிய
பட்டாம்பூச்சியாய் மிதக்கத் துவங்குகிறேன்.

*********************************************

9. தந்தைப் பூ தாய்ப்பூ
குட்டிப்பூ  மூன்றையும்
கன்னம் தடவி குசலம் விசாரிக்கிறது
சூரியப் பட்டாம்பூச்சி..

*****************************************

10. ஒவ்வொரு சொட்டுத்தேனையும்
அனுபவித்துப் பருகி
அந்தந்த நிமிடங்களில்
வாழ்கிறது பட்டாம்பூச்சி.

****************************************

11. ரீங்காரச் சாவி கொண்டு
பூக்களைத் திறந்து
தேனருந்திச் செல்கிறது
பட்டாம்பூச்சி..


***************************************

12. பூவின் மொழியில்
(காது) மடல்களில் பேசி
தேனாய்க் கனிய வைக்கிறது
பட்டாம்பூச்சி.

************************************

13. காமக் காற்றைப் பறந்துகடந்து
காதல்தேனில் மயங்கி
வீழ்ந்து கிடக்கிறது பட்டாம்பூச்சி

************************************

14. ஒவ்வொரு பூவிடமும்
அதற்கான மொழியில்
பட்டாம்பூச்சி பேசிக் களிக்க
மலர்ந்து சிலிர்க்கின்றன பூக்கள்.

*************************************

15. பூக்கள் தங்கள் காதுகளைத்
திறந்தபடி காத்திருக்கின்றன
பட்டாம்பூச்சிகள் சொல்லும்
ரகசியத்தைக் கேட்க.

டிஸ்கி:- இந்தக் கவிதைகள் 16- 28, 2014 புதிய தரிசனம் இதழில் வெளிவந்தவை. 


6 கருத்துகள் :

கீத மஞ்சரி சொன்னது…

நிலவுக்கும் கதிருக்கும் பூமிக்கும் கூட இறக்கை முளைத்துவிட படபடக்கும் பட்டாம்பூச்சிக் கவிதைகள் அற்புதம். பட்டாம்பூச்சிக் கூட்டத்துக்குள் ஊடுருவிப் பறந்த முத்தப்புறாக்கள் இட்ட கன்னத்து எச்சம் உச்சம். பாராட்டுகள் தேனம்மை.

Ramani S சொன்னது…

மலரைச் சுற்றும் வண்டு போல
கருத்து மாறாது சுற்றிச் சுற்றி வரும் அற்புதமான
கவிதைகளைப் படிக்கப் படிக்க
கள்ளுண்ட வண்டானோம்
மனம் கவர்ந்த படைப்பு
பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

Thenammai Lakshmanan சொன்னது…

மிக அருமையான பின்னூட்டத்துக்கு நன்றி கீது & ரமணி சார். !!!!!

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

வெங்கட் நாகராஜ் சொன்னது…

அருமையான கவிதைகள். பாராட்டுகள் சகோ.

Thenammai Lakshmanan சொன்னது…

நன்றி வெங்கட் சகோ :)

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...