திங்கள், 22 டிசம்பர், 2014

யானை டாக்டர்.யானை டாக்டர். :-
டாக்டர் கே என்று அறியப்படும் டாக்டர் கிருஷ்ணமூர்த்தி தன் வாழ்நாள் முழுவதையும் வனவிலங்குகளான யானைகளின் நலனிலும் அவற்றுக்கான மருத்துவத்திலுமே அர்ப்பணித்துள்ளார். இதை ஜெயமோகனின் கதையாகப் படிக்கும்போது மலைகளுள்ளும், காட்டிலும், யானைகளின் அருகிலும் வனாந்தரத்தின் எழிலிலும் இருப்பதை உணர முடிகிறது. அதே போல அங்கே இருக்கக்கூடிய எளிய அரிய விஷயங்களையும் மக்கள் வாழ்வியலையும் பகிர்ந்து போகிறார்.
வனத்துறை உயர் அதிகாரியின் பார்வையில் வனமும், யானைகளும் டாக்டரின் மருத்துவமும் சொல்லிச் செல்லப்படுகிறது. வனம் சார்ந்த வாழ்வியலையும் யானைகளையும் ( அவற்றின் ப்ரசவத்திலிருந்து பிணப்பரிசோதனை வரை செய்து ) பாதுகாப்பவர் என்ற முறையில் டாக்டர் கே செய்யும் சேவைகளைப் பாராட்டி அவருக்கு தன்னுடைய இன்ஃப்ளூயன்ஸ் மூலமாக மத்திய அரசின் உயரிய விருதைப் பெற்றுத்தர முனைகிறார் அதிகாரி.
அந்தப் போக்கில் வனத்தை மனிதர்கள் பாழ்படுத்துவது குறித்தும் சொல்லிச்செல்கிறார். அதில் பொதுப்படையாக படித்தவர்கள் பதவியில் இருப்பவர்கள் குடித்துக்கும்மாளமிட்டு பீர்பாட்டில்களை உடைத்துப் போட்டுவிட்டு விட்டேற்றியாகப் போவதாகக் குறிப்பிட்டு விட்டு சில பக்கங்களிலேயே அவர்களை ஐ டி கம்பெனிகளிலும் மல்டி நேஷனல் கம்பெனிகளிலும் வேலை செய்பவர்களாக சித்தரிக்கிறார். அதிலும் மாசம் லட்சரூபாய் சம்பளம் வாங்குவதாகவும் கொழகொழன்னு இங்கிலீஷ் பேசுவதாகவும் அதனால் தான் பிறவி மேதை என்று நினைத்துக்கொள்வதாகவும் குறிப்பிடுகிறார்.  பொறுப்பற்ற சிலர் இருக்கலாம். ஆனால் ஐ டி படித்துவிட்டு வேலைபார்ப்பவர்கள் மட்டுமே இதற்குக் காரணம் என்று குற்றம் சாட்டுவது போலிருக்கிறது.
சில நாட்களுக்கு முன் தேர்தல் முடிந்த சமயம் ஒரு அரசியல் சார்ந்த குடும்பம் தங்கள் அரசியல் கட்சி நண்பர்களோடு மலைக்குச் சென்றார்கள். அவர்களைப் போன்ற அரசியல்வாதிகளும் அதிகாரிகளும்தான் இதற்குப் பெரும்காரணம்.
மொத்தத்தில் சொல்லவந்த கருத்து என்னவோ வனத்தை மனிதன் பாழ்படுத்துகிறான் என்பதுதான். அதில் வாழும் உயிர்களை உபத்திரவப்படுத்துகிறான் என்பதுதான். அது அதிகார வட்டத்திலிருந்துதான் ஆரம்பிக்கிறது. இதை அதிகார வட்டமும் ஐ டி வட்டமும் மாற்றிக்கொள்ள வேண்டும்.
டாக்டரின் பெயர் விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்டும் அது கைவசப்படவில்லை. ஆனாலும் டாக்டர் நிகழ்த்தும் உரை மிகுந்த பயனுள்ளது. கடமையைச் செய் பலனை எதிர்பாராதே என்ற கீதை உபதேசம்போல இருக்கின்றது.  வாழும் இடத்தில் இருக்கும் உயிரினங்களோடு உயிரினமாகக் கலந்து வாழ்ந்து அவற்றின் வாழ்வியல் அறத்தைக் கெடுக்காமல் நிறைவடைவதே மனித வாழ்க்கை என உணர்த்துகிறார்
ஜெயமோகனின் அறம் தொகுப்பிலிருந்து இந்த யானை டாக்டர் என்ற ஒரு சிறுகதையை மட்டும் வனவிலங்களின் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வுக்காக விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் வெளியிட்டுள்ளது. இதில் இடம்பெற்றுள்ள வனமும் யானைகளும் உள்ள படங்கள் மாக்ரோ கலைஞர் என்று அறியப்படும் கே ஜெயராம் எடுத்துள்ளார். 


8 கருத்துகள் :

ADHI VENKAT சொன்னது…

சிறப்பான நூல் அறிமுகம். வாய்ப்பு கிடைத்தால் வாசிக்க முயல்கிறேன்.

Thenammai Lakshmanan சொன்னது…

நன்றி ஆதிவெங்கட்

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

நூல் அறிமுகம் அருமை...

வெங்கட் நாகராஜ் சொன்னது…

நல்ல விமர்சனம். இப்புத்தகம் இதுவரை படிக்கவில்லை.

Thenammai Lakshmanan சொன்னது…

நன்றி தனபாலன்சகோ

படிங்க வெங்கட் சகோ நல்லா இருக்கு :)

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும். !
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும். !

Angelin சொன்னது…

அழகிய விமர்சனம் ..வாங்கி வைக்க லைப்ரரில சொல்லணும் ..படிக்க ஆர்வமா இருக்கு

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...