எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

ஞாயிறு, 21 டிசம்பர், 2014

குழந்தைகளையும் தாக்கும் கொடூர நோய்கள்.:-

குழந்தைகளையும் தாக்கும் கொடூர நோய்கள்.:-
டல்லாஸ் பையர்ஸ் க்ளப் என்றொரு படம் வந்து ஏகப்பட்ட ஆஸ்காரை அள்ளியது. அந்தப்படத்தைப் பார்த்தபின் தான் எய்ட்ஸ்க்கும் மருந்து இருக்கிறது தெரிந்தது. ஆனால். அது பல வருடங்கள் தொடர்ந்து சாப்பிட வேண்டிய மருந்துகள். சலுகை விலையில் ஒரு கடையில் கிடைக்கும் என்றாலும் அந்த சொற்பப் பணத்திற்காக அந்த ஹீரோ படும் சிரமங்கள் கதையில் கண்ணீர் வரவழைக்கும்.  
குழந்தைகளைத் தாக்கும் நோய்கள் என்றால் பெரியம்மை, கக்குவான் இருமல், போலியோ, தொண்டை அடைப்பான், நிமோனியாக் காய்ச்சல், டிஹைட்ரேஷன், மலேரியா, டைஃபாயிடு, மஞ்சள் காமாலை, டெங்கு, சிக்கன் குனியா ஆகியனதான் கேள்விப்பட்டிருப்பீர்கள்.
இவைகளுக்கெல்லாம் தடுப்பு மருந்தும் மாற்று வைத்தியங்களும் கண்டுபிடிக்கப்பட்டுவிட்டன. ஓரளவு இவற்றை சொட்டு மருந்துகளும் தடுப்பூசிகளும் போடுவதனால் தடுத்து நிறுத்தி இருக்கிறார்கள்.
மரபணு மாற்றப்பயிர்களா அல்லது சுற்றுச்சூழல் மாசடைந்து வருவதாலா , பெற்றோர் காரணமா ,எனத் தெரியாமல் பிறவியிலேயே நோய்க்கூறு சுமந்து பிறக்கும் கிட்டத்தட்ட 20  சதவிகித சின்னஞ்சிறு குழந்தைகள் 5 வயதிற்குள்ளேயே இறந்து விடுகின்றார்கள்.
அவற்றில் மிகக்கொடூரமானது ஹெச் ஐ வி பாதித்த பெற்றோரிடமிருந்து பிள்ளைகளுக்குப் பிறப்பிலேயே வரும் எய்ட்ஸ் நோய். இவற்றுக்கு மருந்து கண்டுபிடிக்கப்பட்டு சலுகை விலையிலும் வழங்கப்படுகின்றது. இருந்தும் இது தொடர் மருத்துவம் கடைப்பிடிக்கவேண்டிய நோய்.
முப்பது வருடங்களுக்கு முன் தான் ஹெச் ஐ வி எய்ட்ஸ் வைரஸ் இருப்பதாகக் கண்டுபிடிக்கப்பட்டது. இது ஆப்ரிக்கக் காடுகளில் இருந்த ஒரு வகையான குரங்குகளுக்கு இருப்பதாகக் கண்டறியப்பட்டது. உலக அளவில் 3 கோடிப்பேர் இதனால் பாதிக்கப்பட்டுள்ளனர். உடலின் எதிர்ப்பு சக்தியை உருக்குலைக்கும் நோய் இது.
இது ஒரு தனிப்பட்ட நோய் என்பதை விட எல்லா நோய்களும் உடலில் புக எளிதில் இடம் கொடுத்து உடலைப் பலவீனப்படுத்தும் நோய் எனலாம். காய்ச்சல் , வயிற்றுப்போக்கு, வாய்ப்புண் ஆகியன பரவலாக இருந்தாலும் தீராக் காய்ச்சல் இதன் ஒரு கருவியாக உள்ளது. நோய் எதிர்ப்பு சக்தியைத் தீர்த்துக் கட்டும் நோய் என்பது பொருந்தும்.
ஜெர்மனியைச் சேர்ந்த டிமோத்தி ரே ப்ரவுன் என்பவருக்கு 2007 இல் லூகேமியாவுடன் எய்ட்ஸ் இருப்பதாகக் கண்டுபிடிக்கப்பட்டது. அதற்காக எலும்பு உட்திசு உயிரணு ( செல் ட்ரான்ஸ்ப்ளாண்டேஷன் தெரஃபி ) செய்த பின் அவருக்கு எய்ட்ஸ் குணமாகிவிட்டது. இந்த சிகிச்சை உயிருக்கு ஆபத்தானது மிகுந்த செலவும் ஆகும். இதை அனைவரும் செய்து கொள்ள இயலாது.
வாஷிங்க்டன் க்ளாட்ஸ்டோன் இன்ஸ்ட்யூட்டைச் சேர்ந்த விஞ்ஞானிகள் மனித உடலில் நிகழும் மாலிக்குலர் ஈவண்ட்ஸ் மாற்றம் உடலின் எதிர்ப்பு சக்தியை அழித்து சிடி 4 டி செல்ஸ் ( CD4 T cells ) ஹெச் ஐ வி தொற்றை உருவாக்கி எய்ட்ஸுக்கு வழிகோலுவதாக சொல்கிறார்கள்.
க்ளாட்ஸ்டோனில் வைராலஜி மற்றும் இம்யூனாலஜி ஆராய்ச்சி செய்துவரும் துறைத்தலைவர் வார்னர் சி க்ரீனி வெளியிட்ட இரண்டு ஆராய்ச்சி முடிவுகள் இதை நிரூபிக்கின்றன. ஹெச் ஐ வி தொற்றின்போது  IF116 எனப்படும் புரதத்தில்  ஹெச் ஐ வி  டி என் ஏ யின் படிமம்  இருப்பதாக சோதனையின் போது கண்டுபிடிக்கப்பட்டதாகக் கூறுகிறார்கள். இது மனித உடலில் உள்ள ( CASPASE-1 ) காஸ்பேஸ்-1 என்ற என்ஸைமைத் தூண்டி பைரோப்டோசிஸ்சுக்கு வழிகோலுகிறது. இது பயங்கரமான செல் இறப்புக்கு இட்டுச் செல்கிறது. இவ்வாறு மேலும் மேலும் செல்கள் மறு சுழற்சியாகப் பாதிக்கப்படும்போது அடிஷனலாக CD4 T செல்ஸ் அதி அபாய அளவை எட்டி உடலில் நோய் எதிர்ப்புச் சக்தியைச் சிதைத்து எய்ட்ஸுக்கு இட்டுச் செல்கிறது.
உலகம் தோறும் ஒவ்வொரு வருடமும் 2. 50, 000 குழந்தைகள் எய்ட்ஸ் பாதிப்போடு பிறக்கிறார்கள். முன்கூட்டியே செய்யப்படும் சிகிச்சையால் சில மருந்துகளை பிறந்தபின் 48 மணி நேரம் அளிப்பதன் மூலம் இரண்டாவதாகப் பிறக்கும் குழந்தைக்கு ஹெச் ஐ வி பாதிப்பு இல்லாமல் செய்யலாம் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள்.
முதன் முதலில் இப்படி சிகிச்சை அளிக்கபட்டு காப்பாற்றப்பட்ட குழந்தை மிஸ்ஸிபி பேபி என்று அழைக்கப்படுகிறார். மூன்று வயதான இக்குழந்தை ஹெச் ஐ வி பாதிப்பு சிறிதும் இல்லாமல் இருப்பதாகக்கூறி ரெட்ரோ வைரஸ் & ஆப்பர்ஜுனிஸ்டிக் இன்ஃபெக்‌ஷன் மாநாட்டில் கலந்துகொண்டாராம்.
கர்ப்பத்தில் இருக்கும்போதே தாய்க்கு ஹெச் ஐ வி இருந்தால் குழந்தைக்குத் தொற்றிவிடாமலிருக்க சில மருந்துகள் எடுத்துக் கொள்ளுமாறு பரிந்துரைக்கப்படுகின்றன. அப்படி எடுத்துக் கொள்ளாத தாய் ஒருவருக்குக் குழந்தை பிறந்ததும் அந்தக் குழந்தைக்கு ஹெச் ஐ வி சோதனை செய்யப்பட்டு அது உறுதியானதும் AZT, 3TC, NEVIRAPINE,  ஆகிய மருந்துகளைக் கொடுத்து டாக்டர் அட்ரா டெவிகிஸ் சிகிச்சை அளித்துக் கொண்டிருக்கிறார்.
பொதுவாக பிறந்த குழந்தைக்கு ஹெவியான மருந்துகள் அளிக்கப்படுவதில்லை என்றாலும் நோய் பாதித்த கூறு தெரிந்தால் ரிஸ்க் எடுத்து உடனடியாக மருந்துகள் கொடுக்கத் துவங்கி விடுகிறார்கள். இப்படி பாதிக்கப்பட்டுப் பிறந்த 60 குழந்தைகள் 48 மணிநேரம் மருந்துகள் அளிக்கப்பட்டு சோதனைக்கு உட்படுத்தப்பட்டார்கள்.
நேஷனல் இன்ஸ்டிடியூட் ஃபார் அலர்ஜி & இன்ஃபெக்‌ஷியஸ் டிஸீஸை சேர்ந்த டாக்டர் ஆந்தோனி பாக்ஸி இவ்வாறு முன்பே சிகிச்சை அளிப்பதன் மூலம் குழந்தைகள் காப்பாற்றப்படுவதோடு இதனால் பாதிக்கப்பட்ட மற்றையோரையும் நோயின் முந்தைய நிலைகளிலேயே முன்சிகிச்சை அளித்தால் காப்பாற்ற முடியும் என்ற எண்ணம் ஏற்படுகிறது என்று கூறி இருக்கிறார்.
அனைவருக்கும் கல்வி என்ற திட்டம் வந்தபின்னும் கூட ஹெச் ஐ வியால்  பாதிக்கப்பட்ட 1.45 லட்சம் குழந்தைகள் பள்ளிகளில் அனுமதிக்க மறுக்கப்படுகிறார்கள். என நாஸ் ஃபவுண்டேஷன் என்ற என் ஜி ஓ வழக்குத் தொடர்ந்துள்ளது.
நேஷனல் எய்ட்ஸ் கண்ட்ரோல் ஆர்கனைசேஷன் என்ற என் ஜி ஓ வின் கௌன்சல் ஆனந்த் க்ரூவர் இவ்வாறு எய்ட்ஸ் பாதிக்க குழந்தைகளுக்கு அரசு மற்று தனியார் பள்ளிகளில் அட்மிஷன் மறுக்கப்பட்டதாக ஜஸ்டிஸ் பி எஸ் சௌஹான், & ஜே செல்லமேஸ்வர் ஆகிய நீதிபதிகளின் முன்பு தெரிவித்து இருக்கிறார்.
அனைவருக்கும் கல்வி திட்டத்தின் கீழ் எய்ட்ஸால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் பற்றிய மருத்துவ விவரம் இணைக்கப்படவேண்டும் என்று பள்ளிகள் கூறுகின்றன. ஆனால் இணைக்கப்பட்ட பின் 6 – 15 வயதுள்ள குழந்தைகளுக்கு அட்மிஷன் மறுக்கப்படுவதாகவும், அல்லது சேர்ப்பிலிருந்து நீக்கப்படுவதாகவும் மற்ற மாணவர்களிடமிருந்து தனிமைப்படுத்தப்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இந்த இதுவரை என் ஜி ஓ 61 கேஸ்களில் இது போல புகார் வந்துள்ளதாகத் தெரிவித்துள்ளது. அரசாங்கமும் நேஷனல் கமிஷன் ஃபார் ப்ரொடெக்‌ஷன் ஆஃப் சைல்ட் ரைட்ஸ் என்ற நிறுவனமும் இந்தக் குழந்தைகளைப் பள்ளியில் சேர்ப்பதற்கான நெறிமுறைகளை வகுக்க வேண்டும் என்று கோர்ட் கட்டளையிடவேண்டும் என்று கேட்டுள்ளது. இது ஹெச் ஐ வியால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் அடிப்படை உரிமையை மறுக்கும் செயல் என்று கூறியுள்ளது.
டிஸ்அட்வாண்டேஜ்ட் க்ரூப் என்று பரிந்துரைக்கப்பட்டுப் பள்ளிகளில் இவர்களுக்கான இடங்கள் வழங்கப்படவேண்டும் என்று கோரியுள்ளது. ஆந்திரா, கர்நாடகா, உத்ராகண்ட், மணிப்பூர் ஆகிய இடங்களில் 2010 இல் இருந்து ஹெச் ஐ வி பாதித்த குழந்தைகளை டிஸ்அட்வாண்டேஜுடு க்ரூப் என்று பிரித்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
செல் ட்ரான்ஸ்ப்ளாண்ட் தெரெஃபி மூலம் 7 வருடங்களுக்கு முன் (டி மோத்தி ப்ரவுன் ) சிகிச்சை அளிக்கப்பட்ட ஒருவர் எய்ட்ஸிலிருந்து விடுபட்டு உள்ளார் என்று தெரிவிக்கிறார்கள். இரத்தத்தில் இருக்கும் இரத்த அணுக்களின் ஜீன்களை மாற்றுவதன் மூலம் ஹெச் ஐ வி பேஷண்டுகள் எய்ட்ஸ் வைரஸைத் தடுக்கலாம் என்று கூறுகிறார்கள்.
தாங்கள் ஒரு தவறும் செய்யாது பெற்றோரின் மூலம் நோய் சுமந்து, வாழ்க்கையைத் துவங்கும் முன்னே சோம்பிக்கிடக்கும் இக்குழந்தைகளின் வாழ்விலும் இந்தச் சோதனைகள், மருந்துகள் மூலம். ஒளி கிடைக்குமா மாற்றம் நிகழுமா என்று பார்ப்போம். .
அடுத்ததாக அச்சுறுத்தும் நோய் இளவயதில் கான்சர் :-
10 மில்லியன் இந்தியக் குழந்தைகள் புகையிலை உபயோகிப்பதாக ஒரு சர்வே சொல்கிறது 5.500 குழந்தைகள் இந்தியாவில் தினமும் முதன் முதலாக புகையிலை எடுத்துக் கொள்கிறார்கள். வாழ்க்கையில் பதின் பருவத்தில் ஏற்படும் மன அழுத்தம் குழந்தைகள் புகையிலை உபயோகிக்கத் தூண்டுதலாக இருப்பதாகக் கூறுகிறார்கள்.
இதில் ஆண் குழந்தைகள் மட்டுமல்ல 30 % பெண் குழந்தைகளும் அடங்கி உள்ளார்கள். பெரியவர்களைப் பார்த்தும், விளம்பரங்களைப் பார்த்தும் புகைக்கக் கற்கிறார்கள். பரிசோதனை முயற்சியிலும் அது என்ன என்று அறியும் ஆவலிலும் தொடங்கப்படும் அந்த முயற்சி தொடர்கதையாகி அவர்களைப் பீடிக்கிறது. அது மட்டுமல்ல அது பலவித கான்சரையும் உற்பத்தி செய்கிறது.
தொண்டைப் புற்று 50, 60 வயதில்தான் பெரியவர்களுக்கு ஏற்படும் அது இப்போது புகையிலைப் பழக்கத்தால் 15 வயதுப் பிள்ளைகளுக்கும் ஏற்படுகின்றது.  பிள்ளைகளின் பழக்க வழக்கங்களில் மாறுபாடு, மஞ்சள் படிந்த பற்கள், பசியின்மை, சிகரெட் துர்நாற்றம் உடைகளில் ஏற்பட்டால் உடனே பெற்றோர் கவனித்து சீர் செய்ய வேண்டும்.
காரணமில்லாமல் ஏற்படும் கான்சரும் உண்டு. அதை ம்யூட்டேஷன் காரணமாக ஏற்படும் கான்சர் என்பார்கள். பெண்களுக்கு மார்பகக் கேன்சரும், கர்ப்பப் பை கான்சரும் அதிக அளவில் ஏற்படுகிறது. இது சுகாதாரமின்மையாலும், உடலில் ஏற்படும் கோளாறுகளாலும் ஏற்படுகிறது. அரிப்பு, துர்நாற்றத்துடன் வெள்ளைப்படுதல், வயதான காலங்களில் இரத்தம் போகுதல் ஆகியன இருந்தால் கர்ப்பப்பை கான்சராக இருக்கலாம். மாமோகிராம் போன்றவை மார்பகக் கான்சரைக் கண்டுபிடிக்கத் துணை கோலுகின்றன.
15 % இது கான்சர் மரணங்களைக் குறைத்தாலும் மாமோகிராம் அட்வான்ஸ்ட் ஸ்டேஜில்தான் கான்சரைக் கண்டுபிடிப்பதால் அதனால் உபயோகம் இல்லை வேறு முறைகளைக் கையாள வேண்டும் என்றும் கூறுகிறார்கள். இதற்குமுன் டாமாக்ஸிஃபென் உபயோகித்ததால் இது மார்பகப் புற்று மரணங்களைத் தவிர்த்தது என்று டாக்டர் வெண்டர் கூறுகிறார். ப்ரிட்டிஷ் மெடிகல் கவுன்சில் வெளியிட்ட அறிக்கை ஒன்று மாமோகிராம் அடிக்கடி செய்து கொண்டாலும் இது மார்பகப் புற்று மரணங்களை அதிக அளவில் தடுக்கவில்லை என்று கூறுகிறது.
10 கோடியில் ஒருவருக்கு ஏற்படும் ஜெர்மினோமா எனப்படும் கான்சர் மூளைக்கட்டி ப்ரதிக் என்ற ஒரு 5 வயதுக் குழந்தையைத் தாக்கியுள்ளது பா என்ற ஹிந்திப் படத்தில் இதுபோல ஒரு ஜெனெடிக்கல் டிஸ்ஸார்டர் நோய் காண்பிக்கப்பட்டிருக்கும். இது சீக்கிரம் வயதான தோற்றத்தை உண்டாக்கும் நோய். முதலில் தாங்க முடியாத தலைவலி மயக்கம் தோன்றியுள்ளது. இரண்டு மாதம் கோமா வேறு. மீசை, தாடி வேறு முளைத்து சீக்கிரம் முதுமைத் தோற்றத்தை உண்டாக்கியுள்ளது. பயாப்சி செய்து பார்த்தபோதுதான் தெரிந்தது ஒரு மூளையின் ரத்தக் குழாய்களைப் பாதித்துள்ள கான்சர் என்று. ஹெச்சிசி ஹாஸ்பிட்டலைச் சேர்ந்த டாக்டர் ஸ்ரீதர் தற்போது இதை கீமோதெரஃபி மூலம் குணப்படுத்தி விட்டாலும் மீண்டும் தோன்றலாம் என்று எச்சரித்துள்ளார்.
உலக கான்சர் தினத்தில் இளம் வயதினர் தாங்கள் எவ்வாறு கான்சரிலிருந்து மீண்டு வந்தோம் என்று கூறி இருக்கிறார்கள். பிங்க் நிறம் என்பது கான்சரை எதிர்த்துப் போரிடுவதற்கான சிம்பலாக குறிப்பிடப்படுவதால் பெங்களூர்க்காரர்கள் உலக கான்சர் தினத்தில் பிங்க் உடையணிந்து கான்சர் விழிப்புணர்வு ஓட்டம் ஒன்றை நிகழ்த்தியுள்ளார்கள்.
லிம்போமா என்னும் கான்சரால் பாதிக்கப்பட்ட 17 வயது விவேக் தனது கான்சர் கீமோதெரஃபி சிகிச்சைக்கு இடையில் ஸ்கைப் மூலம் தனது வகுப்பாசிரியர், நண்பர்களைத் தொடர்பு கொண்டு பாடங்களைப் படித்து சிபிஎஸ்சி ப்ளஸ்டூ தேர்வு எழுதியுள்ளார்.
ஏழாம் வகுப்புப் படிக்கும்போது நயனாவுக்கு கர்ப்பப்பை கான்சர் கண்டுபிடிக்கப்பட்டு பல கட்டமாக கீமோதெரஃபி சிகிச்சை அளிக்கப்பட்டு குணமாகி இப்போது மருத்துவ மாணவியாக படித்துக் கொண்டிருக்கிறார். ” சைக்கோசோஷியல் இம்பாக்ட் ஆஃப் கான்சர் ஆன் சில்ட்ரன் & பேரண்ட்ஸ் “ ( PSYCHOSOCIAL IMPACT OF CANCER ON CHILDREN & PARENTS )  என்ற தலைப்பில் ப்ராஜக்ட் செய்து அதை ஆன்காலஜிஸ்ட் களுக்கான நேஷனல் கான்ஃபரன்ஸில் சமர்ப்பித்துள்ளார்.
லண்டனில் வக்கீலுக்குப் படித்துவரும் 25 வயது ”அதில் கட்ரக்” (ADIL KADRAK )  , லூகேமியா & லிம்போமாவுக்கு ட்ரீட்மெண்ட் எடுத்துக்கொண்டே இரண்டு வருட பரிட்சைகள் எழுதியுள்ளார். அவர் கான்சருக்கான ட்ரீட்மெண்ட் கூட அவ்வளவு சவாலுக்குரியதல்ல. ஆனால் கான்சர் பற்றிய மனிதர்களின் கண்ணோட்டம்தான் சவாலானது என்கிறார்.
9 வயது திவ்யா உயர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு பின் அவருக்கு மைலாய்டு லூகேமியா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. கீமோதெரஃபி சிகிச்சைகளுக்குப்பின் குணமாகி இருக்கிறார். ஆனால் என்ன அவர் வகுப்புத் தோழிகள் அவருக்கு அடுத்த வகுப்புக்குப் போய்விட தன் ஜூனியர்களுடன் நான்காம் வகுப்பில் படிக்கிறார்.
கான்சரினால் ஒருவர் தொழில் ஆரம்பிக்க முடியுமா. அப்படி ஆரம்பித்தவர்தான் தன்னம்பிக்கையின் சின்னமான  23 வயது தர்ப்பன் எம் யாதவ். அவர் தன் நோய்க்கூறுக்காக சிகிச்சை பெற்று வரும்போது தன்னுடைய வளர்ப்புப் பிராணிகளுடன் விளையாடும்போது கான்சரின் எஃபெக்ட் குறைந்ததை உணர்ந்தார். அதையே ஏன் தொழிலாகச் செய்யக்கூடாது என்று எண்ணி வளர்ப்புப் பிராணிகள் காப்பகம் தொடங்கினார். வெளிநாடுகளுக்கு ஃப்ளைட்டில் செல்லும்போது வளர்ப்புப் பிராணிகளைக் கொண்டு செல்ல அனுமதிப்பதில்லை என்பதால் அவ்வாறான பிராணிகளுக்குப் புகலிடம் தரும் பணியை உள்ளாலில் உள்ள தன்னுடைய நிறுவனம் மூலம் செய்து வருகிறார்.
வாய்ஸ் ஆஃப் டோபாக்கொ விக்டிம் க்ரூப் என்ற தொண்டு நிறுவனம் நடத்திய நிகழ்வில் பலர் தனக்கு புகைப்பழக்கம் மூலம் கான்சர் வந்ததையும் அதற்கு சிகிச்சைபெற்று மீண்டதையும் உலக கான்சர் தினத்தில் பகிர்ந்துள்ளனர். அங்கு வந்திருந்த நளினி சத்யநாராயணா  என்ற ஒரு பெண்மணி தன் கணவர் புகைக்கும்போது அருகிலிருந்ததால் ( பாசிவ் ஸ்மோக்கர் ) கான்சர் பாதிப்பு ஏற்பட்டு குரல் வளை மற்றும் தைராய்டு சுரப்பி எடுக்கப்பட்டு விட்டது. தினமும் கழுத்தில் இருக்கும் ஓட்டையைச் சுத்தப்படுத்த வேண்டும் மேலும் அதில் விரலை அடைத்துக் கொண்டு ஒரு மாதிரி குரல் எழுப்பித்தான் பேசப் பழகி இருக்கிறார்.
பீடிக்கு வரி இல்லை. புகையிலையிலிருந்து தயாராகும் பொருட்களுக்கு அதிக வரி விதித்தால் பயன்பாடு கொஞ்சமாவது குறையும், அரசுக்கும் வரி கிடைக்கும் என்று பெங்களூர் மெடிக்கல் காலேஜ் மற்றும் ரிசர்ச் இன்ஸ்ட்யூட்டைச் சேர்ந்த டாக்டர் அஜய் ராவ் மற்றும் ரியாஸ் பாஷா தெரிவித்துள்ளார்கள்.
புகையிலைப் பயன்பாடு, சிகரெட், பீடி, குட்கா, சுட்கா, பான்,  உபயோகிப்பது, சுற்றுச்சூழல் கேடு, மரபியல் மாற்றுப் பயிர்கள் ஆகியன மூலம் கான்சர் அதிகரித்துள்ளது. அதுவும் மெட்ரோ சிட்டிக்களில் பள்ளி கல்லூரி வயதுப் பிள்ளைகள் அதிகம் பாதிப்புக்கு உள்ளாகிறார்கள். அதுவும் மும்பையை விட சென்னையில் அதிகமாக உள்ளது. அரசும் இந்த விற்பனையைப் பொறுத்தமட்டில் தன் இரும்புக்கரத்தை இறுக்குவது நல்லது. பதின் பருவங்களில் உள்ள குழந்தைகளுக்கு இவை விற்கப்படக்கூடாது என்று.
பள்ளிகளில் இதற்கான விழிப்புணர்வு மையங்கள் அமைக்கப்பட வேண்டும், இளைஞர்களுக்கு இதன் தீவிரம் அறிவுறுத்தப்படவேண்டும் என்று ஹெச்சிசி யின் சேர்மன் டாக்டர் அஜய்குமார் கூறியுள்ளார். மசூம்தார் ஷா கான்சர் செண்டரைச் சேர்ந்த குழந்தைகள் கான்சர் சிகிச்சை நிபுணர் டாக்டர் சுனில் பட் கான்சரால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் எதிர்கொள்ளும் சமூக சூழல் புரிந்துகொள்ள இயலாதது. அது மாற்றப்படவேண்டும் என்றும் சரியான சிகிச்சை சரியான நேரத்தில் வழங்கப்பட்டு அவர்கள் காப்பாற்றப்படவேண்டும் என்றும் கூறுகிறார்.
பெற்றோரின் ரத்தம் மூலம் தொற்றும் நோய்கள் எய்ட்ஸ் போன்ற ஆட்கொல்லி நோய்கள் போக இளம் வயதுப் பிள்ளைகள் தானே வரவழைத்துக்கொள்ளும் கொடூர நோய் இது. இம்மாதிரிப் பழக்கங்களுக்குத் தங்கள் பிள்ளைகள் ஆளாகிவிடாமல் காக்கும் பொறுப்பு பெற்றோர் வசமே உள்ளது. நோய்வந்தபின் நொந்துகொள்வதை விட தேவையான கவனிப்புக் கொடுத்தாலே பிள்ளைகள் இந்த வழிக்கெல்லாம் போகமாட்டார்கள். இந்தப் புறக்காரணிகள் , பழக்க வழக்கங்கள் இல்லாமலே இயற்கையாகவே நோய் பாதித்தால் அதிலிருந்து தன்னம்பிக்கையுடன் மீண்டெழப் பயிற்றுவிப்பதே சிறந்தது. 
டிஸ்கி :- இந்தக் கட்டுரை 27, அக்டோபர், 2014 திண்ணையில் வெளியானது.

டிஸ்கி :- இந்தக் கட்டுரை அவள் பக்கத்திலும் வெளியானது.

4 கருத்துகள்:

 1. அனைவரும் அறிந்து கொள்ள வேண்டிய தகவல்கள்... நன்றி சகோதரி...

  பதிலளிநீக்கு
 2. எய்ட்ஸ் நோய் வந்த புதிதில் பலரும்பயந்தனர். இப்போது அதன் தாக்கம் குறைவுதான். அதைவிட விரைவில் இறப்பைக்கொண்டுவரும் பல நோய்கள் வந்துவிட்டன. கேன்சர் இன்னும் குணப்படுத்த முடியாத ஒரு நோயாகவே இருக்கின்றன. ஒன்றுமறியா குழந்தைகளுக்கு நோய் வருவது பரிதாபம்தான். நல்லதொரு கட்டுரை.

  பதிலளிநீக்கு
 3. நன்றி தனபாலன் சகோ

  உண்மைதான் கருத்துக்கு நன்றி விச்சு சார்

  பதிலளிநீக்கு
 4. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
  என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.

  பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...