திங்கள், 8 டிசம்பர், 2014

காணாமல் போனவர்களும் கடத்தப்பட்டவர்களும்:-காணாமல் போனவர்களும் கடத்தப்பட்டவர்களும். :-
தினமும் செய்திகளில் காணாமல் போனவர்கள் பற்றிய அறிவிப்புப் பார்த்திருப்பீர்கள். திருவிழாக்களுக்குச் செல்லும்போது, எதிர்பாராத பயண விபத்துக்கள், வெள்ளம், சுனாமி ஆகியவற்றைத் தவிர தானாக கோபித்துக் கொண்டு வீட்டை விட்டு ஓடிப்போவது. சினிமாவில் நடிக்கும் ஆசையில்,காதல் வேட்கையில் , வீட்டில் படிக்க முடியாமல், அல்லது பால் வேறுபாடு உணர்வு ஏற்படுவதன் காரணமாகவும் இது நடப்பதுண்டு..
பல குழந்தைகள் பள்ளி விட்டு வரும்போது , பக்கத்து வீட்டில் விளையாடிக் கொண்டிருக்கும்போது காணாமல் போயிருப்பார்கள். சிலர் பணம் கேட்டுக் கடத்தப்பட்டும் இருப்பார்கள். மனநிலை சரியில்லாத குழந்தைகள் பலர் காணாமல் அடிக்கப்பட்டவர்களே. கெட்ட பழக்க வழக்கங்களால் வீட்டில் தண்டிக்கப்பட காணாமல் போவதும் நிகழ்கிறது.
வயதான பலர் காணாமல் போன செய்திகள் பார்க்கும்போது இது அல்சீமரால் ஏற்பட்டிருக்குமோ என்று எண்ணத் தோன்றும். ஆனால் குழந்தைகளே அதிக அளவு காணாமல் போகிறார்கள். அல்லது கடத்தப்படுகிறார்கள்
செக்‌ஷுவல் அப்யூஸ் செய்து கொலை செய்யப்படுவது,  பணக்காரக் குழந்தைகள் பிணைத் தொகை கேட்டுக் கடத்தப்படுவது, பரம்பரைப் பகை/ தற்காலிகப் பகை உணர்ச்சியில் பழி வாங்குவதற்காகக் கடத்தப்படுவது, கொலை செய்யப்படுவது,  உடல் உறுப்புக்களுக்காகக் கடத்தப்படுவது, வேறு ஊர் அல்லது தேசங்களில் கொத்தடிமைகளாக ( வீட்டு வேலை/சுரங்க வேலை/ நெருக்கடியான சிறிய இடத்தில் பணி செய்தல்/அல்லது பெரியவர்கள் அதிகம் ஊதியம் கேட்கும் வேலை ) விற்கப்படுவது, அல்லது பிச்சையெடுக்கப் பழக்குவது, வேறு ஊர் அல்லது நாடுகளுக்கு பாலியல் தொழிலாளியாக விற்கப்படுவது , குழந்தைத் திருமணம் செய்ய கடத்திச் செல்வது ஆகியன இந்த குரூரச் செயலின் பின்னணியில் இருக்கின்றன.
பெற்றோராலும் உறவினர்களாலும் கைவிடப்பட்ட அநாதைக் குழந்தைகள், முறைகேடான உறவில் பிறந்த குழந்தைகள், வறுமையான சூழ்நிலையில் குடிகாரத் தந்தை/தாயினால் கொடுமைப்படுத்தப்பட்ட குழந்தைகளும் வீட்டை விட்டு ஓடுகிறார்கள்.
தினமும் காணாமல் போகும் குழந்தைகளில் 10 பேரில் 8 பேர்தான் திரும்பக் கிடைக்கிறார்கள். மிச்சமுள்ள 2 பேரைப் பற்றிய எந்தத் தகவலும் கிடைக்கப்பெறாமல் ஃபைல் மூடப்படுவதாகச் சொல்லப்படுகிறது. அதிலும் ஆண் குழந்தைகளை விட அதிகமாக பெண் குழந்தைகள் தொலைந்து போகும் சதவிகிதம் இருக்கிறது. முன்பு தொலைந்து போவதில் இருந்து திரும்பக் கிடைக்கும் சதவிகிதம் 90 விழுக்காடு இருந்தது. இப்போது 50 விழுக்காடாகக் குறைந்துவிட்டது. பாதிக்குப் பாதி தொலைந்தவர்களைக் கண்டுபிடிக்கவே முடியவில்லை.  
2009 இல் இருந்து 2012 வரை எடுத்த கணக்கெடுப்பில் முன்பு ஆண் குழந்தைகள் 1697 பேர் தொலைந்தால் 215 பேரைப்பற்றிய எந்தத் தகவலும் கிடைக்காமல் கேஸ் ஃபைலை மூட வேண்டி வந்தது என்றால் 2012 இல் 473 ஆண் குழந்தைகள் தொலைந்தால் அதில் 219 பேர் பற்றிய எந்தத் தகவலும் கிடைப்பதில்லை. மேலும் 2009 இல் பெண் குழந்தைகள் 2299 பேர் காணாமல் போனால் 247 பேரைப்பற்றி மட்டும்தான் எந்தத் தகவலும் இல்லாமல் இருந்தது. ஆனால் இப்போதோ  617 காணாமல் போனால் அதில் 389 பேரைக் கண்டுபிடிக்கவே முடியாத அளவில் இருக்கிறது  என்று ஒரு சர்வே எடுத்திருக்கிறார்கள்.
உயர் வகுப்பினர் போலீசுக்குப் போனால் குழந்தையின் உயிருக்கு ஆபத்து ஏற்படுமோ என்று எண்ணி போலீசுக்கும் சொல்வதில்லை. ஏழை எளிய மக்களின் குழந்தைகளே அதிகம் கடத்தப்படுகிறார்கள் ஆனால் அவர்கள் புகார் அளிக்கவும் செல்வதில்லை. அளித்தாலும் ஏற்றுக் கொள்ளப்பட்டு சரிவர முயற்சிகள் எடுக்கப்படுவதில்லை. எனவே பதியப்பட்ட வழக்குகளின் எண்ணிக்கையின்படி இந்த சர்வே இருந்தாலும் பதியப்படாத வழக்குகள் இன்னும் நிறைய இருக்கலாம்.
பிஸ்கட்டுகளில், சாக்லேட்டுகளில் மயக்க மருந்து வைத்துக் கொடுப்பது, நகைகளுக்காகக் கடத்திப் போய் கழட்டிக் கொண்டு கொன்று கிணறுகளில் வீசுவது. பில்லி சூன்யம் ஆகிய காரணங்களுக்காகவும். சொத்து அல்லது புதையல் கிடைக்க நரபலி கொடுப்பதற்காகவும் குழந்தைகளைக் கடத்துகிறார்கள். இதைப் பத்ரிக்கைகளில் பார்த்தாலே நெஞ்சக் குலை பதறும்.
STATE CRIME RECORDS BUREAU ( SCRB) நாலு வருடங்களில் 4220 கடத்தல் வழக்குகள் பதியப்பட்டதாகவும் அதில் 4715 பேரைப் பிடித்ததாகவும் , இதில் 2124 பேரின் மேல் மட்டுமே குற்றப் பத்ரிக்கை தாக்கல் செய்யப்பட்டதாகவும் ஆனால் 171 மட்டுமே ருசுவானதாகவும் குறிப்பிடுகிறது.
அதுவும் 2010 இல் 1374 பேர் கடத்தப்பட்டார்கள் என்றால் 2012 இல் 1451 ஆக அது உயர்ந்திருப்பது கவலை அளிக்கும் விஷயமாகும். NATIONAL CRIME RESOURCES BUREAU வருடந்தோறும் 3442 குழந்தைகள் சராசரியாகத் தொலைந்து போவதாகக் குறிப்பிடுகிறது.
சுற்றுலாத்தளங்களிலும் அதிலும் டார்ஜிலிங்கில் வருடந்தோறும் காணாமல் போகும் பெண் குழந்தைகள் அதிகரித்து வருகிறார்கள் என அம்மாநில குற்றப்பதிவு ஆணையம் அறிவித்துள்ளது.
குழந்தைகளைத் தவறாகப் பயன்படுத்தவே கடத்தப்படுவதுதான் அதிகமாக இருப்பதாக போலீஸ் அதிகாரிகளும் தெரிவிக்கிறார்கள். அப்பா அம்மாவுக்குப் பயந்து கொண்டு வீட்டை விட்டு ஓடும் குழந்தைகள் மீண்டும் படிக்கத் துன்புறுத்தப்படுவோமென்றே வீட்டிற்குத் திரும்ப வருவதில்லை. கண்டிக்கவும் தண்டிக்கவும்படுவோம் என்று கிடைத்த புகலிடத்திலும் சென்று சேர்ந்த மனிதர்களோடும்  அவர்கள் சொல்வதைக் கேட்டபடி தங்கி விடுகின்றார்கள். எந்த வசதி வாய்ப்புக்களும் இல்லாமல் குடிசை போன்ற இடங்களில் தங்கி வியர்வை வழிய பெரியவர்கள் செய்ய அதிகம் கூலி கேட்கும் வேலையை இவர்கள் சொற்ப கூலிக்குச் செய்து கொடுக்கிறார்கள்.
இப்படிக் காணாமல் போனவர்கள் தாங்கள் சேர்ந்த தவறான மனிதர்களோடு இணைந்து பிச்சை எடுத்தல், போதைப் பொருள் விற்றல், பாலியல் தொழிலில் ஈடுபடுதல், கள்ளக் கடத்தலில் ஈடுபடுதல் ஆகியவற்றை அறிந்தோ அறியாமலோ செய்து அவர்களும் அப்படியே ஆகிவிடுகிறார்கள் என்கிறார் ஒரு அதிகாரி .
கண்டிக்கும் பெற்றோரைப் பழிவாங்க என்று இரு குழந்தைகள் வீட்டை விட்டு ஓடி இருக்கிறார்கள்.  இப்படி காணாமல் போகும் குழந்தைகளைக் குறிவைத்தே பஸ் நிலையங்களிலும் ரயில்வே ஸ்டேஷன்களிலும் சமூக விரோதிகளின் கும்பல்கள் அலைவதாகவும் குறிப்பிட்டார். அவர்கள் கையில் சிக்கின பின் இவர்கள் கதி என்னாகும்.
இவ்வாறு தொலைந்து போகும் குழந்தைகளைத் துரத்திக் கண்டுபிடிப்பது என்பது போலீசாரைப் பொறுத்தவரை மிகுந்த கஷ்டமான பணியே. ஏனெனில் ஒரு மாநிலத்தில் தொலைந்தவர்கள் அநேகம் பேர் அங்கேயே இருப்பதில்லை. அடுத்த மாநிலத்துக்கு இறக்குமதி செய்யப்பட்டு விடுகிறார்கள். இதைக் கண்டுபிடிக்க பல்முனைத் தாக்குதல்களும், பொதுமக்களின் ஒத்துழைப்பும் அவசியம். ஆனால் பல இடங்களில் இவை சரிவரக் கிடைக்காததால் சிறப்பாகச் செயலாற்ற முடிவதில்லை.
சில குடும்பத்தினர் இவ்வாறு காணாமல் போன குழந்தைகளைப் பற்றிப் போலீசில் புகார் அளிக்க விரும்புவதில்லை. ஏனெனில் கடத்தப்பட்டு பணம் கேட்கப்பட்டிருந்தால் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்பதால் அமைதி காத்து கேட்ட பணத்தைக் கொடுத்து மீட்டு விடுகிறார்கள்.
அரசாங்கத்திடம் காணாமல் போன குழந்தைகள் பற்றிய விவரம் பாதுக்கப்படுகிறது. 29 செண்டர்களில் கர்நாடகா முழுவதும் அவர்கள் பற்றிய தகவல்களைப் பெறலாம். ஒரு வேளை போலீசிடம் செல்ல விரும்பாதவர்கள் கவர்ன்மெண்ட் அல்லது நான் கவர்ன்மெண்ட் ஆர்கனைசேஷன்கள் மூலமாக முயற்சி செய்யலாம் என்று ஒரு போலீஸ் உயரதிகாரி கூறுகிறார். இவற்றின் மூலமாக சிங்கிள் விண்டோ சிஸ்டம் செயல்படுத்தப்பட்டால் இந்தப் பிரச்சனைக்கு ஒரு தீர்வு கிடைக்கலாம் என்றும் கூறுகிறார்.  தேசிய மனித உரிமை ஆணையமும் இது குறித்துக் கவலை தெரிவித்து இருக்கிறது.
குழந்தைகள் நாளைய தேசத்தை நிர்மாணிப்பவர்கள். அவர்கள் வளர்ச்சியில் அரசுக்கும் சமூகத்துக்கும் பெற்றோருக்கும் பங்கிருக்கிறது. குழந்தைகள் நல்ல சூழலில் வளரமுடியாத ஒரு தேசம் தன் வருங்காலத்தை எப்படித் தீர்மானிக்கும்.காணாமல் போகும் குழந்தைகளைக் கண்டுபிடிப்பதிலும் அவர்களை நல்ல குடிமக்களாக பேணிப் பாதுகாப்பதிலும் ஒட்டு மொத்த சமூகத்தின் பொறுப்பும் மனித குலத்தின் நன்மையும் அடங்கி இருக்கிறது. தேசத்தின் நாடியாக விளங்கும் குழந்தைகளைக் காத்து நாட்டின் நலன் காப்போம்.4 கருத்துகள் :

Yarlpavanan Kasirajalingam சொன்னது…

இந்தத் துயரம்
எங்க தான்
எப்ப தான் ஓயுமோ!

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

வர வர நடக்கும் கொடூர சம்பவங்களால் நெஞ்சம் பதறுகிறது சகோதரி..

Thenammai Lakshmanan சொன்னது…

உண்மைதான் யாழ்பாவண்ணன் சகோ

ஆம் தனபாலன் சகோ

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...