எனது பதிநான்கு நூல்கள்

திங்கள், 17 செப்டம்பர், 2012

மயிலின் சீற்றம். வடிவுக்கரசியின் பேட்டி

மயிலின் சீற்றம் பார்த்திருக்கிறீர்களா.. தன் கொண்டையை அசைத்துக் கொண்டே அது அகவுவதைப் போல அழகாய் இருந்தது திரைப்படம் மற்றும்., தற்போது சின்னத்திரையில் ஜொலித்துக் கொண்டிருக்கும்., இன்றளவும் வடிவழகியான நடிகை வடிவுக்கரசியின் பேச்சு.. வேறொன்றுமில்லை. ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சிக்காக இருவரும் எதிர் எதிர் அணியில் அமர்ந்து பேச வேண்டியதாயிருந்தது. அப்போது நான் எடுத்து வைத்த கருத்துக்களுக்கு உண்டான கோபத்தில் இருந்தார் அவர். திரும்ப என் நிலைப்பாடை எடுத்துச் சொல்லி விடாது கருப்பு மாதிரி தொடந்து படையெடுத்து அவரிடம் இந்தப் பேட்டியை வாங்கினேன்..

1. உங்களைப் பற்றிச் சொல்லுங்கள்.. நீங்கள் நடிக்க வந்தது எப்படி.?

எனக்கு சொந்த ஊர் வேலூர் இராணிப்பேட்டை. எட்டாவது வரை அங்கே படித்தேன். பின் ஒன்பதாவது படிக்கும்போது மெட்ராஸ் வந்தேன். வாலாஜா காலேஜில் பி யூ சி படித்தபின் அடையாரில் ஹோட்டல் மானேஜ்மெண்ட். அப்புறம் கன்னிமரா ஹோட்டலில் ஹவுஸ் கீப்பிங் வேலை செய்தேன்.


எனக்கு அக்கா ஒருவர்., அண்ணன் ஒருவர். , தங்கை ஒருவர். மகள் ஒருத்தி எல்லாமே ஒன்றுதான்..

எனக்கு 53 வயதாகிறது. தற்போது என் அப்பா இல்லை., நான்., என் தங்கை ., என் அம்மா., என் மகள் நால்வரும் சேர்ந்து ஒரு வீட்டில் வசிக்கிறோம்.

 2. உங்கள் கணவர் பற்றி ஒன்றும் கூறவில்லையே.. அவர் என்ன செய்கிறார்.?

என் கணவர் தற்போது என்னுடன் இல்லை. அவர் இன்னொரு திருமணம் செய்து கொண்டு சந்தோஷமாக இருக்கிறார். எனக்கு என் கணவரை மிகவும் பிடிக்கும். அவ்வளவு நல்லவர் அவர். நாம் விரும்பும் ஒருவர் சந்தோஷமாக இருப்பதைத்தானே நாம் விரும்புவோம். எனவே அவர் சந்தோஷமாக இருக்கட்டும் . என்னுடன் தற்போது அவர் இல்லை. எனவே அவரைப் பற்றி நான் சொல்ல ஏதும் இல்லை. அவரைப்பற்றி நான் ஏதும் பேட்டி கொடுத்து அது அவரின் தற்போதைய வாழ்வில் இடைஞ்சலை உண்டு பண்ணி விடக்கூடாது.

3. உங்கள் மகள் திரைத்துறைக்கு வருவாரா?

நிச்சயமாக இல்லை. அவருக்கு இதில் ஈடுபாடு இல்லை. அவருக்கு 23 வயதாகிறது. அவருக்கு அவர் விஸ்காம் படித்துவிட்டு தற்போது 7 தோழிகளுடன் சேர்ந்து ப்ரோக்ராம் ஈவண்ட் மேனேஜ்மெண்ட் கண்டக்ட் செய்கிறார்.

4. விஸ்காம் படித்துவிட்டு அவர் திறைப்படத்துறையில் ஈடுபடவில்லையே ஏன்..

அவருக்கு இங்கே இண்டஸ்ட்ரியில் உள்ள பொய்யாக மதிப்பது ( FALSE RESPECT) பிடிக்கவில்லை. அதனால் ஹெர்பல் ப்ராடக்ட்ஸ் மார்க்கெட்டிங் செய்கிறார். அப்புறம் ஈவண்ட் மேனேஜ்மெண்ட்.

5. நீங்கள் நடிக்க வந்தது ஏன். திரைப்படம் தற்போது சின்னத்திரை என நடிக்கிறீர்கள் . என்ன உணர்கிறீர்கள்.?

என் குடும்ப சூழ்நிலையில் வேலைக்குச் சென்றே ஆகவேண்டும் என்றே நான் ஹோட்டல் மேனேஜ்மெண்ட் படித்து வேலைக்கு வந்தேன். அது ஒரு ப்ரொஃபஷன். அதைப்போலவேதான் நடிப்புத்துறைக்கும் வந்தேன்.. சென்னை தூர்தர்ஷனில் பணி புரிந்திருக்கிறேன். அதைப்போலவே இதுவும் ஒரு வேலை என நினைத்து செய்கிறேன். நான் எனக்கு சரி என்று பட்டதை பட்டென்று சொல்லி விடுவேன் .. அதுதான் என் பலமும்., பலவீனமும். இவர்கள் இப்படி என பலர் ஒதுங்கக் காரணமாக என் பேச்சு இருக்கும். அதே எனக்கு கிடைக்கவிருந்த பல நல்ல வாய்ப்புகளையும் தட்டிப் பறித்துவிடும். உதவியும் அதுதான். உபத்திரவமும் அதுதான். அட்ஜஸ்ட் செய்து செல்வது என்பது என் நேச்சரிலேயே கிடையாது. வெட்டு ஒண்ணு. துண்டு ரெண்டுதான்.

தற்போது தொலைக்காட்சித்தொடர்களிலும் அப்படித்தான். என்ன வென்றால் கால மாற்றம் நான் கொஞ்சம் பக்குவப்பட்டுவிட்டேன். வருவதை அப்படியே ஏற்றுக்கொண்டு வாழப் பழகி விட்டேன்.

கிட்டத்தட்ட 33 வருடமாக திரைப்படத்தில் நடித்து வருகிறேன். தொலைக்காட்சியில் கடந்த 91 இல் இருந்து நடித்து வருகிறேன். ரெண்டிலும் ஒரே மாதிரிதான் இருக்கிறது.

6. இதுவரை எத்தனை சினிமா., எத்தனை தொலைக்காட்சித்தொடர்கள் நடித்திருப்பீர்கள். ?

இதுவரை 350 படங்களில் நடித்திருக்கிறேன். 4 மொழிகளில் நடித்திருக்கிறேன். தமிழில் நான்தான் சொந்த டப்பிங்வாய்ஸ். தெலுங்கில் டப்பிங் ஆர்ட்டிஸ்டின் வாய்ஸ்தான்.

சிவப்பு ரோஜாக்கள்தான் என் முதல் படம். பாரதிராஜா இண்ட்ரடியூஸ் செய்தார். ஆனால் கன்னிப்பருவத்திலேதான் நான் ஹீரோயினாக நடித்து வெளிவந்த முதல் படம். என் முதல் படம் என்பதால் எனக்கு மிகவும் பிடித்த படமும் அதுதான்.

நெல்லை சிவா என்னிடம் சொன்னார்., முதல் மரியாதையில் சிவாஜி கூட நடித்துவிட்டீர்கள். பெரிய பாக்கியசாலி நீங்கள். அதுவே உங்கள் பிறவிப்பயன் என்று.

இதுவரை 10 சீரியல்களில் நடித்திருக்கிறேன். கர்ணவம்சம்., கடற்புரத்தில் இது எல்லாம் தூர்தர்ஷனில் வெளிவந்த சீரியல்கள்.

எனக்குப் பெயர் வாங்கிக் கொடுத்தது காயத்திரி தேவி என்ற காரெக்டர். சீரியலின் பெயர் சக்தி. அடுத்தது திருமதி செல்வம்.

7.எனக்கு நிஜமா நீங்க., ராதிகா., விஜயகுமாரி மூவரும் நடித்த மெட்டி படத்தின் ., “மெட்டி ஒலி காற்றோடு” பாடல் காட்சி பிடிக்கும் அவ்வளவு மென்மையான புன்னகைக்குச் சொந்தக்காரர் நீங்க. முதல் மரியாதை., அருணாசலம் போன்றவற்றில் நெகட்டிவ் காரெக்டர்.. கொஞ்சம் மிரட்சியாய் இருந்தது வடிவுக்கரசிதானா என்று.. அந்த கேரக்டரில் ஏன் நடித்தீர்கள்?

இப்போ நீங்கள் குறிப்பிட்டுச் சொல்வதுபோல அமைந்திருக்கிறது அல்லவா. அதுவே என் கேரக்டர் பொருத்தத்திற்கு வெகுமதி. நான் கொடுக்கப்பட்ட வாய்ப்புகளைச் சரியாகப் பயன்படுத்திக் கொண்டேன். வில்லி என்பதும் இன்னொரு பரிமாணம்தானே.

கடவுள் என் வாழ்க்கையை நடத்திச் செல்கிறார். அதன் வழியில் நான் செல்கிறேன். நான் வழியை தேர்ந்தெடுப்பதில்லை. கொடுக்கப்பட்டவைகளைச் சரியாகச் செய்கிறேன். அதுவே போதும் என நினைக்கிறேன்.

8.அது சரி அப்புறம் என்மேல் ஏன் கோபப்பட்டீர்கள்?

ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சி. அதில் நீங்கள் எங்கள் எதிரணி. நாங்கள் வாழ்வாதாரமாக நடித்து வருகிறோம். ஒரு சீரியல் எடுக்க எவ்வளவு சிரமம் எடுக்கிறோம் என தெரியுமா உங்களுக்கு. என்னவோ வந்து உக்காந்துகிட்டு நாங்க டிவி சீரியலே பார்ப்பதில்லை. என சொல்கிறீர்களே. அது எவ்வளவு வலி ஏற்படுத்தும் என தெரியுமா உங்களுக்கு. நீங்கள் எழுதும் எதையும் நான் படிப்பதில்லை என சொன்னால் உங்களுக்கு எப்படி இருக்கும்.

9. தொலைக்காட்சித்தொடர்கள் மிகைப்படுத்துதல் அதிகம். அதுக்கு அடிக்ட் ஆனவங்களும் அதிகம். அதைத்தானே அங்கு சொன்னோம்.

உங்க ரியல் லைஃபிலேயே மிகைப்படுத்தல் இருக்கும்மா. உன்னை எனக்கு ரொம்பப் பிடிக்கும் என சொல்லும் அனைத்தும் உண்மையா?. சொல்லுங்கள் மிகைப்படுத்தப்பட்ட யதார்த்தம்தானே சினிமா. ரியல் லைஃபை காண்பித்தால் நீங்கள் ஏன் சினிமாவையும் தொடரையும் பார்க்கப்போறீங்க.?

மேலும் இன்றைய காலகட்டத்தில் எல்லாமே நடக்குது. அதைத்தான் நாங்க நடிக்கிறோம் எதுவுமே அப்பிடி நடக்கலைன்னு நீங்க உறுதியா சொல்ல முடியுமா. அது எங்க ப்ரொஃபஷன். எங்க வாழ்க்கை. அதை எப்படி நீங்க குற்றம் சாட்டலாம். அதுதான் என் கோபம்.

எல்லாருக்கும் ஒரு அப்ரிஷியேஷன் தேவைப்படுது. 4 பேர் பாராட்டணும்னுதானே எல்லாமே செய்யிறோம். ஏங்குகிறோம். சமையல் கூட நல்லா இருக்குன்னு சொன்னாதான் மறுநாள் நல்லதாக சமைக்கிறோம்.

எதுவுமே உங்க சாய்ஸ்தான். நல்லா இருப்பவற்றை மட்டுமே நீங்க பார்த்தா அது மட்டுமே கொடுக்கப்படும். நல்லா இல்லாததை நீங்க அவாய்ட் பண்ணா அதுபோல திரும்ப கொடுக்க மாட்டாங்க யாரும்.

வி சேகர் படம் போல இலை மறைவு., காய் மறைவாக எல்லாம் காட்டப்பட்டால் பிரச்சனை இல்லை. . காலேஜ் ஸ்டூடன்ஸ் அந்தக்காலத்துல எந்த உடை உடுத்தினாங்களோ அது சினிமாவில் காட்டப்பட்டது. இன்றைய காலகட்டத்தில் என்ன உடை உடுத்துகிறார்களோ அதுதான் சினிமாவிலும் காட்டப்படுகிறது.

10 சரி கூல் டவுன்.. உங்க பெயர் வந்தது எப்படி.. சினிமாவுக்காக வைத்ததா.. மிக அழகான பெயர். பெயருக்கு ஏத்த மாதிரி இந்த வயதிலும் வடிவா அழகா இருக்கீங்க..

ஒரு சினிமாவின் பெயர்தான் அது . என்னோட பெரியப்பா ஏ.பி. நாகராஜன். அவர் வடிவுக்கு வளைகாப்புன்னு ஒரு படம் எடுத்தார். அப்போ நான் பிறந்ததால் எனக்கு வடிவுக்கரசின்னு பேர் வச்சாங்க.. ஒரு வேளை நான் சினிமாவில் நடிக்க வரலாம்னு அப்பவே கண்டுபிடிச்சுத்தான் வச்சாங்களோ என்னவோ எனச் சொல்லி வடிவாகப் புன்னகைக்கிறார்.

11. சரி தற்போது நடித்துவரும் திரைப்படங்கள்., தொலைக்காட்சித் தொடர்கள் பற்றிக் கூறுங்கள்.

 “ஒத்தவீடு” என்ற படத்தில் ஹீரோவின் அம்மாவாக நடிக்கிறேன். பாப்பாப்பட்டி பாப்பையா., கை., ஆகிய படங்கள் . அதில் ஒத்தவீடு என்ற படம் டைரக்டர் பாலன் சாருடையது. விஷ்ஷிங் வெல் ப்ரொடக்‌ஷன்ஸ். தேவ்குமார் தயாரிக்கிறார்.

மேலும் பட்டுராஜன் இயக்கும் மதிகெட்டான் சாலை., தலைச்சன் பிள்ளை, அன்புள்ள மான்விழியே ஆகிய படங்களிலும் நடித்து வருகிறேன்.

 சரி வடிவுக்கரசி அவர்களே.. நிறைய நல்லபடங்கள் செய்யுங்கள். உங்கள் பணி சிறக்கட்டும் என வாழ்த்தி விடை பெற்றோம்.

டிஸ்கி:- இந்தப் பேட்டி நவம்பர் 2011 சூரியக்கதிரில் வெளிவந்தது.

9 கருத்துகள்:

 1. //கடவுள் என் வாழ்க்கையை நடத்திச் செல்கிறார். அதன் வழியில் நான் செல்..//

  Hats off !The level of maturity displayed by Smt.Vadivukkarasi is remarkable.
  Learning to Live with What is real and practical is difficult but equally leads to peaceful life.

  subbu thatha.
  PS: tamil software is not functioning. Sorry for english comments.

  .

  பதிலளிநீக்கு
 2. சூரியக் கதிர் பேட்டி சூப்பர்.உங்கள் கேள்விகளும்,வடிவுக்கரசி அவர்களின் பதில்களும் மிக அருமை.

  பதிலளிநீக்கு
 3. ரொம்ப பாந்தமான குணம் உடையவர்கள் வடிவுக்கரசி, எப்படி தெரியும்னு கேட்கிறீர்களா ? தேனம்மை 1983 (அ) 1984 இல் 'சந்தோஷக் கனவுகள் ' என்ற படம் நாகர்கோவிலில் என்னுடைய தோழியின் வீட்டில் வைத்து தான் படப்பிடிப்பு நடந்தது. இயக்குனர் R .C . சக்தி. அப்போ நான் இவர்களுடன் ரொம்ப தோழமையுடன் உறவாடி இருக்கிறேன். அன்றும் தன் மகளை விட்டு விட்டு படப்பிடிப்புக்கு வந்த வருத்தத்தை தான் பகிர்ந்து கொண்டதாக ஞாபகம். வடிவுக்கரசிக்கு வாழ்த்துக்கள் !!

  பதிலளிநீக்கு
 4. அருமையான பேட்டி.

  முதல் மரியாதையில் எனக்கு மிகவும் பிடித்த நடிப்பு இவருடையது!....

  அவருக்குக் கொடுத்த கதாபாத்திரத்தைச் சிறப்பாகச் செய்திருந்தார்.

  பதிலளிநீக்கு
 5. In fact ,she acts very well.I like her perfection. As she said everybody likes to be appreciated.She was the close relation of the great,A.P.Nagarajan,her duties are well done .SHE WILL REACH STILL THE HIGHEST.
  All the best.by DK.

  பதிலளிநீக்கு
 6. நன்றி சுப்பு சார்

  நன்றி முருகேஸ்வரி

  நன்றி ரூஃபினா

  நன்றி வெங்கட்

  நன்றி கருப்பசாமி.

  பதிலளிநீக்கு
 7. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
  என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

  பதிலளிநீக்கு
 8. அருமையான பேட்டி...
  அழகான பதில்கள்....
  வாழ்த்துக்கள் அக்கா...

  பதிலளிநீக்கு
 9. வடிவுக்கரசியைப் பேட்டி எடுத்ததே பெரிய விஷயம் .அவர்கள் பதிலளித்திருக்கும் விதம் இன்னும் அருமை. நிம்மதியான வாழ்க்கை அவருக்குக் கிடைகவேண்டும். நன்றி தேனம்மா.

  பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...