எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வியாழன், 6 செப்டம்பர், 2012

சீகன் பால்கும் தொல்காப்பியமும்.:-


முதன்முதலில் தமிழில் விவிலியத்தை மொழிபெயர்த்தவர் சீகன் பால்கு எனத் தெரியும் ஆனால் அவர் படித்த முதல் தமிழ் நூல் எது தெரியுமா.? அது தொல்காப்பியம்தான். அதை அவரே குறிப்பிட்டுள்ளதாக சா. கந்தசாமி அவர்கள் தினமணியில் குறிப்பிட்டுள்ளார்.

சா. கந்தசாமியின் கட்டுரைகள் சிலவற்றை சூரியக் கதிரில் படித்ததுண்டு. ஜனரஞ்சகப் பத்ரிக்கைகளில் சா. கந்தசாமியின் இலக்கியம் சார்ந்த எழுத்துக்கள் ஒரு புதுமையான இலக்கியப் பரிச்சயத்தைக் கொடுத்ததுண்டு.


தொல்காப்பியம் பற்றி பல நாட்களாக என் மனதில் எண்ணங்களுண்டு. அது ஏன் நம் பாடத் திட்டங்களில் இடம் பெறவில்லை என்று. அதற்கு சா. கந்த சாமி தகுந்த விளக்கம் அளித்துள்ளார். தொல்காப்பியம் தமிழ் மொழியின் இலக்கண நூல். எழுத்ததிகாரம், சொல்லதிகாரம், பொருளதிகாரம் என்ற மூன்று அதிகாரங்களைக் கொண்ட தொல்காப்பியம் ஒவ்வொரு அதிகாரத்துக்கும் ஒன்பது இயல்களைக் கொண்டது. ஆக மொத்தம் 27 இயல்கள் உள்ளன. இதில் உள்ள பாடல்களை சூத்திரம் அல்லது நூற்பா எனக் குறிப்பிடுகிறார்கள்.

நம் தமிழின் எல்லா நூல்களும் கடவுள் வாழ்த்தோடு தொடங்குவன. ஆனால் தொல்காப்பியம் கடவுள் வாழ்த்தோடு தொடங்கவில்லை என்பது வியப்பான செய்தி. முதலில் உருவான எழுத்தையும் பின் உருவான சொற்களையும் கொண்டு உருவாக்கப்பட்டது எழுத்ததிகாரமும், சொல்லதிகாரமும். வாழ்வியலுக்குப் பொருள் கூறுவது பொருளதிகாரம். தொல்காப்பியத்திற்குப் பிறகு சிறந்த இலக்கண நூல் எழுதப்படவே இல்லையாம்.

பலர் தொல்காப்பியத்துக்கு உரை எழுதி இருக்கிறார்கள். அவை கடின நடை உடையன. பவநந்தி முனிவர் எழுதிய நன்னூல் என்ற இலக்கண நூல் எளிய முறையில் தமிழ் பேசவும் எழுதவும் ஆதாரமாக இருக்கிறது. பலர் அதையே கைக்கொண்டதால் தொல்காப்பியப் படிப்பு குறைந்தாலும் பதினெட்டாம் நூற்றாண்டில் கிறிஸ்துவ ஊழியம் செய்ய வந்து தரங்கம்பாடியில் பணியாற்றிய பார்த்தலோமியோ சீகன் பால்கு, தான் படித்த நூல்களிலேயே தொல்காப்பியம் சிறந்தது எனக் குறிப்பிடுகிறார்.

சீர்காழியில் இருக்கும் ஒரு தேவாலயம் அவரின் பெயரைக் கொண்டுள்ளது. அதன் விவரம் அறியப் புகுந்தபோது அவர் செய்த தமிழ்ச் சேவைகள் ஆச்சர்யப்பட வைத்தன. ஒரு துறவியாக மட்டுமில்லாமல் மனிதநேயப் பண்பாளராகவும் அவர் பற்றிய விவரங்கள் கிடைத்தன. இறைப்பணிக்காக ஆலயங்கள் மட்டுமல்ல, கல்விக் கூடங்களும் எழுப்பி இருக்கிறார். அடிமை முறையை எதிர்த்திருக்கிறார். தமிழ் மக்களைத் தன் மக்களாக எண்ணி விவிலியத்தையும் மக்கள் பேசும் மொழியிலேயே மொழி பெயர்த்திருக்கிறார்.

கிட்டத்தட்ட 300 வருடங்களுக்கு முன்பெ இந்தியா வந்த சீகன் பால்கு போன்ற துறவிகள் கூட தமிழின் மேல் ஆர்வம் கொண்டு கற்று, தொல்காப்பியம் எல்லாம் படித்து விவிலியத்தைத் தமிழில் மொழிபெயர்த்துள்ளார்கள். இவருக்குப் பின் இவர் பாதியில் விட்டுச் சென்ற மொழிபெயர்ப்பை பெஞ்சமின் சூல்ச் ஐயர் என்பவர் பூர்த்தி செய்திருக்கிறார்.

வேதாகமத்தை மொழிபெயர்த்தது மட்டுமல்ல. சீகன்பால்க் தென் இந்தியாவின் கலாசாரம் பற்றியும், தமிழ்நாட்டு தெய்வங்களின் பரம்பரை பற்றியும் எழுதி இருக்கிறார். அது மட்டுமல்ல லத்தீன் மொழியில் தமிழ் இலக்கணம், தமிழ்- ஜெர்மன் அகராதியும் எழுதி இருக்கிறார்.

இந்தத் தலைமுறைக்கு தொல்காப்பியம் என்றால் அது கலைஞர் உரை எழுதிய ஒரு நூல் என்று மட்டுமே தெரிந்திருக்கக் கூடும். ஒரு சாதரணத் தமிழர்களான நாம் இன்னும் அறியாததை 300 வருடங்களுக்கு முன் வந்த ஒரு ப்ராடஸ்டண்ட் துறவி தமிழில் ஏற்பட்ட பற்றால் (நம்முடைய மொழிக்கான இலக்கணத்தை இன்னொரு மொழியைத் தாய்மொழியாகக் கொண்டவர் ) அதைப் படித்து அறிந்திருந்தார் என்பது நாம் வெட்கவேண்டிய ஒரு விஷயம்.

சா. கந்தசாமி குறிப்பிடுகிறார், தொல்காப்பியம் ஒரு குழப்பமான நூல் அல்ல. அதன் மொழி எளிமையானது. படிப்பது என்பதில் சிக்கலற்றது. அறிவின் உச்சமான படைப்பென்று ஏற்கப்பட்டுள்ள தொல்காப்பியம் கற்க வேண்டிய நூல் இல்லையென்றும் அதனைக் கற்பதால் நவீன காலத்துக்குப் பயன் ஏதுமில்லை என்றும் கருதிய பல்கலைக் கழகம் அதனை தமிழ் முதுகலை படிக்கும் மாணவர்கள் மட்டும் படித்தால் போதும் எனக் கருதி அரண் எழுப்பிவிட்டது . இவ்வாறு பாடத்திட்டம் வகுப்பது வரலாறு, மொழி, இலக்கணம் ஆகியவற்றுக்கு முரணானது.

உண்மைதான். தொல்காப்பியத்தை நம்மில் சிலரே படித்திருக்கக் கூடும். அதுவும் முதுகலை தமிழ் எடுத்திருந்தால் மட்டுமே. எனவே இளங்கலையிலும் அதைப் பாடத்திட்டத்தில் கொண்டு வர ஆவன செய்யப்பட வேண்டும்.

4 கருத்துகள்:

  1. இந்தக்கால குழந்தைகளுக்கு கற்றுக் கொடுக்க வேண்டியது அவசியம் தான்... எல்லாமே 'மார்க்' என்னும் முறையில் செல்வது தான் வேதனை...

    யோசிக்க வைத்த பகிர்வு... நன்றி...

    பதிலளிநீக்கு
  2. வித்தியாசமான டாபிக். கட்டுரை நன்று.

    //ஒரு சாதரணத் தமிழர்களான நாம் இன்னும் அறியாததை 300 வருடங்களுக்கு முன் வந்த ஒரு ப்ராடஸ்டண்ட் துறவி தமிழில் ஏற்பட்ட பற்றால் (நம்முடைய மொழிக்கான இலக்கணத்தை இன்னொரு மொழியைத் தாய்மொழியாகக் கொண்டவர் ) அதைப் படித்து அறிந்திருந்தார் என்பது நாம் வெட்கவேண்டிய ஒரு விஷயம்.

    இதில் வெட்கப்படவேண்டியது எதுவுமே இல்லை என்று நினைக்கிறேன். ziegenbalgன் முழு வரலாறு தெரியாமல் எழுதப்பட்டக் கருத்து என்று தோன்றுகிறாது.

    அவர் வரவு கிறுஸ்துவ மதப்பரப்பிற்காக. அந்த நாளில் பிற இந்திய மதங்கள் பேச்சுப் பிரசாரங்கள் (கோவில் பிரசங்கங்கள்) என இருந்த போது இவர் அச்சு என்ற புதிய உத்தியைக் கொண்டுவந்து ஒரே நேரத்தில் பல இடங்களில் தன் கருத்தை தெரிவிக்க முயன்றார். அதற்காகத் தமிழ் கற்றார். இவர் எழுதிய "தமிழ்" இலக்கியப் புத்தகங்கள் - மதம் கலக்காதவை - எத்தனை என்பதிலிருந்து தமிழன் வெட்கப்பட வேண்டிய விஷயமா இல்லையா என்பதைப் புரிந்து கொள்ளலாம். இவருடைய முதல் பணி heathens என்று இவரே அழைத்த இந்திய (இந்து) மக்களைப் பரலோக பரமபிதாவின் வழியில் சேர்ப்பதற்குத் தான்.

    தொல்காப்பியத்தை படித்ததற்கு நன்றி சொல்வோம். தமிழன் வெட்கப்பட வேண்டிய விஷயம் அல்ல என்பதையும் கூடவே சொல்லிவைப்போம்.

    பதிலளிநீக்கு
  3. அப்பாதுரை அவர்களை வழி மொழிகிறேன்

    பதிலளிநீக்கு
  4. நன்றி தனபால்

    நன்றி அப்பாத்துரை. விளக்கமான பின்னூட்டத்துக்கும் .

    நன்றி நேசன்.

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...