எனது பதிநான்கு நூல்கள்

புதன், 5 செப்டம்பர், 2012

பெரிதினும் பெரிது கேள்.மகேஸ்வரி

வேலை செய்யும் ஒரு சாதாரணப் பெண்  எப்படி ஒரு வெற்றிகரமான தொழில் அதிபராக முடியும். கிடைத்த வாய்ப்புகளை சரியா பயன்படுத்திக்கிட்டா எல்ல உச்சங்களையும் எட்ட முடியும் என்பதற்கு மகேஸ்வரி ஒரு சாட்சி. 39 வயதாகும் மஹேஸ்வரி ஜெ.எம் ட்ரெஸ்ஸஸ் என்ற நிறுவனத்தை நடத்தி வருகிறார். தங்கம் ஃபாஷன் எம்ப்ராய்டர்ஸ் என்ற நிறுவனத்திலும் பங்குதாரராக இருக்கிறார்.இது சீருடைகளை மொத்தமாகத் தயாரித்து மிகப் பெரும் கம்பெனிகளுக்கும் பள்ளிகளுக்கும் நிறுவனங்களுக்கும் சப்ளை செய்யும் நிறுவனம். டிவிஎஸ் சாஸ்த்ரிபவன் ப்ராஞ்ச், ஜேஎஸ்பி ஹோண்டா, அமிர்தாஞ்சன், ஹோட்டல் ரெசிடன்சி, ஹோட்டல் மெரினா, அனுக்ரஹா ஃபெசிலிட்டீஸ் - ஹவுஸ் கீப்பிங் ஐட்டம், ப்ரசாத் ஸ்டூடியோஸ் ஆகியவற்றுக்கு சப்ளை செய்கிறார்.


வில்லிவாக்கத்தைச் சேர்ந்த மகேஸ்வரியின் அப்பா ஜெபகுரு ரயில்வேயில் பணி புரிந்தவர். அம்மா புஷ்பராணி. அம்மா பத்தாவது படிக்கும்போதே இறந்துவிட்டார். சிங்காரம் பிள்ளை மேல் நிலைப்பள்ளியில் பயின்றார். அம்பேத்கார் கல்லூரியில் பி எஸ்ஸி விலங்கியல் படிப்பு. டைப்பிங், கம்யூட்டர் பேசிக் தெரியும். 2006 இல் இருந்து எல் ஐ சி ஏஜெண்டாகவும் இருக்கிறார்.

96 இல் திருமணம். கணவர் மேகநாதன் மெட்ரோ வாட்டரில் பணிபுரிகிறார். 2 பையன்கள். ஒரு வருடம் சோழா ஹோட்டல் பக்கம் ஒரு கம்பெனியில் டைப்பிஸ்ட் வேலை. குழந்தைகள் அடுத்தடுத்துப் பிறந்தபோது வீட்டில் இருந்துவிட்டு பின் ராதா கிருஷ்ணன் சாலையில் உள்ள சபரி டெக்ஸ்டைல்ஸ் என்ற நிறுவனத்தில் டைப்பிஸ்டாக பணியில் அமர்ந்தார். இதன் சொந்தக்காரர் ராஜிராமன். இவர்தான் பள்ளி , கம்பெனிகளுக்கு ஆயத்த ஆடைகளுக்கான ஆர்டர் கிடைக்கும் போது ஊழியர் ஒவ்வொருவரின் அளவுக்கேற்ப துணியை அளவெடுக்க இவரையும் கூட்டிச் செல்வார்.

ஓனிக்ஸ் நிறுவனம் சென்னையில் கால் பதித்தபோது அதன் ஊழியர்களுக்கு அளவெடுக்க கூட்டி சென்றிருக்கிறார். இப்படி அடிக்கடி ஒவ்வொரு இடமும் சென்ற போது தானும் அளவெடுக்க கற்றதோடு இது ஒன்றும் சிரமமானது அல்ல என உணர்ந்திருக்கிறார். நம்மாலும் முடியும் என்ற தன்னம்பிக்கையை இது கொடுத்ததாம்.

98 இல் இருந்து 2008 வரை பணி புரிந்தார். வியாபாரத்தின் நெளிவு சுளிவுகள் பிடிபட இதை தானும் தனியாக செய்ய முடியும் என்ற நம்பிக்கை வந்தது இவருக்கு. இந்த 10 வருடங்களில் அனைத்து நிறுவன ஊழியர்களுடனும்., உயரதிகாரிகளுடனும் நல்ல பரிச்சயம் ஏற்பட்டது. எனவே ராஜிராமன் வெளிநாடு சென்ற போதும் பொறுப்பெடுத்து காசோலை வந்தால் கையெழுத்து போட்டு வியாபார்த்தைப் பார்த்திருக்கிறார்.

ராஜிராமன் ஒரு கட்டத்தில் ரியல் எஸ்டேட்டில் ஆர்வமாக ஈடுபட இந்த வியாபாரத்தை பொறுப்பெடுத்து நடத்த ஆள் யாருமில்லை.அதில் பணியாளராகவே தொடர்ந்து அவர்கள் வியாபாரத்தைப் பார்த்து வந்தார். குடும்ப நண்பர் காமராஜ் உங்களால் இதை கண்டிப்பாக தனியாக செய்ய முடியும் என ஊக்கம் கொடுத்தார். வியாபாரத்தில் பெரிய கால் வைக்கும்போது நம்முடைய முழுத்தகுதி என்னவோ அதை கட்டாயம் செய்ய வேண்டும்.

MSME -- GUINDY . ஒரு மாதம் பயிற்சி மற்றும் ஆலோசனைக் கூட்டம் நடத்தினார்கள். அதில் சேர்த்தார். அதை முடித்தவுடன் சான்றிதழ் கொடுத்தார்கள். தினம் பயிற்சியாளர்கள் வருவார்கள். நிறைய ஆலோசனைகள் சொல்வார்கள். வியாபாரத்தைப் பெருக்கும் உத்தி, மற்றும் அதில் புதுமைகளைப் புகுத்த, புதிய தொழில் நுட்பத்தைப் பயன்படுத்துவது பற்றி ஆலோசனை சொல்வார்கள்.

225 பேர் இதில் பங்கேற்று கலந்து கொண்டார்கள். ஆனால் 30 பேர்தான் தொடர்ந்து வந்து பயிற்சியை வெற்றிகரமாக முடித்தார்கள். இவர் தன் நிறுவனம் எல்லாவற்றிலும் தன் அப்பா பெயர்தான் வைப்பார். ( அப்பா திருமணமாகி 6 மாதத்தில் இறந்து விட்டார். MSME இல் கற்றுக் கொண்ட விஷயம் என்னவென்றால் எந்த ஒரு விஷயத்திலும் முன் அனுபவம் தேவை. ஆர்வம் வேண்டும். இது ஆண்கள் செய்யும் வேலை என ஒதுங்கக் கூடாது.

இந்த ஊக்கமெல்லாம் கிடைத்து கையில் முறையான சான்றிதழும் கிடைத்தவுடன் இவர் 2008 இல் ராயப்பேட்டை அலுவலகத்தை ஆரம்பித்தார். கஸ்டமர் சர்வீஸுக்காக ஜெ, எம் ட்ரெஸ்ஸஸை ஆரம்பித்தார். . எம்ப்ராய்டரி யூனிட் ஒன்று தங்கம் ஃபேஷன் எம்ப்ராய்டரீஸ் என்ற ஒன்றை ஜானி ஜான் கான் ரோடில் ஆரம்பித்தார்.

நிறுவனம் நடத்துவது என்பது சும்மா விஷயமல்ல. தொடர்ந்த ஆர்டகளும் டெலிவரிகளும் தடையில்லாமல் தொடர்ந்து நடக்க வேண்டும். சொன்ன தேதியில் எல்லாம் தயார் செய்து கொடுத்து இருக்கவேண்டும். டிவிஎஸ் சாஸ்த்ரிபவன் ப்ராஞ்ச், ஜேஎஸ்பி ஹோண்டா, அமிர்தாஞ்சன், ஹோட்டல் ரெசிடன்சி, ஹோட்டல் மெரினா, அனுக்ரஹா ஃபெசிலிட்டீஸ் - ஹவுஸ் கீப்பிங் ஐட்டம், ப்ரசாத் ஸ்டூடியோஸ் ஆகியவற்றுக்கு சப்ளை செய்கிறார்.

இந்த மாதிரி பெரிய அளவில் உடைகள் தைக்க தொழில் நுட்பம் வாய்ந்த பெரிய மிஷின்கள் தேவை. முதலில் MSME மூலம் இந்தியன் வங்கியில் பதினொன்றரை லட்சம் ( 11,50,000.00/- ரூ) கடன் வாங்கி தஜ்மா எம்ப்ராய்டரி மெஷின் வாங்கி இருக்கிறார். ராஜேந்திரன் மற்றும் அனுஷா ஸ்ரீகாந்த் இதற்கு லோன் வழங்கி இருக்கிறார்கள். இந்த மெஷின் 26 அடி நீளமும், 7 அடி அகலமும் உடையது. ஜப்பான் தயாரிப்பு. ஜூகி டெய்லரிங்க் மிஷின் 3 ம் வாங்கி இருக்கிறார். 5 டெய்லரிங் மெஷினும், தாஜ்மா 1 ம், குவ்லெக்ஸ் மெஷின் 1 ம் உள்ளது.

வேலைக்கு இருந்த இவர் இன்று 10, 15 பேருக்கு வேலை கொடுத்திருக்கிறார். அம்மா பேரவைக்கு கந்தன் என்பவர் மூலம் ஆர்டர் கிடைத்து தைத்துக் கொடுத்தார். வேணுகோபால் வித்யாலயா மைலாப்பூர், வெங்கடேஸ்வரா வித்யாலயா ஆகியவற்றுக்கு ஆர்டர் எடுத்து தைத்துக் கொடுக்கிறார். குறைந்தது 200 சட்டை , 200 பேண்ட் இருந்தால்தான் ஆர்டர் எடுக்க முடியுமாம். அதிகபட்சம் 1500 வரை செய்யலாமாம். அமிர்தாஞ்சன் நிறுவனத்துக்காக 2 வாரத்தில் 1200 சட்டைகள் மட்டும் தன் நிறுவனத்தின் மூலம் தைத்துக் கொடுத்திருக்கிறார். ஃப்ரூட்னிக் கம்பெனி ஆர்டர் அமிர்தாஞ்சன் கம்பெனி மூலம் கிடைத்தது.

எம்ப்ளாய்மெண்ட் எக்சேஞ்சில் பதிவு செய்ததால் எல் ஐ சி முகவராக கிடைத்த வாய்ப்பையும் பயன்படுத்திக் கொண்டார். தொடர்ந்து முகவராகவும் செயல்பட்டு வருகிறார். இன்னும் 6 மெஷின்களை டிசம்பரில் போட முடிவெடுத்துள்ளார். பெரிதாக யோசியுங்கள். கிடைத்த வாய்ப்புக்கள் அனைத்தையும் பயன்படுத்துங்கள்.

பெரிதாக ஆவீர்கள் என்பது இவரது வார்த்தைகள். எனவே திங்க் பிக். THINK BIG.. பெரிதினும் பெரிது கேள்..!

 டிஸ்கி:- போராடி ஜெயித்த பெண் (17) பற்றிய இந்தக் கட்டுரை ஜனவரி 2012 லேடீஸ் ஸ்பெஷலில் வெளிவந்தது.

4 கருத்துகள்:

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...