எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்
RAMAYANAM லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
RAMAYANAM லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 7 ஏப்ரல், 2019

உள்ள நலன் அழிந்ததால் இழிந்த இராவணன். தினமலர் சிறுவர்மலர் - 11.

உள்ள நலன் அழிந்ததால் இழிந்த இராவணன்.
உள்ளம் கெடாதவரை எதுவுமே கெடுவதில்லை. உள்ளம் கெட்டால் அனைத்தும் கள்ளமாகும், அது ஒருவனை மலையில் இருந்து மடுவில் மட்டுமல்ல மரணத்துக்கும் செலுத்தும் என்று ஒருவனின் வாழ்க்கை நமக்குப் பாடம் புகட்டுகிறது.
அப்படி உள்ள நலன் அழிந்ததால் இழிந்தவன் சாதாரணன் அல்ல. உலகனைத்தையும் வென்றவனும், மூன்று கோடி வாழ்நாள் உடையவனும், முயன்று பெற்ற தவப்பயனால் யாராலும் வெல்லப்படமாட்டான் என சிவபெருமானே மனமகிழ்ந்தருளி வரம் வழங்கிய தசமுகன் எனப்படும் இராவணன்தான் அவன். அவனைப்பற்றிப் பார்ப்போம் குழந்தைகளே.
தென்கடலில் கெம்புப் பதக்கம் போல் ஒளிவீசி மின்னுகிறது இலங்கை மாநகரம். அங்கே அயோத்திக்கீடாக ஏன் அதை விடவும் அழகான மாட மாளிகை கூட கோபுரங்கள் எல்லாம் ஒளிவீசிப் பொலிகின்றன. அவற்றின் நடுவில் அதோ விஸ்வகர்மா சமைத்து விண்ணளாவி உயர்ந்து நிற்கின்றதே அந்த அரண்மனைதான் இலங்காதிபதி இராவணனின் மாளிகை.
இராவணனின் பெற்றோர் புலஸ்தியரின் பேரனான விஸ்ரவ முனிவரும், அசுரகுலத் தலைவனான கமாலியின் மகள் கேசியும் ஆவார்கள்.. இராவணனின் கூடப்பிறந்தவர்கள் விபீஷணன், கும்பகர்ணன், சூர்ப்பனகை. இவனது மனைவி மண்டோதரி. மகன்கள் இந்திரஜித்து, அட்சய குமாரன், அதிகாயன், பிரகஸ்தன், திரிசரன், நராந்தகன், தேவாந்தகன் ஆகியோர்.

வெள்ளி, 25 மே, 2018

சிம்மாசனம் மறுக்கப்பட்ட சூரியன் மகன். தினமலர் சிறுவர்மலர் - 19.

சிம்மாசனம் மறுக்கப்பட்ட சூரியன் மகன்.
அத்தாணி மண்டபம். அத்தினாபுரத்து அரசிளங்குமரர்களான பாண்டவர்களும், கௌரவர்களும் கூடி இருந்தார்கள். அங்கே வில் வேல் வாளில் பயிற்சி பெற்ற இளையர்களின் திறமைக்கான போட்டி நடைபெற்றுக் கொண்டிருந்தது.  ஒவ்வொரு போட்டியிலும் யாரோ வென்ற போது கூடியிருந்த சிற்றிளங்குமரர்கள் அவர்களை ஆரவாரத்துடன் கரகோஷம் எழுப்பிப் பாராட்டினார்கள்.
அர்ஜுனன் முறை வந்தது. அவர் அங்கே தொங்கவிடப்பட்டிருந்த பொம்மைக் கிளியின் கண்ணைத் தன் அம்பால் எய்தார். உடனே அவருக்குக் கரகோஷம் எழும்ப கூடியிருந்த சிற்றிளங்குமரர்கள் மத்தியிலிருந்து சூரியனைப் போலப் ப்ரகாசமான, தேஜசான ஒரு வீரன் எழுந்தான்.
“ இந்தக் கிளியின் ஒரு கண் என்ன , இரு கண்களையும் என்னால் குறிவைத்து அடிக்கமுடியும். “ என்று போட்டி மேடையில் ஏற முயன்றான்.
“நில்.. அரசிளங்குமரர்களுடன் போட்டியிட நீ தகுதியானவந்தானா. எந்த நாட்டு இளவரசன் நீ. ? “ என்று தடுத்து நிறுத்தினார் பாண்டவர்கள் மற்றும் கௌரவர்களின் குருவான துரோணர்.
திகைத்து நின்றான் அந்த வீரன். இழிவரல் கொண்டு இறங்க முற்பட்டான். அப்போது அவனைத் தடுத்து நிறுத்தியது ஒரு குரல். அக்குரலுக்குச் சொந்தக்காரன் துரியோதனன்.

சனி, 19 மே, 2018

பரமாத்மாவுடன் கலந்த பறவைகளின் அரசன். தினமலர் சிறுவர்மலர் - 17.


பரமாத்மாவுடன் கலந்த பறவைகளின் அரசன்.

கருமேகங்கள் சூழ்ந்து நிற்கின்றன. இன்றைக்கு என்ன வெளிச்சத்தையே காணமுடியவில்லையே. உயர்ந்து ஓங்கி வளர்ந்திருந்த ஒரு ஆலவிருட்சத்தில் அமர்ந்திருந்த அந்தப் பறவைகளின் அரசன் தன் இறக்கைகளைச் சோம்பல் முறித்து விழிக்கிறார். சடசடவென தெறித்து விழுகின்றன முதிர்ந்த மரத்தின் சுள்ளிகள்.

அவருக்கு வயது 60,000 ஆண்டுகள்.உள்ளத்தில் நன்னெறிகள் நிரம்பியதால் இன்னும் பறந்து விரிந்த பிரம்மாண்ட சிறகுகளும் தீட்சண்யமான பார்வையும் கொண்டு திடமாகத்தான் விளங்குகிறார். 
  
வானம் இன்னும் மேகமூட்டத்துடந்தான் இருக்கிறது. இன்று என்னவோ ஒரு அசம்பாவிதம் நிகழப்போகிறது என்று ஏனோ தோன்றியது அந்தப் பறவைகளின் அரசனான ஜடாயுவுக்கு. மனதில் இனம் தெரியாத ஒரு அவசம். என்னவானால் என்ன எதிர்கொள்ளத்தானே வேண்டும். தன் தினப்படி காரியங்களை முடித்துவிட்டு நிஷ்டையில் அமர்ந்திருக்கிறார்.

அது சரி இந்த ஜடாயு யார். அவர் மனதை அச்சுறுத்திய அசம்பாவிதம்தான் என்ன ?

”பெரியப்பா.. பெரியப்பா” என்ற குரல்கள் அசைக்கின்றன. ஆனால் கண் விழிக்க இயலவில்லை. அரைக்கண் மூடியபடி பார்க்கிறார் ஜடாயு. தயரத புத்திரர்கள்தான். ஒருவித ஏலாமையுடன் அவர்களிடம் அந்த அசம்பாவிதத்தைச் சொல்லியவுடன் அவரது கண்கள் நிரந்தமாக மூடுகின்றன.