எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வியாழன், 27 ஜூன், 2019

அஸ்வத்தாமன் பெற்ற அஸ்திரங்கள். தினமலர் சிறுவர்மலர் - 20.

அஸ்வத்தாமன் பெற்ற அஸ்திரங்கள்.
ஒருவனுக்கு பிரம்மா விஷ்ணு சிவன் ஆகிய மும்மூர்த்திகள் அஸ்திரம் கொடுத்தும் அதைக் கொண்டு அவன் ஜெயிக்கமுடியவில்லை. ஏனெனில் அவற்றை அவன் நல்லனவற்றுக்குப் பயன்படுத்தவில்லை. தீயோரை ஆதரிக்கப் பயன்படுத்தினான். அதனால் அவை செயலிழந்தன. மும்மூர்த்திகளிடம் அந்த அஸ்திரங்களைப் பெற்ற பெருமைக்குரியவன் அஸ்வத்தாமன். அவனைப் பற்றியும் அந்த அஸ்திரங்கள் பற்றியும் பார்ப்போம் குழந்தைகளே.
துரோணர் கிருபி ஆகியோரின் மைந்தர் அஸ்வத்தாமன்.  இவன் சிறுகுழந்தையாயிருந்தபோது மிகுந்த வறுமையில்தான் வளர்ந்துவந்தான். துரோணர் கௌரவர்கள் பாண்டவர்களின் ஆசியராக ஆனபின்தான் ஓரளவு செல்வச்செழிப்பை எட்ட முடிந்தது. அதிலும் துரோணர் பாண்டவர்களில் அர்ஜுனனுக்கு மட்டுமே கவனம் செலுத்தி எல்லா அஸ்திர சஸ்திரங்களையும் கற்றுக் கொடுத்து வந்தார்.
இருந்தும் தந்தையும் தனயனும் ஒருவர் மேல் ஒருவர் மிக்க பாசத்தோடுதான் வாழ்ந்து வந்தார்கள். ஏனெனில் துரோணர் பல்லாண்டுகள் சிவனை நோக்கித் தவம் செய்தபின் பிறந்த பிள்ளைதான் அஸ்வத்தாமன். எனவே அஸ்வத்தாமனுக்கு சிரஞ்சீவித்தன்மை வழங்கும்படி கேட்டதால் ஈசனும் அஸ்வத்தாமனுக்கு அமரத்தன்மை வழங்கினார். அதனால் அவருக்கு இறப்பு என்பதே கிடையாது.

ஆனால் பாண்டவர்களுக்கும் கௌரவர்களுக்கும் குருஷேத்திரப் போர் ஏற்பட்டது. அப்போது கௌரவர்கள் பக்கம் குரு துரோணரும் அஸ்வத்தாமனும் போரிட்டுக் கொண்டிருந்தார்கள். பதினான்காம் நாள் வந்துவிட்டது. குருவின் உக்கிரம் தணியவில்லை. பாண்டவப் படை பின்வாங்கியது.
துரோணரைப் பின்வாங்கச் செய்ய கிருஷ்ணர் ஒரு உபாயம் செய்தார். தர்மத்தின் காவலனான தர்மனிடம் ”அஸ்வத்தாமன் இறந்துவிட்டான்” என்று துரோணர் காதில் விழுமாறு சொல்லவேண்டும் என்றார். ஆனால் தர்மரோ தான் பொய் சொல்ல மாட்டேனென்று மறுக்க ”அஸ்வத்தாமன் என்ற யானை இறந்துவிட்டது என்று கூறு அது உண்மைதானே” என்று கிருஷ்ணர் மடக்குகிறார்.
ஒப்புக் கொண்ட தர்மரும் துரோணருக்கு அருகில் சென்று “அஸ்வத்தாமா இறந்துவிட்டது “ என்று கூறுகிறார். அதைக் கூறும்போது கிருஷ்ணர் தனது சங்கில் ஒலி எழுப்ப ”அஸ்வத்தாமா இறந்துவிட்”டான் என்று கேட்டுக்கொண்ட துரோணர் தன் பலம் எல்லாம் இழந்து பூமியில் வீழ்கிறார். அவரை வெட்டி வீழ்த்துமாறு கிருஷ்ணர் சொல்ல அவரிடம் பயின்ற மாணாக்கர்களான பாண்டவர் அனைவரும் தயங்கிகிறார்கள்.
நிராதரவாய் ஆயுதம் ஏதும் இல்லாமல் கிடந்த துரோணரை துருபனின் மகனான திருஷ்டத்யும்னன் என்பவன் வெட்டி வீசிக் கொல்கிறான். இந்த அவலச் செய்தியைக் கேட்ட அஸ்வத்தாமன் உள்ளம் துடிக்கிறது. தன் தந்தையைக் கொன்ற துரோகிகளைப் பழிவாங்கத் துடித்தது அவன் மனம். அத்தோடு அவன் நின்றிருந்தால் பரவாயில்லை.ஆனால் பாண்டவர்களின் குலமே வேறோடு அழிந்து போகும் செயலில் ஈடுபட்டான். கோபம் அவன் கண்ணை மறைத்தது.
தனுர் வேதமும் அஸ்திர அறிவும் பெற்றவன். அதர்வண வேதம் கற்றவன். ஆனால் கோபத்தில் கண்மண் தெரியாமல் நடந்துகொண்டான். முதலில் பீமனின் மகன் கடோத்கஜனையும் அவன் மகன் அர்ஜனபர்வாவையும் அழித்தான். அதன் பின் துருபத ராஜகுமாரர்கள் சத்ரும்ஜயன், பலாநீகன், ஜயாநீகன், ஜயாச்வான், சிருதாஹீ, குந்திபோஜனின் பத்து மகன்களையும் கொன்றான்.
அடுத்துத் தன் தந்தையைக் கொன்ற திருஷ்டத்யும்னனை நாராயண அஸ்திரத்தைப் பயன்படுத்திக் கொல்ல முயன்றான். பாண்டவப் படையை நோக்கி அவன் விஷ்ணுவிடம் பெற்ற நாராயண அஸ்திரத்தை எய்ய முப்பத்து முக்கோடி தேவர்களும் அம்பு மாரி பெய்தார்கள், ஏனெனில் அந்த அஸ்திரத்தை எய்பவர்களுக்கு அவர்கள் துணை இருப்பார்கள். ஆனால் பாண்டவப் படையினர் தமது ஆயுதங்களை கீழே போட்டுவிட்டுச் சரணடைந்ததால் நாராயண அஸ்திரம் ஒன்றும் செய்யாமல் திரும்பி விட்டது.
அடுத்து நெருப்பை உமிழும் ஆக்னேயாஸ்திரத்தை ஏவினான். சிவனிடம் பெற்ற அஸ்திரம் அது மற்றவரைத் தாக்கினாலும் திருஷ்டத்யும்னன், அர்ஜுனன், கிருஷ்ணர் ஆகியோரை ஒன்றும் செய்யாமல் திரும்பியது கண்டு இன்னும் கோபமுற்றான். வியாசர் கிருஷ்ணரின் பாதுகாப்பில் இருக்கும்வரை அவர்களை ஒன்றும் செய்யமுடியாது என்று அறிவுறுத்தியபின் போர்க்களத்தைவிட்டு வெளியேறினான்.
பதினெட்டாம் நாள்போரில் பீமன் போர் நெறிக்கு மாறாக துரியோதனனின் தொடையில் தன் கதையால் அடிக்க துடித்து வீழ்ந்தான் துரியோதனன். தன்னைப் போஷித்துவந்த துரியோதனின் வீழ்ச்சியைக் கண்டு வருந்திய அஸ்வத்தாமாவும் போர் நெறிமுறைக்கு எதிராக பாண்டவர்களைக் கொன்றுவிட்டு வருவதாக துரியோதனனுக்கு வாக்குக் கொடுத்துவிட்டு பாண்டவர் பாசறை நோக்கிச் சென்றான்
அர்த்தஜாம இருளில் கோட்டான்கள்கூவும் நேரத்தில் பாண்டவர்களின் கூடாரத்துக்குள் நுழைந்தான். அவனிடம் இருந்த அஸ்திரங்கள் யாவும் மறைய ஒரு வாளைக் கொண்டு அங்கே உறங்கிக் கொண்டிருந்த திருஷ்டத்யும்னன், உத்தமோஜா, யுதாமன்யு, சிகண்டி, திரௌபதியின் ஐந்து புதல்வர்களான உபபாண்டவர்களைக் கொன்றான். வாக்கை நிறைவேற்றியதாக துரியோதனனிடம் அவன் தெரிவிக்க துரியோதனன் இறந்து போகிறான்.
ஆனால் இறந்தவர்களோ பாண்டவர்கள் அல்ல உபபாண்டவர்கள். இவர்கள் திரௌபதியின் புத்திரர்கள். எனவே கலங்கித் தவித்த திரௌபதியிடம் அஸ்வத்தாமன் சிரசைக் கொய்து தருவதாக வாக்குக் கொடுக்கிறான் அர்ஜுனன். அர்ஜுனன் , அஸ்வத்தாமா இருவரும் ஒருவரை நோக்கி ஒருவர்  பிரம்மாஸ்திரம் எய்கிறார்கள்.
பிரம்மாஸ்திரத்தால் உலகமே அழிந்துவிடும் என்று நாரதரும் வியாசரும் வேண்ட அர்ஜுனன் பிரம்மாஸ்திரத்தைத் திரும்பப் பெறுகிறான். ஆனால் பிரம்மாஸ்திரத்தை எய்ய மட்டுமே தெரிந்த அஸ்வத்தாமன் அதைத் திரும்பப் பெறும்வழி தெரியாமல் உத்தரையின் கர்ப்பத்தில் இருக்கும் சிசுவை நோக்கித் திருப்புகிறான். அக்குழந்தை கர்ப்பத்திலேயே இறக்க. அதற்கு உயிர்கொடுத்துப் பிழைக்க வைத்த கிருஷ்ணர் கடைசியில் அஸ்வத்தாமன் மேல் மிகக் கடுமையாகக் கோபம் கொள்கிறார்.
அவன் நெற்றியில் இருக்கும் ஸ்யமந்தகமணியால்தான் அவனை யாராலும் வெல்ல முடியவில்லை. எனவே அம்மணியை அவனிடமிருந்து பறிக்கிறார்.  ”இந்த உலகம் இருக்கும் காலம் வரை உன் தந்தை வரம் கேட்டதுபோல் சிரஞ்சீவித்தன்மையோடு இருப்பாய். ஆனால் இவ்வளவு பாவங்கள் செய்ததன் பலனாக நீ எப்போதும் யாருடைய அன்பையும் பெறமுடியாது. உன்னை யாரும் விரும்ப மாட்டார்கள். அனைவரின் வெறுப்போடும் நோயோடும் அலைவாய் “ என்று சாபமிடுகிறார்.
மூன்று அஸ்திரங்கள் கிடைத்தும் அதை முறையாகப் பயன்படுத்தாமல் அதிகமான கோபத்தினால் தீயோரை ஆதரிக்க முறையற்ற விதத்தில் பயன்படுத்தியதால் அவற்றின் பலனை இழந்தான். நல்லவர் பக்கமே துணை நிற்கவேண்டும் என்பதை அஸ்வத்தாமனின் கதை நமக்குக் கற்பிக்கிறதுதானே குழந்தைகளே.

டிஸ்கி 1 :-  இந்தக் கதை இதிகாச புராணக் கதைகள் என்ற தலைப்பில் 7. 6. 2019  தினமலர் சிறுவர்மலர் இதழில் இடம்பெற்றுள்ளது. நன்றி தினமலர் சிறுவர் மலர், தனது அழகான ஓவியங்களால் கதைக்கு எழில்கூட்டும் ஓவியர் ரஜனி & எடிட்டர் தேவராஜன் ஷண்முகம் சார்.

டிஸ்கி 2:- அரும்புகள் கடிதத்தில் சூரியனும் சந்திரனும் ஒளியிழந்த கதையைப் பாராட்டிய பிள்ளையாம்பேட்டை வாசகர் சாரங்கம் மகாலிங்கம் அவர்களுக்கு நன்றிகள். 

4 கருத்துகள்:

 1. கதை அருமை !!! பகிர்ந்தமைக்கு நன்றி !

  பதிலளிநீக்கு
 2. கதை அருமை வாழ்த்துகள்

  துளசிதரன், கீதா

  பதிலளிநீக்கு
 3. நன்றி ஜட்ஜ்மெண்ட் சிவா

  நன்றி துளசி சகோ & கீத்ஸ்

  நன்றி வெங்கட் சகோ

  வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
  என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

  பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...