அமீரகத்தில் தமிழ்த்தேர் உலாவரக் காரணமானவர் காவிரிமைந்தன். கவியரசு கண்ணதாசன் பற்றி இரு நூல்கள் வெளியிட்டிருக்கிறார். இவரது நூலான காதல் பொதுமறை காதலர் தினத்தன்று எனது காதல் வனம் நூலோடு சென்னை கே கே நகர் டிஸ்கவரி புக் பேலஸில் வெளியிடப்பட்டது.
இவர் எழுதிய நெறிபிறழாக் காதல் கடிதங்களின் /கட்டுரைகள் /கவிதைகளின் தொகுப்பு இந்நூல். காதல் வேதம் என்பதால் பொதுமறை எனப் பெயரிடப்பட்டிருக்கும் இந்நூலில் 143 கடிதங்கள் / கட்டுரைகள் இடம்பெற்றிருக்கின்றன. அதென்ன 143 என்ற கணக்கு . அது I LOVE YOU வின் கணக்காக இருக்கலாம். எல்லாம் ஒரு யூகம்தான் J
திகட்டத் திகட்டக் காதல். இதில் ஊடல் என்று அதிகம் ஏதுமேயில்லை. எல்லாம் கூடல் மட்டுமே. அதிலும் அகநானூறு மாதிரி பெயர் குறிக்கப்படாத தலைவன் தலைவி மட்டுமே பங்குபெறும் உரையாடல்கள். பக்திமயமான காவடிச் சிந்துகள்போல இவை காதல் தேன் சிந்துகள்.
கட்டிமுத்தம், பனிமுத்தம் மட்டுமல்ல தேன்முத்தமும் நூறுதரமாவது இடம்பெற்றிருக்கிறது. நேர்நிறை முத்தமும் நகங்கள் நடத்தும் நாட்டியமும் பவள இதழ் காண பாத யாத்திரை நடத்துவதும், இதழ்க் கோலப் பூக்களும் வேல்விழிகள் ஆட்சிக் கலைப்புப்போல் அடங்குவதும் வெகு அழகு. மேலும் முத்தம் பெற்றே சர்க்கரை நோய் வந்துவிட்டதாம் அக்காதலனுக்கு.
இருமனமும் இணைந்து இருபாலும் முப்பாலில் மூழ்கும் கவி வரிகள். அதீதக்காதலும் மெல்லிய காமமும் கலந்த வரிகள். வித்யாசமான இன்பச் சுற்றுலா, களவு நெறிகற்றுத்தரும் கண்கள் என்னும் கல்விச்சாலை, என வார்த்தைகளில் சித்து விளையாடுகிறார் காவிரி மைந்தன். வள்ளுவன் வார்த்தையிலும் ( குறள்களும் ) கிருஷ்ணன் க்ரீடையிலும் துணைக்கு வருகிறார்கள்.
காமன் படையெடுப்பும் மன்மதன் விளையாட்டும் சீராட்டுகின்றன இக்காதலரை. இக்காதலில் போதை எவ்வளவு ஏறினாலும் போதும் என்பதே கிடையாது. காதல் என்பது எரிகின்ற தீயா அணைக்கின்ற தீயா என்ற கேள்வி வேறு. காத்திருத்தல் இல்லாமல் காதலா. அவ்வாறு காத்திருந்த கணங்களே நெஞ்சிலே ரணங்களை உண்டு பண்ணியதாம்.
கருங்கூந்தல், கைவிரல்கள், கால் சலங்கை, குரல், இடை, நடை, மேனி, நாணம், தோள்கள், வடிவழகு, முன்னழகு, பின்னழகு, கட்டுடல், மொட்டுடல், பட்டுடல், கருவிழிகள், பூவிதழ்கள், காது மடல்கள், கன்னக்குழிகள் என காதலரை இம்சிக்கும் ஒவ்வொன்றையும் தனித்தனிக் காவியமாக்கி இருக்கிறார். இக்காதலனுக்கு காதலியின் தேன் சிந்தும் இதழ்களே பாலன்னமாம். ஆடிப்பெருக்கும் அட்சய பாத்திரமும் இன்பமழையும் அவளேயாம். .
மனைவியைக் காதலியாய் நினைத்துப் புனைந்தது போலவே இருக்கின்றன் அனைத்து கவிதைகளும். ஜானகியாய் நினைத்து எழுதிய திருப்பதிகம் அருமை. ஒவ்வொரு நாளும் தனிமையில் இருக்கும்போது தோன்றிய சிந்தனைகளை அப்படியே கொட்டியிருப்பதால் அதில் உயிர்த்தேன் ததும்பி வழிகிறது.
எஞ்சிய நாட்களைத் தன் வஞ்சியுடன் வாழ ஆசைப்படும் ஒருவனின் ஆசை வாக்குமூலங்கள் விரிகின்றன. தேவியாய் அவள் திருவடிபற்றிச் சரணமாகிறது அக்காதலன் நெஞ்சம்..எப்போதும் கண்ணெதிரே அக்காதலி வேண்டும் அவனுக்கு.
காதலர் இருவரும் கண்ணுள்ளும் மனதுள்ளும் ஒருவரை ஒருவர் இன்பச்சிறையில் பூட்டி மகிழ்கிறார்கள். காதலனோ அவளது வளைக்கரத்திலேயே வாழ விரும்புகிறான். இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம். எவ்வளவு கொடுத்தாலும் எவ்வளவு எடுத்தாலும் எதுவும் போதவில்லை இருவருக்கும், வால்காவரை நீளும் கடிதங்கள் எழுதியும்.
கனவுக் காதலும் நனவுக் காதலும் தொடர்ந்துகொண்டே இருக்கின்றன, மெய்யெழுத்தை உயிரெழுத்துத் தழுவி நிற்பதுபோல். மது மது என்றும் வண்ணம் எண்ணம் என்றும் எழுதப்பட்ட கடிதங்கள் வெகு சுவை. ஓரிரு கடிதங்களில் பிரிவின் வேதனையும் உறவின் பெருமையும் உள்ளத்திலிருந்து வெளிப்படுகின்றன. நேசிப்பு சுவாசிப்புப் போலத் தொடரவேண்டும் என்பது இவர்வாக்கு.
காதலில் மட்டுமே ஆள்பவர்களே ஆளவும் படுகிறார்கள். அள்ள அள்ளக் குறையாமல் தீந்தமிழ் முத்தச் சீர் தருகிறார்கள். எல்லாம் மையல் செய்யும் மாயம். இனிது இனிது இக்காதல் பொதுமறை. அனைவரும் படித்துச் சீர்திருத்தம் புரிவீர், சித்தம் தெளிவீர்.
நூல் :- காதல் பொதுமறை
ஆசிரியர் :- காவிரிமைந்தன்
பதிப்பகம் :- தமிழ்நதி
விலை :- ரூ 450/-

அன்புமிக்க திருமதி.தேனம்மை லட்சுமணன் அவர்களுக்கு..
பதிலளிநீக்குகாவிரிமைந்தனின் கனிவான வணக்கமும் உளமார்ந்த நன்றிகளும்!
“காதல் பொதுமறை” நூலினைத் தங்களுக்கு வழங்கி தங்களின் பின்னூட்டம் தாருங்கள் என்று பணித்து கிட்டத்தட்ட அதை நானே மறந்து.. இன்று தங்கள் வலைப்பூக்கள் பக்கத்தில் பதிவிட்டமையறிந்து.. நூல் ஒன்றுக்கு இப்படித் தக்கதொரு மதிப்புரை தரமுடியும் என்று இலக்கணம் வகுத்ததுபோலிருந்தது உங்கள் வரிகள்! ஒரு எழுத்தாளனின் எண்ணங்களின் வண்ணங்கள் எழுத்துக்கள் வடிவில்சேர்ந்து படைப்பாய் பரிணமிக்கும்போது.. அதற்கான வாசகர்களின் வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் மட்டும்தான் படைப்பாளன் பெறுகின்ற பதக்கங்களாகும்!
தேனம்மை லட்சுமணன் என்கிற பெயர் வலைதளம்..இணையதளம் என்று வியாபித்திருக்க.. ஆகச்சிறந்த படைப்பாளர் ஒருவர் நம்மோடு நட்பில் இணைந்ததோடு.. தமிழ்த்தேர் இதழின் ஆசிரியர் என்கிற வகையில் அமீரகத்தில் நடைபெற்ற தமிழ்த்தேர் மாத இதழ்களுக்கு தனது கவிதைகளைத் தந்து அறிமுகமான இலக்கியத் தோழி இவரின் பெருமைகள் அநேகமாக முகநால், வாசிப்பாளர்கள் வரிசையில் முன்னணியில் என்றைக்கும் விளங்கும்! அத்தகு பிரபலமான ஒருவர் எனது “காதல் பொதுமறை” நூலிற்கு நீண்டதொரு உரைதந்து எனை உவகைக்கடலில் மிதக்கவிட்டிருக்கிறார் எனில் அது மிகையில்லை!
சக படைப்பாளர் ஒருவரின் படைப்பை இந்த அளவிற்கு நுகர்ந்து, அதன் உட்பொருளில் நுழைந்து.. எழுத்துக்களின் வண்ணங்கள்.. வடிவங்கள் பற்றியெல்லாம் அகரவரிசையிட்டு ஒரு ஆனந்தக்கோலமிட்டிருக்கிறார். ஏதோ நானும் இந்த நூலைப் படித்தேன்.. ரசித்தேன் என்று கடமைக்காக பதிவிடும் பல பேரில் அடங்கிவிடாமல்.. தூய முயற்சியெடுத்து.. துளித்துளியாய் அதை ரசித்து, ஆளும் தமிழை அதில் கண்டு.. தானும் உணர்ந்ததை எழுத்துவடிவில் நிறைவுடன் தந்திருக்கும் திருமதி.தேனம்மை அவர்களை நிச்சயமாக நன்றிப்பெருக்கோடு பாராட்டுகிறேன்.
கண்ணதாசன் பாடல்கள் காலத்தின் பதிவுகள், காலத்தை வென்றவை, வாழும் தமிழே வாலி, என் பார்வையில் கண்ணதாசன், நேரம்+நிர்வாகம்=வெற்றி, மனதில் நிறைந்த மக்கள் திலகம், கர்மவீரர் காமராசர், துபாய் வாழ் தமிழ் மக்கள் நெஞ்சில் கண்ணதாசன், நீ வாழ நினைத்தால் வாழலாம், காவிரிமைந்தன் கவிதகள் என்று பட்டியிலிட்டு எழுத்துலகில் தடம்பதிக்கும் எனது படைப்புகளில் அருந்தமிழ் விருந்தினை தமிழ்மக்களுக்குத் தந்திருக்கிறேன் என்று சொன்னால்.. அது காதல் பொதுமறையாகத்தான் இருக்கும்! இதற்கெல்லாம் என்னுள்ளிருந்து என்னை இயக்கும் என் கவி ஆசான் கண்ணதாசனுக்குத்தான் முதல் நன்றி!! இன்று தேனம்மை தந்திருக்கும் பாராட்டுக்களையும்கூட கண்ணதாசனுக்கே காணிக்கையாக்குகின்றேன்..
நன்றிகளுடன்
காவிரிமைந்தன்
விரிவான பின்னூட்டத்துக்கு நன்றி திரு காவிரிமைந்தன் அவர்களே !
பதிலளிநீக்குவலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!