எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

சனி, 1 ஜூன், 2019

வெட்டாட்டம் – ஒரு பார்வை.


வெட்டாட்டம் – ஒரு பார்வை.
வெட்டாட்டம்

சுஜாதா, ராஜேந்திரகுமார், ராஜேஷ்குமார், போன்ற எவர் மாதிரியும் இல்லாத புதுமாதிரிக் கதை சொல்லி ஈர்த்திருக்கிறார் ஷான். ஏகப்பட்ட அரசியல் வில்லங்கப் படங்கள் பார்த்திருப்போம். இது ஹைடெக் இண்டர்நெட் வகை. முதலில் வெட்டாட்டம் படிக்க ஆரம்பித்ததுமே எனக்குத் தோன்றியது இதற்குப் பொருத்தமான ஆள் விக்ரம் அல்லது அரவிந்தசாமி. இந்த வருண் கேரக்டரின் முழு வலுவையும் தாங்கும் சக்தி அவர்கள் இருவருக்கே உள்ளது.

நாவலெங்கும் பல புதுமைகள். அடங்கிப் போகாத சித்ரா, எதிர்க்கேள்வி கேட்கும் சுவாதி, தீர்க்கமுடியாத திறமையான எதிர்க்கட்சிக்காரியான கயல்விழி இவர்களோடு மென்மையான கவுசல்யாவும் நர்மதாவும் தொட்டுக்கொள்ள ஊறுகாயாய் J வாங் நடத்தும் சைபர் கிரைம் உச்சம். எடுத்தவுடனே ஒரு திரைப்படத்தின் லாவகத்துடன் பாயத்தொடங்கிவிடுகிறது நாவல்.

அரசியல் சாணக்யத்தனத்தின் உச்சியில் இருக்கிறார் வினோதன். இந்த கேரக்டர் நம்மை ஆண்ட பலரின் முகங்களை நினைவுறுத்துகிறது. இவர் ஒரு நடிகர் வேறு. வருண் இன்றைய சோஷியல் மீடியாவில் விளையாட்டு மென்பொருள் உற்பவிக்கும் விற்பன்னன். சைபர் க்ரைம் என்பதை எப்படிச் செயல்படுத்துகிறார்கள் என்பதைப் படிநிலைகளோடு சொல்லியது கதை. அதை வைத்தே தன் பல்வேறு நிலைப்பாடுகளையும் கடப்பது க்ளாஸ் !

தாஸ் எனப்படும் தாஸண்ணன் கடந்த ஆண்டுகளில் ஆட்சி செய்த விசுவசி ஒருவரை ஞாபகப் படுத்துகிறார். இவ்வாறே மற்ற மந்திரிகளும். சென்னை வெள்ளம், மந்திரிகள் ஒளித்துவைப்பு, பணமோசடி, அந்நிய வங்கிகளில் ஹவாலா பணம் ஆகிய எல்லாத்துறைகளையும் அக்குவேறு ஆணிவேறாக அலசி அதன் வெளிநாட்டு சல்லிவேர்வரை பிடித்து ஒற்றறிந்து இக்கதையைப் படைத்திருக்கிறார் ஷான். முடிவில் இதன் உண்மையான ஆவணங்கள் வேறு க்யூ கட்டி நிற்கின்றன. அரசியல் நிலவரங்கள், கலவரங்கள் என கலகலப்பூட்டிச் செல்கிறது நாவல்.

தன் கதையை நோட்டா படமாக்க அவர்கள் எவ்வளவு ப்ரயத்தனப்பட்டு எடுத்தார்கள் என்பதை ஷான் கூறியிருக்கும் விதம் அன்பு பொலிந்தது. நான் நினைத்தபடி இல்லாமல் கெடுத்துவிட்டார்கள் என்று எல்லாம் அபாண்டமாகப் பழி சுமத்தாமல் இரண்டும் அதனனன் பாதையில் பயணிக்கின்றன என்று எந்த மனக்குறையுமில்லாமல் முடித்துவிட்டார். நிறையப்பேர் என் முகநூல் பக்கத்திலேயே இந்தப் புத்தகம் பற்றிப் பகிர்ந்தபோது கதையாகப் படித்த விறுவிறுப்பு படத்தில் இல்லை எனச் சுட்டிக்காட்டியபொழுதும்.

கரைகாணா வில்லி போல இக்கதை முழுதும் நான் காதலித்த ஒருத்தி, என்னைப் பிரமிக்க வைத்த ஒருத்தி ( கல்கியின் நந்தினியைப் போல ) கயல்விழி. ( சிம்ரன்/நக்மா இந்த கேரக்டருக்குப் பொருத்தமாக இருப்பார்கள் ) யப்பா. என்ன திறமை. ஆண் குணம் போல பெண் மனம் பற்றியும் அழகாகப் பேச வாய்த்திருக்கிறது ஷானுக்கு. நர்மதாவும் கௌசல்யாவும் மென்மையின் பிரதிநிதிகள். சுவாதி சண்டைக்கோழி போல இருந்தாலும் ( ஜாஸ்மின் மீரா ஞாபகம் வந்தது ) அன்பான காதலி.

மொத்தத்தில் ஆட்சியும் பதவியும் எப்பேர்ப்பட்டவனையும் ஈர்த்துவிடும் என்பதற்கு இந்நாவலின் கதாநாயகன் வருணே சாட்சி. ஆங்கிலப் படங்கள் போல வாங் அனைத்து அக்கவுண்ட்களிலிருந்து டேட்டாவைத் திருடித் தரவிரக்குவதும் ( இதில் கூறியுள்ள வங்கிகள் போல அவ்வளவு மோசமாவா இருக்கும் ஸ்விஸ் பேங்க் அக்கவுண்டின் பாதுகாப்புகளும் என சிந்திக்க வைத்தது J ) பரதன் திசை மாறுவதும், அபுதாஹிர் கூட தலைவருக்கு எதிராக செயல்படுவதும் என பக்கா கமர்ஷியல் மசாலாவை சரியான விகிதத்தில் கலந்து கொடுத்திருக்கிறார்.

எம்ஜியார், ரஜனி படங்கள் முடிந்த பின்பும் இன்னும் நீளாதா எனத் தோன்ற வைப்பது போல இந்நாவலும் படித்து முடிந்தபின்னும் கூட ஒரு சாக்லேட் சுவையை மனதில் ஓட விட்டிருக்கிறது. ஜெர்மன் பத்ரிக்கைக்குத் தரவுகளைத் தாரை வார்ப்பதுடன் எல்லாம் சுபம். அப்புறம் அந்த சண்டைக்கோழியும் இந்த சாகஸ விளையாட்டுக்காரனும் ஜோடி சேர்கிறார்கள். THE PRINCE AND THE PRINCESS LIVED HAPPILY EVER AFTER. என ஃபேரி டேல்ஸ் போலும், மில்ஸ் & பூன் நாவல்கள் போலும் இனிமையைத் தந்து கொண்டிருக்கிறது வெட்டாட்டம்.

இன்னொன்று சொல்லியே ஆகவேண்டும். இந்நாவலைத் தந்தைக்கு அர்ப்பணித்திருப்பது அழகு. தாயம் எனப்படும் வெட்டாட்டத்தின் விதிமுறைகள் ( விரும்பியோ விரும்பாமலோ வெட்டினால்தான் பழுக்கலாம் என்பது ) பற்றி ஒவ்வொரு அத்யாயத்தின் ஆரம்பத்திலும் கொடுத்திருப்பது சிறப்பு. அதே போல் 25 அத்யாயங்களும் தமிழ் எழுத்தில் ஆரம்பித்து இருப்பது. ஓரிரு இடங்களில் ஆங்கிலக் கலப்பு வந்தாலும் நாவல் முழுவதையுமே முடிந்தவரை சரளமான தமிழில் வழங்கி இருப்பதற்கும் ஹேட்ஸ் ஆஃப் ஷான்.

நூல்:- வெட்டாட்டம்.
ஆசிரியர் :- ஷான் கருப்புசாமி
பதிப்பகம் :- யாவரும்
விலை :- 250/-

5 கருத்துகள்:

  1. நானும் படித்து ரசித்த நாவல் ..

    விறுவிறுப்பாக செல்லும் கதை இயல்பான எழுத்துநடையில்

    பதிலளிநீக்கு
  2. நல்ல புத்தகம் அறிமுகம். ஓ படமாவும் வந்துவிட்டதா...

    மிக்க நன்றி.

    கீதா

    பதிலளிநீக்கு
  3. நீங்கள் சொல்வதைப் பார்த்தால் கயல்விழி கேரக்டருக்கு வரலக்ஷ்மி கூட பொருத்தமாய் இருப்பார் போலவே!

    நல்லதொரு அறிமுகம்.

    பதிலளிநீக்கு
  4. மதிப்பீடு அருமை. விமர்சனத்தைப் படித்தபோது நீங்கள் ரசனையோடு படித்ததை உணரமுடிந்தது. கல்கியின் நந்தினியை ஒப்பீடு தந்தவிதம் அருமை.

    பதிலளிநீக்கு
  5. நன்றி அனு

    நன்றி கீத்ஸ்

    இருக்கலாம் ஸ்ரீராம் :)

    நன்றி ஜம்பு சார்

    வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...