எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வெள்ளி, 31 மே, 2019

இருப்பதை ஈந்ததனால் ஐஸ்வர்யம் பெற்றவள். தினமலர் சிறுவர்மலர் - 17.


இருப்பதை ஈந்ததனால் ஐஸ்வர்யம் பெற்றவள்

சிலர் தம்மிடம் எவ்வளவு செல்வம் இருந்தாலும் அதில் துளிக்கூடப் பிறருக்குக் கொடுக்க மாட்டார்கள். மாடி வீடு, மகிழுந்து, மாடு மனை என்றிருப்போரும் கூட அடுத்தவருக்குக் கிள்ளிக் கூடக் கொடுக்க மாட்டார்கள். ஆனால் ஒரு ஏழைப் பெண்மணி , எளிய ஓட்டுவீட்டில் வசித்தவள் தன்னிடம் இருந்த ஒரே ஒரு பொருளை உணவாக தானம் கொடுத்தாள். அதனால் அவள் பெற்றதோ அவள் வறுமையை நீக்கும் வளமான தங்கமழை. ஆச்சர்யமாக இருக்கிறதல்லவா குழந்தைகளே. வாருங்கள் அவள் கதை பற்றிப் பார்ப்போம்.
அது நான்காம் நூற்றாண்டுக்காலம். கேரளாவில் காலடி என்னும் சிற்றூரில் ஆர்யாம்பாள் சிவகுரு தம்பதிகளுக்கு மகவாகத் தோன்றினார் ஆதி சங்கரர். தனது எட்டாவது வயதில் துறவறம் மேற்கொண்டு கோவிந்த பகவத் பாதரிடம் சீடராகச் சேர்ந்தார்.
இளம் துறவிகள் தங்கள் குருமார்களுக்கு சேவை செய்ய வேண்டும். வேதம், தத்துவங்களைக் கற்றுக் கொள்ள முடியும். ஆனால் துறவியாயிருப்பதால் தனக்கான உணவை அன்றன்றே உஞ்சவிருத்தியாகப் பெற்று அன்றைக்கே உண்டு விட வேண்டும். எதையும் சேமித்து வைத்துக் கொள்ளக் கூடாது.

அதன் படி தினமும் தன் ஆசிரியரின் குருகுலத்தில் அவருக்குப் பணிவிடையாற்றிவிட்டு அவரிடம் கல்வி கேள்விகள் பயின்றபின் உஞ்சவிருத்திக்குச் செல்வார் சங்கரர். அன்று என்ன கிடைக்கிறதோ அதுதான் அன்றைய உணவு. அதுவும் ஒரு வீட்டில் மட்டும்தான் உணவு பெறுவார்கள். கிடைத்ததை வைத்துப் பசியாறுவார்கள்.
வெய்யில் கொளுத்துகிறது. தண்டத்தைக் கையில் ஏந்தி வெறும் கால்களுடன் காவி அணிந்த அந்த இளம் துறவி நடந்து வருகிறான். இன்றைக்கு எங்கேயுமே பிக்ஷை கிட்டவில்லை. ஒரு வீட்டில் வாயிலில் நின்று மூன்று முறை “ பிக்ஷாந் தேஹி “ என்று சொல்வார்கள். ஒன்றும் வழங்கபடாவிட்டால் சென்று விடுவார்கள்.
அதோ தூரத்தில் ஒரு ஓட்டு வீடு தெரிகிறது. அங்கே ஒரு வறிய பெண்மணி நின்று கொண்டிருக்கிறாள். கைகளைக் கண்களுக்கு மறைப்பாக வைத்துத் தன் கணவர் வருகிறாரா என்று பார்த்துக் கொண்டிருக்கிறாள். வருவதோ ஒரு இளம் துறவி. அதுவும் கிட்டே வந்ததும்தான் அவளுக்குப் புலனாகிறது.
அவள் வீட்டின் வாசலில் நின்று “ பிக்ஷாந் தேஹி” எனக் கேட்கிறான் அத்துறவி. பால் வடியும் பாலகனான அந்தத் துறவி சூரியனுக்கு நிகராக பிரகாசமாக வீட்டின் வாயிலில் நிற்கிறான். ஆனால் அவனுக்குப் பிக்ஷையிட அந்த வீட்டில் உணவுப் பொருள் எதுவுமே இல்லை.
வீட்டிற்குள் ஓடுகிறாள் அப்பெண்மணி. கையில் உணவுப் பொருள் ஏதும் கிட்டினால் போடலாம். ஒரு கைப்பிடி தவசம், தானியம் ஏதுமிராதா என்று அடுக்கி வைத்த பானைகளை உருட்டுகிறாள். எங்கே இருக்கப் போகிறது. அதுதான் எல்லாம் சில தினங்கள் முன்பே காலியாகி விட்டனவே. அவளும் அவள் கணவரும் உணவருந்தியே சில நாட்கள் இருக்கும். சமையற்கட்டு நெருப்பைப் பார்த்தே பலநாள் இருக்கும்.
உணவைத் தேடித்தான் அவள் கணவரும் வெளியே சென்றிருக்கிறார். கைப்பிடி அளவு தானியம் கிடைத்தால் கூட போதும் அந்தத் துறவிக்கு அளித்துவிடலாம். இரண்டாம் முறையாக அத்துறவியின் குரல் கேட்கிறது. “ பிக்ஷாந்  தேஹி “  
கேட்டவுடன் விதிர்விதிர்க்கிறது அப்பெண்மணிக்கு. ஐயோ இதென்ன சோதனை. வீட்டில் குருணை கூட இல்லையே. ஓடு நீங்கிய இடத்தில் இருந்து சூரிய வெய்யிலும் உள் குதித்து அவளைக் கேலி செய்வது போலிருக்கிற்து. அவள் மனமெங்கும் உணவுத் தேட்டை.
மாடம் புரை எல்லாம் துழாவுகிறாள். அஹா அங்கே தட்டுப் பட்டது இரண்டு மூன்று நாள் பழசான ஒரு நெல்லிக்கனி. இதை இதைக் கொடுக்கலாமா என்று அவளுக்கு ஐயப்பாடு. ஏனெனில் துவாதசி பாரணை விரதம் முடிக்க அவள் தன் கணவருக்காகச் சேர்ந்து வைத்திருந்தது அந்த நெல்லிக்கனி. அதைக் கொடுத்தால் அவருக்கு என்ன கொடுப்பது. அதெல்லாம் பிறகு பார்த்துக் கொள்ளலாம்.
இப்போது இத்துறவியின் பசி தீர்ப்பது முக்கியம். ஏனெனில் ஒரு வீட்டில் மூன்று முறை பிக்ஷை கேட்டு அளிக்காவிட்டால் அவர்கள் வேறு வீட்டில் பிக்ஷை கேட்க மாட்டார்கள். அன்று முழுவதும் பட்டினிதான். மேலும் பொழுது வேறு உச்சியை அடைந்துவிட்டது. இதற்கு மேலும் தாமதித்தால் பொழுது இறங்கிய பின்னும் துறவிகள் உணவை உண்ண மாட்டார்கள்.
எடுத்துக் கொண்டு ஓடுகிறாள் வாயிலுக்கு. அத்துறவி மூன்றாம் முறை “ பிக்ஷாந்தேஹி “ என்று கேட்கவும் அப்பெண்மணி அந்த நெல்லிக்கனியை அவருக்குப் பிச்சையிடவும் சரியாக இருந்தது.
கையில் நெல்லிக்கனி. அன்றைய அமுது. அதைப் பார்க்கிறார் அத்துறவி.  எதிரே பார்க்கிறார் பிச்சையிட்ட பெண்மணியை. அவளின் அன்பு பொங்கும் உருவம் அவர் கண்ணை நிறைக்கிறது.
ஒட்டிச் சுருண்ட வயிறு. நரைத்த திரைத்த தேகம். வரியோடிய கண்களும் கன்னங்களும். பழந்துணியான புடவையில் ஆயிரத்தெட்டுத் தையல்கள். ஆனால் ஏதோ தன்னால் இயன்றதைத் தர நினைத்துத் துடித்த மனது. பிக்ஷை அளித்துவிட்டோம் என்ற நிறைவில் பொங்கும் கண்கள்.
இவ்வளவு அன்பான பெண்மணிக்கு இப்படி ஒரு வறுமையா. தன்னிடம் இருந்த இக்கனியை அவள் புசித்தால் தாகவிடாயும் பசியும் கூட சில நாழிகைக்கு அடங்குமே. ஆனால் அதைத் தனக்கு அளித்துவிட்டாளே. என்னே அவள் பேரன்பு.
மனம் நெகிழ்ந்த அத்துறவி அப்பெண்மணியை வாழ்த்தி திருமகள் துதியைப் பாடுகிறார். என்ன அதிசயம் ஒற்றை நெல்லிக்கனியைக் கொடுத்த அப்பெண்ணின் குடில் தங்க நெல்லிக்கனி மழையால் நிறைகிறது.
பாடி முடித்த அத்துறவி போய்க் கொண்டிருக்கிறார். தன்னிடம் இருப்பதை ஈந்ததனால் ஐஸ்வர்யம் பெற்ற அப்பெண்மணி கண்கள் பனிக்க அவர் செல்லும் திசை நோக்கிக் கனிந்து கைகூப்பி நிற்கிறாள். அவள் வறுமை அகன்றது.
பார்த்தீர்களா குழந்தைகளே பிரதிபலன் கருதாது தன்னிடம் இருப்பதை பிறருக்குக் கொடுத்ததனால் அவள் நலம் பெற்றாள். நாமும் பிறருக்குக் கொடுத்து வாழக் கற்போம் , நலம் பெறுவோம் குழந்தைகளே.

டிஸ்கி 1 :-  இந்தக் கதை இதிகாச புராணக் கதைகள் என்ற தலைப்பில் 10. 5. 2019  தினமலர் சிறுவர்மலர் இதழில் இடம்பெற்றுள்ளது. நன்றி தினமலர் சிறுவர் மலர், தனது அழகான ஓவியங்களால் கதைக்கு எழில்கூட்டும் ஓவியர் ரஜனி & எடிட்டர் தேவராஜன் ஷண்முகம் சார்.டிஸ்கி 2. :- இதிகாச புராணக் கதைகள் வழியாக அமுதசுரபி பற்றித் தெரிந்து கொண்டதாகக் கூறிய காவேரிப்பட்டினம் வாசகி செ. சண்முகபிரியா அவர்களுக்கு நன்றி. 

1 கருத்து:

  1. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...