எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வெள்ளி, 3 மே, 2019

ஆபுத்திரனும் அமுத சுரபியும். தினமலர் சிறுவர்மலர் - 15.

ஆபுத்திரனும் அமுத சுரபியும்.
மணிமேகலை எடுக்க எடுக்க அன்னம் குறையாத அமுதசுரபி மூலம் பாரில் பசித்தவர்க்கெல்லாம் உணவிட்டாள் என்பது நமக்குத் தெரியும். ஆனால் மணிமேகலைக்கு அந்த அமுதசுரபி எப்படிக் கிடைத்தது என்ற விபரம் தெரியுமா. அதற்கு முன்னர் ஆபுத்திரன் என்பவன் அந்த அட்சயபாத்திரத்தை எப்படிப் பெற்றான் அது எப்படி மணிமேகலையின் கைக்கு வந்தது என்பதைப்பற்றியும் பார்ப்போம் வாருங்கள் குழந்தைகளே.
காசியில் அபஞ்சிகன் என்பவர் இருந்தார். அவர் மனைவி சாலி தீய குணங்கள் கொண்டவள். காசியில் இருந்து குமரி முனைக்குத் தீர்த்தமாடச் சென்றாள் கொற்கை நகரைக் கடக்கும்போது அவளுக்கு ஒரு குழந்தை பிறந்தது. தாயன்பு அற்ற அவள் அக்குழந்தையை ஒரு தோட்டத்தில் போட்டுவிட்டுச் சென்றாள்.
பாவம் அக்குழந்தை தந்தையுமற்று தாயுமற்று பிஞ்சுக் குரலில் அழுது கொண்டிருந்தது. பச்சைப் பால் சிசுவின் குரல் கேட்டு அங்கே வந்த பசு ஒன்று அச்சிசுவின் வாயில் பாலைக் கரந்தது. அதைக் குடித்து அக்குழந்தை பசியாறியது. இதுபோல் ஏழுநாட்கள் பசுவின் பாலை உண்டு அக்குழந்தை உயிர்த்திருந்தது.
அப்போது அந்தத் தோட்டத்துப் பக்கமாக மனைவியுடன் வந்த பூதி என்பார் குழந்தையின் அழுகுரல் கேட்டு உள்ளே வந்து பார்த்து அக்குழந்தையை எடுத்துச் சென்று தனது மகனாய் வளர்த்து வரலானார். அவன் கல்வியறிவும் பெற வழிவகை செய்தார்.
ஒருநாள் ஒரு யாகசாலையின் அருகில் மாடு ஒன்று கட்டப்பட்டிருக்க அதன் துன்பம் கண்டு அச்சிறுவன் வருந்தினான். அப்பசுவைக் காப்பாற்ற எண்ணி இரவில் அதை யாகசாலையில் இருந்து அவிழ்த்து ஓட்டிச் சென்றான். பசுவைக் காணாத அவ்வூரார் அவனைப் பிடித்து இழிசொல்லால் ஏசினர்.
“ஏன் பிடித்துச் சென்றாய் “ என்று அடித்து உதைத்தனர். அதைப் பார்த்த பசு வெகுண்டு அவர்களை முட்டிவிட்டுக் காட்டுப் பக்கம் ஓடிவிட்டது. அப்பாடா தப்பித்ததே என்று உள்ளம் மகிழ்ந்தான் அச்சிறுவன்.
“பசுவின் துன்பம் கண்டு இரங்கியே அதைக் காப்பாற்ற எண்ணிப் பிடித்துச் சென்றேன் “ என்று விளக்கம் கொடுத்தான் அச்சிறுவன். நீ பசுவின் பாலைக் குடித்து வளர்ந்தாய். உன்னைப் பெற்ற தாய் உன்னைப் போட்டுவிட்டுச் சென்றுவிட்டாள். எனவே நீ ஆவின் மகன் என்பது பொருத்தம்தான் என்று எள்ளி நகையாடினர்.  இவர்கள் எள்ளி நகையாடியது போதாதென்று அச்சிறுவனை வளர்த்த பூதி என்பவரும் அவனைக் கைவிட்டு விட்டார்.
கிராமத்துக்குள் புக முடியாது. பெற்ற தாய் தந்தை இல்லை. வளர்ப்புத் தந்தையோ கைவிட்டு விட்டார். கிராமத்தினரோ சட்ட திட்டம் போட்டு அவனை விலக்கி வைத்துவிட்டார்கள். பசுவைத் திருடியவன் என்று உணவைப் பிச்சையாகக் கூட இடுவதில்லை. பசியால் வாடித் துயறுற்றான் ஆபுத்திரன்.
இதனால் ஊரைவிட்டுத் தென்மதுரைக்குச் சென்று சிந்தாதேவியின் கோவிலின் முன்புற மண்டபத்தை இருப்பிடமாகக் கொண்டான். தினந்தோறும் ஊருக்குள் சென்று பிச்சை எடுத்து உண்டான். அவனுக்குப் போதிய உணவு கிட்டவில்லை. அவன் போல இன்னும் சிலரும் பசியால் துடித்தபடி அங்கே இருந்தார்கள்.
“ இவர்கள் துயர் தீர ஏதும் வழி பிறக்காதா. “ என்று அவன் மனமுருக வேண்ட சிந்தாதேவிக்கு அவன் துயர் புரிந்தது. உடனே தோன்றி அவனுக்கு எடுக்க எடுக்கக் குறையாத அன்னம் வழங்கும் அமுதசுரபியை அளித்தது. மகிழ்ந்த அவன் சிந்தாதேவியைப் பணிந்து வணங்கினான்.  
அட்சய பாத்திரத்தைக் கொண்டு அங்கே பசியால் துன்புற்று வந்த அனைவருக்கும் உணவு வழங்கி மகிழ்ந்தான். இதனால் அவன் புகழ் பெருகுவதைக் கண்ட இந்திரன் ஆபுத்திரன் முன் தோன்றி வரம் தருவதாகவும் வேண்டியதைக் கேட்குமாறும் கூறினான்.
இதைக் கேட்டு இடியென நகைத்த ஆபுத்திரன் ”பாரோரின் பசிப்பிணி போக்கும் அமுதசுரபி இருக்க வரமெல்லாம் எதற்கு ?” என்று கேட்டான். ஆபுத்திரன் இந்திரனை மதிக்காமல் பேசியதால் கோபமுற்ற இந்திரன் நகரில் மழை பொழிய வைத்து பயிர் பச்சையை செழிக்க வைத்து நகரில் பசி இல்லாமல் ஆக்கினான். இதனால் ஆபுத்திரனிடம் உணவு வேண்டி வருவோம் இல்லாமல் போனார்கள்.
கையிலோ அமுத சுரபி . அது நிறைய அன்னம். அதை எடுத்து ஊருக்குள் சென்று ”யாருக்கேனும் உணவு வேண்டுமா” எனக் கேட்டான் ஆபுத்திரன். பசியால் துன்புற்ற அவனுக்குத்தான் பசியின் கொடுமை தெரியும். ஆனால் செல்வச் செழிப்பால் ஊரார் அவனை இகழ்ந்து அனுப்பினார்கள்.
என்ன செய்வதென்று தெரியாமல் சென்றவன் கடற்கரையோரம் நடந்துகொண்டிருந்தான். அப்போது கப்பலில் வந்த சிலர் சாவக நாடு மழையின்மையால் வறுமையாக உள்ளது அங்கே மக்களும் விலங்குகளும் பறவைகளும் உணவில்லாமல் இறக்கின்றனர் என்ற தகவலைப் பேசியபடி சென்றார்கள்.
இதைக் கேட்ட அவன் மனம் வருந்தி ஒரு கப்பலில் ஏறி சாவகநாட்டுக்குச் சென்று கொண்டிருந்தான். அக்கப்பல் ஒரு நாள் மணிபல்லவத் தீவிற்குச் சென்றபோது அதுதான் சாவக நாடு என்று நினைத்து இறங்கித் தீவுக்குள் சென்றுவிட்டான். அவன் திரும்பி ஏறினானா என்பதை மாலுமி கவனிக்கவில்லை. எனவே அவனை விட்டுவிட்டுக் கப்பல் சென்றுவிட்டது.
மணிபல்லவத் தீவிலோ மனிதரே யாருமிலர். பல்லோருக்கும் உணவளிக்கும் பாத்திரமோ கையில்.  அதனால் மனம் நொந்த ஆபுத்திரன் இப்பாத்திரத்தால் பயன் என்ன என்று மணிபல்லவத் தீவில் இருந்த கோமுகிப் பொய்கையில் விட்டுவிட்டான்.
விடும்போது “ ஆண்டுக்கொருமுறை தோன்றுவாயாக. தருமம் செய்யும் எண்ணம் கொண்டோர் யாரேனும் இங்கு வந்தால் அவர்கள் கையில் புகுவாயாக “ என்று கூறிவிட்டு அவனும் அங்கேயே பட்டினி கிடந்து உயிரைத் துறந்தான்.
உதயணன்  பின் தொடர்ந்த காரணத்தால் மணிபல்லவப் பூதம் மணிமேகலையைத் தூக்கிப்போய் மணிபல்லாத் தீவில் விட்டது.அங்கே தரும பீடிகையைக் காத்துக் கொண்டிருந்த தீவதிலகை என்பாள் ”அமுதசுரபி புத்தபீடிகையில் கோமுகிப் பொய்கையில் இருக்கிறது அது வைகாசி பௌர்ணமியில் தோன்றும். உனக்கு தரும சிந்தனைகள் மேலோங்கி உள்ளதால் உன் கையில் கிடைக்கும்” என்கிறாள்.
மகிழ்ந்த மணிமேகலை அப்பொய்கையை வலம் வந்தவுடன் பொய்கையிலிருந்து எழும்பி மணிமேகலையின் கையை அடைந்தது. அதைப் பெற்ற மணிமேகலை பூம்புகாருக்குச் சென்று ஆதிரை என்னும் நல்லாளிடம் பிச்சை பெற்று காயசண்டிகையின் பசிப்பிணி போக்கினாள். பாரோரின் பசிப்பிணியும் நீக்கினாள்.
இதுவே ஆபுத்திரனிடம் இருந்து அமுதசுரபி மணிமேகலைக்கு வந்த கதை. ஆகவே பசித்திருப்போர் யாரும் நம்மைச் சுற்றி இருக்க நாம் மட்டும் புசிக்காமல் பகிர்ந்துண்டு வாழ்வோம் என்பதே ஆபுத்திரனும் மணிமேகலையும் சொல்லும் நீதி குழந்தைகளே.

டிஸ்கி 1 :-  இந்தக் கதை இதிகாச புராணக் கதைகள் என்ற தலைப்பில் 26. 4. 2019  தினமலர் சிறுவர்மலர் இதழில் இடம்பெற்றுள்ளது. நன்றி தினமலர் சிறுவர் மலர், தனது அழகான ஓவியங்களால் கதைக்கு எழில்கூட்டும் ஓவியர் ரஜனி & எடிட்டர் தேவராஜன் ஷண்முகம் சார்.

1 கருத்து:

  1. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...