நான்கு நூல்கள்
1.IN SEARCH OF ANCIENT
WISDOM – IRRIGATION TANKS. BY S.M. RATHNAVEL & DR. P. GOMAHINAYAGAM.
பொதுப்பணித்துறையில் 36 வருடங்கள் சீஃப் என்ஜினியராகப் பணியாற்றிய திரு எஸ். எம் . ரத்னவேலு அவர்களும், அதே துறையில் பொறியாளராகப் பணியாற்றிய டாக்டர் பி கோமதி நாயகம் அவர்களும் இணைந்து எழுதியது இந்நூல்.
அந்தக்காலப் பாசன முறைகள், நீர்த்தேக்கத்தொட்டிகள், அணைகள் அவற்றின் நீர்ப்பிடிப்புப் பகுதிகள், அவை அமைக்கப்பட்ட முறை குறித்தும், மதகுகளின் மூலம் அவை திறக்கப்படுவதும், கால்வாய்கள், வாய்க்கால்கள் மூலம் அவை வயலை வந்தடைவது, ஆதிகாலப் பாசனம், ஆற்றுப் பாசனம், கிணற்றுப்பாசனம், ஏரிப்பாசனம், கண்மாய்ப் பாசனம் குறித்துச் சொல்வதோடு நீர்ப்பிடிப்புப் பகுதிகள் அநேகமாக செமிசர்க்குலர் – அரைவட்ட வடிவிலேயே அமைக்கப்பட்டிருக்கின்றன என்பதையும் தெரிவிக்கிறது இந்த ஆய்வு.
நீர் தேக்கப்படும் வகைகள், அணைக்கு/ஏரிக்கு நீர் வந்து சேரும் வழிகள், அணையின் கொள்ளளவு, உபரி நீரை வெளியேற்றும் வசதி, மதகைத் திறக்கும் வழிகள், பட்டம்கட்டியின் பணி, பாசனத்துக்கான நீர்ப் பங்கீடு, அணைக்கட்டு அமைப்புகள், நீர்த்தேக்கங்கள் பற்றிய ஆய்வு, பழமை & புதுமை முறைகள் பற்றிய ஆய்வு முடிவுகள் ஆகியன தெளிவுறுத்தப்படுகின்றன. ஏரிகளின் ( மதர் டாங்க்) உபரி நீர் ( பேபி டாங்க் எனப்படும் ) கண்மாய்களுக்கும் விவசாயத்துக்கு மதகுகள் மூலம் கால்வாய்களுக்கும் திறந்துவிடப்படுகிறது.
இரண்டாம் நூற்றாண்டில் கரிகாலன் கட்டிய கல்லணை பற்றியும் கூறப்பட்டுள்ளது. வண்டல் அதிகமாகிவிட்டால் அதை வாரி வரப்புயர்த்தி நீக்கினால்தான் நீர்ப் பிடிப்பு அதிகமாகும் எனக் கூறப்பட்டுள்ளது. (இதைத்தான் ஏரிகள், குளங்களில் சேங்கை வெட்டுதல் என திருவிழாவாகக் கொண்டாடிக் கூடைகளில் மண் எடுத்துக் கொட்டி அதன் பின் புரவி எடுப்பு நடக்கிறது நம் கிராமங்களில்.
மதுரையிலும் விருதுநகரிலும் இருந்த நூற்றுக்கணக்கான கண்மாய்களும் அவை கட்டிடங்களால் தூர்ந்து காணாமல் போனதும் ஆய்வு செய்யப்பட்டிருக்கிறது. பாசனத்துக்காக பிரம்மதேய நிலங்கள் கொடுத்த அரசர்கள் பற்றியும் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. சிறுபஞ்சமூலம் புறநானூறு, கபிலர், தனிப்பாடல், சங்ககாலப் பாடல்கள் என உதாரணம்/ஆதாரம் கொடுத்து எழுதப்பட்டுள்ளது இந்நூல். கால்வாய், வாய்க்கால், கண்மாய், ஏரி,அணை, நதி, குட்டை, குளம் இவற்றோடு, பேட்டை, வாய்த்தலை, குளித்தலை, சங்கமம் போன்றவை பற்றிய குறிப்புகளும் காணப்படுகின்றன.
ஊரார் எனப்படும் நாட்டார், வியாபாரிகள் எனப்படும் நகரத்தார், நகர நிர்வாகசபையை நடத்தும் பிரம்மதேயர் எனப்படும் பிராமணர்கள் ஆகியோர்கள் பற்றியும் ஊரின் நீர் நிர்வாகத்தில் அவர்களின் பங்கும் கூறப்படுகிறது. ஏரியில் மீன் நிறைந்தால் ஊரார், பிரம்மதேயத்தாரிடம் அனுமதி பெற்று நிர்வாக சபைக்குப் பணமும் கட்டித்தான் ஏலத்தில் எடுக்க முடியும் எனக் கூறுகிறது இந்நூல்.
நம் முன்னோடிகளின் ஆதிகாலப் பாசன முறைக்கு ஆதாரமாக வெளிநாட்டு ஆசிரியர்களின் கூற்றுக்களையும், நூல்களையும் சுட்டுகிறார்கள்.
கரை, குடும்பு, நகரம் பிரம்மதேயம், ஏரிவாரியம் என்று நீரின் மூலம் தமிழர்களின் வாழ்வு முறையும் சுட்டப்படுகிறது இந்நூலில்.
நூல். :- IN SEARCH OF ANCIENT WISDOM – IRRIGATION
TANKS. BY S.S. RATHNAVEL & DR. P. GOMAHINAYAGAM.
ஆசிரியர்கள் :- எஸ். எஸ். ரத்னவேல், டாக்டர் பி. கோமதி நாயகம்.
பதிப்பகம் :- ரிஃப்ளெக்ஷன்.
விலை ரூ :- 150/-
2.வெண்மை
எண்ணங்கள். – உடற்பயிற்சி சிறப்பிதழ்.
ராம்ராஜ் காட்டன் வெளியிடும் மாதாந்திரி இந்நூல். இதில் ஆரோக்யம் பேண உடற்பயிற்சிகள் பற்றிக் கூறப்பட்டுள்ளது. உடற்பயிற்சி பற்றிய அறிவியல் உண்மைகள், ஒவ்வொரு வயதினருக்குமான உடற்பயிற்சி. உடற்பயிற்சி ஏன் தேவை, எவ்வளவு தேவை, நடைப்பயிற்சியின் முக்கியத்துவம், மருந்தாக குணமளிக்கும் உடற்பயிற்சி , ஆஃபீஸில் பணிபுரியும் போது நடுவில் செய்யக்கூடிய உடற்பயிற்சி பற்றி எல்லாம் கூறப்பட்டுள்ளது. நடைப்பயிற்சியைக் கூட உடற்பயிற்சியாக நினைத்துக் கொள்கிறோமென நகைச்சுவையாகக் கூறியிருந்தது ரசிக்க வைத்தது.
நூல்:- வெண்மை
ஆசிரியர் :- கே. ஆர். நாகராஜன்
பதிப்பகம் :- ரத்னா ஆஃப்செட்
விலை :- ரூ 18/-
3. ஹெல்த் சாய்ஸ்.
இது ஒரு மருத்துவ மாத இதழ்.
ஏர்க்கண்டிஷனின் தீமை பற்றிக்கூறும் இதில் திண்ணை என்ற பகுதியில் நாட்டு மருந்துகளின் பலன்கள் கூறப்பட்டுள்ளது சிறப்பு. தும்பை, செர்ரி, வெங்காயம் ஆகியவற்றோடு ஹெப்படைட்டிஸ் பியின் கொடுமை, வர்மத்தின் மர்மங்கள், ஆஸ்த்மாவில் இருந்து விடுபட, முகப்பரு நீங்க, சிறுநீரக நலம் காக்க என்ன செய்ய வேண்டும் எனவும் சித்தர்பாடல்களுடன் சரசுவாசம் ( சரநிலை சுவாசம்) பற்றியும், தாய்ப்பால் கொடுக்கும் முறை, குழந்தைகளுக்குக் கொடுக்க வேண்டிய முக்கியத்துவம், முதுமையிலும் இளமையாக்கும் உடற்பயிற்சி பற்றியும் கூறப்பட்டுள்ளது.
நூல்:- ஹெல்த் சாய்ஸ் ( மருத்துவ மாத இதழ் )
ஆசிரியர் :- டாக்டர் வி. தர்மலிங்கம்.
பதிப்பகம் :- தர்மா பப்ளிகேஷன்ஸ்
விலை :- ரூ 20/-
4. எளியமுறை உடற்பயிற்சி.
தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி அவர்கள் கண்டுபிடித்துப் பயிற்றுவித்த எளிய உடற்பயிற்சிகள், ஆசனங்கள் படத்துடன் இடம்பெற்றுள்ளன. இப்பயிற்சிகளை யார் யாரெல்லாம் செய்யலாம் , யார் யாரெல்லாம் செய்யக்கூடாது என விளக்கங்கள் கூறப்பட்டுள்ளன. ஐவகை பூதங்களால் கட்டமைக்கப்பட்ட உடலில், உடற்பயிற்சி மூலம் எப்படி அவற்றின் சமநிலை பேணுவது என்பது சிறப்பாகச் சித்தரிக்கப்பட்டுள்ளது.
பல்வேறு பருவநிலையிலும் பல்வேறு வயதிலும் இருப்பவர்க்கும் உடல் ஆரோக்யம் பேணவும் , நோய் எதிர்ப்புச் சக்தி பெருகவும், உடலில் உறைந்திருக்கும் முன் விலங்கினப் பதிவுகளை நீக்கவும் இந்த ஒன்பது வகைப் பயிற்சிகள் பயன்படுகின்றன.
கை, கால், நரம்பு, கண், கபாலம், மகராசனம், உடம்பை மசாஜ் செய்தல், அக்குப்ரஷர், உடலுக்கு ஓய்வுதரும் பயிற்சி ஆகிய ஒன்பது பயிற்சிகளும் செய்முறைப் படங்களுடன் எளிமையாக்கபட்டு அளிக்கப்பட்டிருப்பது சிறப்பு.
இவற்றைச் செய்ய அரைமணி நேரம் போதும் .ஆனால் நாள் முழுக்கப் புத்துணர்வு உடலில் ஊறும். மேலும் மிகுதியான உணவு தீங்கு எனவும் அவை புளிப்பாக மாறி நரம்பில் கலந்து வாதத்தை உண்டுபண்ணுகின்றன எனவும் கூறுகிறார் . எனவே உழைப்பு, உறக்கம் , உணவு ஆகியன தேவையான அளவு இருக்கும்படி பார்த்துக் கொண்டால் அவை உயிர்ச்சக்தியையும், உடலில் நோய் எதிர்ப்புச்சக்தியையும் ஜீவகாந்த சக்தியையும் பெருக்கும்.
நூல் :- எளியமுறை உடற்பயிற்சி
ஆசிரியர் :- தத்துவஞானி வேதாத்ரி மகரிஷி
பதிப்பகம் :- வேதாத்ரி பதிப்பகம்
விலை :- ரூ. 30/-

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
பதிலளிநீக்குஎன்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!