எனது நூல்கள்.

புதன், 12 ஜூன், 2019

செல்லாத பணம் – ஒரு பார்வை.


செல்லாத பணம் – ஒரு பார்வை.

வரதட்சணைக் கொடுமையாலோ சந்தேகத்தின் அடிப்படையிலோ, தீக்குளித்து இறக்கும் பெண்களைப் பற்றிக் கேள்விப்பட்டதுண்டு. உண்மைக்கு மிக நெருக்கமாக அமைந்த இக்கதையைப் படித்ததும் அவற்றின் தீவிரம் புரிந்தது.

இமையத்தின் மற்ற நூல்களை நான் படித்ததில்லை. சென்ற வருடம் காரைக்குடியில் நடந்த அறிவியல் கண்காட்சியில் மரப்பாச்சி அரங்கத்தில் இந்நூலை வாங்கி வந்தேன். மிகை கற்பனை, இயற்கை வர்ணனைகள், காதல் ரசங்கள் ஏதுமின்றி யதார்த்தத்தை உள்ளது உள்ளபடி நிகழ்வுகளின் வழியாகவே சொல்லிச் சென்றிருக்கிறது இக்கதை. கதாநாயகி ரேவதி மட்டுமே ஒருமுறை மனதுக்குள் பேசுகிறாள், கனவு காணுகிறாள் அவ்வளவே.


சில இடங்களில் கூறியது கூறல் மாதிரி பல்வேறு கதாபாத்திரங்களின் வழியாகவும், நிகழ்வுகளின் வழியாகவும் சில சம்பங்கள், வார்த்தைகள் திரும்பத் திரும்ப இடம் பெற்றிருந்தாலும் அவை சம்பவத்தின் தீவிரத்தை வலியுறுத்தவே அமைக்கப்பட்டிருக்கின்றன.

காவல்துறை, மருத்துவம், நீதிமன்றம் இவற்றின் செயல்பாடுகள், நடைமுறைகள், நடுத்தரக் குடும்பத்தின் மனநிலை, அகதிகளின் நிலை, ஒரு காலத்தில் சகல சௌபாக்யத்தோடும் வாழ்ந்த அவர்கள் சமூகத்தால் எதிர்கொள்ளும் எள்ளல்கள், என பல்வேறு பக்கங்களையும் பேசுகிறது இந்நாவல்.

தப்பித்தவறிக்கூடக் கோபத்தில் தன்னை எரித்துக் கொள்ள விரும்பும் ஒருவர் இக்கதையைப் படித்தால் சாவதற்கு இந்த முறையைத் தேர்ந்தெடுக்க மாட்டார் என்பது திண்ணம். நம்மையே நெருப்பு வாட்டுகிறது. அனலடிக்கிறது. மண்ணெண்ணெயா, டீசலா என்பது தெரியாமல் கதாநாயகி ஊற்றிப் பற்ற வைத்துகொள்கிறாள். க்ஷணநேரக் கோபம் கொண்டுவரும் கொடுமைகளைப் பட்டியலிடமுடியாது.

ஒரு பெண் தான் விரும்பும் ஒருவனைத் ( அது ஆத்மார்த்தக் காதல் கூட இல்லை. ஒருவிதமான கட்டாயக் காதல். சூழ்நிலையால் வாய்த்த காதல் ) திருமணம் செய்து அதன் பின் பொருளாதாரக் காரணங்களால் தட்டுத் தடுமாறித் தாய்வீட்டில் உதவி பெறுகிறாள். அண்ணன், அப்பா, ஆகியோர் புறக்கணிக்க கணவனின் குணப்பிறழ்ச்சியால் ஒரு சூழ்நிலையில் ஏதும் செய்யவியலாத போது தன்னையே எரித்துக் கொள்கிறாள்.

அவளது இருகுழந்தைகளை யார் பார்த்துக்கொள்வார்கள் என்ற கவலையில் முடிவில்  உள்ளது உள்ளபடியோ அல்லது சூழ்நிலையின் அழுத்தத்தால் செய்து கொண்டதாகவோ ( கணவன் எரித்தானா என்பது கடைசிவரை புலனாகவில்லை. அவன் அருண்மொழியிடம் தன் நிலை விளக்கம் கொடுத்தும் ) நீதிபதியிடமும் போலீஸிடமும் வாக்குமூலம் கொடுக்கிறாள்.

தீக்காயத்தின் அளவு எத்தனை பர்சண்டேஜ் என அனைவரும் அவ்வப்போது கேட்டுக் கொள்கிறார்கள். இதில் மூன்றாவது நான்காவது மாடிகளில் இருப்பவர்கள் மீளலாம். ஐந்தாவது மாடியில் இருப்பவர்கள் திரும்பி வருவது கஷ்டம் என்றும் பாடி ஸ்ப்ரே , செண்ட் ஆகியன வாங்கி வரச் சொல்வதும் திகிலூட்டியது.

வாழ்க்கை எவ்வளவு அர்த்தமுள்ளது. அதை அற்பக் காரணங்களுக்காக மாய்த்துக்கொள்வது எவ்வளவு அபத்தமானது என்பதை ஓங்கி உரக்க அடித்துச் சொன்ன கதை இது. நடுவிலும் முடிவிலும் கூட தீக்காயம் அடைந்த அநேகர் அந்த ஆஸ்பத்ரிக்கு வந்துகொண்டே இருக்கிறார்கள்.

ஒரு வகையில் பணம் பேசாத ஜிப்மரின் தொண்டுகளைக் கூறுவதாகவும் இக்கதை அமைந்துள்ளது. நடுத்தரவர்க்கக் குடும்பத்தினரின் ஒருவரோடு ஒருவர் ஒட்டாத தன்மை, ஒவ்வொருவரும் ஒவ்வொரு கருத்தை பிடித்துக் கொண்டு அதுதான் சரி என்ற மனப்பாட்டில் இருப்பது, கலந்துரையாடாத புரிந்துகொள்ளாத, குடும்ப அமைப்பு, இத்தகைய அநேக காரணங்கள்  இம்மாதிரி இழப்பு நிகழக் காரணமாகிறது. என்னதான் குடிகாரன் கொடுமைக்காரன் என்றாலும் ரவி மற்றும் அருண்மொழி உரையாடலில் ஆசிரியர் இதை லாவகமாக வெளிப்படுத்தி உள்ளார்.  

வாழ்வின் பொருள் உணராமல் அனைவருமே வாழ்ந்து மடிகிறோம். எப்போதோ எதேச்சையாக கிடைக்கும் வாய்ப்புகளில் ஜெயிக்கிறோம். சொற்ப பேர் மட்டுமே தன் வாழ்க்கை இப்படி அமையவேண்டும் என்று திட்டமிட்டு வாழ்ந்து புகழடைந்து செல்கிறார்கள். தீர்க்கமுடியாத பிரச்சனை என்று எதுவுமில்லை. அதை நாம் சரியான முறையில் தீர்க்க முயலாததைத் தவிர.

ஒரு கட்டத்தில் நண்பர்கள், உறவினர்கள், அலுவலகத்தினர், அக்கம்பக்கத்தினர் எல்லாருடைய அக்கறையும் எரிச்சல் படுத்துவதோடு மரத்துப் போகும் தன்மையை உண்டு செய்வதையும் பெற்றோரின் இழிவரலையும் நன்கு பதிவு செய்துள்ளது நாவல். 

மனிதாபிமானம் செல்லுபடியாகாத இடங்களிலும் மனிதர்கள் இறங்கி வருகிறார்கள். காவல்துறையினரிலும் கனிந்தமனம் கொண்டோருண்டு. ஆஸ்பத்ரிகளிலும் காசு வாங்காத காவலர்கள் , சேவைக்கெனவே தம்மை அர்ப்பணித்த செவிலியர்கள் உண்டு என்பதையும் இந்நாவல் நிலை நிறுத்தி இருக்கிறது. தாய் தந்தையின் அவலம் இக்கதையில் நெகிழ்வூட்டியது. ஒவ்வொருவராக ரேவதியைச் சந்திக்கத் துடிப்பதும் சந்தித்தபின் அழுது விழுவதும் மீள இயலாத் துயரம்.

ஒருத்தியின் தீக்குளித்தல் மற்றும் மரணத்தின் மூலம் பணம் என்பது எங்குமே செல்லுபடியாகக் கூடியது அல்ல. அது செல்லாத இடமும் உண்டு என்பதை டாக்டர் சொல்லும் வார்த்தைமூலம் அறியலாம், மகளைக் காப்பாற்றத் தந்தை கட்டுக்கட்டாகப் பணத்தை எடுத்து வைக்கிறார். லட்சக்கணக்கில் இருக்கும் அதைக் கண்டு டாக்டர் “ இப்போது இது செல்லாத பணம் “ என்கிறார்.

ஜீன்ஸ் போட்டவன் பான்பராக் எச்சில் துப்புவது, ஆட்டோக்காரன் என்பதையே திட்டாக உபயோகிப்பது, ( அதுவும் வாடகை ஆட்டோக்காரன் என்பதையும் பீ, மலம் என்று கதாநாயகனைச் சுட்டியும் கடுமையான திட்டாகவே உபயோகப்படுத்தி உள்ளார். )  மஞ்சள்சேலை, ஊதாச்சேலைக்காரிகளின் உரையாடலும் இடைச்செருகலாகத் துருத்தி நின்றன என்றாலும் அது ஆணும் குடிபோதையில் தீக்குளித்திருக்கிறான் என்பதைக் காட்ட உதவி இருக்கிறது. படித்துப் பத்து நாளாகியும் நினைவை விட்டுத் துளிக்கூட நீங்காத நாவல் என்று இதைச் சொல்லலாம். 

இந்தியப் பெண்கள் தினம் எதிர்கொள்ளும் பிரச்சனைகள், அதனால் நிரம்பி வழியும் மருத்துவமனைகள், பொருளாதார ஏற்றத்தாழ்வுகளால் ( இக்கதையில் ஜாதியால் அல்ல ) சமூகமும் குடும்பமும் எதிர்கொள்ளும் பெண் வாழ்வின் சவால்கள் என இக்கதை ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்துவதால் க்ரியாவுக்கும் இமையத்துக்கும் வந்தனங்கள்.

நூல் :- செல்லாத பணம்
ஆசிரியர் :- இமையம்
பதிப்பகம் :- க்ரியா
விலை :- 285 /-

2 கருத்துகள் :

வெங்கட் நாகராஜ் சொன்னது…

நூல் அறிமுகத்திற்கு நன்றி.

Thenammai Lakshmanan சொன்னது…

நன்றி வெங்கட் சகோ

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...