எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

செவ்வாய், 11 டிசம்பர், 2018

விளையாட்டு வினையான கதை . தினமலர் சிறுவர்மலர் - 47.


மந்தரையின் வடிவில் வந்த விதி :-
நாளை விடிந்தால் பட்டாபிஷேகம். இளவல் ராமன் முடி சூடப் போகிறான். ஆனால் அதற்குள் இதென்ன கோலம் ? அவனது பிரியத்துக்குரிய சிற்றன்னை கைகேயி அவனைக் காட்டுக்குப் போகச் சொல்கிறாளே. என்ன நிகழ்ந்தது. ராமன் செய்த குற்றம் என்ன என்று போய்ப் பார்ப்போம் வாருங்கள் குழந்தைகளே.

அயோத்தி மாநகரமே விழாக்கோலம் பூண்டிருந்தது. வீடெல்லாம் மாவிலைத் தோரணங்கள். மாக்கோலங்கள். விளக்கு அலங்காரங்கள். சாதாரண குடிமக்களின் இல்லமே ஜொலிக்கும்போது பட்டாபிஷேகம் நடக்கப்போகும் அரண்மனை ஜொலிக்காதா என்ன.. அதுவும் ஜாஜ்வல்யமாக ஜொலித்துக் கொண்டிருந்தது. அகிலும் சாம்பிராணியும் தூபமும் வேறு மணமூட்டிக் கொண்டிருந்தன. ஆனால் அந்த அரண்மனையில் கூனி ஒருத்தியின் இதயமும் கூனலாக இருண்ட எண்ணங்களோடு இருந்தது.


”சின்னஞ்சிறு வயதில் அந்த ராமன் என்ன செய்திருக்கிறான்?. அவள் நடந்து போகும்போதெல்லாம் அந்தக் கூன் முதுகில் சிறு களிமண் உருண்டைகளை கவண் வில்லில் வைத்து எய்திருக்கிறானே. நாளை அரசனாய் வந்தால் இன்னும் என்னென்ன துன்பம் இழைப்பானோ?’ என்று நினைத்துகொண்டே தனது கைத்தடியை ஊன்றியபடி அவள் விரைந்துகொண்டிருந்தாள். இவள் ராணி கைகேயி மணம்புரிந்துவந்தபோது தாய்வீட்டுச் சீதனமாக கைகேயியுடன் வந்த சேடி. 

கூன் முதுகு கொண்ட அவளின் முதுகில் எலும்புகள் மூட்டைபோல் ஒழுங்கற்று இருந்தன. வேகவேகமாக மூச்சுவாங்க ராணி கைகேயின் அந்தப்புரத்தில் நுழைந்தாள். அங்கே மலர்ந்த முகத்தோடு ”வா மந்தாரை.. ஏன் இந்த வேகம் ?”

”நாளை ராமனுக்கு பட்டாபிஷேகமாமே.”  

”ஆமாம் எங்கள் பிரியத்துக்குரிய இளவல் ராமனுக்குப் பட்டாபிஷேகம்.  இந்தா இந்த முத்துமாலையைப் பரிசாக வைத்துக் கொள்.”

கைகேயின் மந்தகாச முகத்தைப் பார்த்ததும் இன்னும் கோபம் பீரிடுகிறது மந்தரைக்கு. “ அடிப்போடி இவ்வளவு வெகுளியாய் இருக்கியே. அவன் அரசனானால் உனக்கும் பரதனுக்கும் இங்கே இடமில்லை. ” மெல்ல மெல்ல ராணிக்குத் தூபம் போடத் தொடங்கினாள். நல்ல மனதில் நஞ்சைப் புகுத்தினாள்.

கைகேயி சிந்தனையில் ஆழ்ந்தாள்.

”தேவாசுர யுத்தத்தில் தசரத மகாராஜா உனக்கு இரண்டு வரங்கள் கொடுத்தார் அல்லவா அதை இப்போது கேள். பரதன் அரசாளனும். ராமன் காடாளப் போக வேண்டும். “ நன்கு உருவேற்றிவிட்டு மந்தரை மறைந்து போகிறாள்.

து ஏதும் அறியாத தசரத மகாராஜாவோ தனது பிரியத்துக்குரிய மனைவியைப் பார்க்க அந்தப்புரம் வருகிறார். அஹோ. இதென்ன  கைகேயி அணிகலன்களை எல்லாம் வீசி எறிந்து விரிதலை கோலமாக அழுது சிவந்த முகத்தோடு படுத்திருக்கிறாளே. துக்கமும் துயரமும் அவள் முகத்தில் மண்டியிருக்கிறதே.

மன்னருக்கு மனம் பொறுக்கவில்லை. கைகேயின் பக்கத்தில் அமர்ந்து அவளைச் சமாதானப் படுத்த விழைகிறார். பேசமறுத்து நீர் வடிக்கிறாள் கைகேயி. பிரியத்துக்குரிய மனைவி அழுவதைப் பார்த்து பித்துப் பிடிக்கிறது அவருக்கு.

”விஷயம் என்ன என்று வாயைத் திறந்து சொல் உனது அபிலாஷையை நிறைவேற்றி வைக்கிறேன். ” அப்போதும் வாய் திறக்கவில்லை அவள்.

“ நம் மகன் ராமன் மேல் ஆணையாக உன் விருப்பத்தை நிறைவேற்றுவேன். என்ன என்று சொல் “ என்று அவசரப்பட்டு வாக்குக் கொடுக்கிறார்.

இப்போது வாய் திறக்கிறாள் கைகேயி. “ தேவாசுர யுத்தத்தில் இரண்டு வரம் தந்தீர்களே. ஞாபகம் இருக்கிறதா “

“மறக்குமா கைகேயி என் உயிரை அந்த யுத்தத்தில் காப்பாற்றியவள் நீயல்லவா ?’

“இப்போது அந்த வரங்களைத் தாருங்கள். என் மகன் பரதன் முடி சூட வேண்டும். ராமன் பதினான்கு ஆண்டுகள் வனவாசம் செல்லவேண்டும். “

“என்ன.. என்ன.. அதிர்ச்சியில் அதற்குமேல் வார்த்தை எழவில்லை தசரதரிடமிருந்து.

கோரிய வரத்தைக் கொடுப்பதாக வாக்குக் கொடுத்தாயிற்று. இனி என்ன செய்வது ? அவர் சித்தம் கலங்கியது . ஒரு போரில் உயிரைக் காப்பாற்றியவள் இன்று உயிரை எடுக்கப் போகிறாளோ. அவரது ஆறடி உயர் உடல் நடுங்கியது. மனம் விதிர்விதிர்த்தது.

“எப்படி என் ஆரூயிர் மகன் ராமனைக் கானகம் அனுப்புவேன்.” நின்றவர் நெடுஞ்சாண்கிடையாக விழுந்தார். மூர்ச்சை அடைந்து விழுந்தவர் விழுந்தவர்தான் . எழவேயில்லை. எதற்கும் மனமிரங்கவில்லை கைகேயி.

சிறிதுப் பொழுதில் தசரதன் கண்விழித்ததும் பணிப்பெண்ணிடம் அவர் அழைத்ததாகச் சொல்லி ராமனை அழைத்துவரப் பணிக்கிறாள் கைகேயி. பொங்கும் கண்ணீருடன் தசரதர் கிடக்க  ” நாளை பரதனுக்கு முடிசூட்டு விழா. நீ பதினாலு ஆண்டுகள் வனவாசம் செய்யப் போக வேண்டும் ராமா. இது அரச கட்டளை “

சிற்றன்னை கைகேயி சொன்னதும் மறுபேச்சில்லாமல் ராமன் மரவுரி தரித்துக் கானகம் புறப்படத் தயாராகிறார். அவருடன் அவர் மனைவி சீதையும் தம்பி இலக்குவனும் கூட செல்லத் துவங்குகிறார்கள்.

அயோத்தி மாநகரமே கண்ணீர் வடிக்கிறது. ஆனால் ஒருத்தி மட்டும் சந்தோஷத்தோடு கூனை அசைத்துக் கைத்தடியைத் தட்டியபடி செல்கிறாள். அவள்தான் அந்த மந்தரை. விதி அவள் வடிவில் வந்து இராமருக்கு வனவாசத்தை வழங்கிவிட்டது.

எனவே யாராக இருந்தாலும் விளையாட்டுக்காகவேணும் அவர்கள் உடல் நோக மனம் வருத்தப்படும் செயலைச் செய்யக்கூடாது குழந்தைகளே. அது பிற்காலத்தில் பெரும் தண்டனையைப் பெற்றுத் தரும் என்பதை ஞாபகத்தில் வையுங்கள். அனைவருடனும் அன்பாக நடந்து கொள்ளுங்கள். 

டிஸ்கி:-  இந்தக் கதை இதிகாச புராணக் கதைகள் என்ற தலைப்பில் 7 . 12. 2018  தினமலர் சிறுவர்மலர் இதழில் இடம்பெற்றுள்ளது. நன்றி தினமலர் சிறுவர் மலர், தனது அழகான ஓவியங்களால் கதைக்கு எழில்கூட்டும் ஓவியர் அஷோக் & தேவராஜன் ஷண்முகம் சார்.

டிஸ்கி 2.:-அரும்புகள் கடிதத்தில் மகன் போதித்த ஞானத்தைப் பாராட்டிய ( பட்டினத்தார் கதை ) வந்தவாசி வாசகர் காசிநாதனுக்கு நன்றிகள். 

2 கருத்துகள்:

  1. சின்னக் குழந்தைகள் படித்து தெரிந்துகொள்வதை விட கேட்டுத் தெரிந்து கொள்ளவே விரும்புகின்றனர்

    பதிலளிநீக்கு
  2. மன்னார்குடி, தஞ்சாவூரில் என் தோழிகள் இக்கதையைப் படித்து அவர்கள் பேரன் பேத்திக்கு சொல்கிறார்கள் பாலா சார்.

    வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...