எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

சனி, 24 செப்டம்பர், 2022

பெண் பரிமாணங்களும் இலக்கியப் பதிவுகளும்

ஃபாத்திமாக் கல்லூரியின் தமிழ் உயராய்வு மையத்தில் சொற்பொழிவு

 நான் படித்த கல்லூரியில் எங்கள் தமிழன்னை சுசீலாம்மா உருவாக்கிய எண்டோவ்மெண்டில் இன்று( 4.5.2022 ) மதியம் கூகுள் மீட்டில் பேசினேன். மகிழ்ச்சியுடன் பகிர்கிறேன்.

என்  கல்லூரியில் பேசுவதற்காக எடுத்த குறிப்புகள் உங்கள் பார்வைக்கு. இங்கே. 

பெண் பரிமாணங்களும் இலக்கியப் பதிவுகளும்தலைப்பு

அவன் அருளாலே அவன் தாள் வணங்கி என்பார்கள். அவர்கள் அருளாலே அவர்கள் தாள் வணங்கி என ஆரம்பிக்கின்றேன். இன்றிருக்கும் என்னை உருவாக்கிய ஃபாத்திமா அன்னை, சுசீலாம்மா, ஃபாத்திமா அம்மா, ராஜலெக்ஷ்மி மேடம், ஃபாத்திமா கல்லூரியின் மதர், சிஸ்டர்ஸ் என்னுடைய ஆசிரியை அனைவரின் தாள்களையும் பணிந்து ஆரம்பிக்கின்றேன். 


தமிழ்த்துறை ஆசிரியை அனைவருக்கும் லதா மேடம், மற்றும் மாணாக்கியருக்கும் மாலை வந்தனங்கள். அம்பை முதலானோர் பேசிய அவையில் என் தாயின் சபையில் சுசீலாம்மா & ஃபாத்திமா அம்மா உருவாக்கிய எண்டோவ்மெண்ட் சொற்பொழிவில் பேசக் கிடைத்த வாய்ப்புஎன் வாழ்நாள் அற்புதம்.

ஆண்களின்பார்வையில் பெண்கள்.

பெண்களின் பார்வையில் பெண்கள் & அவர்களது பிரச்சனைகள்.

சமூகத்தின் பார்வையில் பெண்கள்

மொழிபெயர்ப்புநூல்கள், அயலகக் கதைகள், நாடகங்கள், இணையம் ஆகியவற்றில் பெண் எழுத்துக்களைப் பார்ப்போம்.

இதிகாச புராணம், சங்க காலம், விடுதலைப் போராட்டக்காலம், 1950 முதல்2000 வரை, 2000 முதல் 2022 வரை. 

திருமுருகாற்றுப் படையில் பழையோன் குழவி என்பது கொற்றவையின் மைந்தனான முருகனைக் குறிப்பது.

இதிகாச புராண காலத்தில் கார்க்கி வாசக்னவி, மைத்ரேயி போன்ற தத்துவ ஞானிகள் இருந்திருக்கிறார்கள். திரௌபதி சீதை, ஆண்டாள் ஔவை ஆகியோரையும் கண்டிருக்கிறோம்.இதில் ஒப்பற்ற சுதந்திரத்தோடு கவிதைபுனைந்தவர்கள் ஆண்டாளும் ஔவையும். 

சங்ககாலப் பெண்பாற்புலவர்களின் கவிகளும் இவற்றுக்குச் சற்றும் குறைந்தவை அல்ல.

ஐம்பெருங்காப்பியங்கள், ஐஞ்சிறுங்காப்பியங்களில் கண்ணகி, மணிமேகலை விதந்தோதப்படும் அளவு குண்டலகேசி, நீலகேசி புகழப்படவில்லை. ஏனெனில் காப்பிய அமைப்பு முழுமையாக இல்லை. சீவக சிந்தாமணியிலும் காப்பிய அமைப்பு முழுமையாக இருந்தாலும் அது மதத்தைப் பரப்பவும் அரசனின் பெருமையைப் பாடவும் படைக்கப்பட்ட நூல்.

வளையாபதியின் கதை என்று எடுத்துக் கொண்டால் புகார் என்னும் நகரில் வாழ்ந்த நவகோடி நாராயணன் என்னும் வணிகனும் அவனது இருதார மண வாழ்க்கை, ஊர்க்கட்டுப்பாட்டுக்காக இரண்டாவது மனைவியை விலக்கி வைத்தல் அதன் பின்  இரண்டாம் தாரம், தன் மகனுடன் ஓரளவு நிலைபெற்றதும் சேர்த்துக் கொள்வது போன்றவைதாம்.

குண்டலகேசியின் கதையில் வணிகர்குலப் பெண்ணான குண்டலகேசியின் ( சுருண்ட கேசம் உடையவள்) கணவன் காளன். களவுத்தொழில் புரிபவன். மனைவியை அழித்து அவள் செல்வத்தை வஞ்சனையால் அவன் அபகரிக்க நினைக்க அவளோ அவன் திட்டத்தை செயல்படுத்தித் தான் தப்பிக்கிறாள். அதன்பின் தலைமுடி மழித்துக் காவியுடை அணிந்து உஞ்சை மாநகரிலிருந்த அருக்கச்சந்திரன் என்பவரிடம் ஞான உபதேசம் பெற்றுப் பௌத்தத் துறவியாகிப் பலருடன் வாதம் புரிந்து வென்று பின் முக்தியடைகிறாள்.

நீலகேசி என்ற இந்த நூலுக்கு உரை எழுதியவர் சமய திவாகர வாமன மாமுனிவர். இது ஒரு தருக்க நூல். குண்டலகேசிக்கு மறுப்பாக எழுந்தது என்றும் ஒரு கூற்று உண்டு. பிறர் மதத்தை விளக்கி மறுத்துத் தன் சமண மதத்தை நீலகேசி நிறுவுவதைச் சிறப்பிப்பதே இந்நூல்.

அன்றைக்கு அதிகமாகப் பரவி இருந்த புத்த மதம் , ஆசீவக மதம், சாங்கிய மதம், வைசேடிக மதம், வேத மதம், பூத மதம் ஆகியவற்றின் கோட்பாடுகளைச் சமண மதத்தின் நெறியோடு ஒப்புமைப்படுத்தி நீலகேசி மற்ற சமயங்களின் கோட்பாடுகளின் குறைகளைப் பற்றி எடுத்துக் கூறி வாதப்போர் செய்தாள். அதுவே இந்நூலாக ஆக்கம் பெற்றுள்ளது.

பலாலயத்தில் ஆரம்பிக்கும் நீலகேசியின் வரவு பிசாசகரோடு வாதத்தில் பொருது வெல்வதுடன் முடிகிறது. முதலில் முனி சந்திரர் மூலம் சமணத்தை அறியும் நீலி, அருகக் கடவுளின் அருள் பெற்றபின் நீலகேசியாகித் தான் பெற்ற மும்மணிகளையும் ( நற்காட்சி, நல்லறிவு , நல்லொழுக்கம்) உலகம் முழுக்கப் பரப்பவேண்டும் என்ற எண்ணம்கொண்டாள். அப்படி அவள் பயணித்தபோது சந்தித்த வேற்றுமத ஆசிரியர்களுடன் அவள் புரிந்த அர்த்தம் செறிந்த வாதங்களின் தொகுப்பு இந்நூல்.

தீர்க்கமான சிந்தனைகளுடனும், தெளிவுடனும் அவள் பிரபஞ்சத்தின், உயிரின் இயல்புகளை எடுத்து வைக்கும்போது நாமும் அவற்றின் உண்மைப் பொருளைப் புரிந்து கொள்கிறோம். உயிர், ஆன்மா, உணர்வு, ஐம்பூதங்கள், பொறிகள், புலன்கள் பற்றியும், உயிர்க்கொலை தவிர்த்தல், ஊன் மறுத்தல், நல்வினை, தீவினை பற்றியும் நீலகேசி வாதம் செய்யும்போது நமக்குள்ளும் அவள் புகுந்து நம்மையும் அவளாக்கி விடுகிறாள். நீலகேசியின் மூலமாக ஞானத்தின் வாசல் நமக்கும் திறக்கிறது.

ஐஞ்சிறு காப்பியங்களில் நீலகேசி எல்லா மதங்களைப் பற்றியும் அவற்றின் நிறை குறைகளையும் சாமானிய மக்களும் அறியத்தரும் அரிய கையேடு என்பேன். நீங்களும் நீலகேசியோடு பயணம் செய்ய ஆரம்பித்தால் அவள் உங்களுக்கு ஏற்படும் ஐயங்களை எல்லாம் நீக்கி உண்மைப் பொருளை நோக்கித் தெளிந்த ஞான நிலைக்கு இட்டுச் செல்வாள் என்பது திண்ணம்.

தாய் வழி சமூக நீட்சி பாஞ்சாலி. தந்தை வழி சமூக ஆதிக்கம் நளாயினி காந்தாரி போன்றோர்.

பண்டைய வேட்டை சமூகத்தில் கற்பொழுக்கம் என்ற சொல் இடம் பெறவில்லை. சொத்துடைமை, சமூக ஆதிக்கம், தன் வாரிசை உறுதி செய்ய பெண்ணின் புற பிறழ்வு தடை செய்யப்பட்டுக் குடும்ப அமைப்பு உருவானது. வேட்டை சமூகம் வேளாண் சமூகமாக மாறி நிலவறை கருவறை, ஓரிறைத் தத்துவங்கள் பின்னே வந்தன

பெரியாரின் பெண் ஏன் அடிமையானாள்.

பெண்களுக்காகவும் பெண் கல்விக்காகவும்  பெண் விடுதலைக்காகவும் வாழ்வியல் சுதந்திரத்துக்காகவும் குரல் கொடுக்கும் அதே நேரம் ஆண்களின் அவசத்தையும் அவர்களின் பக்கமிருந்து பார்த்து எழுதி அவர்களுக்காகவும் குரல் கொடுக்கப்பட்ட நூலாகும் இது

கற்பு இரு பாலாருக்கும் பொதுவானது. கற்பு என்று சொல்லிப் பெண்கள் எவ்வாறு அடிமைப்படுத்தப்படுகிறார்கள் என்பதைத் தோலுரிக்கிறது. காதலின்போலித்தன்மை, விவாகரத்து, மறுமணம் பற்றிப் பேசுகிறது இவரது எழுத்து.

அண்ணாவின் ஆறு கதைகளில்

அநேக கதைகளில் விலைமாதர்கள் கதை மாந்தர்களாக வருகின்றனர். அவர்களின் வாழ்வியல் துயரம், சமூகத்தில் அவர்களின் நிலை, ஆண்களின் கைப்பாவையாக இருக்க நேரும் அவலம், உண்மையான குடும்ப வாழ்க்கைக்கு ஏங்கும் அவர்களின்மனநிலை எல்லாம் கதைப்போக்கில் நமக்குத் தெளிவாகிறது. கூடா மோகம் கொண்டலையும் ஆண்களும், குணக்கேடு கொண்ட ஆண்களும் அநேகக் கதைகளில் நாயகர்களாக வருகிறார்கள். கிருஷ்ணன் போல சில ஆண்கள் மையலில் மாட்டி அசடாவதும் மார்க்கண்டன், ஜமீன், நீதிபதி போன்றவர்கள் அயோக்கியராய்ப் பெண்பித்தராய் இருப்பதும் சித்தரிக்கப்படுகிறது.

அன்றைய காலகட்டத்தில் இருந்த மூடப் பழக்க வழக்கங்கள், பெண்ணடிமைத்தனம், ஆண்களின் விட்டேற்றியான சுபாவங்கள், தராதரமற்ற செயல்பாடுகள், சமூகத்தின் கட்டுப்பெட்டித்தனம், போலி ஆச்சாரங்கள், பெண்களைப் பற்றிய மதிப்பீடுகள் அனைத்தையும் விளாசித்தள்ளி இருக்கிறார்.

சமூக மாற்றம் மனமாற்றத்தை வேண்டும் கதைகள் இவை

மொழிபெயர்ப்பு நூல்களில் பெண்களின் பரிமாணங்கள்.

துனியா சோனியா ஃபியோதரின் பெண்கள் தன்மையானவர்கள்

சித்ரா திவஹருண்ணி, வர்ஜினியா வுல்ஃப் ஆகியோர் படைத்த பெண்களையும் மிகவும் பிடிக்கும். 

யசோதரை உறங்கவில்லை. – துறவு பூண்ட கணவன் பற்றி அவனை முன்பே துறந்த மனைவியின் கூற்று. எம் எஸ் மூர்த்தி என்பவர் கன்னடத்தில் எழுதியது. தமிழில் கே நல்லதம்பி.

விவேக் ஷண்பக்கின் காச்சர் கோச்சர் திருமணமான பெண்ணின் பிரச்சனைகளைப் பேசியது இந்நூலும் இமயத்தின் செல்லாத பணமும். வரதட்சணைக் கொடுமை பற்றிப் பேசியவை.

வைக்கம் முகம்மது பஷீரின் கதை நாயகிகள் இயல்பானவர்கள். அவரின் மென்மையான ஹாஸ்ய உணர்வு அதில் வெளிப்படும்.

அயலகக் கதைகளில்

ப சிங்காரம் படைக்கும் பெண்கள் குடும்பத்துக்குக் கட்டுப்பட்டவர்கள்.

கடலுக்கு அப்பால் மரகதம்

வையாசி 19 மீனா - ரமா இன்பா சுப்ரமணியன்

 

கல்கியின் அலை ஓசை, தியாக பூமி விடுதலைப் போராட்டத்தில்பெண்களின் பங்கு.

சரித்திர நாவல்களில் பெண்கள் போகப் பொருளாகத்தான் படைக்கப்பட்டிருக்கிறார்கள். பெண் உடல்பற்றிய வர்ணனைகள் அதிகம். கல்கியின் நந்தினி, குந்தவை, வானதி, சிவகாமி போன்றோர் விதிவிலக்கு.

இதில் என்னை மிகவும் கவர்ந்தவர்கள் நந்தினியும் சிவகாமியும்தான். ஆளமுடியாத அழகுப் பேரரசிகள்.

கல்கியின் மகன் கல்கி ராஜேந்திரன் அவர்கள் படைத்த ரவிகுல திலகன் என்ற நாவலில் குவளை என்றொரு பெண் வீரப்பெண்ணாக அனைத்துத் திறமைகளும் கொண்டவளாகப் படைக்கப்பட்டிருக்கிறாள். ஆனால் சாண்டில்யன், கோவி மணி சேகரன் போன்றோரின் கதைகளில் பெண்கள் களிப்பூட்டும் பாத்திரங்கள்.

நாடகத்தில் பெண். வெளிரங்கராஜன்.

இன்றைய சூழலிலும் பெண் இருண்ட குகைக்குள்ளிருந்து வெளிவரத் துடிப்பதை., ஒரு சுதந்திர மனப்போக்குடன் வாழ துடிப்பதை ஒரு நேர்மறையான எண்ண ஓட்டத்தோடு பெண்ணியம் சார்ந்த குரலாய் தன் நாடகங்களில் பதிவு செய்திருக்கிறார் அவர். ஒரு நாடக விரும்பியாக நாடகங்களைப் பிரசுரிப்பதை வெகுஜனப் புத்தகங்கள் கைக்கொள்ளாத நிலையில் கிட்டத்தட்ட 60 சிறந்த நாடகங்களை 10 வருடங்களாக அவருடையநாடக வெளியில் வெளியிட்டிருக்கிறார்

ஜெயகாந்தனின் அக்கினிப் பிரவேசம் அந்தக்காலகட்டத்தில் மிக முக்கியமான கதை.

சாசனம் :- கந்தர்வன்வர்க்க பேதம், மேலும் சாதி நிலையின் படிகளில் பெண்கள் பார்க்கப்படும் விதம். புளியம்பழம் புளிய மரத்திலிருந்து.

இதிலேயே ரொம்பப் பிடித்த கதை இதுதான்எளிய மக்களின் அன்பு மனமும் அவர்களின் சுயகௌரவமும் தங்கள் உரிமைகளும் இதில் தன்னையறியாமல் வெளிப்பட்டிருக்கும் விதம் அற்புதம்.

மேபல். :- தஞ்சை பிரகாஷ் .மன விகாரங்களையும் தனி மனித உணர்வுகளையும் பதிவு செய்த கதைஆண் குழந்தைகளுக்கு அம்மா மேல் அதீத பாசம் ஏற்படுவதுபோல் இங்கே பெண்குழந்தைக்கு ஓடிபஸ் காம்ப்ளஸ் போல அப்பா மேல் அதீத பாசம் உண்டாகிறதுதந்தை மகள் என்றாலும் எல்லைக்கோடு கிழிக்கும் சமூகத்தின் முன் மேபல் தனித்து நின்றுவிடுகிறாள்.

முள்சாரு நிவேதிதாவித்யாசமான பாச உணர்வுகளை படம் பிடித்த கதை .டீச்சர் மேலோ பக்கத்துவீட்டுப் பெண்ணின் மேலோ ஏற்படும் ஒரு விதமான அன்புணர்வு இக்கதையில் அத்தையின்மீது ஏற்படுவது குறித்து எழுதப்பட்டுள்ளது வித்யாசம்.

. முத்துசாமியின் நீர்மை. ஒரு நார்மடிப் புடவை அணிந்த வயோதிகப் பெண்ணின் தனிமையான வாழ்வும் இறப்பும் பற்றிய கதை. சொல்லிய விதத்திலேயே சோகமும் ததும்பி வழிகிறது. எதுவும் செய்யமுடியாமல் மனதைச் சாட்டிய கதை. அந்தப் பெண்ணின்., முதியவளின் முகத்தையே அவள் இறந்தபின்தான் நெருக்கத்தில் பார்க்கிறார்கள் என்பது மிகத் துயரம். மிகச் சிறந்தகதை.

லாசராவின் அபிதா வித்யாசமானவள்., கைக்கிளைக்காதல்.  திஜாராவின் நாயகிகள் சுதந்திரமானவர்கள்.அம்மா வந்தாள் மோகமுள். பெருந்திணைக் காதல்கள்.

பாலகுமாரன் நாயகிகள் கொஞ்சம் மனத்தடையுடன் கூடிய சுதந்திரம் கொண்டவர்கள்.

அகநாழிகை பொன் வாசுதேவனின் கவிதை ஒன்றில்

அடைகவிதையில்,

புட்டம் உயர்த்தி கால்கள் மடித்து
குப்புறப்படுத்து
நீ
தூங்கும் திசையெல்லாம்
பரவியபடி கசிகிறதென் அன்புவெளி
இன்னும் வெகுதூரம்
செல்லவேண்டியதிருக்கிறது
உன்னைப் பாதுகாக்க  “

மனைவியை, குழந்தையைப் பாதுகாக்க யத்தனிக்கும் ஒரு சாமானியனின் ஆசைகளும் சோர்வுகளும் இயலாமைகளும், ஏக்கங்களும் பிரதிபலிக்கும் கவிதைகள் பல. தன்னைத் தானே நேசித்தலும், கொன்று கொள்ளுதலும்விரும்புதலும் ,விட்டேத்தியாய் இருப்பதும், இயலாமையைப் பகிர்ந்து கொள்ளவதும் , இருப்பைத் தெரிவித்துக் கொள்வதுமான கவிதைகள் மனதை அசைக்கின்றன.


தந்தைக்கும் மகளுக்குமான உறவைப் பிரதி பலிக்கிறது சாந்தி மாரியப்பனின் கவிதைஒன்று

அந்த இரவில  மிகவும் நெகிழ வைத்த கவிதை.

உடல் புரளும் சிறு சலனத்திற்கும்

குடல் புரண்டுப் பதறியெழுமெனக்குப்

பரிசாய்த் தருகிறார்

வாஞ்சையுடன் ஒரு தலை கோதலை

என் தகப்பன்.

 

மேலும்

ஒவ்வொரு பெண்ணும் தாய் வீட்டுக்குப் போகும்போது நினைக்கக்கூடியதுதான்வீடென்பது.”

அன்னியோன்யமாய் இருந்து வந்து

அடுத்த தலைமுறையின் முடிசூட்டலுக்குப் பின்

உரித்தெரியப்பட்ட பாம்புச் சட்டையாய்

வீசப்பட்ட பின்னர்

அன்னியப்பட்டும் நிற்கிறது

வீடென்பது சிலருக்கு.


தோப்பில் முகம்மது மீரானின்

களியோடக்காவுக்காக மூத்தும்மாவின் மூத்திரச் சட்டியை ஒளித்து வைத்ததனால் அவர் முதுமையோடும் பிணியோடும் பிறந்தகம் செல்லகிறார். தான் தாய் என நினைத்துக் கொண்டிருக்கும் தன் பெரியம்மா தன்னைப் பெற்றவரல்ல என்பதனால் இப்படிச் செய்ததாக மூத்தும்மா வருந்தும் இடம் இழிவரலை உண்டு செய்தது..

சூடாமணி

ஆர்சூடாமணிஇரு சகோதரிகள் என்றாலும் இருவரும் பலவருடம் கழித்துச் சந்திக்கும்போது இருவருக்குள்ளும் இருக்கும் ரசனையும் எண்ணங்களும் வேறுபடுவதை துல்லியமாக உணர்த்தும்  கதைஆம் ஒன்றாகவே ஒரே தாயின் வயிற்றில் பிறந்து வளர்ந்தாலும் எவ்வளவு வருடங்கள் கூட இருந்தாலும் அவர்கள் ஆட்படும் சூழ்நிலைகள்பார்க்கும் உலகம் , எல்லாம் உணர்த்துவது தாம் பரஸ்பரம் அந்நியர்கள்தானென்றுபல வருடங்கள் கூட வாழ்ந்தாலும் கணவன் மனைவி கூட சில சமயம் இந்த நுண்ணிய விபரங்களை உணர்ந்துகொள்ள முடியும் என்பதே எனக்கு இக்கதை  மிகப்  பிடிக்கக் காரணம்.

பெண் குழந்தைத் தொழிலாளர்களைப் பற்றிக்கூறிய கதை கருப்பு ரயில்

கருப்பு ரயில் :- கோணங்கி. ரயில் என்றதும் சின்னப் பாப்பா போல் குழந்தையானதாய்த் தோன்றியது. தீப்பெட்டி அடுக்கும் குழந்தைகளின் வாழ்வை வைத்து பொன்வண்டையும் தீப்பெட்டி ரயிலையும் உவமை கூறியது அபாரம். ஆனால் அவர்கள் வாழ்வியல் அவலம் விடியலில் அவர்களுடன் ஓடி அலையும் ஆதிநிலவாய் திக்கென்று உறைத்தது.

சைல்ட் அப்யூஸ் பற்றி

மரப்பாச்சி. :- உமா மகேஸ்வரி .குழந்தைகள் எதிர்கொள்ளும் பாலியல் அத்துமீறலை வெளிப்படுத்தும் கதை. அதே சமயம் அந்தப் பதின்பருவப் பெண்ணின் வளர்ச்சியிலும் மனநிலையிலும் ஏற்படும் மாறுதல்கள் அருமையாக சித்தரிக்கப்படுகின்றன.

சிவசங்கரி, இந்துமதி, லெக்ஷ்மி, அனுராதா ரமணன், வாஸந்தி, கீதா பென்னட்,  குடும்பப்பாங்கான பெண்களை அவர்கள் எதிர்கொண்ட பிரச்சனைகளைப் படைத்தவர்கள்.

மணியன் சாவி ஆகியோரும் நடுத்தரவர்க்கத்து மற்றும் மேல்தட்டுப் பெண்களையும் அவர்களின் குடும்பம் காதல் போன்றவற்றை ஜனரஞ்சக எழுத்தில் படைத்தவர்கள்.

இமயத்தின் செல்லாத பணம் தீக்குளித்தபெண்பற்றிப் பேசியது.

பெண்களைப்பற்றிய கட்டுரைகள் படைத்தவர்களில் பாரதி பாஸ்கர், லேடீஸ் ஸ்பெஷல் என்னும் பத்ரிக்கை ஆசிரியை கிரிஜா ராகவன் அவர்கள் படைத்த என்னைச் சுற்றிப் பெண்கள் என்ற கட்டுரைகள் அனைத்தும் பெண்ணின் பிரச்சனைகளைப் பேசுபவை.

திருநங்கைகளின் பிரச்சனைகளைப் பற்றி சு சமுத்திரத்தின் வாடா மல்லி பேசியது

திருநங்கையான கவிஞர் நதனிகா ராயின் கவிதைகள் மிக உன்னதமான உணர்வின் வெளிப்பாடுகள். மனம் தொட்ட கவிதைகள் அனைத்துமே.

 

நீ எனக்கு அளித்த பரிசுகளில்

அழகானது இந்தத் தனிமை.

 

நீ என்னைச் சிதைத்துக் கொண்டும்

நான் உன்னைச் செதுக்கிக் கொண்டும்

வாழ்ந்துகொண்டேயிருக்கிறோம் மனத்தளவில்.

 

என்னை விட்டுவிடுங்கள்

வாழ்ந்து விடுகிறேன் ஒரு ஓரமாக

ஒரு மரத்தின் கதறல்.

 

நிறைகுடத்தை மீறித் தளும்புகிறது

இவள் கொண்ட நளினம்.

 

என அட போடவைத்த கவிதைகள் சில . பல அவரின் வலியெழப் பிறந்த கவிதைகள்.


இணைய எழுத்தாளர்கள்

பாலசுப்ரமணியன் என்ற எழுத்தாளரின் நினைவெல்லாம் நீ என்ற நூலில் ஒரு கவிதையில்

ஒளிர்கின்ற கோணங்களில் எல்லாம்
மிளிர்கின்ற மாணிக்கம் “ ( என மனைவியைப் புகழ்வது அழகு ! )

 

மீரா செல்வகுமார் என்ற கவிஞரின் பார்வையில் பெண் குழந்தை

பண்டிகை உடையினை

நீயே எடு என்கிறாள்

தேர்ந்தெடுக்க வேண்டும்

என்னை அப்பனாய்த்

தேர்ந்தெடுத்த

சின்னவளுக்கு.

திரௌபதிப் பாத்திரத்தின்

ஒற்றைப் பருக்கையாய்

இருக்கிறாள்

சின்னவள்.

 

சைக்கிள் கற்றுக் கொடுத்தால் மகள் தன்னைத் தவிர்த்துப் போய்விடுவாளோ  என அன்பின் இம்சைகள் எங்கெங்கும்.

 

எவ்வளவு சொல்லியும் மகளின் மேல் கொண்ட பிரியத்தை முழுமையாகச் சொல்ல முடியவில்லையாம். தகப்பன்சாமியான மீரா செல்வகுமாரின் அன்புப் பிரவாகம் நூல் எங்கும் பெருக்கெடுத்து ஓடுகிறது. அதில் நாம் கூட நம் தந்தையின் பிரியத்தைச் சந்திக்கலாம்.

 

பூபெய்திய பெண்ணுக்குக் கூடக் கவிதை உண்டு

நேசமித்திரனின் வார்த்தைகளில்

வதுவையின் துவக்க வாசனை மிதக்கும்
மென்னகைக்கு ஆறேழுமுறை உயிர்த்தெழ சாகலாம்..”


நிலமெல்லாம் முள் மரங்கள் – தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் மாவட்ட தலைவர். ஜீவசித்தனின் நூல்

இதில் மூட நம்பிக்கையைத் தனக்கு ஆதரவாகப் பயன்படுத்தும் மீனாட்சி கதை ரொம்பப் பிடித்தது.அதுவும் “ நாலு பேய் சேர்ந்து ஒண்ணாப் பிடிச்சிருந்தா எப்பிடிக் குழந்தை பிறக்கும் ?” என்ற வார்த்தை புன்னகைக்க வைத்தது. பின்னர் பேய் ஓட்டுகிறோம்  என்று அவர்கள் படுத்தும் பாட்டைப் பார்த்ததும் படித்த கண்ணிலேயே ரத்தமும் வந்தது. 

பாலியல் மனக்கிலேசமும் மனநோயை உண்டாக்கும் என்றும் அதையே பேய் பிடித்தது என்று பூசாரி மூலம் விரட்டச் சொல்லும் மக்களையும் சந்தர்ப்பம் பார்த்துத் தடுக்க வேண்டியே பேயாகும் மீனாட்சியைப் படைத்த ஆசிரியர் மிக லாவகமாக அந்தக் கதையைக் கொண்டு சென்றிருக்கிறார்.

 

வேல இராமமூர்த்தியின்

கோபத்தால் அழிந்தவர்களைப் பற்றிய கிராமத்து இதிகாசம்தான் அரியநாச்சி. இருபதே அத்யாயங்கள்தான். இதிலும் ஆதிமுதல் அரியநாச்சியை ஆசிரியரே தெய்வம்போல் தொழுது படைத்துள்ளார். மற்றவர்கள் எல்லாம் கோபத்தில் அழிந்தார்கள் என்றால் அரியநாச்சி உக்கிரத்தால் அழிக்கிறாள்.


ராகவன் சாம்யேலின் சுனை நீரில்

மஞ்சள் வெய்யில்தான் எனக்கு மிகவும் பிடித்த கதை. குழந்தை கட்டாயம் வேணுமாடா ஜெயந்தி என விசாரிக்கும் ஜெயந்தியின் மாமா ஒரு குழந்தை என்றால் தேன்கூட்டு மெழுகின் பிச்சம்  நாயுடுவும் நமக்குக் குழந்தையாகத் தெரிவது ஆச்சர்யம்.


சுப்ரபாரதி மணியனின் கதை ஒன்றில் பெண்ணில் இருக்கும் ஆணாதிக்கம் தெரியும். மொட்டைஎன்றொரு கதை. ஆதிக்க உலகில் வேட்டையாடப்படும் பெண்களின் கதை.


பூச்சு இரு வேறு பெண்களின் மனநிலையையும் அவர்களின் வெளிப்பூச்சையும் புரிய வைத்த கதை. பெண்களைப் பெண்கள் புரிந்து கொள்கின்றார்கள் வேறு பேர் சூட்டுவதில்லை என்று ஆசுவாசம் தந்த கதை. புகை நிகழ்வுகளின் நிமித்தம் தனித்து வெளியிடங்களில் தங்க நேரும் ஒரு பெண்ணின் மனநிலையைப் ப்ரதிபலித்த கதை.


ஐய்யப்ப மாதவனின் கதை ஒன்றில்

மாறுகண்கள் கொண்ட ஒருத்தியின் கதை கழிவிரக்கம் தூண்டுவதாக அமைந்தது. மனிதரின் ஏதோ ஒரு ஊனம் எங்கெங்கும் சுட்டப்பட்டு மறுதலிக்கப்படுவதன் வலியும் அதை சந்தர்ப்பவாதியான தங்கை கணவன் பயன்படுத்திக் கொண்டு நழுவுதலும் நாம் காணக்கூடியவையே.


சி சரவண கார்த்திகேயனின் நூலான பரத்தைக்கூற்றில்

கற்பு பற்றிய கோட்பாடுகளைக் கேள்வி கேட்பதும் பரத்தையருக்கான பல்வேறு பெயர்களைக் குறிப்பதும், அதனூடே பத்தினிகளை ஏற்ற பரத்தையரைத் தாழ்த்தியமை குறித்தான விபரங்களும், ஒரு சமுதாயத்தில் அவர்களுக்கான இடம் பெயர் எப்படிக் குறிக்கப்படுகின்றார்கள் என்ற விவரணைகளும், இந்திய சமூகத்தில் அவர்களுக்கான இடமும் பற்றி விவரிக்கிறார். 

நூலில் இருந்து சில கவிதைகள். குறிஞ்சி முல்லை மருதம் நெய்தல் பாலை என்று திணை பிரித்துக் கவிதைகள் கொடுத்துள்ளார். ஒவ்வொரு திணையிலிருந்து ஒரு கவிதை.

 

**நனி கண்ணகிக்

கனவுகளுடன்

மணிமேகலை.

 

**சளி கபம் கோழை

பித்தம் எச்சில் ஊளை

ரத்தம் எலும்பு நரம்பு

தூமை மலம் மூத்திரம்

இவற்றாலானதென் தேகம்

இதில் காதலெங்கே

காமமெங்கே சொல்

 

**நீலப் படம்

சிவப்பு விளக்கு

பச்சை வார்த்தை

மஞ்சள் பத்ரிக்கை

கருப்பு வாழ்க்கை

 

** அன்பு மனைவியை ஆசைப் புதல்வியை

ஒற்றைக் கணத்தில் எனைப் போலாக்கும்

வல்லமை வாய்த்தது உன் அகால மரணம்.

 

**.உரித்துப் பார்த்தாய்

மரித்த பின்னாவது

உடுத்திப் பாரெனக்கு.


ஈழவாணி ஜெயாதீபன் பூவரசி என்றொரு காலாண்டிதழைக் கொண்டு வந்தார்.

மகளிர் தின வாழ்த்துக்கவிதை நல்ல சுருக். 

அம்மா கொண்டு வார
ஆயிரம் பவுன் பெட்டையைத்தான்
கட்டவேணும் பிறகு
அடக்க ஒடுக்கமா
கவனமா இருந்து கொள்ளும்.”

ஒரு பெண்ணின் கனவு., காதல் ஏக்கம்., பாசம்., காமம்., ஆசை.,தேசப்பற்று., வீரம்., கண்ணியம்., பெருந்தன்மை., கருணை., கோபம் எல்லாம் பேசுகிறது கவிதை.. கவிதைகளில் தன்னை ஒளிக்கவில்லை ஈழவாணி.. நன்கு வெளிப்படுத்தியே அனைத்தும் பகிர்ந்திருக்கிறார்

தமிழ்நதியின் கதைகளில் பாம்புகள் அடிக்கடி வருகின்றன. அச்சத்தின், பயத்தின் குறியீடாக. 

புலம்பெயர் மக்களின் எழுத்துக்கள். அயலக எழுத்துக்கள், மொழிபெயர்ப்பு நூல்கள். செவ்வரத்தை என்றொரு தொகுப்பு காட்டமானது.  பெருந்தேவி, குட்டி ரேவதி ஆகியோர் வெளிப்படுத்தும் பெண் உடல் அரசியல் பற்றிய கவிதைகள் அர்த்தபூர்வமானவை.

சந்திரா தங்கராஜ்

பூனைகள் இல்லாத வீடு :- நம்மைச்சுற்றி நிகழ்வதை வலியோடு ஏற்றுக்கொண்டு வாழப்பழகும் மதியவர்க்கத்து குடும்பத்தின் கதை. இதில் பூனைகள் உருவகங்களாக வருகிறார்கள்

கமலாதாஸ்

சாந்தா தத்தின்

ஆந்திரா தெலுங்கானா பிரிவினையை ஒட்டியே பல கதைகள் அமைந்திருந்தாலும் கணவன் மனைவி புரிந்துகொள்ளல், அவர்களுக்குள் ஏற்படும் ஊடல் பிணக்கு, இணக்கம் அனைத்தையுமே அழகாக சிறுகதை ஆக்கியது.

பெண்சிசுக்கொலை தடுக்கும்உதிரிப்பூக்கள்

மிகவும் வித்யாசமான கதை புள்ளிகளும் அரைப்புள்ளிகளும். குழந்தைப் பேறைப் பற்றி இன்றைய இளம்பெண்களின் நிலையை ( இது உலகளாவிய மனவியல் ப்ரச்சனை என்றும் சொல்லலாம் ) வெளிப்படுத்தியது. அதே போலமீண்டும்சிறிது புன்னகையைத் தோற்றுவித்த கதை என்றாலும் கணவனும் மனைவியும் மார்ஸ் & வீனஸில் இருந்து வந்தவர்கள் என்பதற்கு எடுத்துக்காட்டாய் இருக்கிறது .சில கதைகள் மனைவியின் எண்ண ஓட்டத்தை மையப்படுத்தியும் சில கதைகள் கணவனின் எண்ண ஓட்டத்தை மையப்படுத்தியும் , சில கதைகள் கணவனை அற்புதமாய்ப் புரிந்துகொண்ட மனைவியின் பார்வையிலும் சில கதைகள் மனைவியைப் புரிந்துகொள்ளவே கொள்ளாத கணவனின் பார்வையிலும் அமைந்திருக்கின்றன. மிகச் சிறப்பான கதைஎக்கரையும் பச்சை இல்லை’. ஆந்திரா தெலுங்கானா கர்நாடகா நதிநீர் என அனைத்துப் ப்ரச்சனைகளையும் ஒரு கதைக்குள் விவரித்த விதம் அருமை.


ராமலெக்ஷ்மியின் எழுத்துக்களில் குடும்பத்தலைவி

///பாய்ந்து வந்த வார்த்தை அம்புகளைத் தடுக்க
எட்டுகிற தொலைவில் கிடந்தும்
கேடயத்தை எடுக்கின்ற தெம்பில்லை
சுழற்றி வீச வாளொன்று சுவரிலே தொங்கியும்
நிமிர்த்திப் பிடிக்க விரல்களில் வலுவில்லை
இவள் தொட்டு ஆசீர்வதித்த
செங்கற்களைக் கொண்டு எழுந்த மனையென்பது
எவர் நினைவிலும் இல்லை.///


தான்யாவின் ஒலிக்காத இளவேனிலில்

பிறந்த நாடு பற்றிய ஏக்கமும் புலம் பெயர் நாட்டில் அடையாளம் தேடியும் போரின் அடக்கு முறையிலிருந்தும் குடும்பத்தினரின் அன்பான அடக்குமுறையிலிருந்தும் தன்னை விடுவித்துக்கொள்ள இயலாமல் தவிக்கும் பெண்களும் அவர்களின் காதல், பணி, வெளியுலகை எதிர்கொள்ளுதல், மாறுபட்டு நிற்கும் கலாசாரம், வெளியுலக வாழ்வு ஆகியவற்றை அழுத்தமான மொழியில் அதே சமயம் மென்மையாகவும் பதிவு செய்யும் கவிதைகள் இவருடையவை.

சுயமரியாதையும், பதின்மத்திலிருந்து தன் கனவுகளோடு தன்னை அடையாளம் காணும் முயற்சியுமாக நகரும் கவிதைகள் நம்மையும் அந்த இடங்களில் பிணைக்கின்றன. கணவனைத் தக்கவைத்துக்கொள்ள விரும்பாத அதிகாரத்துக்கெதிரான மனது ஒரு வேலையைத் தக்கவைக்கப் படுகிற முயற்சிகளும் இதனூடே தன்னை வெளிப்படுத்தும் சுயகௌரவத்தினோடு சமரசமும் செய்துகொள்ளாத நிகழ்வுகளைச் சொல்லிச் செல்கிறது கவிதைகள்.

வாழ்வியல் சிக்கல்களை வெளிப்படுத்தும் கவிதை வரிகள் சில..

 

”நீண்டு செல்லும் பாதைகளில்

குறுக்கு வழி தேடி ஓடி

சந்துகள் பிரிய

பக்கங்கள் புரிபடாமல்

திணறலுடன் முன்னேற

எல்லா முனைகளிலும்

ஆக்கிரமிக்கும் உருவங்கள்.”

 

“ இப்போதெல்லாம் கனவில்

கற்களே சூழ்ந்து கொள்கின்றன

உடைக்க முடியாமல் வளர்ந்து

என்னைச் சூழ்ந்து

அவற்றுக்குள் சிக்குண்டு

கல்லுக்குள் அடைபட்டு

காணாமற் போனேன். ”

 

“போக முடியா

என் தேசத்துள்

அமிழ்ந்து போகின்றேன்”.

 

மார்பகங்கள் அருமையான குறியீடுகளாக வருகின்றன. அன்பையும் காதலையும் சுமந்து கனத்துத்திரியும் பெண்களின் நிலையைச் சொல்வதாகக் கவிதைகள் பல இருந்தாலும் இவை என்னைப் பாதித்தவை. பெண்கள் அடக்கப்படுவதை இவ்வளவு வலிமையாக யாரும் பதிவு செய்திருக்க முடியாது.

 

சுவாதீனமான சேர்வையாய் உடல்

மார்பகங்கள் பால் உறுப்புகள்

இவற்றை மூடி மறைத்து

அடக்கி சட்டம் ஒழுங்கு எனும் சூழல்

 

ஒரு ஆன்மாவின் துடிப்பும்

தேவையும்

உணரப்படாமலே முடிகிறது.

 

உறவுக்குள் நுழைகையில்

பிரிவு பற்றிய பயம் சூழ்ந்து

புடைத்துக் கொள்ள

சிரிப்பு கோபம் எனத் தொடர்ச்சி அற்ற

என் இருப்பு

 

எனத் துவங்கும் இக்கவிதை எனக்குப்  பிடித்த ஒன்றாயிற்று. ஏனெனில்

 

காதலை மார்புக்குள் பதுக்கி

துக்கத்தை மறைத்து

இயல்பாக்கி வாழ

என்னால் முடியும்.

 

உயிர்ப்பைக் குரலிலும்

காதலை மார்பிலும்

பதுக்கிய

அவளது எதிர்பார்ப்பும் ஆசையும்

எந்த மனதையும் சென்றடையாது

மூடிக் கொள்கிறது.

 

– என்ற வரிகளில் ஒவ்வொரு பெண்ணும் ஒளிந்திருக்கிறாள்.

முத்தாய்ப்பாக

 

இறுதி நாளில்

எழுதிவிட்டுப்போவேன்

புள்ளியிடமுடியாத

என்னுடைய சரித்திரத்தை 

 

என்றும்

 

வயதானவளாய்

பேரப்பிள்ளை கண்டவளாய்

தென்படும் கோடுகளுள்ளும்

சுருக்கங்களுள்ளும்

நரைத்த முடிகளுள்ளும்

வாழ்ந்து கொண்டிருக்கிறேன்

முடிவுறா இளமையுடன்

தசாப்தங்களைக் கடந்தபடி.

 

என்றும் சொல்வது அருமை.


மதுராவின் சொல் என்னும் வெண்புறாவில்

“தீக்குளித்தலுக்கு அஞ்சியே
தாண்டப்படாமல் இருக்கின்றன
இலட்சுமணக் கோடுகள் “
 

என்று காலங்காலமாய் ஆண் மட்டுமல்ல யாருமே புரிந்து கொள்ளாத பெண்ணின் அக புற உலகை, உணர்வை நிணமும் சதையுமாய்ப் படைப்பதில் இக்கவிதைகள் அபார வெற்றி பெற்றுள்ளன.

 

கவிதா சொர்ணவல்லி ஒரே நேரத்தில் ஒரு பெண்ணுக்கு ஏற்படும் இரு காதல்கள் பற்றித் தைரியமாகப் பேசியவர். கதவின் வெளியே மற்றொரு காதல்முன்பே படித்திருக்கிறேன். அப்போது பிரம்மிப்பாயிருந்தது. இப்படியெல்லாம் நச்சென்று சொல்ல முடியுமாவென்று. அதே பிரமிப்பு இன்னும் தொடர்ந்து கொண்டிருக்கின்றது

அம்மாவின் பெயர் அசர வைத்தது. ஒவ்வொருஅம்மாவின் பின்னும் ஒரு பெயரில்லாத தியாகி வாழ்ந்துகொண்டுதான் இருக்கிறாள். பிள்ளைகள் நலனுக்காக தன்னையே கரைத்துக் கொண்ட, இனம் தெரியாமல் அழித்துக் கொண்ட தான் என்ற தன்மையை மறந்துவிட்ட தாய் தியாகியல்லாமல் வேறென்ன. கடமைகளைச் செய்துவரும் அந்தத் தாய்மையின் மேல் சமூகத்தின் பார்வைகள் மாற மாறத் திராவிடச் செல்வி என்ற வீர்யப் பெயர் பெற்ற தாயும்மாறி மன அழுத்ததிலும் மனச் சோர்விலும் ஆட்படுவது தினம் காணக்கூடிய ஒன்றுதான். குடும்பத்தாரும் பிள்ளைகளும் கூட தாயை புரிந்து கொள்வதில்லை. பொசலைப் பார்த்து மகள் கூட ஓரிரு தருணத்தில் பொறாமைப்படுகிறாள்

உண்மைதான் திருமணத்துக்கு முன்பொசலாய்இருந்தவர்கள் திருமணத்துக்குப் பின் கரையைக் கடந்த புயல் வீழ்த்திய நிலமாய் ஆகிவிடுகிறார்கள்.

ராஜாமகள் என்றொரு கவிதாயினி

///பா.. பாயாசம்

வெண்பா புலவு

பனுவல் பச்சடி

தொகையறாத் துவையல்

வஞ்சிப்பா வெஞ்சனம்

அளபெடை வடை

ஹைக்கூ கூட்டு

யாப்பே உப்பு

சுவைக்கச் சம்மதமா///

 என சமையலைக் கவிதையில் கொண்டுவந்துள்ளார்

இவர்களையும் படித்துத் தெரிந்து கொள்ளுங்கள்.

 

அம்பையின் அம்மா ஒரு கொலை செய்தாள். பெண்ணின் கறுப்பு நிறம் என்பது திருமணச்சந்தையில் பெற்றவர்களின் முகத்தில் அடிக்கும் ஒர் ஆயுதமாகும் அவலம். தாயை அம்பாளாக உபாசிக்கும் ஒரு பெண் பூப்பெய்தும்போது தன் தாயின் தேவஸ்வரூபம் உரிந்து வெறும் மனித அம்மாவாய்க் காணும் வலிமிக்க தருணம் கதையின் முடிவாய் அமைகிறது

அம்பையின் காட்டிலே ஒரு மான். பூப்பெய்த இயலாத உடற்கூறுடைய ஒரு பெண்ணின் மன உணர்வுகளை வடித்த கதை. 

அம்பையின் ஆற்றைக் கடத்தல் என்ற நாடகத்தில் சீதை என்றால் ராமனின் மனைவியா., ஜனகனின் மகளா., தசரதரின் மருமகளா., ரவிவர்மாவின் ஓவியத்தில் சித்தரிக்கப்பட்டவளா என்றால் அதற்கு அவர் சொல்வார் , என்னை பிரதிமைகளுடன், முன் முடிவுகளுடன்., சாயல்களுடன் அணுகாதீர்கள் என்று.

சுசீலாம்மாவின் தேவந்தி, யாதுமாகி, தடங்கள்.

பெண்களுக்குத்தான் எவ்வளவு பிரச்சனைகள் சில இடங்களில் பெண்களே பிரச்சனைகள். நந்தா, சிந்து என்ற இருவரின் கடித உரையாடலாகத் தொடர்கிறது புதினம். அநேகம் சிந்து நந்தாவுக்கு எழுதும் அறிவுசார் மின்னஞ்சல்கள். இது புதினத்தில் புதுவகை உத்தி.

சமூக அக்கறையுடன் சக பெண்களின் மீதான பரிவு, மாணவிகளின் மேலான பாசம், அநீதியை எதிர்க்க இயலாமல் மேலும் தன்னைத்தானே வெல்ல இயலாமல் மடங்கிப் போகும் அவர்களைப் பார்த்து ஆவேசம், சிலரை மாற்ற இயலாத இழிவரல், சிலரின் வாழ்வைப் பார்த்து எள்ளல், சிலருக்கு இழைக்கப்படும் அநீதி கண்டு பொங்குதல் எனப் பல்வேறு உணர்வுகளைப் படைத்துச் செல்கிறார் ஆசிரியர்.

தனித்தனி மனுஷிகளின் கதையை ஒரு விழிப்புணர்வுப் புதினமாக்கி இருக்கும் முறையும் வித்யாசம். ஆனால் எல்லாவற்றிலும் பெண்களின் உணர்வுகளும் உறவுகளும் கலந்த இணைப்புதான் மையப்புள்ளி. சமயத்தில் இவை புனைவா நம் அக்கம் பக்கம் இருப்போரின் வாழ்வியலா என்று எண்ணமிடவைக்கும் வண்ணம் இருக்கிறது இக்கதைகளின் யதார்த்தமும் உண்மைத்தன்மையும்.

திருமணத்தோடு பெண் வாழ்வு முடிந்துவிடுகிறதா? திருமணத்துக்குப் பின்பும் அவள் மேலெழுகிறாளா என்றும் சிந்திக்க வைத்தது. சமூகத்தை விட்டோ, திருமண உறவை விட்டோ, குடும்ப அமைப்பை விட்டோ பெண்ணை அத்யாவசியம் ஏற்பட்டால் ஒழிய, தாங்கொணாத் துயரம் ஏற்பட்டால் ஒழிய வெளியேறச் சொல்லவில்லை ஆசிரியர்.

எவ்வளவுதான் மற்றவர்கள் உதவினாலும் மரபுசார் அடிமையா, அறிவுசார் வாழ்க்கையா என்பதைத் தீர்மானிக்க வேண்டியது பெண்ணே. தன் இக்கட்டுகளைக் களைந்து முளைத்தெழுவது அவள் கையில் மட்டுமே உள்ளது என்பதும் ஆசிரியர் காட்டும் வழி

குடும்ப வன்முறை, பாலியல் வன்முறை, கருத்தியல் ரீதியான வன்முறை என அனைத்தையும் அலசுகிறது இந்த நாவல். மீனாக்ஷி கல்யாணத்தில் ஆரம்பிக்கும் நாவல் தங்கையின் திருமணத்துக்காக வரும் கள்ளழகர் ஆற்றில் இறங்குவதோடு முடிந்திருக்கிறது. திருமணம்தான் முடிவு என்று எண்ண வைக்கப்படும் பெண் மனமும் அதன்பின் அது நல்லதாகவோ கெட்டதாகவோ முடிந்தாலும் உதவ முடியாத பிறந்த குடும்பத்தின் நிலையும் இதன்மூலம் குறியீடாகக் காண்பிக்கப்படுகிறதோ என்று எண்ணத் தோன்றுகிறது.

ஆணால் கவரப்படும்போதே ஆணைக் கவரவிரும்புகிறாளா பெண், திருமணத்தை நோக்கி மட்டுமே பெண் வாழ்க்கை செல்கிறதா, பெண்ணின் உயர்வும் வெற்றியும் சமையல் அது தொடர்பான வேலைகளையும், குடும்ப வாழ்க்கையையும் குழந்தைப் பேறையும் ஒப்புநோக்கியே சீர் தூக்கப்படுகிறதா, வெளி உலகம் காணாத பெண் என்பவள் உயர்வானவளா எனப் பல்வேறு அலைகளை எழுப்பியபடி இருக்கிறது வெகு அடர்த்தியான இந்நாவல்.  

கல்வியும் உத்யோகமும் தற்சார்பும் உயர்வாழ்க்கைத்தரமும் பெற்றபின்பும் பெண் என்பவள் வெற்றியடைந்திருக்கிறாளா இல்லையா என்று யோசிக்க வைப்பதே இந்தப் புதினத்தின் வெற்றி

இலக்கிய உலகில் செங்கோல் ஏந்திய தேவதைகளில் என் தமிழன்னை சுசீலாம்மா ஒரு முக்கிய தேவதை. தன்னைத் தேடித் தேடிக் காணும் பெண்களில் எல்லாம் கண்டடைந்து எழுத்தாய் விவரிக்கும் நேயம் அவருக்கே வாய்த்தது. சமயத்தில் ருத்ர ரூபிண்யையும் கூட.

நிமிர்ந்த நன்னடை நேர் கொண்ட பார்வை என பாரதியின் புதுமைப் பெண்ணுக்கே உரிய அம்சங்களை எங்களுள் புகுத்தியவர், எங்கள் பார்வைகளை மாற்றியவர் என்ற பெருமை அவருக்கு மட்டுமே உரித்தானது.

தேவந்தி 

இவற்றுள் சிகரம். தன்னைத் தெய்வமாக எண்ணக் கற்பிக்கப்பட்ட ஒருவன் இல்லறத்தில் இயல்பாய் ஈடுபடாமல் மனைவியையும் உணர்வுள்ள பெண்ணாய் எண்ணாமல் நடத்தும் கதை. துறவறம் என்பது ஞானியர்க்கே வாய்க்கக் கூடும். ஆனால் உயிரும் ரத்தமும் சதையுமான வாழும் ஆசையுள்ள ஒரு பெண்ணை மணந்து அவளை கட்டாயத் துறவுத் தன்மைக்கு இட்டுச் செல்வது என்ன நியாயம். இது மட்டுமல்ல. இதில் மனம் பிளந்து தேவந்தி கண்ணகியிடம் கேட்கும் கேள்விகள் மிகவும் நியாயமானவை. இருவருமே பிரிவெனும் ஆற்றாமையில் ஆழ்ந்திருந்தாலும் வணிக குல மங்கைக்கு வாழ்வென்பதன் ருசிகள் பிடிபட்டிருக்கவாவது செய்திருந்தது. ஆனால் அவள் தோழிக்கோ வாழ்வென்பது என்ன அதன் ருசிகள், தேவைகள் என்ன என்பது தெரியாமலே ஒரு உலகம் மூடப்பட்டிருப்பதான சோகம்., அதை விட்டு வெளியேற முடியாபடியான கண்ணுக்குத் தெரியாத சமூக வலைகள், நெஞ்சைப் பிழிந்தது.

யாதுமாகி

குழந்தைகள் உங்கள் மூலமாக உலகத்துக்கு வந்தார்கள் ஆனாலும் ஆனால் அவர்கள் உங்களை முழுமையாகச் சார்ந்தவர்கள் அல்ல என்ற கலீல் கிப்ரானின் வாசகம் நினைவில் ஆடியது. யாதுமாகியில் சாரு என்ற மகளின் கதாபாத்திரம் வழியாக தேவி என்ற தாயின் இறந்தகால நிகழ்கால சரிதம் எடுத்தியம்பப்படுகிறது.

முழுக்க முழுக்க ஒரு மகளின் பார்வையில் தாயின் கடந்தகாலமும், அது சார்ந்த நிகழ்வுகளும் சுற்றிச் சுற்றிச் சுழன்றடிக்கிறது நம்மை. குழந்தைத் திருமணம் ஆகி பால்ய விதவையாகும் 1900களின் ஆரம்பக் கட்டத்தில் கல்வியின் இன்றியமையாமையும் பெண்களின் நிலமையையும் ஏன் ஆண்களின் கட்டுப்பெட்டித்தனமான நிலைமையையும் விவரிக்கும் இக்கதை அங்கங்கே நம்மை உறைய வைக்கிறது. 

நார்மடி உடுத்தி தலை மழித்த பெண்களை நான் சிறுவயதில் தஞ்சை மாவட்டத்தில் படிக்கும்போது கண்டிருக்கிறேன். துறவிகளின் வாழ்வை ஒத்தது ஒரு பால்ய விதவையின் வாழ்வும். மடி ஆசாரம் என்ற போர்வைகளுக்குள் தங்களைப் புதைத்துக்கொண்டு அவர்கள் தங்களை ஒரு ஆளண்டாப் பட்சிபோலக் காத்து வாழ்ந்து முடிவார்கள்.

 அப்படிப்பட்ட ஒரு காலட்டத்திலிருந்து ஒரு நூற்றாண்டு காலப் பெண்மையின் வாழ்வை வரைந்து செல்கிறது நாவல். அதில் தேவி, சாரு, நீனா என்று மூன்று காலகட்டங்களைச் சேர்ந்த பெண்களின் வாழ்க்கையைச் சொன்னாலும் தேவியின் வாழ்க்கைதான் மிகத் திருப்பங்கள் நிறைந்தது. அவர் தன் வாழ்வில் எதிர்கொள்ளும் நிகழ்ச்சிகளே சாருவும் தன் வாழ்க்கையின் துணிகர முடிவுகள் எடுக்கக் கை கொடுக்கிறது. இவர்கள் இருவரும் எதிர்கொண்ட எந்தப் பிரச்சனையுமில்லாமல் இன்றையக் காலகட்ட உற்சாகப் பெண்ணாக நீனாவும் அவளைப் புரிந்துகொண்ட அன்புக் கணவராக கிருஷ்ணாவும் அழகான படிமங்கள். பாரதியின் வரிகள் ஒவ்வொரு அத்யாயத்தையும் உயிர்ப்பிக்கின்றன.

 இதில் குறிப்பிட்டுச் சில மனிதர்களின் சுயநலம், வார்த்தைப் பிரயோகங்கள் சொல்லவேண்டும். பால்ய விதவையான சகோதரிக்கு, மகளுக்கு ஒரு வாழ்வு வேண்டும் என எண்ணாத குடும்பத்தார் அவளை தியாக தீபமாக உபயோகித்துக்கொள்ள எண்ணுவது, மேலும் வாழ்வை இழந்தவள் படித்து என்ன செய்யப்போகிறாள் என நெருப்பிட்டது போலக் கேட்கும் ( இந்தக் கம்மனாட்டிப் பொண்ணு படிச்சு என்ன கலெக்டராகவா போறாள் எனக் கேட்கும் )மனிதர்கள்.  மேலும் அதிகம் ( உமா ) படிக்க வைத்தால் அதைவிடப் பெரிய படிப்புப் படித்த மாப்பிள்ளை பார்க்கவேண்டும் அல்லது அவளுக்கும் இதே நிகழும் என வீட்டிலுள்ளோர் சொல்கிறார்கள் என்று சொல்லும் மாமா போன்ற பலரையும் கடந்து தேவி தன்னுடைய முயற்சியால் நன்கு படித்துப் பலரும் மதிக்கும் பெரிய உத்யோகத்தை அடைந்து விகசிக்கிறார்.

 இத்தனை கஷ்டங்களையும் தாங்கிய தேவி ஒரு முறை கூட அழுவதில்லை. குழம்புவதில்லை. நிமிர்ந்த நன்னடையும் நேர்கொண்ட பார்வையுமாகத் தன் வாழ்வை அதன் சூறாவளியை எதிர்கொண்டு தன் மகள் சாருவையும் பேத்தி நீனாவையும் வழிநடத்துதலும் துன்பம் நேரும்போது சோரவிடாமல் தோள்கொடுப்பதும் சிறப்பு.

 மூன்று காலகட்டத்துப் பெண்களின் வாழ்வையும் வரைந்து செல்கிறது யாதுமாகி நாவல். அந்தநாள் வாழ்வு பெண்ணுக்கு எதை எதையெல்லாம் மறுத்தது இன்று சுதந்திரம் என்ற பெயரில் எதெல்லாம் கிட்டியுள்ளது என்பதைத் தெரிந்துகொள்ளவாவது அனைவரும் யாதுமாகியைப் படிக்கவேண்டும். ஆத்மாவுக்குப் பிடித்தமான ஒன்றைத் தள்ளிப்போடாமல் ருசிக்க முடிவெடுத்த சாரு அதை நம்மோடு பகிர்ந்து உண்ணும் விதம் உன்னதம்.

 கஸ்தூரி மானின் உடல் சுகந்தம் தேடி அலைய தன் உடலிலிருந்தே அது வருகிறது எனக் கண்டுபிடித்ததாம். (ஃபாத்திமா அம்மாவின் குட்டிக்கதை.) 


அடர் இருளில் கீற்று வெளிச்சமாக வந்த மொழியென்னும் தேவதை, என் கரம் பிடித்து  பிரகாசமான ஒளிஉலகுக்கு அழைத்துச் சென்றவர்கள் சுசீலாம்மா அவர்களுக்கு இந்நிகழ்வைக் காணிக்கை ஆக்குகிறேன்.

1 கருத்து:

  1. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும் !
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...