எனது இருபது நூல்கள்

எனது இருபது நூல்கள்
எனது இருபது நூல்கள்

வெள்ளி, 2 செப்டம்பர், 2022

இராவண காவியம் - தமிழகக்காண்டம் , ஒரு அறிமுகம்.

இராவண காவியம்

 

1.பாயிரம்

தமிழ்த்தாய், தமிழகம், தமிழர், தமிழ்மொழிக்குத் தொண்டு செய்த புலவர்களை வாழ்த்தி ஆரம்பிக்கிறது இராவண காவியம். இக்காவியத்தின் முதற்பாடலாக தமிழ்த்தாய் வாழ்த்தில் இராமாயணத்தில் ”உலகம் யாவையும் என்று ஆரம்பித்திருப்பது போல உலக மூமையா “என்று ஆரம்பித்துள்ளார். இதுவே காப்பிய மரபும் கூட.

உலகெங்கிலுமுள்ள மக்கள் பேச்சு மொழி அறியாமல் சைகை மொழி காட்டி வாழ்ந்திருந்த ஆதி காலத்திலேயே பல்வேறு கலைச் செல்வங்களோடு இலங்கி இன்றைக்குத் தானும் ஒரு மொழி என்று சொல்லப்படுகின்ற மொழிக்கெல்லாம் தலைமையாய் விளங்கும் தமிழன்னையைப் போற்றுவோம்.

தமிழ் மொழியிலிருந்து பிறந்து செருக்குடன் உலகினர் முன் உலா வந்த பல மொழிகள் வீழ்ந்து படவும் இன்றும் இளமையுடன் தனக்குவமை இல்லாத அழகோடு சிறந்து விளங்கும் தமிழன்னையைப் போற்றுவோம்.

கன்னடம், தெலுங்கு, துளு, மழைவளம் மிக்க மலையாள தேசத்தில் மணிப்பிரவாளமொழி என்று சொல்லப்படுகின்ற மலையாளம் ஆகிய நான்கு மொழிகளை ஈன்றபின்னும் தன் பொலிவு குன்றாமல் தானே தனக்கு நிகர் என விளங்கும் தமிழன்னையைப் போற்றுவோம்.

மூவேந்தர்களும் முன்பு தம் உயிரென அருமையாகப் போற்றி வளர்த்ததும் அனைவரின் நாவிலும் நடம் புரிவதும், நாளும் மெருகேறிச் சிறப்புற்று இருப்பதுமான நற்றமிழ் அன்னையைப் போற்றுவோம்

மன்னர்களுக்கீடாக மதிக்கப்படும் வள்ளல்களும் மற்றையோரும் பொன் பொருள் வழங்கியும், பொன் போன்ற தம்முடைய இனிய உயிரைக் கொடுத்தும் சிறப்புடன் பேணிக் காத்த நம்மைப் பெற்றெடுத்த தாய்க்கு ஈடான தமிழன்னையைப் போற்றுவோம்.

எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி எனப்படும் ஐந்து இலக்கணங்களிலும், மொழியில் பழுத்த திறமையுள்ள புலவர்களால் செம்மையுற சமைக்கப்பட்ட பாடல்களின் தொகை எண்ணற்றதாய் இலங்குமாறு இலக்கிய வளமைமிக்க இயல், இசை, நாடகத்தமிழ் என்று தழைத்த முத்தமிழ் அன்னையைப் போற்றுவோம். 

இருளைத் துரத்தி எழும் சூரியனைப் போல அல்லவை நீக்கி நல்லவை பேசும் நாவன்மை உடையோரின் வாயில் உருவாகி, ஈகைக்குணம் மிக்க வள்ளல்களின் புகழ்போல வளர்ந்து, தலைச்சங்கம், இடைச்சங்கம், கடைச்சங்கம் என்ற தூய்மையான முச்சங்கங்களில் இருந்த சிறப்புடையதும், தொழத் தக்கதும் தாய்க்கு நிகரானதுமான தமிழன்னையைப் போற்றுவோம்.

இனிமையுடைய பால், தேன், இன்சுவையுடைய பழங்கள், இனிய சாறுடைய கரும்பு ஆகியவற்றை வாயிலிட்டுச் சுவைத்தால்தான் இனிக்கும். ஆனால் தமிழை நினைத்தாலே நெஞ்சம் இனிக்கும். சொல்லும் வாயும் இனித்திடும். இத்தகு பெருமையுடைய தனித்தமிழ்ப் பேரன்னையைப் போற்றிடுவோம். 

கனைத்தும் முக்கியும் கர், குர் என்ற இத்தன்மையுடைய ஒலிகளோடு உச்சரிக்கப்படுவதால் உயிர் தேம்பித் துயரப்படும் நிலை தவிர்த்து, இனிமையான, சுவைபொருந்திய, எளிதில் உச்சரிக்கத் தகுந்த , தனக்குத் தானே நிகர் என விளங்கும் தமிழ்த்தாயினைப் போற்றுவோம்.

அழகான வனிதையிடம் பேசக் கற்கும் தங்கக் கூண்டுக் கிளி பூங்காவில் பழுத்து மணம்கமழும் தீஞ்சுவைக் கனிபோலப் பேசும் இனிய சொல்லும், மாடு போன்ற விலங்குகளும் பறவையினங்களும் அம்மா என்று அழைக்கும் சிறப்புப் பெற்றதும், நன்மை பொருந்தியதும், அழிவற்றதுமான தமிழன்னையைப் போற்றுவோம்.

 

தமிழகம்.

பண்டைக்காலத்தில் நம் தமிழ் மக்கள் பல வளங்களைப் பெருக்கி, சுற்றத்தினரோடு கலந்து அனைவருக்கும் கொடுத்து உண்டு மகிழ்ந்தார்கள். அனைவரும் வாழ உதவி செய்து அதனால் உலகமே போற்றும்படி வாழ்ந்த தன்மையான இனிய தமிழகத்தைப் போற்றுவோம்.

நினைத்தாலே நெஞ்சம் நெகிழும்படி நம் தாய்த்தமிழ்நாட்டைக் கடல் உண்டது போல் ஆரியமும் கவர்ந்தது. அதன்பின்னும் இந்த அளவோடு மீண்டு இன்று நாம் கண்டு இன்புறும் இந்தத் தனித்தமிழகம் என்னும் தாயினைப் போற்றுவோம். 

 

தமிழ் மக்கள்

ஒழுக்கம் என்பது உயிரினும் மேலானது. ஒழுக்கம் தவறுவது போல் ஒரு மனிதருக்கு இழுக்கைத் தருவது வேறில்லை ( ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம் உயிரினும் ஓம்பப்படும் என்ற வள்ளுவரின் குறளை நினைவில் கொள்க) என்னும் நிலையைப் பழக்கத்தில் கொண்டு வந்து அதனையே தொடர்ந்து உயர்ந்த வழக்கமாகக் கைக்கொண்ட தமிழ் மக்களைப் போற்றுவோம்.

குன்றிப்போகும் ஆரியக் கோட்பாட்டை ஏற்க மறுத்து எதிர்த்து நின்று அதனால் தாழ்த்தப்படும் நிலை அடைந்தாலும் சிறிதளவேனும் தன் ஆரிய எதிர்ப்புக் கொள்கையை விடாத வெற்றித் தமிழ் வீரர்களைப் போற்றுவோம்.

கள்ளர், மறவர் என்று எள்ளப்பட்டும், பள்ளர், பறையர் என்று பழிக்கப்பட்டும் மனம் நொந்தும் தன் சிறப்பு இயல்புகளில் மாற்றமில்லாமல் வீரர்களாய் வாழும் தமிழ் மக்களைப் போற்றுவோம்.

ஒரு துளி நஞ்சு கலந்தாலும் பால் கெட்டு விடும் என்ற உண்மைப் பொருளை ஆராய்ந்து அதனால் விளையும் கேடு உணர்ந்து அதனை நீக்கிப் பெருமை வாழ்வு பெறுவதற்கு விரும்பி வரும் தமிழ் மக்களைப் போற்றுவோம்.

 

புலவர்

பல துறைகளில் தமிழ்ப் பாடல்கள் இயற்றியும் உரைநூல்களை எழுதியும் இந்த உலகம் இன்புற நற்கருத்துக்களை எடுத்தியம்பியும் தாய்த்தமிழ் மொழிக்கு அளவற்ற தொண்டாற்றியும் வாழ்ந்து வரும் முத்தமிழிற் சிறந்த புலவர்களின் ஈர்க்கும் பொன் போன்ற திருவடிகளை வணங்குவோம்.

வயதில் மூத்த நம் முன்னோர்கள் தங்கள் வாழ்வியலாகக் கொண்டு ஒழுகிய ஒழுக்கம் அனைத்தையும் யாப்பியல் நெறிப்படி ( இலக்கண முறைப்படி ) நூலாக ஆக்கம் செய்து வழங்கிய தொல் காப்பியம் இயற்றிய பெருமகனாரை மனதில் வைத்து வணங்குவோம்.

தேன் கசிந்து பெருகும் வாசமிக்க பூவினைத் தேனீக்கள் விரும்பி மொய்த்துச் சுற்றுவது போல் அறத்துப்பால், பொருட்பால், இன்பத்துப்பால் என்ற முப்பாலினையும் உள்ளம் உவந்து மகிழும் வண்ணம் ஒப்புமையில்லாத குறளை வழங்கிய திருவள்ளுவப் பெரியாரையும் சிறப்பித்து வாழ்த்துவோம்.

 

மேற்படி வேறு வண்ணம்

இந்த இராவண காவியக் கதைக்கு அடிப்படை இவைகள்தாம் என ஈடுபாட்டுடன் தமிழாய்ந்து அவற்றைக் கண்டடைந்து கொடுத்த சிறப்புத் தகுதி வாய்ந்த செந்தமிழ் வளர்த்த தந்தை தாயர் போன்ற புலவர் குழாத்தினரையும் ஒப்பற்ற தமிழ் தழைக்கும் நம் உள்ளத்தில் இருத்திப் போற்றுவோம்.

 

அரசர் வேறு வண்ணம்

குறிஞ்சி முல்லை மருதம் நெய்தல் ஆகிய நான்கு நிலப்பகுதிகளை பெருவளமிக்க நிலப்பகுதிகளாக்கி ஆண்ட நான்கு நிலத்தலைவர்களாம் மன்னர்களின் பொன்போன்ற திருவடிகளைச் சிறப்பித்து வாழ்த்துவோம்.

 

மேற்படி வேறு வண்ணம்

இப்பூமியில் முத்தமிழிற் சிறந்த பாவலர்களாகவும்,  காவல் பொருந்திய தமிழகத்தின் பாதுகாவலர்களாகவும், அழகிய தொன்மையான தமிழ் மரபில் வந்த முடிசூடிய மூவேந்தர்களாகிய சேரர், சோழர், பாண்டியரின் வலிமை வாய்ந்த  வீரத்திருவடிகளைப் போற்றுவோம்.

இலங்கையின் முடியாட்சியை அடைவதற்கு விரும்பிய இளையவனான கொடும்பாவி பீடணன் மனச் சலனமுற்று ஆரியர்களுக்கு அடிமையாய் அவர்களின் படையுடன் தன்னை எதிர்த்து எதிர்வரக் கண்டும் தன் தமிழ் உள்ளம் கலங்கிடாமல் அப்படையை வீரத்துடன் எதிர்த்து நின்ற தலைவனாம் இராவணனின் வீரத் திருவடிகளைப் போற்றுவோம்.

 

கொச்சகம்

கட்டிய கணவன் போர்க்களத்தில் வீழ்ந்து பட்ட அக்கணமே அவனை அவ்வாறு கொலை புரிந்து வீழ்த்திய ஆரியக் கூட்டத்தாரும் மனம் இரங்கும் வண்ணம்  தன் கணவனுடன் தன் ஆவியை நீத்த தகைமையுடையவளும் தமிழ்த்தாய் மானத்தைக் காத்து உயர்ந்தவளுமான வண்டார் குழலியின் சிலம்பணிந்த மலர்ப்பாதங்களை வாழ்த்துவோம்.

 

முப்பால் – கலி விருத்தம்

வாழ்வின் உண்மையை அறிந்த மேலோர்கள் போற்றிக் கூறுவது போல வாழும் காலத்தில் செய்யத் தக்கன இவை, செய்யத்தகாதன இவை என வாழ்க்கையின் உய்யும் நிலை முழுவதும் ஆராய்ந்து பண்டையத் தமிழின் அய்யனாகிய திருவள்ளுவர் வகுத்த அற நெறியைப் போற்றுவோம்.

செல்வம், கல்வி, தான் ஈடுபட்டுச் செய்யும் தொழிலின் மேன்மை, சிறந்த நண்பரைக் கைக்கொள்ளும் தன்மை, தமக்குப் பொருந்தாத பகைவரின் தன்மையறிந்து விலக்கும் தன்மை, சிறந்த பேராற்றல் கொண்ட ஆட்சித்திறன் ஆகிய ஒப்புவமை சொல்ல இயலாத நற்பொருட்களின் திறனைப் போற்றுவோம்.

இல்லறத்தின் பாற்பட்டு ஒழுகும் நல்வகைமையுடைய காதல் வாழ்வு வாழும் தம்பதியர் தமது சிறப்புப் பண்புகளுக்கெல்லாம் தாமே உவமையாகித் தனக்கு நிகர் தானேயாகி விளங்கும் வண்ணம் தினையளவு பயன் என்றாலும் அதனைப் பனை அளவு பயன் போலக் கருதி இன்புற்று வாழும் வாழ்வினைப் போற்றுவோம்.

 

காவியத் தோற்றம்

பண்டைக் காலம் என்னும் சொல் பழமையின் பால்படும்படி இவர்களே மனித குலத்தின் முழு முதல் மக்கட் குடிகள் என்று கூறும்படி எட்டுத் திக்கும் பரந்து விரிந்து சென்று பெருமையுடன் இன்புற்றுப் பழந்தமிழ் மக்கள்  வாழ்ந்து வரும் வேளையில் புதியவர்களான ஆரியர்கள் அதிரடியாகத் தமிழகம் புகுந்து நல்லவன் என்று  நம்பி வாழ்ந்து கொண்டிருந்த நம் மக்களின் மேல் இராமன் கொடிய பகை கொள்ளுமாறு செய்து, பேர் பெற்ற நம் பெரும் குலத்தவரை இனத்தோடு ஒழியுமாறு செய்தார்கள்.

தமிழினப் பற்று என்பதே சிறிதும் இல்லாத பதர்கள் போன்ற மனிதர்களின் துணையுடன் கொடியவனான ராமன் வெற்றி கொண்டான். சிறப்புடைத் தலைவனான இராவணனின் தொன்மைப் பெருமை வாய்ந்த குலம் இற்றுப் போய் அழிந்து ஒழிந்தது.

தாய்மை உள்ளம் படைத்த தமிழர் தலைவனாம் இராவணனை, ஆராய்ந்து அறியும் தன்மை அற்ற அந்த ஆரிய ராமன் மனத்தூய்மை இல்லாத மனிதர்களின் துணைக்கொண்டு அழித்து ஒழித்ததை வாய்மையில்லாத வான்மீகியும் வடமொழியில் காவியமாக ஆக்கினான்.

வழிவழியாக வரும் தமிழ் மக்கள் இதனை அறிய நேர்ந்தால் அவர்களின் பகை பின்னேயே வரும் அத்தோடு பெரும் பழியும் வந்து சேரும் எனச் சிறிதும் சிந்தியாமல் பைந்தமிழ் மக்களை அழிவைக் கொண்டு வரும் கொடும் அரக்கர்கள் என்று உரைத்துள்ளான்.

உயர்ந்த பண்புகளை உடைய தமிழ் மக்களைத் தீக்குணமுடைய அரக்கர்கள் என்றும் அதற்கு மேலும் அஃறிணையாகிய குரங்கினத்தார் என்றும் நாத்தழும்பேறுமாறு பரப்புரை கூறிப் பழித்தவன்தான் இந்த வான்மீகி.

தம் தமிழினத்தையே பகையாய்க் கருதிக் கம்பனும் வான்மீகி சொன்ன அந்த முழுப்பொய்யை உண்மையான, மேன்மையான கதை எனக் கருதி அம்மம்மா! நம் தமிழர்கள் நம்பும்படித் தமிழிலும் ஒரு காப்பியத்தைச் செய்துவிட்டான்.

கம்பன் செய்து அளித்த அப்பொய்க் காப்பியத்தினை உண்மை என நம்பி ஐயகோ! நம் தமிழ் மக்களும் தம் பழம்பெருமைக்குரிய தாய்த்தமிழ் மக்களை கொடிய பகைவர் போல் வெறுத்து ஒதுக்கலாயினர்.

தம் குலப் பகைவனான இராமன் தன்னைத் தம்குலக் கடவுளாகத் தமிழ் மக்கள் கருதி வணங்கி, இரவினைப் பகல் காலமெனத் தவறாகக் கருதி ஒளி மங்கி மறையும் நிலவினைப் போலத் தம் நிலை குலைந்துபோகத் தலைப்பட்டனர்.

அம்மாதிரியான மயக்கத்தினை நீக்கித் தமிழர்களிடம் தம் இனத்தலைவனாகிய இராவணனின் பெருமையைச் சொல்லி அவர்களின் மனத்தைச் செம்மையாக்கித் தெளிந்திடச் செய்தலும் நம் தமிழ் மக்களின் கடமையேயாகும்.

மேற்குத் திக்கில் மறைந்து வீழ்ந்த சூரியன் மறுநாள் காலையில் வன்மையான இருளை அழித்துச் செந்நிறக் கதிர்கள் பொலியுமாறு எழுந்து மக்களுக்குப் புதிய வெளிச்சத்தைக் காட்டுவது போல் எழுந்ததே இந்த இராவண காவியமாகும்.

இனிப்பான கரும்பைக் கசக்கும் வேம்பு எனவும் கசக்கும் வேம்பினை இனிக்கும் கரும்பெனவும் விரும்பி வாழும் தமிழ் மக்களின் அறியாமை ( உண்மை அறியாத தன்மை) அஞ்சி ஓடவும், இந்த உண்மையை அறிந்து தமிழ் மக்கள் தம் பழங்கதை அறிந்து திரும்பி வந்து பெருமையுடன் வாழச் செய்வதே இக்காவியத்தின் பணி.

 

அவையடக்கம்

குற்றமற்ற  தமிழ் மக்களின் இந்தப்  பெருங்கதையைக் கேட்க நேரும்போதெல்லாம் சிலர் நிந்தனை செய்வார். இது உண்மைதானே என உரைப்பார்கள் சிலர். சிலர் இதனை எதிர்த்துப் பேசவே மனம் கூசுவார். சிலரோ ஆமோதிப்பாகவோ மறுப்பாகவோ கூக்குரலிடுவார்.

வழிவழியாக வந்த மரபினை மாற்றுவதாகும் இது என்பார்கள். இது பழியைத் தரும் என்பார்கள். தம் இனத்தின் மேல் கொண்ட பகையால் கொட்டித் தீர்க்கும் வசைமொழி என்பார்கள். முறைமை இல்லாத அநியாயம், இஃது ஒழிய வேண்டும் என்பார்கள். இதனை நாம் ஒழித்துக் கட்டுவோம் என்பார்கள். 

வடநாட்டில் இருந்து வந்த இக்கதையினை அதன் நிலையை மாற்றி உரைத்து வடக்கத்தியரின் கொடிய நடவடிக்கைகள் புலப்படுமாறு வெளிப்படுத்தியது மட்டுமில்லாமல் இதில் குற்றம் கூறத்தக்க தீங்கு ஒன்றுமே இல்லை.

பொய்யையும் புரட்டையும் விதைத்துப் பெரிதாக்கி நுழைத்த தெய்வத் தன்மை என்னும் திருட்டுத்தனத்தை அகற்றி உண்மையை விதைத்து அதனால் விளையும் நற்பயனைத் தமிழ் மக்கள் உய்யுமாறு செய்வதே என் கடமையாகும். எனது நோக்கம் இஃதன்றி வேறொன்றும் இல்லை.

கொடிய மனுநெறியைத் தர்மமாகக் கொண்ட குற்றமுடைய ஆரியர்க்கு அடிமையாக வாழ்ந்து, அதிலேயே அழுந்திக் கிடப்பவரை என்ன செய்ய முடியும் ? அந்த அடிமை வாழ்விலிருந்து விலகி விடுதலை பெற்று வாழ விரும்பும் தமிழர்களுக்கு இந்த நூல் தகுந்தபடி உதவும்.

தமிழர்களின் தாழ்வுபட்ட நிலையை எடுத்துக் கூறி அவர்களின் தன்மான வாழ்வினை எடுத்தியம்பி நிலை நாட்டுவதால் நாம் தமிழர் என்னும் பெருமித உணர்வு மேலோங்கும். இதனைத் தமிழர் யாவருமே ஒத்துக் கொள்வார்கள்.

குற்றம் குறையற்ற குழந்தையின் மழலை மொழிதனை இது தீது இது நன்று என்று பெற்றோர் ஆய்ந்து ஒதுக்க மாட்டார்கள். அனைத்துமே அவர்களின் குழந்தையின் மழலை மொழி என்பதால். அதேபோல் இது நம் தமிழினத்தின் கதை என்பதாலும் அதை ஓதும் உங்கள் அன்பிற்குரிய நானும் குழந்தை என்னும் பெயர் பூண்டவனே என்பதாலும் இதிலும் குற்றம் குறை ஏதுமில்லை.

இனிமை, அது ஏதுமில்லாத கடுமை, எல்லாவற்றையும் உணர்ந்து அறிந்து நற்பண்புகளைக்  கைக்கொண்ட தமிழ் நாவலர்களைச் சென்று அடையும் என் முழுமையற்ற குறைவுற்ற இக்காவியப் பொருளும், அவர்களைச் சென்றடைந்தவுடன் அவர்தம் நற்பண்புகளைப் பெற்று தன்மையான நன்னீரைப் போலத் தகவுடையதாகும்.

தமிழின மக்களுக்கு ஆரியரால் வந்த பழி மலிந்து கிடந்த நிலை மாறி, வளம் மிகுந்த தமிழைப் பற்றுடன் பயின்று பயன் பெற, புகழ் நிறைந்த இந்த இராவண காவியம் துணை நின்று, அனைத்துத் திசைகளுக்கும் சென்று அதன் புகழ் சிறந்து விளங்கட்டும்.

 

காலம் – அறுசீர் விருத்தம்

அமைவான திருவள்ளுவராண்டு இரண்டாயிரத்தில் இருபத்தி மூன்று இல்லாமல் போன ( அதாவது 2000 – 23 = 1977 ) 1977 இல், நிகழும் 1946 இல் சிறப்புற அமையுமாறு புலவர் குழந்தை நன்கு ஆய்ந்து தனித்தமிழில் பாவாக்கம் அமையுமாறு செய்து தமிழரின் மேலோன் ஆகிய இராவணனின் காவியம் இயற்றப் பட்டது.

 

நூற்பயன்

நம் தமிழர்களின் பழம் பெருமை உணர்ந்து உண்மையான தமிழர்களின் அடிமை வாழ்வு என்னும் தாழ்வு நிலை நீக்கி, முன்னர் இழந்த உரிமையை எல்லாம் மீண்டும் பெற்று, முன்னர் வாழ்ந்த பழம் பெரும் நிலை எய்தி வாழும் முறைமையோடு வாழ்வார்கள், வீரம் பொலியும் நடுகல்லாக நின்ற மேலோனாம் இராவணின் காவியத்தைக் கற்பவர்கள்.

 

 

2. தமிழகப் படலம்

 

கலி விருத்தம்

தெளிந்த அலைகளை உடைய கடல் தெற்கு, மேற்கு, கிழக்கு என்னும் மூன்று திசைகளிலும் காவலாக அமைய, வளமையான தமிழ் வடக்குத் திசையை எல்லையாகக் கொண்டு அமைந்த விந்தியமலை வரை எதிரொலிக்க, பண்டைக்காலத்தில் நம் முன்னோர்கள் பயனுற வாழ்ந்த, தண்டமிழை வேலியாகக் கொண்ட தமிழகம் என்பதைக் காண்போம் வாருங்கள்.

மிகப் பழங்காலத்தில் நம் நற்றமிழ்ச் செல்வியானவள் வடக்கே பனிமூடிய மலைகளைக் கொண்ட இமயமலை வரை பகை என்பதே சிறிதும் இல்லாமல் இனிதாக உயர்ந்த வெண்கொற்றக் குடையின் நிழலில் இருந்து தனியரசியாகச் செங்கோல் ஓச்சித் தமிழகத்தை ஆண்டு காத்து வந்தாள்.

சிறப்பு இயல்புகள் பெற்ற செழுந்தமிழ்த்தாய், மழை பொழிந்து செழிப்பாய் இருந்த வடபுலத்தையும், ஆரியர்கள் என்னும் அயலவர்களின் பெயர் அறியப்படுவதற்கு முன்னிருந்தே பெருமையுடன் ஆண்டு வந்தாள்.

விந்திய மலைக்கு வடக்கேயும் வாழ்ந்து சிறப்புற்றிருந்த நம் தமிழ் மக்களின் நல் நாகரீகத்தைச் சிந்துவெளியில் நடத்தப்பட்ட அகழ்வாராய்ச்சிகள் வெளிப்படுத்தி உள்ளது நம் சிந்தையை மகிழ்வித்துப் பெருமை கொள்ளச் செய்கிறது.

சிந்துசமவெளியில் மட்டுமல்ல எல்லாத் திசைகளிலும் பரந்து விரிந்து இந்த நன்னாட்டின் அகன்று காணப்படும் மேற்கில் செழிப்பமான வணிகமக்களைக் கொண்ட நாடான யவன தேசம் வரை சென்று பொருளீட்டி வளப்பமுடன் வாழ்ந்து வந்தார்கள் தமிழ் மக்கள்.

 

பெருவளநாடு

தனது கடமையில் தவறித் தமிழகத்தை உண்டது தென் கடல். முன்பு அது நிலப்பரப்புக் கொண்ட செழுந்தமிழ் நாடாக இருந்தபோது தான் பிற நாடுகளுக்குக் கடன் கொடுக்கும் அளவு மிகச் சிறந்த வளமையுடன்  பொன்னும் பொருளும் நிறைந்த கடல்போலப் பொலிந்து விளங்கியது.

ஆயிரங்கல் தொலைவு அகன்ற பரப்பளவு கொண்டதாய் அயல் தேசத்தவரும் கூட பேராசை கொள்ளும்படியும் இந்த நாட்டை விட்டுச் சென்றவரும் கூட ஏன் சென்றோமென ஏங்கி நினைக்கும்படியும் செல்வவளத்தால் பொலிந்த கருவூல அறை போலத் திகழ்ந்தது.

அப்படிப்பட்ட வளம் மிகுந்த நாட்டின் உறுப்பாக சூரியனும் கடந்து செல்லவே அஞ்சும்படியான வானைத்தொடும்படி ஓங்கித் திகழும் மாணிக்கத் தூண் போல மேலோங்கிய செல்வ வளம் பெற்றுக் குமரிமலை விளங்கியது.

அந்த நிலத்தின் மேற்குப் பகுதியின் அணி செய்யும் அரணாகத் திகழ்ந்த குமரிமலை தம் மனதில் கொண்ட ஊக்கம் தளர்வுறுமாறு பகைவரின் அகந்தையை வீழ்த்தும் திறனுடன் அகன்று வானத்து முகிலைக் கூட மோதும்படி உயர்ந்து ஓங்கும்.

டிஸ்கி:- இராவண காவியத்தின் 59 பாடல்கள் வரை உரை எழுதி இருக்கிறேன். :) 

1 கருத்து:

  1. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும் !
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...