சாம்பவி க்ரியா- இனிக்கும் சுவாசம்
ஆசைப்படு அடைந்துவிடு படித்தேன். உறவினர் ஒருவர் சொன்னதால் ஈஷா யோகா வகுப்பு ஒன்று அட்டெண்ட் செய்தேன். மிக எளிய இனிய மாற்றம்தான் ஆனால் தொடர்ந்து செய்ய முடியவில்லை. ஆசைப்பட்டதை அடையமுடியாமல் தடுத்த சோம்பல் காரணம்.
இந்த நூலில் இருப்பவை அனைத்தும் சுய அறிவுறுத்தல்கள். எப்போது வேண்டுமானாலும் புதுப்பித்துக் கொள்ளப் படிக்க எட்டும் இடத்தில் வைத்துக் கொள்ளலாம். :)
இன்னொரு உறவினர் சொல்லி கல்கியின் இருநாள் சத்சங்கத்தை நேமத்தில் அட்டெண்ட் செய்தேன். ரவிசங்கரின் ஒரு கூட்டத்துக்கு கோவையில் தோழி ஒருத்தி சொன்னதன் பேரில் போய் வந்தேன். எல்லாவற்றிலும் ஒரு சிரமம் அதை ஃபாலோ செய்யமுடியாதது.
ஒரு இயக்கம் அல்லது ஒரு குரு நடத்தும் தியான யோகா வழிபாட்டு முறைகளை முழுமையான மனதோடு பின்பற்றினாலும் வீட்டிற்கு வந்ததும் ஏற்படும் ஒரு தொய்வு தவிர்க்க முடியாததாகிறது. சொல்லப்போனால் இவை அனைத்தும் நம் மனதில் சிறிய மாற்றத்தை ஏற்படுத்தினாலும் யதார்த்த சூழ்நிலையில் வீட்டில் இருக்கும் ஒருவருக்கு நம்பிக்கை இல்லாவிட்டாலும் அதைச் சாக்காகக் கொண்டு நாமும் அதிலிருந்து விடுபட்டு விடுகிறோம்.
மேலும் இம்மாதிரி வகுப்புகளுக்கு மாதம் ஒரு முறையாவது சென்று புதுப்பித்துக் கொள்ள வேண்டியதாய் இருக்கிறது. ஃபாலோ அப் செய்யணும் . அது போக லீவு நாட்களில் ( ஞாயிற்றுக் கிழமைகளில் ) ஆறுமணிக்கு ஆரம்பித்து ஏழு மணிக்குள் முடிந்தால் நலம். அது எட்டுமணி எட்டரை என்று இழுக்கும்போது வெளியூர் செல்ல வேண்டிய நாம் உணவு உண்டு லக்கேஜை எடுத்துப் பயணிக்கும் இடத்துக்கும் வரவேண்டி இருக்குமே நேரம் பத்தாதே ஹரி பரி ஆகிவிடுமே என்று நினைத்தே போவதில்லை. தனிமையும் எழுதுவதும் போல எதுவும் இன்பம் பயப்பதில்லை. நிற்க.
நான் அட்டெண்ட் செய்த சாம்பவி க்ரியாவினால் கால்கள் சற்று பலமடைந்தாற்போல் உணர்ந்தேன். ஏனெனில் அதில் சொல்லிக்கொடுக்கபட்ட யோகா அப்படி. அதை இங்கே பகிர்வதில் மகிழ்கிறேன். தளர்வான உடைகள், மேலும் பாண்ட் அல்லது பைஜாமா போன்ற உடை அணிந்து செய்தால் எளிதாக இருக்கும்.
சாம்பவிகிரியா பல அடுக்குகள் கொண்டது.
முதலில் பதங்காசனா. இதில் பட்டம்போல், பட்டர்ஃப்ளை போல் அசைக்கணும். இரு கால்களையும் முன்புறம் பாதத்தில் சேர்த்து கட்டை விரலைக் கைகளால் பிடித்துக் கொண்டு பட்டர்ப்ளை போல் அசைக்க வேண்டும். இரு நிமிடங்கள்.
அடுத்து சிஷுபாலாசனா. பேரிலேயே தெரிந்திருக்குமே. குழந்தையைப் போஷிப்பது போல் காலை போஷிப்பது. எப்போதும் ஆசனத்தில் அமரும்போது இடது காலின் குதியின்மேல் அமர்ந்து வலது காலை மடக்கி அமரவேண்டும். பத்மாசனம்தான் ஆனால் அதுவே இம்முறைப்படி அமர்ந்தால் தாகம் பசி நோவு இல்லாமல் செய்யலாம்.
சிஷூபாலாசனாவில் முதலில் இடது காலை மடக்கி அமர்ந்து வலது காலை இரு கரங்களாலும் ( கைகளைக் கோர்த்துப் பாதமும் முழங்காலும் இருபுறமும் இறுக்கிக் ) குழந்தையை அணைப்பது போல் அணைத்துத் தாலாட்ட வேண்டும் . இதுவும் ஒவ்வொரு காலுக்கும் இரு நிமிடங்கள்.
மூன்றாவது பூனைபோல் மூச்சு. காலை வஜ்ராசனத்தில் இருந்து நகர்த்தி கைகளை முன்புறம் வைத்து ( அரை சூரிய நமஸ்காரம் போல் ) கழுத்தை உட்புறம் வளைத்துத் தலையை முடிந்தவரை குனிய வேண்டும். அப்போது மூச்சை வெளிவிட்டு வயிற்றை இறுக்க வேண்டும். அதன் பின் மூச்சை இழுத்தவாறு தலையைத் தூக்கி முதுகைக் குழிவாக வளைக்கலாம். அதன் பின் வலக்காலை உட்புறமாகக் கொணர்ந்து மோவாயில் இடிக்கும்வரை வைத்து மூச்சை வெளிவிடவேண்டும். அதன் பின் வலக்காலப் பின்புறம் வைத்து இடக்காலிலும் இதுபோல் செய்ய வேண்டும் . பின் முதல் போல தலையைக் குனிந்தும் நிமிர்ந்தும் செய்து யதாஸ்தானம் திரும்ப வேண்டும்.
நான்காவது சுகக்க்ரியா. இது அர்த்த சித்தாசனாவில் அமர்ந்து சீராக சுவாசிக்க வேண்டும். இடது கை மடியில் இருக்க வலது மூக்கை கட்டைவிரலால் மூடி இடது மூக்கால் இழுத்து உள் மூச்சு இழுக்கும்போது நான் உடல் அல்ல என்றும் வலது பக்கத்தால் மூச்சை வெளிமூச்சு விடும்போது நான் மனம் அல்ல என்றும் நினைத்து நீண்ட மூச்சுக்களாக விட வேண்டும். இதுபோல் இடது பக்கத்திலும் செய்யவேண்டும்.
ஐந்தாவது அஉம் உச்சரிப்பு. இதை அடிவயிற்றில் இருந்து மார்பு வாய் வரை நன்கு உரத்து சொல்லவேண்டும். அ சொல்லும்போதே அடிவயிறும் , உ சொல்லும்போது இதயப் பகுதியும் ம் சொல்லும்போது காது அன்னப் பகுதிகளும் அதிர்வதை உணரலாம். சரியான முறையும் இதுதான்.
அடுத்து நெக் லாக். எச்சரிக்கை :- இதை எல்லாம் தகுந்த கைடன்ஸ் இல்லாமல் செய்யக்கூடாது. இருந்தும் இவை பற்றிய சிறு குறிப்பு சொல்கிறேன். வஜ்ராசனத்தில் அமர்ந்து மூச்சை நன்கு இழுத்து கழுத்தை உயர்த்தி மடித்து மூச்சை உள்ளே நிறுத்த வேண்டும். அடுத்து நெஞ்சையும் வயிற்றையும் லாக் செய்ய வேண்டும். முடிந்த வரை அதே பொசிஷனில் இருந்து அடுத்து தலையைத் தூக்கி மூச்சை மெதுவாக விடவேண்டும். ( 25 - 50 எண்ணும் வரை இருக்க முடியும் பயிற்சியால் ). அடுத்துத் தலையைத் தூக்கிக் கழுத்தை மடித்து இறுக்கி சில நொடிகள் இருந்து பின் கழுத்தைப் பின்னோக்கி நிமிர்ந்து மூச்சை நன்கு இழுக்கலாம் மிக நீண்ட குளிர்ந்த மூச்சு உங்கள் உள்ளே பாயும். இதை இந்த வகுப்பு அட்டெண்ட் செய்யாமல் தானே செய்யக் கற்க வேண்டாம்.
ரிலாக்ஸாக அமர்ந்து மூச்சை விட்டு இழுக்கவும்.
அடுத்து சாம்பவி க்ரியா. இதுதான் இனிக்கும் மூச்சு. சாம்பவி மஹாமுத்ரா க்ரியா. நெற்றியை மேல்நோக்கி வைத்து கழுத்தை நேராக்கி பத்மாசனத்தில் அமரவும். உங்கள் முகம் உங்களுக்கே ஒரு பூத்த பூ மலர்ந்திருப்பது போல் உற்சாகமாக இருக்கும். புருவமத்திதான் மகரந்தம். இதுவே நினைவாற்றலின் கரு. குட்டிக் குட்டியாக மூக்கிலேயே மூக்குக்குள்ளேயே விபரீத மூச்சு என்னும் மூச்சில் மூச்சை இழுத்து விடவும். இதையும் கைடன்ஸ் இல்லாமல் செய்ய வேண்டாம்.
இந்த மூச்சு லேசாக நுரையீரலை அடிவயிறுவரை சிறு சிறு காற்றுப் பைகளையும் அடைந்து இனிக்கத் துவங்கும். காற்றை உண்டு யோகிகளும் சித்தர்களும் எப்படி வாழ்ந்தார்கள் என்பதனை இந்த இனிப்பான மூச்சைக் கொண்டு உணரலாம். இதழ் இதழாக விரியும் குளிர் மூச்சு முகத்தாமரையிலிருந்து நுரையீரல் தண்டுவரை அதன் ஒவ்வொரு அல்வியோலஸ் என்னும் முடிச்சு வரை ஜிலுஜிலுவெனப் பாயும் அற்புதம் நிகழும். மூக்கிலிருந்து தொண்டை என அனைத்தும் இனிக்கத் துவங்கும். உடல் என்னும் தாவரம் முகம் என்னும் பூ புருவ மத்தி மகரந்தம். முகப்பூவிலிருந்து மூச்சு இதழ்கள் மகரந்தத்திலிருந்து விரியும் சுகானுபவத்தை அனுபவியுங்கள். பூவின் இதழ்கள் மெல்ல மெல்ல விரிய ஆனந்த அலை உங்களை ஆட்கொள்ளும். பரவசத்தில் திளையுங்கள்.
அதன் பின் சிவனை நினைத்து ஆதியோகியை நினைத்துச் சிறிது நேரம் தியானத்தில் அமர்ந்து எழுங்கள்.
இந்த உலகில் எதற்காகவும் யாரையும் மாற்ற வேண்டாம். நீங்கள் மாறுங்கள். உங்கள் உடலை யோகாவால் பேணுங்கள். சுகக்கிரியா, சாம்பவிக்கிரியா செய்யுங்கள். உடல் எனும் ஆலயம் ஒளிவிடும்.

நல்ல பகிர்வு. சில காலம் நானும் யோகா செய்து வந்தேன். இப்போது செய்ய முடிவதில்லை.
பதிலளிநீக்குவணக்கம் நண்பர்களே!, தங்கள் அருமையான பதிவுகளை TamilBM (https://bookmarking.tamilbm.com/register/) திரட்டியிலும் இணையுங்கள்.
பதிலளிநீக்குநல்ல பதிவு ...நான் உயற்பயிற்சிகள் சில செய்வதுண்டு ஆனால் யோகா என்று இதுவரை செய்ததில்லை
பதிலளிநீக்குதுளசிதரன்.
கீதா: நானும் யோசா செய்து வந்தேன். இடையில் விடுபட்டதை மீண்டும் செய்யத் தொடங்கி உள்ளேன். நல்ல பகிர்வு தேனு
நன்றி வெங்கட் சகோ
பதிலளிநீக்குநன்றி சிவப்ரகாசம்
நன்றி துளசி சகோ & கீத்ஸ். :) தொடருவோம்.
வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!