எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

திங்கள், 30 அக்டோபர், 2017

தூத்துக்குடி ராமநாதபுரம் உப்பளங்கள்.

”உப்பில்லாப் பண்டம் குப்பையிலே” என்பதும் ”உப்பிட்டவரை உள்ளளவும் நினை” என்பதும் பழமொழி. !

நெய்தல் நிலத்துக்கே உரிய ஒரு தொழில் உப்பு விளைவித்தல். அந்தக் காலத்தில் பண்டமாற்று முறைக்கும் உதவிய ஒரு பொருள் உப்பு. களர்நிலம், உவர்நிலம் என்று உப்பு விளைவிக்கப்படும் பூமி அழைக்கப்படுகிறது. உப்பு அளம் என்றும் கோவளம், பேரளம் என்று கடற்கரைக் கிராமங்களில் பெயர் அமைந்திருப்பதும் இதற்கு எடுத்துக்காட்டு.

உப்பு விற்றவர்களை உமணர்கள் என்று பண்டைஇலக்கியக்கியங்கள் குறிப்பிடுகின்றன. கழுதைகளின் முதுகில் உப்பை மூட்டையாகக் கட்டிச் சென்று விற்பவர்களை  உப்புக் குறவர்கள் என்று கூறுவதும் உண்டு.

உப்புப் பெருகுவதுபோல் பணம் பெருகும் என்பதால் உப்பை பூஜை அறையில் வைத்து வணங்குவோரும் உண்டு. உப்பு என்பது பணத்துக்குச்/தனத்துக்குச் சமமாகக் கருதப்படுகிறது.

உப்பு என்றதும்  காந்தியடிகளின் தண்டி யாத்திரையும் வேதாரண்யம் உப்பு சத்யாக்கிரகமும் நினைவுக்கு வரலாம். 

உணவு வகைகளில் (தற்காலத்தில் உப்பு சேர்க்காவிடினும்) இயற்கையாகவே சில காய்கறிகளில் உப்புச் சத்துகள் உறைந்துள்ளன என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

உப்பில் அயோடின் இருக்கவேண்டும் என்பதற்காகவே கல் உப்பின் பயன்பாடு (  சுத்திகரிக்கப்படாத  கடல் உப்பு ) வலியுறுத்தப்படுகிறது. டேபிள் சால்ட் எனப்படும் நைஸ் உப்பு/தூள் உப்பு/ பொடி உப்பில் இந்த அயோடின் கொண்டது என்று விளம்பரப்படுத்துகிறார்கள். அப்போது இதில் இயற்கையாக இருக்கும் அயோடின் என்னாச்சு ?

ராக்சால்ட், இந்துப்பு, ப்ளாக்சால்ட்,  சைனீஸ் சால்ட் எனப்படுபவை, பாறையில் இருந்து கிடைப்பவை, நாம் உபயோகப்படும் கல் உப்பே கடலில் இருந்து கிடைக்கும் உப்பாகும்.

இவை தூத்துக்குடி திருச்செந்தூர் செல்லும்வழியில் அமைந்த உப்பளங்கள்.

கடற்கரை அருகில் உள்ள நிலங்களை வயல் பாத்திகள் போலப் பிரித்து அதில் கடல் நீர் கொட்டப்பட்டு ஆவியாக்கப்படுகிறது.

ஒரு லிட்டர் கடல் நீரில் 35 கிராம் உப்பு கிடைக்குமாம்.

கடல்நீர் உப்பு வயல்களில் ( உப்பளங்களில் )  கொட்டப்பட்டவுடன் வெய்யில் பட்டு ஆவியாகி உப்புப் படிகங்களாகப் படிந்துவிடுகிறது. அவற்றை மேலோட்டமாக வாரி சேர்க்கிறார்கள்.
அவ்வாறு சேர்ந்த வெண் குவியல்கள் , சிறு குன்றுகளைப் போலக் காட்சி அளிக்கின்றன.

அதன் பின் அவை தனியாராலோ அல்லது அரசாங்கத்தாலோ ( டெண்டர் முறையில் வாங்கப்பட்டு) சுத்திகரிப்புச் செய்யப்பட்டு பைகளில் அடைக்கப்பட்டு விற்பனைக்கு வருகின்றன.
இவை இராமேஸ்வரம் செல்லும் வழியில் எடுத்த உப்பளப்படங்கள்.

கடல் கண்ணுக்குத் தெரியாவிட்டாலும் உப்பளங்கள் கண் எட்டிய தூரம் வரை தெரிந்தன.

கடலில் இருந்து  லாரி போன்றவற்றில்  நீரை எடுத்து வந்து இங்கே கொட்டுவார்கள் போல.
இவ்வாறு உப்பைக் கடல் நீரிலிருந்து பிரித்தெடுப்பதைக் கண்டுபிடித்தவர்கள் ஜெர்மானியர்கள் என்கிறது விக்கிபீடியா.
கிறிஸ்டல் அயோடைஸ்ட் சால்ட், டபிள் ஃபோர்ட்டிஃபைட் சால்ட், ரீஃபைண்ட் அயோடைஸ்ட் சால்ட் ஆகியன தமிழ்நாடு உப்பு வணிகக் கழகத்தின் வலைத்தளத்தில் உள்ள உப்பு வகைகள் ஆகும்.
தமிழ்நாட்டில் அயோடைஸ்ட்  உப்பு கிடைக்கும் இடங்கள் என்று 163 இடங்களை லிஸ்ட் செய்துள்ளது உப்பு வணிகக் கழகம்.

தற்காலத்தில் தைராய்டு பிரச்சனைகள் அதிகம் இருப்பதால் அயோடைஸ்ட் உப்பு உபயோகிப்பதை வலியுறுத்துகிறார்கள் மருத்துவர்களும். !

அநேகமாக எல்லா சில்லறை விற்பனை நிலையங்களிலும் மால்களிலும் அயோடைஸ்ட் உப்புத்தான் கிடைக்கின்றன.
உப்பளத்தில் எடுக்கப்பட்ட ஒரு தொலைக்காட்சித் தொடர்கூட உண்டு. பெயர்தான் மறந்துவிட்டது.

நான் படித்த அயலகமொழிச் சிறுகதை ஒன்றில் தன் குழந்தையை இழந்த பெண் ஒருத்தி சோகமாக நின்றுகொண்டே கரண்டியால் கூழை உண்பது போன்ற புகைப்படம் இருக்கும். கதை என்று ஒன்றுமில்லை. குழந்தை இறந்த சோகத்திலும் அவள் சில கணங்கள் கழித்து அந்தக் கூழை உண்பாள். அப்போது அவளிடம் அவளது துக்கம் பற்றி  யாரோ விசாரிக்கும்போது அவள் அந்தக்கூழில் உப்பிடப்பட்டிருப்பதால் உண்பதாகக் கூறுவாள். ஏனெனில் அன்று உப்பு விலை மதிக்கமுடியாததாக இருந்திருக்கிறது. அதை வீணடிக்க அவள் துக்க மனநிலையிலும் முடியவில்லை என்பது யதார்த்தம் கூறும் கருத்து.

ஒரு காலத்தில் தங்கத்துக்கு நிகராக உப்பு மதிக்கப்பட்டுள்ளது. உப்பு அச்சுக்களைக்  காசாகப் பயன்படுத்தும் பழக்கமும் இருந்திருக்கிறது. அதை சம்பளம் போலும் கூட வழங்கி இருக்கிறார்கள். அதனால்தான் சம்பளத்துக்கு சாலரியம் & சாலரி  என்ற பெயர் வந்ததாம்.

 ரத்த அழுத்தக்காரர்களுக்கு சோடியம் உப்பு ஆகாது. பொட்டாசியம் உப்பை சேர்த்துக் கொள்ளலாம் என்கிறார்கள். ( இது வாழைப்பழத்தில் அதிகம் உள்ளதாம். )

உணவில்  உப்பும் அளவோடு இருக்கவேண்டும். ஊடலைப் போல.  இல்லாவிட்டால்  உப்பைத் தின்னவன் தண்ணீர் குடிப்பான், தப்பைச் செய்தவன் தண்டனை கொள்வான் என்பது போலாகிவிடும்.

9 கருத்துகள்:

  1. படமும் பகிர்வும் அருமை
    பல ஆண்டுகளுக்கு முன் பார்த்த நினைவுகள் வருகின்றன
    நன்றி சகோதரியாரே
    தம +1

    பதிலளிநீக்கு
  2. Good. Very informative. நிறைய தகவல்களுடன் சிரமமெடுத்து நன்கு எழுதியிருக்கிறீர்கள்.

    தமிழ் திரைப்படங்கள்; தூத்துக்குடி, ஐயா, போன்றவை தூத்துக்குடி உப்பளங்களை நன்கு காட்டும். ஐயா திரைப்படத்தில் ஒரு கதாபாத்திரம் உப்பளத்தில் கணக்கர் வேலை பார்ப்பார் (இமாம் அண்ணாச்சி).

    தூத்துக்குடி உப்பளத்தொழிலாளிகளின் அவல வாழ்க்கையை களனாகக் கொண்ட இரு நாவல்கள் - ஒன்று சாஹித்ய அகாடமி பெற்றது; மற்றொன்று, மதுரை காமராஜர், மனோன்மணீயம், தில்லி பலகலைக்கழகங்களில் தமிழ் இரண்டாம் தாளுக்கு பாட நூலாக வைக்கப்பட்டது. முன்னது ''கரிசல் மணிகள்' ஆசிரியை: இராஜம் கிருஷ்ணன்; இரண்டாவது தூத்துக்குடியைச் சேர்ந்தவரும் உப்பளத்தொழிலாளிகளிடையே உறவினர்களைக் கொண்டவரும், உப்பளத்தொழிலாளிகளையே பெற்றோராகக் கொண்டவருமான கூலித்தொழிலாளி கணேசன் எழுதிய நாவல்: உப்பு வயல். இரண்டையுமே வாசியுங்கள். அனுபவம் புதுமை.

    கூழை அருந்துவார்கள்; அல்லது குடிப்பார்கள். கூழ் கலயங்க்ளில் கொண்டு போவார்கள். கலயத்தை அண்ணாந்து குடிக்கும் காட்சிகளை நீங்கள் பார்த்திருக்கலாமே பல பழைய நாட்டுப்புறப்படங்களில். (தொழிலாளி). கூழை உண்பார்கள் என்று சொல்லாட்சி இல்லை.

    பதிலளிநீக்கு
  3. நன்றி ஜெயக்குமார் சகோ

    நன்றி விநாயகம் சார். கூழைக் குடிப்பார்கள் என்று நீங்கள் சொன்னது சரிதான். ஆனால் அந்த ஓவியத்தில் சோகமே உருவான பெண்மணி கரண்டியை இடது கையில் பிடித்து அதிலிருந்து எடுத்து வலது கையால் எடுத்து உண்பது போல நின்றிருப்பார். அதனால் அப்படி எழுதினேன். ஓவியம் பற்றித் தெரிந்தவரோ அல்லது அந்த அயல்மொழிக் கதையை அறிந்தவரோ சொல்லலாம் என்பதற்காக அப்படி ஒரு குறிப்பைக் கொடுத்தேன் :) நன்றி. :)

    பதிலளிநீக்கு
  4. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

    பதிலளிநீக்கு
  5. இன்னொன்றும் எழுத மறந்துவிட்டேன் , பொதுவாக கூழ் போன்றவை ஆறியவுடன் களி போல் இறுகிவிடும். கேப்பைக் கூழ் அப்படித்தான். அதன்படியும் இருக்கலாம்.

    பதிலளிநீக்கு
  6. உப்பளங்களை உப்பு வயல்கள் என்று கூறலாமா

    பதிலளிநீக்கு
  7. இராஜம் கிருஸ்ணனனின் நாவல் பெயரை கரிசல் மணிகள் என்று தவறாக எழுதிவிட்டேன். அதன் பெயர் கரிப்பு மணிகள் என்பதாகும். கரிப்பு மணிகள் என்றால் உப்பு. நாவலை டிஜிட்டல் வடிவத்தில் இலவசமாக இங்கே வாசிக்கலாம். https://archive.org/details/KarippuManikal

    Vinayagam

    பதிலளிநீக்கு
  8. திரு பி எம் பி!

    உப்பளம் என்றுதான் சொல்ல வேண்டும். அளம் என்பது உப்பளத்தையே குறிக்கும் தமிழ்ச்சொல். அளத்தியர், அளவர் என்போர் உப்பு விளைவிப்போர். சங்ககாலத்தில் உவணர் எனப்பட்டனர்.

    உப்பு வயல் எனப்பட்ட காரணம், பாத்தி, பாத்தியாக வெட்டப்பட்டு காட்சியளிப்பதால். ஆனால் சரியன்று.

    கணேசனின் நாவலுக்கு முதலில் இட்ட பெயர் உப்பளம் எனபதே. கையெழுத்துப்பிரதியில் வாசித்தவனானதால், ஏனிப்படி மாற்றிவிட்டாய் என்றதற்கு, அவர்களே மாற்றிவிட்டார்கள். வேண்டாமென்றால் மறுத்துவிடுவார்களோ எனப்பயந்து விட்டு விட்டேன் எனச்சொன்னார். சரிதான். பல பதிப்பகத்தார்கள் ஏறெடுத்தும் பார்க்காமல் போன கையெழுத்துப்பிரதியை இவர்ளாவது ஏற்றார்களே என நினைத்தார்.

    செகப்பிரியர் சொல்வார்; பெயரிலென்ன இருக்கிறது? ரோசாவை கூசா என்றழைத்துவிட்டால் மணம்தராமல் போய்விடுமா அல்லது அழகில்லாமல் ஆகிவிடுமா? அப்படி நினைத்துவிட்டார்கள் அப்பதிப்பகத்தார் போலும்.நாவல் ஒரு ஹிட். நேரான எளிய கதை, பகட்டில்லாத் தமிழில் சொல்லப்பட்டது.

    இராஜம் கிருஸ்ணனின் கரிசல் மணிகள் அதற்கு நேர். பட்டிக்காடா? பட்டணமா? பட்டிக்காட்டு எழுத்தாளரின் படைப்பில் உயிரிருக்கிறதா? இல்லை பட்டணத்தெழுத்தாளரின் படைப்பிலா என்பதையெல்லாம் இரு நாவல்களையும் வாசித்து தெரிந்து கொள்ளலாமே? You can order the novel here: https://www.nhm.in/shop/1000000009505.html If you are told no stock, then you can buy from the original publishers and copyright owners: New Century Publications Ltd (in their branches) Rs. 60 only - a very thin novel and the newspaper The Hindu critic Gopali wrote in his review of this novel: Ending the novel is like crying in a grave yard !

    Vinayagam

    பதிலளிநீக்கு
  9. நன்றி பாலா சார்.

    விரிவான விளக்கங்களுக்கு நன்றி விநாயகம் சார்.

    வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...