திங்கள், 12 டிசம்பர், 2016

மரபும் அறிவியலும் : கார்த்திகை தீபம் வைப்பது ஏன்? - நமது மண் வாசத்துக்காக.

மரபும் அறிவியலும் : கார்த்திகை தீபம் வைப்பது ஏன்?

கார்த்திகை மாதம் மழையும் குளிரும் சில்லிட வைக்கும் மாதம். இம்மாதம் முழுவதும் தமிழக இல்லங்களில் வாசலில் அகல் விளக்கு ஏற்றி வைக்கும் பழக்கம் இருக்கிறது. இருளை அகற்றி ஒளியைக் கொடுக்கும் தீபம், அஞ்ஞான இருளை அகற்றி ஞானஒளியை வழங்குவதாக ஐதீகம். புராண இதிகாச காலத்திலிருந்தே இந்த தீபத்திருநாள் கொண்டாடப்பட்டு வந்திருக்கிறது. அரசர்கள் கூடக் கோயில்களில் தீபக் கட்டளை என தீபமேற்ற இறையிலி நிலங்கள் கொடுத்துத் திருப்பணி செய்து வந்திருக்கிறார்கள். 


முன் காலங்களில் திண்ணை வைத்த வீடுகளில் வாசலில் விளக்கு மாடம் என்று ஒன்று இருக்கும். அதில் தினம் மாலை விளக்கு வைப்பார்கள். துளசி இருந்தால் அதன் மாடத்திலும் விளக்கு ஏற்றுவார்கள் தினமும்.அதிலும் கார்த்திகை மாதம் முழுவதும் மற்றும் திருக்கார்த்திகை அன்றும் வீடு முழுதும் முன் வாயிலிலும், பூஜை அறையிலும் மாக்கோலங்கள் இட்டு கிளியாஞ்சட்டி எனப்படும் அகல் விளக்குகளை ஏற்றி வைப்பார்கள். வெள்ளி விளக்கு, பித்தளை விளக்கு, ஐம்பொன் விளக்கு, சில்வர் விளக்கு, இரும்பு விளக்கு எனப் பல இருந்த போதும் மண்ணால் செய்யப்பட்ட அகல் விளக்குகள் மவுசு பெறுவது கார்த்திகை மாதத்தில்தான்.ஏனெனில் பஞ்சபூதங்களில் ஒன்றான மண்ணில் செய்த விளக்கில் தீபம் ஏற்றினால் பீடை விலகும் என்பது நம்பிக்கை. மேலும் விளக்கேற்றுவதில் நிலம்,( மண்ணால் செய்த விளக்கு) நீர் ( எண்ணெய்), ஆகாயம்,( விளக்கைச் சுற்றி இருக்கும் வெளி ) காற்று ( விளக்கு எரிய உதவும் பிராண வாயு)  , நெருப்பு ( விளக்கை உயிர்ப்பிக்கும் நெருப்பு)  என பஞ்ச பூதங்களும் இணைந்துள்ளன.


பஞ்சுத் திரி, தாமரைத் தண்டுத்திரி, வாழைத் தண்டுத்திரி, வெள்ளெருக்குத் திரி , நூல் திரி, சிவப்பு/மஞ்சள்/வெள்ளை வஸ்திரத் திரி போட்டு நல்லெண்ணெயோ ஐந்து எண்ணெய் ( நெய், விளக்கெண்ணெய், தேங்காய் எண்ணெய், இலுப்பை எண்ணெய், ஆமணக்கு எண்ணெய் ) கலந்த தீப எண்ணெயையோ ஊற்றி விளக்கேற்றி வணங்குவது தமிழர் மரபு. இதில் கார்த்திகைப் பொரி, வெல்லம் போட்ட எள்ளு, கடலை உருண்டைகள் நிவேதிக்கப்படுவது வழக்கம். குழந்தைகள் தீபாவளிக்கு வெடித்த வெடியில் மிச்சத்தை வெடித்து மகிழ்வார்கள்.


வடநாட்டில் தீபாவளியின் போது தீப ஆவளி போன்று விளக்கை வரிசையாக வைப்பார்கள். கங்கையிலும் தீபம் ஏற்றி ஆரத்தி செய்வது உண்டு. தீப தானம் செய்வது கூட விசேஷம் ஆனால் நாம் கார்த்திகை மாதத்தில் கார்த்திகை நட்சத்திரத்தன்றும், பரணி நட்சத்திரத்தன்றும் தீபம் ஏற்றுவோம். வீடு கோயில் மட்டுமல்ல குப்பைக்குக் கூட தீபம் ஏற்றுவது நாம்தான். குத்துவிளக்கை நடுவில் வைத்து அதைச் சுற்றி அகல் விளக்கை வைப்பார்கள். விளக்கு ஏற்றும் திசைக்கேற்ப பலன்களும் உண்டு. தெற்கைப் பார்த்து மட்டும் விளக்கு வைக்க மாட்டர்கள். அதேபோல் கடலை எண்ணெய் ஊற்றி தீபம் ஏற்ற மாட்டார்கள். தீபம் வைக்க நல்ல நேரம் எல்லாம் பார்த்துத்தான் தீபம் வைப்பார்கள்.


கோயில்களில் நாள் முழுதும் எரியும் பாவை விளக்கு என்ற ஒன்று உண்டு. அதே போல் லட்சதீப யக்ஞம், தீப வழிபாடு, திருவிளக்கு பூஜை ஆகியன தீபம் ஏற்றுவதன் சிறப்பை வலியுறுத்துவன. வள்ளலார் ”அருட்பெரும் ஜோதி தனிப்பெரும் கருணை” என்று புகழ்ந்து பாடியுள்ளார். கடவுளை ஜோதி வடிவமாகவே திருவண்ணாமலையில் வணங்குகிறார்கள். மகர ஜோதி என்று ஐயப்பனுக்கு விரதம் இருந்து தரிசிக்க செல்கிறார்கள். கோயிலில் சொக்கப்பனை ஏற்றுதல் மிகவும் விசேஷம். எல்லாமே இந்தக் குளிர் நிரம்பிய கார்த்திகை மார்கழி மாதங்களில்தான் நடைபெறுகிறது.


மன அமைதி பெற, தோஷங்கள் நீங்க, நினைத்தது நிறைவேற, திருமணத் தடை நீங்க, குழந்தை பாக்யம் பெற, தொழில் வளர கோயில்களில் நவக்கிரகங்களுக்கும் துர்க்கைக்கும் எலுமிச்சையில், தேங்காய் மூடியில், ஏன் தர்மபுரியில் காலபைரவருக்கு பரங்கிப் பிஞ்சில் கூட விளக்கு போடுகிறார்கள். எல்லா தர்மங்களிலும் விளக்கு என்பது இறைவனுக்கு நெருக்கமான ஒன்றாக இந்து தர்மத்தில் விளக்கே ஈசனாக, தீபலெக்ஷ்மியாகக் கருதப்படுகிறது. இறைவனின் அடி முடி அறிய பிரம்மனும் மாலும் முயல்கையில் ஈசன் அடி முடி அறியவொண்ணா அண்ணாமலையாராக ஜோதிப் பிழம்பாக ஒளிந்தார் என்று கூறுகிறது திருவண்ணாமலை ஸ்தலபுராணம்.


பொதுவாக பிரம்ம முகூர்த்தத்தில் விளக்கேற்றுவது சிறப்பு என்றாலும் நாம் கார்த்திகை மாதத்தில் மாலையில்தான் விளக்கேற்றுகிறோம். அவ்வேளையில் விளக்கேற்றினால் கல்வித்தடை திருமணத் தடை நீக்கி லெக்ஷ்மி இல்லத்தில் வாசம் செய்வாள் என்பது ஐதீகம்.


நம்ம நாட்டில் மட்டுமல்ல பிரிட்டன் போன்ற அநேக வெளிநாடுகளிலும் இந்த மாதம் ( நன்றி கூறும் நாள் என்று நவம்பர் 5 தேதி ) பான் ஃபயர் என்று தீயதை அழிக்க சொக்கப்பனை கொளுத்தி பட்டாசுகள் வெடித்து மார்ச் ஃபாஸ்ட் செய்து கொண்டாடுகிறார்கள். பான் ஃபயர் அன்று இரவில் ஓட்மீல், இஞ்சி கலந்த பார்க்கின் கேக் என்றொரு கேக்கை செய்து உண்கிறார்கள்.


அறிவியல் :-

தீப ஒளிக்கு காந்த சக்தி உள்ளது. அது நம் எண்ணங்களை கிரஹித்து நமக்கே திருப்பி அளிக்கிறது. எனவே தீபம் வைத்த பின் நல்ல சொற்களைப் பேசவேண்டும் என்கிறார்கள். விளக்கு என்பது நம் மனதின் எண்ணத்தின் பிரதிபலிப்பாக கருதப்படுது. குளிர் மாதமான கார்த்திகையில் தீபத்திலிருந்து வெளிப்படும் கதிர்கள் வெப்பத்தை உண்டாக்குகின்றன. தீபத்தைச் சுற்றி இருக்கும் பொருட்களும் பிரதிபலிப்பால் ஒளிர்வும் வெம்மையும் கதகதப்பும் அடைகின்றன. நீர் நிலம் காற்று ஆகாயம் நெருப்பு ஆகியவற்றின் கலவையே தீபம் என்பது. பஞ்சபூதக் கலவையான நம் மெய் வாய் கண் மூக்கு செவி ஆகிய ஐம்புலன்களையும் தியானத்தில் செலுத்தும்போது ஞானம் கிடைக்கிறது.
உள்ளம் பெருங்கோயில் ஊனுடம்பே ஆலயமாம்
வள்ளல் பிரானார்க்கு வாய் கோபுர வாசல்
தெள்ளத் தெளிந்தார்க்குச் சீவன் சிவலிங்கம்
கள்ளப் புலனைந்தும் காளா மணிவிளக்கே.

என உள்ளத்தைக் கோயிலாகவும் ஊனுடம்பை ஆலயமாகவும் பராமரித்து தர்க்கத்தைக் குறைத்து இறைவனைத் தெளிந்து கள்ளப் புலனந்தையும் அடக்கி வசப்படுத்தினால் ஒளி மிக்க வாழ்வைப் பெறலாம் என்பதே திருமூலர்  சொல்லும் ஜீவதத்துவம.

தீபத்தின் காந்த சக்தியால் சுற்றுச்சூழலில் மாற்றம் ஏற்படுகிறது. மனிதர்களின் தோல், நரம்பும் இரத்தம் ஆகியவற்றில் மாற்றத்தை உண்டு செய்கிறது. உடலை உறுதியாக்கி நோய் எதிர்ப்பு சக்தியை உண்டாக்குகிறது.


நெய்யில்லாச் சோறு நெருப்பு என்பார்கள். அதேபோல் தீபத்தில் உயர்ந்தது நெய் தீபம். அந்த நெய் தீபத்தை தியானிக்கும்போது மூலாக்னியை மையமாகக் கொண்ட மனித உடலும் அதை எதிரொலிக்கிறது. முகத்தில் அருள் ஒளி ப்ரகாசிக்கிறது. பாசிட்டிவ் எனர்ஜி பரவுகிறது. நல்ல எண்ணங்களை உருவாக்குது. எல்லா உயிர்க்கும் உடலின் மையத்தில் உள்ள அக்னி தூண்டப்பட்டு சக்தி பெருகுகிறது. நோய் பெருக்கும் நச்சுக்கிருமிகள் அழிகின்றன. இரத்த ஓட்டத்தில் பிராண வாயுவை அதிகரிக்கிறது.


தட்சிணாயனம் என்ற மழைக்காலத்தின் தொடக்கத்தில் நோய்க்கிருமிகள் பெருகத் துவங்கும். அப்போது சூரியனை பூமி நீள்வட்டப்பாதையில் தெற்கிலிருந்து வடக்காகச் சுற்றி வரும். சாஸ்திரப்படி தட்சிணாயன காலத்தில் சூரியனிடமிருந்து சூக்குமமான கதிர்கள் வெளிப்படும். நோய் நொடிகளும் பெருகும் காலம் அது. எனவே அந்தக் காலத்தில் விளக்கின் வெப்பத்தால் நோய் நொடியும் பூச்சி பொட்டும் அண்டாமல் இருக்கவும் அகல் விளக்கேற்றுதல் உதவுகிறது. 


விளக்கிலிருந்து வெளிப்படும் மஞ்சள் கதிர்கள் தேஜ் தத்துவம் என்ற பிரபஞ்சத்தின் சக்தியை வெளிப்படுத்துகின்றன. சிவப்புக் கதிர்கள் பிரபஞ்சத்தின் சக்தி ரேகையை முழு வேகத்தில் பரவ விடுகின்றன.. அந்த சிவப்புக் கதிர்களில் இருந்து வெளிப்படும் சக்தியை மனித உடல் ஈர்த்துக் கொள்கிறது. விளக்கின் மையத்தில் இருக்கும் நீல ஒளி ஆன்மீகத்தின் உயிர் ஒளியாகும். அந்த ஒளி ஆற்றலை விழியால் பெற்றுப் ஆன்ம சக்தியை அதிகரித்துப் பேரொளியான இறைவனுடன், பிரபஞ்சத்துடன் இணைதலே தியானம்.

மழை மற்றும் குளிரின் காரணத்தால் அதிகப்படியாக நடமாடும் ஜீவராசிகள் மனிதர்களால் அழிக்கப்பட்டுவிடாமல் காக்கவும் விளக்கேற்றுதல் உதவுகிறது . இது இயற்கையைப் பாதுகாக்கவும் அதன் சுழற்சியை சமன் செய்யவும் உதவுகிறது. விளக்கு என்பது இயக்கம் கொண்டது. மனிதனும் விலக்கவேண்டியதை விலக்கி இயக்கம் கொள்ளவேண்டும் என்பதையே இந்த திருக்கார்த்திகை தீபமேற்றுதல் விளக்குகிறது

6 கருத்துகள் :

வெங்கட் நாகராஜ் சொன்னது…

சிறப்பான தகவல்கள்...

பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

கரந்தை ஜெயக்குமார் சொன்னது…

வாழ்த்துக்கள் சகோதரியாரே

Dr B Jambulingam சொன்னது…

மண் வாசம் கண்டேன். முன்னவர்கள் அறிவியலோடு இணைத்தே வாழ்வியலை நமக்குப் பயிற்றுவித்துள்ளார்கள். பெருமைப்படத்தக்கவேண்டியதே.

ஆரூர் பாஸ்கர் சொன்னது…

பல புதிய தகவல்கள். பகிர்வுக்கு நன்றி!

Thenammai Lakshmanan சொன்னது…

நன்றி வெங்கட் சகோ

நன்றி ஜெயக்குமார் சகோ

நன்றி ஜம்பு சார் ஆம் உண்மைதான்

நன்றி ஆரூர் பாஸ்கர் சகோ.

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...