எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

ஞாயிறு, 12 ஜனவரி, 2014

கொலைகளும் தற்கொலைகளும் இறப்புக்களும்..(மெல்லினம் )

கொலைகளும் தற்கொலைகளும் இறப்புக்களும்..:-

தமிழகத்தில் தற்கொலைக்கு முதலிடம் எனத் தலைப்பிட்டு ஒரு கட்டுரை படித்தேன். வரதட்சணைக் கொடுமை, கள்ளக் காதல், குடிகாரக் கணவன், தொழில் தோல்வி மட்டுமல்ல, குழந்தைகள் இறப்பு மற்றும் மனச்சிதைவும் கூட பல கொலைகளுக்கும் தற்கொலைகளுக்கும் காரணம். எந்தக் காரணமும் இல்லாமல் பஸ் பயணத்திலும், ரயில் பயணத்திலும், விமானப் பயணத்திலும் சுனாமி, வெள்ளத்தால் பலர் இறக்கிறார்கள். சுய தவறு ஏதுமின்றி நிகழும்  இந்த இறப்புக்கள் மிகக் கொடுமையானவை.

பல வருடங்களுக்கு முன்  மூணாறில் தேன்நிலவு சென்ற ஜோடியில் கணவரை மனைவி தன்னுடைய முன்னாள் காதலனான ஆட்டோ ஓட்டுநருடன் கொன்றது மிக அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இன்று பத்ரிக்கையைத் திறந்தாலே இது போன்ற விபரீத உறவின் வெளிப்பாடாய்த் தற்கொலையோ , கொலையோ நிகழ்ந்துகொண்டுதானிருக்கிறது.

காதலர்கள் இடையே தோன்றும் சந்தேகப் புயலும் இந்த அற்ப நிகழ்வுகளுக்குக் காரணமாகிறது. காந்தா ஷெட்டி என்ற மும்பையைச் சேர்ந்த  ஃபேஷன் டிசைனர் அவருடைய ஆண் நண்பர் ப்ரபாகர் ஷெட்டி ( ரெஸ்டாரெண்ட் மேனேஜர்) என்பவரால் துண்டம் துண்டமாக வெட்டிக் கொல்லப்பட்டுள்ளார்.

மும்பையைச் சேர்ந்த ஒரு பெண் காரணமேயில்லாமல் தன்னைத் தன் கணவரும் ( ரமலான் சங்க்லா) அவரின் சகோதரரும் ஒரு அறையில் பூட்டி வைத்து காயும் கரண்டியால் முகத்தில் சுட்டுக் கொடுமைப்படுத்தியதாகப் புகார் அளித்துள்ளார். 1995 இல் தன் மனைவி நைனா சஹானியை தந்தூரி அடுப்பில் வைத்து சுட்டுக் கொலை செய்ததற்காக சுசீல் சர்மாவைக் கைது செய்து வழக்கு நடந்து 18 ஆண்டுகள் கழித்து 2013இல் ஆயுள் தண்டனை வழங்கப்பட்டிருக்கிறது.

ஒரு பெண்ணின் புறத் தொடர்புகளை வைத்து அவளது ஒழுக்கத்தைச் சந்தேகப்பட்டு அவளை மட்டமாக எண்ணி  நடத்துவது/நடந்து கொள்வது குரூரமானது என மும்பை உள்ளூர் நீதிமன்றம் ஒரு 27 வயதுப் பெண்ணின் விவாகரத்து வழக்கில் அறிவித்துள்ளது.

மனைவியிடம் 50,000யூரோ கேட்டுக் கொடுமைப்படுத்திய போர்த்துக்கீசியத் தொழில் அதிபர் ( பின்டோ) ஒருவரைப் பெங்களூரு காவலர்கள் பையப்பனஹள்ளியில் மனைவியைக் கத்தியால் குத்திக் கொலை செய்ய முயன்றார் எனக் கைது செய்துள்ளார்கள். விஷயம் என்னவென்றால் போர்ச்சுக்கல்லில் இருக்கும்போதே இருவரும் விவாகரத்துக்கு மனுத் தாக்கல் செய்திருக்கிறார்கள் என்பதுதான்.

ஒரே பெண்ணைக் காதலித்த இரு நண்பர்களில் (நிலகாதரனஹள்ளி, பீன்யாவைச் சேர்ந்த ) நாகராஜ் என்ற தனியார் நிறுவன ஊழியரை சேகரப்பா என்ற அவரது நண்பர் கொன்றிருக்கிறார்.  கே ஆர் புரத்தைச் சேர்ந்த இரு பெண் குழந்தைகளுக்குத் தாயான ஷைலா தன்னைத் தன் கணவர் தன்ராஜ் சந்தேகப்பட்டுச் சித்திரவதை  செய்வதாகக் கூறி  நியாயா தெகுலா காம்ப்ளெக்ஸில் ( ஹெச் சித்தையா ரோடு, லால் பாக் அருகில்  இருக்கிறது) நீதிமன்றத்தை விட்டு வெளியே வந்து தன்னைத் தானே மண்ணெண்ணெய் ஊற்றி எரித்துக் கொள்ள முயன்றிருக்கிறார். சில வக்கீல்களும், பெண்கள் சிலரும்  சேர்ந்து அவரைக் காப்பாற்றி வில்சன் கார்டன்  காவல் நிலையத்தில் கணவருக்கெதிராகப் புகார் கொடுக்க வைத்திருக்கிறார்கள்.

திருமணமான இரண்டாம் நாளிலேயா பெங்களூர் புஷ்பலதா தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். கணவன் மகனை ஊருக்கு அனுப்பி விட்டு திவ்யா சஷிதரும் தூக்கிட்டுக் கொண்டிருக்கிறார்.முகநூல் நட்பின் மூலம் உறவு கொண்ட மனோஜ் ஏமாற்றியதால் 14 வயது ஷிக்கா தன்னை முடித்துக் கொண்டுள்ளார்.

முகநூலில் சந்தித்த இருவர் ( ஜிம் பயிற்சியாளர் )ப்ரதீப், ரக்ஷா ( ஆட்டோ ஓட்டுநர் மகள் )  தேவதைக் கதைகளில் வரும் காதல் போலக் காதலித்து மணந்து கொண்டார்கள்.தங்கள் முதலாம் ஆண்டு மண நிறைவு விழாவுக்குக் கணவன் மனைவிக்குத் தந்த பரிசு  காரில் அழைத்துச் சென்று அமிலத்தைக் கொட்டியது. இதனால் உடம்புத் தோல் உரிந்து  இமைகள் இழந்து விட்டார் ரக்ஷா.  இமைகள் மாற்று அறுவை சிகிச்சை கட்டாயம் செய்ய வேண்டுமென விக்டோரியா ஆஸ்பத்திரியைச்  சேர்ந்த மருத்துவர் ஷங்கரப்பா தெரிவித்துள்ளார்.  ஒரு மாதமாகத்தேடி ப்ரதீப்பைக் காவல்துறை கைது செய்து சிறையில் அடைத்துள்ளது. இவ்வளவு கொடுமையிலும்  தங்கள் மகள் மாப்பிள்ளையோடு சேர்ந்து வாழ்வாள். இது ஒன்றும் பெரிய விஷயமில்லை என ரக்ஷாவின் தந்தை பேட்டி கொடுத்துள்ளார்.

இந்த மாதிரிக் குற்றங்களுக்கு வெளியில் வரமுடியாதபடி நான் பெயிலபிள் குற்றம் என அறிவித்து  அமில வீச்சுக்களுக்கு 3 லட்சம் வரை நஷ்ட ஈடு  தரவேண்டும் என  வலியுறுத்தியுள்ளது உச்சநீதி மன்றம். ( HEINOUS ACT) மேலும் அமிலவிற்பனைக்கும் தடை விதித்துள்ளது.

குடிகாரக் கணவன் தினமும் அடிக்கும் தொல்லை தாங்காமல் கலப்பனஹள்ளியைச் சேர்ந்த லெக்ஷ்மி மஞ்சுநாத் தன்னையும் தன் இரு குழந்தைகளையும்( 6 வயது லாவண்யா , 4 வயது முரளி )  டீசல் ஊற்றிப் பற்றவைத்துக் கொண்டு எரிந்து போனார்.

கொலை, கற்பழிப்பு, கடத்துவது, அடைத்து வைப்பது, வழிப்பறி, கொள்ளை, திருட்டு, வரதட்சணைக் கொலை, தவறாக நடந்து கொள்வது, பாலியல் பலாத்காரம் செய்வது , கொத்தடிமையாக நடத்துவது, கொடுமைப் படுத்துவது, இதெல்லாம் 2007 இல் இருந்து 20 12 வரைக்கும் சட்டம் தன் இரும்புப் பிடியைக் கொண்டு பிடித்தும்  மிக அதிகரித்தே உள்ளது.

ஒரே கோத்திரத்தைச் சேர்ந்த இருவர் மணந்து கொண்டால் ( HONOUR KILLING) KHAP DIKTATS எனப்படும் கிராம நீதிமன்றம் கௌரவக்கொலை என இருவரையும் கொன்று விடுகிறது. ஆனால் அப்படிச் செய்வதில்லை என ஹரியானா முதலமைச்சர் பூபிந்தர் சிங் ஹூடா சொல்லி இருக்கிறார்.

வெளிநாட்டில் இருந்து படிக்க வரும் பெண்களுக்கான அச்சுறுத்தல் இன்னும் அதிகமாக இருக்கிறது. ஃபரிதாபாத்தில் ஒரு ஜெர்மன் பெண் ( ஜூடித் ஐனோ எஹ்னாஸ்) கொலையாகி இருக்கிறார் அக்டோபரில். இந்தியாவில் கற்பழிப்புக் கொலைகள் அதிகரித்து வருவதால் வெளிநாட்டில் இருந்து படிக்க மற்றும் வேலைக்கு வரும் பெண்கள் சதவிகிதம் குறையலாம்.

பணியிடத்தில் பணி அழுத்தம் காரணமாகப்  புட்டம்மா ஜனார்த்தன் தன்னைத் தானே பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொண்டிருக்கிறார்.  வித்யா ஐயர் என்ற  சுதந்திர எழுத்தாளர் தன் குடியிருப்பில் தூக்கிட்டு மரித்திருக்கிறார். ஏலகங்காவில் ஒரு கால் செண்டர் உரிமையாளர் ( சூரஜ் குமார்) தன்காதலி ( மௌனா) மரித்ததற்காக மனச்சோர்வில் ஆழ்ந்து தற்கொலை புரிந்து கொண்டிருக்கிறார். ஒரு மென்பொறியியலாளரான  பெண் போதைக்கு அடிமையானதால்  4 வது மாடி பால்கனியிலிருந்து பக்கத்துப் பால்கனிக்குப் போவதாக நினைத்து பால்கனியிலிருந்து இறங்கி விழுந்து இறந்துவிட்டார்.

சுஷ்மிதா பானர்ஜி என்ற இந்திய எழுத்தாளர் ஆஃப்கனில் அடிப்படை வாதத்தை மீறி எழுதியதாக மரண தண்டனை வழங்கப்பட்டிருக்கிறார்.  SCHIZOPHERNIA வால் தாக்கப்பட்ட அஞ்சலி சுமால்கள் என்ற பெண் தன் கணவரையும் 3 வயதுப் பெண் குழந்தையையும்  கிரைண்டர் குழவியால் தாக்கிக் கொன்றிருக்கிறார்.

ராகிங்கினால் மருத்துவக் கல்லூரி இளைஞர் ஒருவர் பெட்ரோல் ஊற்றி எரியூட்டப்பட்டிருக்கிறார் . அமிலத்துக்குத் தடை விதித்தது போல பெட்ரோல் விற்பனைக்கும் தடை விதிக்க முடியுமா.

தொலைக்காட்சியைப் பார்க்க விடாததற்காகத் தன் சகோதரனோடு சண்டையிட்டுத் துப்பட்டாவில் தூக்கிலிட்டுக் கொண்டிருக்கிறார்கள் நவநீதாவும், அன்னபூர்ணாவும். 20,21, 22 வயதே ஆன பெங்களூருவின் 3 பகுதிகளில் வசிக்கும்  3 பெண்கள் தற்கொலை புரிந்து கொண்டிருக்கிறார்கள். தாள முடியாத வயிற்று வலி என்றே எல்லா இறப்புக்களுக்கும் காரணம் சொல்லப்படுகிறது.

காவல்நிலையத்தில் புகார்  அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால் தன் மனைவி அனுராதாவும் உடன் பணியாற்றும் ஆட்டோ ஓட்டுநர் அப்துல் வஹாசும் கள்ளத் தொடர்பு வைத்திருந்ததைக் கண்டு மனம் வெதும்பிய ஆட்டோ ஓட்டுநர் சுனில் உக்டே தன்னுடைய நிலையைப் 19 நிமிட வீடியோவாக எடுத்து வைத்து விட்டுத் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

அமெரிக்காவில் இருக்கும் தன் மகள் மாளவிகாவின்  பிரசவத்துக்காகச் செல்ல இருந்த சுசீதா தேவியை அவர் தன் உடைமைகளைக் கட்டிவைக்க  அழைத்து வந்த ஆட்டோ ஓட்டுநராலேயே ( லோகேஷ், ரகு, அபிஷேக் ) கொல்லப்பட்டுள்ளார். காவலாளி வசதி இல்லாத ஏடிஎம்மில் பணம் எடுக்கச் சென்ற ஜோதி உதய் கடுமையாகத் தாக்கப்பட்டு மரணத்திலிருந்து தப்பிப் பிழைத்துள்ளார்.

இருமணம் இணையும் திருமணம் திருப்திகரமாக இல்லாவிட்டால் அது கொலையிலோ தற்கொலையிலோ முடிகிறது. திருமணம் தாண்டிய உறவுகள் மட்டுமல்ல, பெற்ற குழந்தை இறப்புக்களும் கூட சில பெற்றோரின் தற்கொலைக்குக் காரணமாகின்றன.

காரைக்கால் விநோதினியின் தாய் சரஸ்வதியும் , பிரதிபா காவிரி கப்பலில் வந்து உயிரிழந்த இஞ்சினியர் நிரஞ்சனின் தாயும் தந்தையும் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்கள். இரு முறை சமீபத்தில் பேருந்தில் பயணம் செய்த பலர் எந்தக் காரணமும் அறியாமல் இறந்திருக்கிறார்கள்.

எதிர்பாராமல் வண்டி வாகன விபத்தால் நடக்கும் இறப்புக்கள் தவிர்க்கப்பட வேண்டியவை. முன்கூட்டியே இவற்றைச் சரிவர வைத்திருப்பதன் மூலமும் பரமாரிப்பின் மூலமும், வண்டியோட்டிகளுக்குத் தகுந்த ஓய்வு வழங்குவதன் மூலமும் தவிர்க்கலாம்.

மனச் சிதைவிலோ, உறவு முறைச் சிக்கலிலோ, கள்ளத் தொடர்பாலோ நடக்கும் தற்கொலைகளுக்கு மனநல ஆலோசனை  மூலமும் தகுந்த நேரத்தில் தரப்படும் உளவியல் சிகிச்சை முறைகளின் மூலமும் தீர்வு காணலாம்.

கொலைபுரிவோர்க்கு சட்டம் இரும்புக் கரம் கொண்டு தகுந்த தண்டனையை வழங்குவதன் மூலம் நிறுத்தலாம். இறப்பு அனைவர்க்கும் ஏற்படுவதுதான் என்றாலும் அது இயற்கையாகவே நிகழ வேண்டும்.

சாமுராய்களைப் போலக் கோயில்களில்  ஆத்மபலியிட்டுக் கொள்ளுதல்  13 இல் இருந்து 17 ஆம் நூற்றாண்டு வரை இடைப்பட்ட காலத்தில் பெங்களூருவின் வரலாற்றில் (ICHR - INDIAN COUNCIL OF HISTORICAL RESEARCH)  வழக்கில் இருந்திருக்கிறது.  இது பெங்களூருவின் பீரேஸ்வரா கோயில் கட்டிடத்தில் உள்ள சிற்பங்கள் மூலம் தெரிய வருகிறது. அந்தக் காலத்தில் அரசனுக்குத் தாங்கள் உண்மையானவர்கள் என்பதை நிரூபிக்க மெய்க்காப்பாளர்கள் இப்படி ஆத்ம பலியிட்டுக் கொண்டிருக்கிறார்கள். இதே போல கடவுளுக்கும் ஆத்ம பலியிடும் பழக்கம்  வீரர்களிடையே இருந்ததாக SK ARUNI, (DEPUTY DIRECTOR OF ICHR)  சொல்லி இருக்கிறார். கே பாடீல் என்ற இன்னொரு சரித்திர ஆய்வாளர் பீரேஸ்வரா கோயிலில்சதி  பற்றிய சிற்பங்களும் இருப்பதாக கூறுகிறார். இதை பெல்லாரியில் உள்ள சிறுகுப்பா கிராமத்திலும் கண்டதாகக் கூறுகிறார்.

ஆத்ம பலியோ, சதியோ, கொலையோ வேண்டாம். ஆண் பெண் குழந்தைகள் விகிதாசாரமின்றியும் அற்ப விஷயங்களுக்காககவும் கொலையும் தற்கொலையும் நிகழ்ந்து கொண்டே இருக்கின்றன.  கடவுள் கொடுத்த உயிரையும் ஆன்மாவையும் மனக் குறைப்படாமல், கறைபடாமல் வாழ்வதன் மூலம் மனித இனம் தன்னை ஓரளவேணும் தற்காத்துத் தகவமைத்துத்திருத்தியமைத்துக் கொள்ள இயலும்.

நன்றி மெல்லினம்.


3 கருத்துகள்:

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...