திங்கள், 13 ஜனவரி, 2014

ஞாயிற்றுக்கிழமை மதியப்பூனை .. எனது பார்வையில்.

பூட்டிக் கிடக்கும் ஒரு வீட்டைத் திறந்து ஒவ்வொரு கதவாக, ஜன்னலாகத் திறந்து வைத்துப் போகும்போது ஏற்படும் வெளிச்சம் போன்றது அகநாழிகை பொன் வாசுதேவன் கவிதைகள். ப்ரியம் பற்றிய கவிதைகள் கதகதப்பை வழிய விடுவது போல இழப்பும் இயலாமையும் பற்றிய கவிதைகள் கொஞ்சம் நசநசக்கும் குளிர் போலக் குத்துகின்றன.இருப்பை நகங்களாய் வெட்டித் தள்ளுவதும், தொங்கிக் கொண்டிருக்கும் செவிகளின் நிழல்கள் கூர்ந்து கவனிப்பதும், நூலிழையில் தொங்கி அலைக்கழிக்கப்படும் வாழ்க்கையும், விரல் வழிவெளிவரும் வார்த்தைகளுக்காகக் காத்திருக்கும் அவர்களும் , எழுத்துக்களை மணல் மூட்டையாக்கிப் பதுங்குவதும்  வாழ்வின் யதார்த்தத்தை வலியோடு அறிவிக்கின்றன.

”உயிரோடு குதித்த தொடர்நீர்
என் மேலறைந்து
பெருவோலத்துடன்
உயிர்பிரியாத சோகத்தில்
மறுபடி வானேறி
சூரியனில் கலந்தது
சுயமரணம் தழுவ.”

இது இருப்பின் முரண். வாழ்க்கை ஒரு சக்கரம் . தொடர்ந்ததே தொடரும். பின் அழிந்தும் தொடரும் . பிறப்பு, இறப்பு பின் பிறப்பென.

மழைக்குருவியின் கடுகுக்கண்கள், வீட்டுக் கூரையை நாவால் சுவைத்துத் தவழ்ந்திறங்கி உதிரும் மழைநீர், புழுவின் அறியாமையோடு பிரியங்களால் ஈர்க்கப்படும் அன்பின் மீன், மீண்டும் துளிர்க்கும்  விருப்பச் செடி , கூர்ந்த கரும் அம்பாக நீண்டு மல்லாந்திருக்கும் சாலை, பூமிக்கு நழுவ எஞ்சியிருக்கும் ஒற்றையிலை தன் உள்ளங்கைக்குள் பதுக்கி அருந்தியபடி இருக்கும் மரத்தின் நேசம், உச்சியிலிருந்து பூமி பற்றித் தொங்கும் அருவி,வீதியெங்கும் அணுஅணுவாய் இறைத்தபடி செல்லப்படும் மிதக்கும் வதந்திகள், இறால் குஞ்சு விரல்கள், விரல் காம்புகளின் வழியே தன்னிச்சையாச் சுரக்கும் அன்பு  இவை  நான் மிகவும் ரசித்த அழகான ரசனை பொதிந்த கவிதைச் செறிவுகள்.
 
மொழி..

“உனக்கும் எனக்குமிடையே
போட்டிகளோ பொறாமைகளோ இல்லை
என்றும்
நீ
உன் மௌனத்தைக் கடைப்பிடிக்கும் வரை “

இது கணவன் மனைவிக்குமிடையே கடைப்பிடிக்க வேண்டிய மொழியாகப் படுகிறது. இப்படி இருந்துவிட்டால் என்றென்றைக்குமே பிரச்சனை என்பது யாருடனும் இல்லாமல் போய்விடும்.

பக்கத்தில் குழந்தையுறங்க அவனைத் தவிர்த்து மனைவியுடனான ஒரு கூடலைக் குற்ற உணர்ச்சியோடு பகிரும் தணியும் சுழலும், தாயின் முலைச்சூடு வேண்டும் குழந்தையாய் யாசிப்பதும்,பிரியத்தில் விளைந்த கனியும் ,பிரியங்களைக் கொட்டிப் பதப்படுத்தும் பால்ய விளையாட்டும், கடவுளைச் சுமந்தவனும், அன்பைச் சூப்பியே வாழப் பழகுதலும் , ஞாயிற்றுக் கிழமை மதியப்பூனை விசையூட்டி மெத்தென்று மதில் சுவருக்கும் தரைக்குமிடையே பறந்தது போல் வந்தமர்வதும்,  புத்தகத்திலிருந்து இறங்கிகட்டிலின் மேல் விளையாடும் நாவல் பாத்திரங்களும் காட்சி அழகு.
அவனைப் பற்றிய, அவனின் அவளைப் பற்றிய அனைத்துக் கவிதைகளும் யதார்த்தம். 

”அடை ”கவிதையில்,

”புட்டம் உயர்த்தி கால்கள் மடித்து
குப்புறப்படுத்து
நீ
தூங்கும் திசையெல்லாம்
பரவியபடி கசிகிறதென் அன்புவெளி
இன்னும் வெகுதூரம்
செல்லவேண்டியதிருக்கிறது
உன்னைப் பாதுகாக்க  “

மனைவியை, குழந்தையைப் பாதுகாக்க யத்தனிக்கும் ஒரு சாமானியனின் ஆசைகளும் சோர்வுகளும் இயலாமைகளும், ஏக்கங்களும் பிரதிபலிக்கும் கவிதைகள் பல. தன்னைத் தானே நேசித்தலும், கொன்று கொள்ளுதலும் ,  விரும்புதலும் ,விட்டேத்தியாய் இருப்பதும், இயலாமையைப் பகிர்ந்து கொள்ளவதும் , இருப்பைத் தெரிவித்துக் கொள்வதுமான கவிதைகள் மனதை அசைக்கின்றன.

மீசைப் பூனை .

” வாழ்வலைவரிசையில்
ஒலித்துக் கொண்டிருக்கிறது
சுய சாகத்தின் திமிர்ப் போதை”

“இறக்கைகளற்ற தேவதைகளின்
பெருங்கருணைக் கரங்களால்
ஆசீர்வதிக்கப்பட்டது இவ்வாழ்வு.”

“தோளில் சிறகுகளற்றுப் போனாலும்
அவனும் ஒரு பறவைதான்.
அவனை விட்டு விடுங்கள்.
பறந்து கொண்டிருக்கட்டும்.”

நிச்சயம் பறத்தல் நிகழ்கின்றது ஒவ்வொரு கவிதையிலும் யதார்த்தம் மிளிர்ந்தாலும். ஒவ்வொரு உணர்விலும் நாமும் ஆட்பட்டு மீள்கிறோம். ஆசீர்வதிக்கப்பட்ட வாழ்வாகவே நம் வாழ்வையும் ஏற்றுக் கொள்ளும் மனோதிடம் வாய்க்கிறது. அனுபவம் என்பதே கடவுள்தானே.
அருமையான இந்தத் தொகுதி உயிர்மையின் வெளியீடாக  வந்துள்ளது.

4 கருத்துகள் :

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

நல்லதொரு விமர்சனம் சகோதரி... நன்றி...

Thenammai Lakshmanan சொன்னது…

நன்றி தனபாலன் சகோ.

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

அகநாழிகை சொன்னது…

பகிர்தலுக்கு மிக்க நன்றி

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...