செவ்வாய், 21 ஜனவரி, 2014

பாலியல் வன்கொடுமைகளுக்குத் தீர்வு :- ( காற்றுவெளி இதழில் )பாலியல் வன்கொடுமைகளுக்குத் தீர்வு :-

டெல்லியில் தாமினி, நிர்பயாவுக்கும் தமிழகத்தில் புனிதாவுக்கும் மட்டுமல்ல. தினமும் பத்ரிக்கையைப் புரட்டினால் பாலியல் வன்முறைச் செய்திகள்தான்.

மும்பை சக்தி மில்ஸில் ஒரு பெண் ஃபோட்டோகிராஃபர் போட்டோ எடுக்கச்சென்ற போது அவரையும் அவரது நண்பரையும் பிடித்த காமுகக் கும்பல் அவரது நண்பரைக் கட்டிப் போட்டு விட்டு அவரைப் பாலியல் கொடுமை செய்திருக்கிறார்கள். அதிர்ச்சியூட்டக் கூடிய செய்தி என்னவென்றால் அதன் பின் பலர் அந்தக் கும்பலில் மாட்டிச் சிக்கிச் சீரழிந்ததாக வரிசையாகப் புகார் அளித்து வருகிறார்கள். மகாலெக்ஷ்மி கோயிலுக்கருகில் சென்று கொண்டிருந்தபோது தானும் தன் தோழனும் கடத்தப்பட்டு பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டதாக ஒரு பெண் துணிந்து புகார் அளித்துள்ளார்.

புற்றீசல் போலக் கிளம்பும் இவர்கள் எங்கிருந்துதான் இந்தக் கெட்ட நோக்கங்களோடு பெண்களின் வாழ்வைச் சீரழிக்கின்றார்களோ. ஹைதராபாத்தில் சட்டக் கல்லூரியில் ( NLSIU)படித்த மாணவி அவுட்டிங் சென்றுவிட்டு ஹாஸ்டலுக்குத் திரும்பும் சமயம் அவரைக் கடத்திய ஆறுபேர் கொண்ட கும்பல் ஒன்று மரங்கள் அடர்ந்த பகுதிக்கு இழுத்துச் சென்று கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் பாலியல் வன்புணர்வில் ஈடுபட்டிருக்கின்றனர். கட்டைகளையும் கடப்பாறைகளையும் வைத்து முதலில் மிரட்டிய  ஆண்கள்  ( அதில் ஒருவருக்கு வயது 50 ) பின் அந்த ஆணைத் தாக்கி பெண்ணை இழுத்துச் சென்றிருக்கிறார்கள்.
வெளிநாட்டில் இருந்து இது போன்ற சிறந்த கல்வி நிறுவனங்களுக்குப் படிக்க வந்த அந்தப் பெண் கல்வியைத் துண்டித்துவிட்டுத்  தன் நாட்டுக்குத் திரும்பிச் சென்றிருக்கிறார். இது தவறான முன்னுதாரணமாக அமைந்து இங்கே படிக்க வரும் மற்ற நாட்டவர்களையும் தடை செய்து விடும்.
அசாராம் பாபு என்ற சாமியாரும் ஆசாமியாக மாறி மைனர் பெண்ணிடம் தகாத உறவு கொண்டதாகக் கைது செய்யப்பட்டிருக்கிறார். ஆசிரமங்களும், அநாதை ஆசிரமங்களும் கூடப் பெண்களுக்குப் பாதுகாப்பானதாயில்லை.

பெங்களூரு சிறையில் இருந்து தப்பித்து இன்று பிடிபட்டிருக்கும் ஜெய் சங்கர் கிட்டத்தட்ட 30 கற்பழிப்பும் கொலையும் செய்தவர். ஜெயில் செல்லில் இருந்து அவர் எப்படித் தப்பித்து இருக்க முடியும் எனப் பத்ரிக்கைகள் பத்தி பத்தியாகக் கிழித்தபோதுதான் தெரிந்தது ,ஒரு கண்காளிப்பாளரே தன்னுடைய பர்சனல் வாழ்க்கையில் தொல்லை கொடுத்த ஒருவனைப் பழிவாங்க அவனைத் தப்பிக்க வைத்தது.

ஜெயிலில் ஆஸ்பத்ரிக்குக் காண்பிக்கப்போனபோது க்ளவுஸ் எடுத்தது, போலீஸ் உடையில் சிலர் பார்த்தது, ஜெயிலின் இரு காம்பவுண்ட் சுவர்களை இணைக்கும் சுவர் உடைக்கப்படாமல் இருந்தது, அதில் பதிக்கப்பட்ட கண்ணாடிகளின் மேல் ஷூக்கள் அணிந்த காலால் ஓடியது, போர்வையால் கயிறு போல் இழுத்துக் கட்டி சுவற்றில் இருந்து குதித்து அருகே நின்றிருந்த வண்டி மூலம் தப்பியது எனப் பட்டியலிட்ட பத்ரிக்கை. அந்த ஜெயிலின் செல்லில் கதவைப் பூட்டி பூட்டுப் போட்டு  இருக்கும் இடம் கிட்டத்தட்ட 4 அடி தூரம் என்றும் , கிட்டத்தட்ட 360 டிகிரியில் திருப்பினால்தான் அந்தப் பூட்டைத் திறக்க இயலும் என்றும், மேலும் தப்பிய சமயம் மேலே கண்காணிக்கும் கோபுரத்தின் விளக்குகள் எரியவில்லை என்றும், காம்பவுண்டுச் சுவற்றின் உச்சிவேலியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டிருந்தது என்றும் பட்டியலிடுகிறது.

RAPISTS ARE TERRISTS . STOP RAPE  என்ற வாசகங்கள் தாங்கிய பதாகளைப் பிடித்தபடி நீதி மன்றத்தின் வாசலில் மக்கள் நீதிக்காகக் காத்து நிற்கின்றனர். தன்னுடைய சகோதரியைக் கெடுத்துக் கொன்றவன் மைனராக இருப்பதால் 27 மாதங்கள் மட்டும் ஜெயில் வாசம் என வழங்கப்பட்ட தண்டனையை எதிர்த்து தாமினியின் சகோதரர் மேல் முறையீடு செய்திருக்கிறார்.

சட்டக் கல்லூரிப் பெண் பாலியல் வன்புணர்வுக்கு உள்ளான வழக்கில் கைதா ஆண்களை எல்லாம் திருமணமானவர்கள்,  திருமணம் ஆகாதவர்கள், மற்றும் அவர்களின் ஜாதி, மதம், இனம் , நிறம் பொருளாதார சமூக மதிப்பு எல்லாம் சிறப்புத் தகுதியாகக்  கணக்கில் கொள்ளப்படாமல் குற்றவாளிகளுக்கு என்னென்ன தண்டனை வழங்க வேண்டுமோ அதை இரும்புக் கரம் கொண்டு நிறைவேற்றுவோம் என்று நீதிபதி சொல்லி இருப்பதும். அதேபோல அந்தக் குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை வழங்கியிருப்பதும் ஆறுதல் அளிக்கக்கூடியது.

ஒரு பெண்ணைப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கிக் கொலை செய்து போடுவது எவ்வளவு கொடுமையானதோ அதேபோல வன்கொடுமை செய்துவிட்டு மிரட்டித் தூக்கிப் போட்டுவிட்டுப் போவதும் ஆத்மரீதியிலான உளைச்சலை உயிர்வாழும் காலம் வரை ஏற்படுத்தும் என்று கோர்ட் சொல்லி இருக்கிறது. மேலும் 133 பக்கம் கொண்ட தீர்ப்பு வழங்கப்பட்ட போது இந்தியன் பீனல் கோடு செக்‌ஷன்  376(2) (g) இன் படி குறைந்தது பத்தாண்டுகளாவது  சிறைத் தண்டனை வழங்கப்பட வேண்டும் என்றும் அந்த அறுவருக்கும் ஆயுள் தண்டனை வழங்கப்படுவதாகவும் தீர்ப்பளித்திருக்கிறது. 

நம் ஜனாதிபதியின் மகள் ஷர்மிஷ்டா முகர்ஜி பாலியல் சீரழிவுகள் குறித்துக் கருத்துக் கேட்கபட்டபோது சமூக மாற்றம் ஏற்படவேண்டும். இதில் ஈடுபட்டவர்களுக்கு மரணதண்டனை வழங்கவேண்டும் என்ற கோபம் சாமான்ய மனிதர்களுக்கு வருவது இயல்பு. என்றும் மரண தண்டனையை ஆதரிக்காவிட்டாலும் அதற்கு ஈடான ஒரு கடுமையான தண்டனையை வழங்கினால்தான் மாற்றம் ஏற்படும் எனக் கூறி இருக்கிறார்.


மணிப்பால் கேங் ரேப், டெல்லி கேங் ரேப், பெங்களூரு கேங் ரேப், ஹைதராபாத் கேங் ரேப் என மாநிலம் வாரியாக பெண்களுக்குப் பாதுகாப்பின்மை அதிகரித்து வருகிறது. இந்தப் பாலியல் வன்கொடுமைகளுக்கு சமூகத்தின் பொறுப்பும் இருக்கிறது. குற்றவாளிகள் தப்பக்கூடாது.  சட்டம் தன் இரும்புப் பிடியைக் கொண்டு  கடுமையான தண்டனை வழங்கி இனி இதுபோன்ற துர்ச்சம்பவங்கள் நிகழாமல் காக்க வேண்டும். 


டிஸ்கி :- இந்தக் கட்டுரை 13, அக்டோபர் 2013காற்றுவெளி இதழில் வெளியானது.   http://issuu.com/kaatruveli/docs/_______________________________oct_/33?e=1847692/5206191

8 கருத்துகள் :

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

கண்டிப்பாக... சட்டத்தின் பிடி எதற்கும் வளையாமல் இறுக வேண்டும்...

காற்று இதழில் வெளி வந்தமைக்கு வாழ்த்துக்கள்...

Vinoth Kumar சொன்னது…

பெண்களுக்கு தனி பள்ளி, தனி பஸ்.. தனி விடுதி தனி ரெயில் பெட்டி......

இதன் தொடர்ச்சியாக பெண்களுக்கு தனி ஊர், தனி ரோடு தனி மருத்துவ மனை தனி சுடுகாடு கொண்டு வந்துவிட்டால் முடிந்தது பிரச்சனை..

பெயரில்லா சொன்னது…

இந்திய ராணுவ அதிகாரிகள் கற்பழிப்பில் ஈடுபட்டால் அவர்களை தண்டிக்கவே வழி வகை இல்லாத பாதுக்காப்பு சிறப்பு அதிகார சட்டத்தை எதிர்த்து பாதிக்கப்பட்ட பெண்களில் ஒருவரான இரும்பு பெண்மணி சர்மிளா உணவு மறுத்து பல ஆண்டுகளாக போராடி வருகின்றார். நாம் ஏன் அதை கவனிக்கவில்லை? நாம் ஏன் அவருக்கு உறுதுணையாக போராட முனையவில்லை. சொல்லப் போனால் இந்த அரசும், இந்த அரசுக்கு வாக்களித்து வரும் நம் சமூகமும் பாலியல் வன்முறையை ஏற்றுக் கொள்கின்றன. நமது கலாசாரம் அதனை தண்டனைக்குரிய குற்றமாய் பார்ப்பதில்லை. ஒருவர் மீது அத்துமீறி தொடுக்கப்படும் பாலியல் வன்முறைகள் தனிமனித உரிமை மீறலாகவும், கொடிய செயலாகவும் பார்க்கப்படும் கண்ணோட்டம் இன்னும் வரவில்லை. ஏன் பெண்களில் பலருக்கே அக் கண்ணோட்டம் வரவில்லை. தாய்மார்களுக்கு வந்தால் தானே அவர்கள் பெற்ற பிள்ளைகளுக்கு வரும். இது ஆபத்தான ஒரு சமூகத்தை உருவாக்கி வருகின்றது. பெண்களுக்காக தனி விடுதி, தனி ரெயில், இருக்கை என்பதை நான் கடுமையாக எதிர்க்கின்றேன். இது எங்கு போய் முடியும் என்றால் பெண்கள் இறுதியில் முக்காடு இட்டு சமையலறைக்குள் போய் கொண்டு போய் விடும் ஆணாதிக்க செயல்முறை தான். பிரச்சாரம், பிரச்சாரம், பிரச்சாரம் ஒவ்வொரு ஆணும், பெண்ணும் மற்றவரின் உடல் மீது அவரின் அனுமதியின்றி ஆளுமை செலுத்த கூடாது என்பதை முதலில் உணர வேண்டும். அடுத்த நிலையில் பெண் உடலை வியாபார பொருளாக்கி வரும் ஊடகங்கள், படைப்புகள், மதங்கள் என சமூகத்தின் அனைத்துக் கூறுகளையும் தவிடு பொடியாக்க புறப்பட்ட வேண்டும். அதனை முன்னின்று நடத்த வேண்டியவர்கள் பெண்கள் மட்டுமல்ல பெண்ணிய உரிமையை வழிமொழியும் ஆண்களாக இருக்க வேண்டும். ஏனெனில் ஆண்கள் தான் பெண் உடலை கொள்முதல் செய்யும் வாடிக்கையாளர்களாகவும் இருக்கின்றார்கள். அவர்களிடம் இருந்து ஏற்படும் எதிர்ப்பும் சலனமும் பெண் உடலை வியாபாரம் ஆக்கும் வியாபாரிகளை கதி கலங்கச் செய்ய வைக்கும்.

குற்றவாளிகள் தண்டிக்கபடுவதோடு ஒவ்வொருவரின் கடமை முடிந்துவிடப் போவதில்லை. நன்னடத்தை, பகுத்தறிவு, மனிதாபிமானம் போன்றவற்றை உள்ளடக்கிய கல்வி முறையை கல்விக் கூடங்களும், வாழ்க்கை முறைகளை சமய, அரசியல் கழகங்களும் முன்மொழி வேண்டும். குறிப்பாக பிற்போக்குத்தனங்களை முன்மொழிந்து வரும் இயக்கங்களை இல்லாதொழிக்கப்பட வேண்டும்.

மாற்றங்கள் வரும் என்ற நம்பிக்கையோடு

விவரணன் நீலவண்ணன்.

சே. குமார் சொன்னது…

நல்ல கட்டுரை...
வாழ்த்துக்கள் அக்கா...

Seeni சொன்னது…

Kandippaaka thandikka padanum...

Sekar சொன்னது…

சமீப காலத்தில்தான் பாலியில் வன் கொடுமை அதிகரித்து இருக்கிறது. இதற்கு என்ன காரணம் என்று ஆராயவேண்டும்.

1. ஆண் ஆதிக்கம் இப்பொழுது குறைந்து கொண்டு வருகிறது. இதனை விரும்பாத சில ஆண்களின் கோப வெளிப்பாடு.

2. இன்றைய சமுகத்தில் பெண்களின் பங்கு அதிகமாய் இருக்கிறது. முன்பழக்கம் இல்லாத பெண்களோடு ஆண்கள் பழக நேரிடுகிறது. இதில் சில பேரு தவறு செய்கிறார்கள்.

3. சில காதலர்கள் மற்றவர்களின் முன்னே அதிக நெருக்கமாய் இருக்கிறார்கள்.

4. சில பெண்களின் உடை அலங்காரமும் அவர்களின் பேச்சும்.

ஆண் பெண் இருவரும் சமம் என்பதை ஆண் புரிந்து கொள்ள வைக்க பட வேண்டும். இன்றைய சமூகம் இதனை நோக்கி பயணம் செய்தால் இப்பிரச்சனை குறையும்.

Thenammai Lakshmanan சொன்னது…

ஆம் தனபாலன் சகோ

என்ன செய்வது வினோத் குமார்

சரியா சொன்னீங்க விவரணன் நீலவண்ணன்

நன்றி குமார்

ஆமாம் சீனி

சரியான அலசல் சேகர்
Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...