எனது பதிநான்கு நூல்கள்

செவ்வாய், 7 ஜனவரி, 2014

பச்சிளம் குழந்தைகளும் பாலியல் பலாத்காரமும்.:-


பச்சிளம் குழந்தைகளும் பாலியல் பலாத்காரமும்.:-


ஒன்றரை வயதுப் பெண் குழந்தையில் இருந்து கற்பழிக்கப்படும் துர்ப்பாக்கியத்தில் உள்ளது பெண்ணினம்.  என்ன கொடுமை இது. இவ்வாறு செய்பவர்கள் ( மிக சொற்ப கேஸ்களைத் தவிர ) வேறு அந்நியர்கள் அல்ல. அந்தக் குழந்தைக்குப் பலமுறை பரிச்சயமானவர்களே. 


வீட்டு வாசலில் விளையாடிக் கொண்டிருந்த ஒன்றரை வயதுக் குழந்தையைத் தூக்கிச் சென்று கற்பழித்திருக்கிறான் சென்னையைச் சேர்ந்த ஒருவன். தினம் செய்தித்தாளில் 2 வயது, 4 வயது, 5 வயது,  8 வயது மற்றும் பதின்பருவக் குழந்தைகள் பாலியல் பலாத்காரத்துக்கு உட்படுகிறார்கள் எனச் செய்திகள் வருகின்றன.

ஒரு முறை சென்னையின் பிரபல  ஸ்டார் ஹோட்டலொன்றில் மேல்தட்டு விருந்தில் கலந்துகொண்ட பெண் குழந்தை பாத்ரூம் சென்றபோது அங்கே வேலை பார்த்த ஒருவனால் பாலியல் பலாத்காரத்துக்குட்பட்டுக் கொலையும் ஆனார். ஆனால் மேல் தட்டு விஷயம் என்பதால் அவமானமாகிவிடும் என்று அதை வெளியே விடாமல் மறைத்து விட்டார்கள். கொலையாளிக்கு தண்டனை கிடைத்ததா எனத் தெரியவில்லை.

சட்டீஸ்காரின் பிலாஸ்பூரில்  ஹௌரா குர்லா எக்ஸ்ப்ரஸ்ஸில் 7 வயதுப் பெண் குழந்தையை எவனோ ஒருவன் கற்பழித்து விட்டு பத்து ரூபாய் நோட்டை உடையில் திணித்து விட்டுப் போய் இருக்கிறான். அந்தச் சிறுமியை  சட்டீஸ்கரின் பக்த் கண்வர்ராம் மார்க்கெட்டில் கண்டெடுத்து சிகிச்சைக்கு அனுப்பி வைத்துள்ளார்கள் கோட்வாலி போலீஸ் நிலையத்தார்.


பெங்களூரு ஸ்ரீராமாபுரத்தில் பத்தாவது படிக்கும்  15 வயதுப் பெண் வீட்டு உரிமையாளராலேயே கற்பழிக்கப்பட்டுள்ளாள். அது மட்டுமல்ல இரண்டு மாத கர்ப்பிணியாக என்ன செய்வதென்று தெரியாமல் பயந்து போய் வீட்டை விட்டு ஓடியிருக்கிறாள். கெங்கேரியிலும் 23 வயது ஆண் ஒருவனால் 6 மாதமாக கற்பழிக்கப்பட்ட ஒரு பெண் ஐந்து மாத கர்ப்பிணியாக வீட்டை விட்டு ஓட இவர்கள் இருவரையும் காவல் துறை கண்டுபிடித்து இவர்களை சீர்கெடுத்தவர்களின்மேல் செக்‌ஷன் 376 இன் படி வழக்குப் போட முயற்சித்துள்ளது . ஆனால் குடும்பத்தாரோ இந்த வழக்கில் போலீஸ் தலையிடுவதை விரும்பாமல் விஷயம் பெரிதாவதை விரும்பாமல் புகாரே அளிக்கவில்லை.

சென்னையில் பைலட்டாகப் பணிபுரியும் ஒருவன் செங்கல்பட்டு கிராமங்களில் பெண் குழந்தைகளைத் தன்னுடைய குழந்தையாகத் தத்தெடுத்து அவர்களுடன் உறவு கொண்டிருப்பது ஒரு சமயம் வெளியாகி பலத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அந்தக் குழந்தைகளின் பெற்றோரே அவனிடம் பணத்தை வாங்கிக் கொண்டு குழந்தைகளை விற்றிருக்கிறார்கள்.


வடக்கு பெங்களூருவில் அநாதைக் குழந்தைகள் காப்பகம் நடத்தி வரும் 75 வயது கொரியாக்காரர் டோ குவாங் சோய் தன்னையும் இன்னும் பல குழந்தைகளையும் பல வருடங்களாக பாலுறவுக்குப் பயன்படுத்தி வந்தார் என அங்கே இருந்து வந்த கமலா என்ற 24 வயதுப் பெண் போலீசாரிடம் புகார் அளித்துள்ளார். அவர் அங்கே 8 வயதுக் குழந்தையாக 1996 இல் சேர்க்கப்பட்டார் எனவும் அன்றிலிருந்தே இந்தக் கொடுமைகள் தொடர்வதாகவும் கூறியிருக்கிறார். தானும் சில மாத்திரைகளை உட்கொண்டு சிறுமிகளுக்கும் மாத்திரைகள் கொடுத்து இந்தச் செயலில் ஈடுபட்டார் எனக் கூறுகிறார். இந்தக் கொடுமைகளை ரூமில் வீடியோ காமிரா பொருத்தி  வீடியோவாகவும் அங்கே வேலை பார்த்த ஜாய் சிங் என்பவன் எடுத்து வந்ததாகக் குறிப்பிடுகிறார். சைல்ட் ஃபோர்னோகிராஃபி எடுக்கப்பட்டிருக்கிறது.

புவனேஷ்வரில் காது கேட்காத வாய் பேசாத ஊமைப்பெண்ணை அவளுடைய ஆசிரியரே நாசம் செய்துள்ளார். பள்ளிக் கூடங்களிலும் பயிற்சிக் கூடங்களிலும் சிறுமிகள் வன்புணரப்படுகிறார்கள்.  கல்விக்கண்ணைத் திறக்க வேண்டிய ஆசிரியர்களே காமக் கண் கொண்டு அலைகிறார்கள். பள்ளிக்கூட வானங்களிலும் ஓட்டுநர் அல்லது நடத்துனரால் சீரழிக்கப்படுகிறார்கள். பருவம் எய்திய மற்றும் எய்தாத பெண்களுக்கும் கூட அச்சுறுத்தல்கள் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன.


ஆண் குழந்தையாய் இருந்தாலும் , பெண் குழந்தையாய் இருந்தாலும் உடலாய்ப் பார்க்கப்பட்டு காமுகர்களால் சீரழிவு நடக்கிறது. உடலும் உணர்வும் முதிராத குழந்தைகளை வன்புணர்வு செய்வது ஒரு வகையான மனோ வியாதி. மன நிலைச் சீர்கேடு. இத்தகைய முறைகேடுகளுக்கு சரியான தண்டனை வழங்கப்பட வேண்டும்.

இந்தக் கொடுமைகளை எல்லாம் விடக் கொடுமை  ஒரு ஆட்டோ ட்ரைவர் தன் 15 வயது மகளுடன் உறவு கொண்டு கர்ப்பிணியாக்கி அவளுக்கு ஒரு ஆண் குழந்தையும் பிறந்துள்ளது. இந்த மாதிரி ஆட்களை எல்லாம் கேள்வியே கேட்காமல் தூக்கில் போட வேண்டும்.


பொதுவாக இதுபோல குழந்தைகளிடம் முறை தவறி நடக்கும் அந்நியர்கள் குழந்தைகள் தனித்திருக்கும் சமயம் சாக்லேட், தின்பண்டங்கள் கொடுத்து பேச்சுக் கொடுத்து தனியே அழைத்துச் சென்று சீரழிக்கிறார்கள். யாரிடமும் சொன்னாலும் கொன்று விடுவதாக மிரட்டி சொல்லவிடாமல் செய்து விடுகிறார்கள். குடும்பத்து அங்கத்தினரைக்  குழந்தைகள் நம்புவதால் அவர்கள் செய்யும் செயலை வெளியே சொல்வதில்லை. அல்லது  அவர்கள் சொல்ல விடுவதில்லை.

என்னதான்  நாகரீகமும்,கல்வியறிவும் வளர்ந்திருந்தாலும் நாம் நம் குழந்தைகளுக்கு குட் டச், பேட் டச், அந்நியரோடு பழகும் விதம் , அந்நிய இடங்களில் நடந்து கொள்ளும் விதம் பற்றிப் போதித்தாலும் இது போன்ற மைனர் பெண்களை நாசம் செய்பவர்களைக் கைது செய்து கடுமையான தண்டனை கொடுக்க வேண்டும்.

1992 இலிருந்து 2009 வரையிலான காலகட்டத்தில் குழந்தைகளுக்கான பாலியல் துஷ்பிரயோகம்C(NCANDS) குறைந்திருக்கிறது என  புள்ளி விபரம் தெரிவிப்பதாக டேவிட் ஃபின்கெல்ஹார் என்ற அமெரிக்கர் சொல்கிறார்.  இது வெளிவந்த தகவல் மட்டுமே எனவும் வெளிவராததும் இன்னும் இருக்கக்கூடும் என்று தோன்றுகிறது. ஒற்றைப் பெற்றோர் இருக்கும் குடும்பத்திலும் குழந்தைகளைக் காப்பகங்கள், விடுதிகள் , பக்கத்து வீடுகளில் அல்லது அந்நியரின் பராமரிப்பில் விடும்போது இது நிகழக் காரணம் ஆகிவிடுகிறது. உறவினர் மற்றும் பெற்றோரின் கவனிப்பின்மையும் ஒரு காரணம்.

குட் டச் , பேட் டச் எது எனக் கற்பிக்கப்படவேண்டும். மேலும் உடலின் அந்தரங்கப் பகுதிகளை யாரும் தொடுவது தவறு என்றும் அப்படி யாரும் செய்தால் தன்னிடம் தெரிவுக்கும் படியும் கூறவேண்டும். அப்படி ஏதும் நிகழ்ந்து விட்டால் குழந்தைகள் தன்னிடமோ அல்லது மற்ற நெருங்கிய உறவினரிடமோ தெரிவிக்கும்படியும் பகிர்ந்து கொள்ளும்படியும் ஆலோசனை சொல்லவேண்டும். குழந்தைகளிடம் நண்பர்களாக மாறிப் பேசவேண்டும். கண்டிப்போம் என பயந்து குழந்தைகள் விஷயத்தைச் சொல்லாமல் மறைக்கக் கற்றுக் கொள்ளலாம். எனவே எப்படிப்பட்ட சந்தர்ப்பத்திலும் அவர்கள் கூடவே இருப்போம் என உறுதி அளிக்க வேண்டும்.

வேலைக்குச் செல்லும் பெற்றோராயினும் சரி, வீட்டில் இருக்கும் பெற்றோராயினும் சரி குழந்தைகள்  படிப்பு மற்றும் இன்னபிற வகுப்புக்களுக்காக வெளி உலகைச் சந்தித்தே ஆக வேண்டும். அங்கே அவர்கள் சந்திக்கக் கூடிய உலகத்தை அவர்களுடன் இருப்பதாலேயே உடனேயே அறிந்து விட முடியும்.  நிர்பயாவுக்கு நிகழ்ந்த கொடுமைக்குப் பிறகு பள்ளிகளில் இது பற்றி  வகுப்புகள் எடுக்கப்படுவதாக  கென்ஸ்ரீ பள்ளியின் தலைமை ஆசிரியை ரேணு பென்னி கூறியிருக்கிறார்.

இவ்வாறு பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுவது தவறு எனக் குழந்தைகளுக்குத் தெரிவதில்லை. மேலும் கற்பிக்கவும் படுவதில்லை. 17 வயதுகளில் வெளிநாடுகளில் குழந்தைகள் இண்டிபெண்டட் ஆகிவிடுவதால், குடிப்பது, ட்ரக் அடிக்‌ஷன் போன்றவற்றாலும் பாலியல் வன்முறைக்குத் தங்களை இழந்து விடுகிறார்கள். அல்லது இவைகள் வழங்கப்பட்டு மரத்துப் போகச் செய்யப்படுகிறார்கள்.  இது போல தங்கள் சம்மதத்தோடோ, சம்மதமில்லாமலோ குடி, போதை, பாலியல் துன்பறுத்தலுக்கு ஆளான ஆயிரக்கணக்கான ஆப்பிரிக்கக் குழந்தைகள் சாத்தான்கள் என்று துன்புறுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டதாக 2010 இல் எடுக்கப்பட்ட பிபிசி ரிப்போர்ட் ஒன்று கூறுகிறது.

தினம் இரண்டு கற்பழிப்புக்கள் நடப்பதாக கர்நாடக போலீஸ் துறை கூறுகிறது. நாடு முழுவதும் 21 ஹை கோர்ட்டுக்களில் 23, 792 கற்பழிப்பு வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன என மத்திய சட்டத்துறை அமைச்சர்  கபில் சிபல் தெரிவித்திருக்கிறார். இவற்றை விரைந்து தீர்த்து நீதி வழங்க விரைவு நீதிமன்றங்கள் அமைக்கப்படும் எனவும் தெரிவித்திருக்கிறார்.

PROTECTION OF CHILDREN FROM SEXUAL ACT ( POSCO) ACT என்பதன் மூலம் விரைந்து நடவடிக்கை எடுப்பதாகக் கூறுகிறார்கள். இதன்படி பாலியல் பலாத்காரம், பாலியல் துஷ்பிரயோகம், வன்புணர்வு, மற்றும் குழந்தைகளை வைத்து ஃபோர்னோகிராஃபி படங்கள் எடுத்தல், இவற்றில் ஈடுபடும் நபருக்கு தண்டனை வழங்கப்படும். இப்படிச் செய்யமுற்பட்டார் என ஒரு குழந்தை புகார் அளித்தாலே தண்டனை வழங்கப் போதுமானது.

NATIONAL INSTITUTE OF CHILD HEALTH & HUMAN DEVELOPEMENT (NICHD ) இதுபோல் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு அதிலிருந்து மீள உதவி செய்கிறது. சிகிச்சைகள் அளிக்கப்படுகிறது. நிறைய திட்டங்கள் தீட்டப்பட்டு செயல்படுத்தப்படுகிறது. ”ப்ளூ ரிப்பன் கேம்பைன்” ( BLUE RIBBON CAMBAIGN) என்ற திட்டம் அவற்றுள் ஒன்று. பாதிக்கப்பட்ட குழந்தை தன் பழைய உடல் நிலைக்கும் மனநிலைக்கும் திரும்ப உதவுகிறார்கள். கவுன்சிலிங்க் செய்கிறார்கள்.

டெஹ்ராடனில் இவ்வாறு பாதிக்கப்பட்டவர்களுக்காக ”சமாதான்” என்ற அமைப்பு பாடுபடுகிறது.


குழந்தைகள் தெய்வங்கள் என்று சொல்லப்படுவதுண்டு. அவர்களையும் கோயிலில் கம்பிக்குப் பின்னே பாதுகாப்பது போல பாதுகாக்க வேண்டியிருக்கிறது.


5 கருத்துகள்:

 1. பல சம்பவங்களில் வேலியே பயிரை மேய்வது கண்கூடாக தெரிகிறது. வேதனைப்படுவதை தவிர வேறென்ன செய்ய முடியும்?

  பதிலளிநீக்கு
 2. ஆம் தனபாலன் சகோ

  உண்மைதான் ஆறுமுகம். அய்யாசாமி.

  பதிலளிநீக்கு
 3. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
  என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

  பதிலளிநீக்கு
 4. மனதை ரணமாக்கும் செய்திகள்..
  மனிதம் மலர வேண்டும்.. மங்கையர் வாழ வேண்டும்!..

  இன்று தங்கள் தளம் வலைச்சரத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. வாழ்க நலம்..

  http://blogintamil.blogspot.com/2015/01/blog-post_29.html?

  பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...