எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

சனி, 16 மார்ச், 2019

மாசறு கற்பினாள் அகலிகை (பல்வேறு கோணங்களில் 19 சான்றோர்களின் கருத்துக்கள்) – ஒரு பார்வை.


மாசறு கற்பினாள் அகலிகை (பல்வேறு கோணங்களில் 19 சான்றோர்களின் கருத்துக்கள்) – ஒரு பார்வை.


அகலிகையைப் பற்றி முன் முடிபுகளோடு அணுகுபவர்கள் அவசியம் படிக்கவேண்டியது இந்நூல். இந்நூலில் 19 சான்றோர்களின் கருத்துக்களை பி எல் முத்தையா அவர்கள் 1988 இலேயே தொகுத்து வழங்க எண்ணி இருக்கிறார்கள. அதை அவர் மகன் முல்லை மு. பழனியப்பன் அவர் மறைவுக்குப் பின் ஏப்ரல் 2013 இல் சாத்யமாக்கி இருக்கிறார்கள்.
வால்மீகி, கம்பன், வெ. ப. சுப்ரமணிய முதலியார், ராஜாஜி, ச. து. சு. யோகியார், புதுமைப்பித்தன், தமிழ் ஒளி, கவிஞர் கம்பதாசன், வ. ரா, வி. திருவேங்கடாச்சாரியார், ஸ்ரீ சங்கரகிருப, பெ. கோ. சுந்தர்ராஜன், எம். வி. வெங்கட்ராம், அரு. ராமநாதன், க. கைலாசபதி,  ஜமதக்னி ஆகியோரின் பார்வையில் இதிகாசம், வெண்பா, கவிதை, கதை, கட்டுரை, நாடகம், சிந்தனைகள் தொகுப்பாகப் படைக்கப்பட்டிருக்கிறது இந்நூல்.

வால்மீகியில் அகலிகை உணர்ந்தே சம்மதிப்பதாகவும் அது இந்திரன் அகலிகையின் விருப்பத்தால் நிகழ்ந்தது என்றும் குறிப்பிடப்படுகிறது. ஆனால் கம்பனோ அகலிகையை உயர்த்தி இந்திரனை இகழ்ந்து படைத்திருக்கிறார்.
அகலிகை வெண்பாவில் வெ. ப. சுப்ரமண்ய முதலியார் நேர்மை தவறா நேரிழையாகப் படைக்கிறார். கோதமன் கண்டதும் இந்திரன் நிலையைக் கூறுமிடத்து ( 82 ஆவது பாடல் )
உட்கி, அடங்கி, ஒடுங்கி, நடுநடுங்கி,
வெட்கி, மெலிந்து, வெளிறி ஒளி – மட்கி
உலைந்தான் ,குலைந்தான், உடைந்தான், இசைந்தான்
அலைந்தான் மலைந்தான் அவன் என்று குறிப்பிடுகிறார்.
அகலிகையின் கதை படைக்கும் ராஜாஜி அதை வான்மீகியின் கதைப்படி படைக்கிறார். வான்மீகி ராமாயணத்தின் படி அகலிகை தெரிந்தே தவறு புரிந்ததாகவும் யார் கண்ணுக்கும் படாமல் அகலிகை தவம் செய்துவந்ததாகவும், இந்திரன் பூனையாகவும் இல்லை, அவன் உடம்பெல்லாம் யோனியாகவும் பின்னர் கண்ணாகவும் ஆகவில்லை எனவும் அதேபோல் அகலிகை கல்லாகவும் இல்லை,  கல்லின் மேல் ராமனின் கால்தடுக்கி அகலிகை உயிர்பெறவும் இல்லை எனக் குறிப்பிடுகிறார்.
ச. து. சு. யோகியார் என்னை பிரமிக்க வைத்தார். புதுக்கவிதையிலும் எதுகை மோனை சந்தத்தோடு அகலிகை பிறப்பதும் அவள் வாழ்வும் உயிருள்ள சொற்சித்திரம். இதைப் படிப்பவர்களே நிச்சயம் எப்பாலாயினும் அகலிகையை வெறி கொண்டு காதலிக்கக் கூடும். அவ்வளவு பேரழகுப் படைப்பு.
பூவாத பூங்கமலம் புரையாத மாணிக்கம்
மேவாத முத்தாரம், முளையாத செங்கரும்பு……
தோள் மிகுந்து துள்ள, துடை வளைந்து கூத்தாட
தாள் குழைந்து கெஞ்ச, தளிர்க் கரங்கள் கொஞ்ச….
சிலம்பு குலுங்குவதும் சதங்கை சிலம்புவதும்
அலம்புமணி மேகலைகள் அலம்புவதும் கேட்டானா ?
கன்னக் கதுப்புக் கனியூறும் செம்மலரைத்
தின்னத்தன் வாயூறித் திகைப்புற்று நின்றானோ ?
மாத்துளிரின் செம்மேனி மாம்பூ மணியாரம்
மாம்பழங்களாய்க் கனிந்த மார்பகத்தை வேட்டானோ ?
பசுவை வலம் வந்து கோதமன் மணந்து கொள்ள, கற்புக்கனலான ரிஷிபத்தினியாக அவள் வாழும் வேளையில் சூழ்ச்சியால் கோதமன் உருவில் இந்திரன் அவளை அடைய ( வானரசை அவள் திருமணத்துக்கு முன்பே காதலித்து இருந்ததால்)
காதலந்தான் கற்பழித்தான் கணவன் அவள் பொற்பழித்தான்
மாதரசை வேசையென மாநிலத்தார் ஏசலுற்றார்.
என்றும் காகுத்தன் கழல் தூசி பட அவள் மீட்சியும் வரைகிறார்.
புதுமைப் பித்தனின் சாபவிமோசனம் வித்யாசப் பார்வை. இராமன் பாதம் பட்டல்ல அவன் ஓடிவந்ததால் ஏற்பட்ட புழுதிப் படலத்தால் சிலையான அகலிகை உயிர்பெறுகிறாள். கல்லான அவள் இதயம் துடிக்கிறது. ”நெஞ்சினால் பிழை செய்யாதவளை ஏற்றுக்கொள்ளலே தகும்” என்கிறார் விசுவாமித்திரன் கூற்றாக புதுமைப்பித்தன்.
இதில் சதானந்தன் என்ற அவர்களது புத்திரன் பற்றிய விவரங்களும் இடம் பெறுகின்றன. ”சாப விமோசனம் கண்டாலும் பாபவிமோசனம் கிடையாதா” என்று அகலிகை நீராடப் போகும்போது மற்ற பெண்களின் கூற்றைக் கேட்டுக் குமுறுகிறாள்.
ஆனால் ராமனும் சீதையும் வனவாசம் முடிந்து பட்டாபிஷேகம் நடந்து தன்னைக் காண வந்ததும் அக்கினிப் பிரவேசம் பற்றிக் கேள்விப்பட்டுத் தன் நிலையில் சீதையை வைத்துப் பார்த்துத் துடிக்கிறாள். தன்னைத் தாயாக ஏற்றுக்கொண்ட ராமன் உலகத்தினருக்காக சீதையைத் தீக்குளிக்கச் சொன்னதை அவள் மனம் ஏற்றுக்கொள்ளவேயில்லை. கோதமன் அவளை ஆற்றுப்படுத்தத் தொட அவன் தொடுகையால் இந்திரன் போன்ற தோற்ற மயக்கம் ஏற்பட்டு அவள் மீண்டும் கற்சிலை ஆகிறாள்.
இரண்டாவதாக அகல்யை என்று ஒரு கதையும் எழுதி இருக்கிறார் புதுமைப்பித்தன். இலட்சியத் தம்பதிகளாக இருக்கிறார்கள். இந்திரன் தவறிழைத்தபின் , ”உணர்ச்சி தேவனையும் மிருகமாக்கி விடுகிறது. மனத்தூய்மைதான் கற்பு, சந்தர்ப்பத்தால் உடல் தூய்மை கெடுவதல்ல” என்று தெளிகிறார் கௌதமன்.
அகலிகை ஒரு ஆராய்ச்சி முன்னுரையில் தமிழ் ஒளி, இந்திரனை  ”காமச் சிறுபுழு நீ”  என்று யோகியின் அகலிகை சாடுவதையும் கம்பன் அவனைக் கடையனாக்கியும் காமக் கசடனாக்கியும் இருப்பதைக் கூறுகிறார். அறங்கொன்ற அற்பனான இந்திரன் கெடுத்ததை அறத்தின் நாயகன் இராமன் புதுப்பித்து மறுவாழ்வு அளிக்கிறான் என்கிறார். கோதமனும் சூழ்ச்சி செய்தவன்தான். பசுவை உலகமாகச் சுற்றி வந்து அகலிகையை மணந்தவன் என்று சாடுகிறார். இவர் இந்திரனை ஞாயிறு என உயர்த்தி அகலிகையைத் தாரகை என புகழ்ந்து கோதமனை மின்மினி என இகழ்கிறார். !
கல் சொன்ன கதை என்று அடுத்துக் கவி படிக்கிறார் கவிஞர் தமிழ் ஒளி. இந்திரனை உயர்த்தி கோதமனைத் தாழ்த்திக் கவி படித்துள்ளது வித்யாசமான பார்வை. !
கவிஞர் கம்பதாசன் கற்கனி என்ற தலைப்பில் 1957 இல் வெண்பா பாடியுள்ளார்.
முதிய கிழவரும் சிறுமிதனை – மணம்
முடித்தது முதலினில் குற்றமன்றோ ?
புதிய பருவ மனைவிதன்னைக் – கூடிப்
புணரா திருந்ததும் குற்றமன்றோ ?
எந்த விருந்தினன் வேந்தெனினும் – மது
வார்த்துக் கொடுத்தால் மதிமயங்கி
எந்தக் குலத்துள பெண்தனையும் – கண்
இருளவே தொட்டிட எண்ணானோ ?
என்று அதிதியாய் வந்த இந்திரனுக்கு தேறலை வழங்கியதால் ஏற்பட்ட குற்றமெனவும், முந்தைய ஆரியர் விருந்தினருக்கு மனைவியை மனமொப்பி ஈந்தது வேதமுணர்ந்தோர் அறியாரோ எனவும் அகலிகையின் வாய்மொழியாய்க் கவி படைத்துள்ளார்.
வ. ரா. அவர்கள் குற்றவாளி யார் என்னும் தலைப்பில் நாடகம் அமைத்துள்ளார். படைப்புக் கடவுள் பிரம்மா படைத்த பேரழகி அகலிகை. அவளை மணக்க விரும்புவோர் ஒரு நாழிகையில் ஈரேழு பதினான்கு லோகத்தையும் மும்முறை சுற்றி வந்தால் மணமுடிப்பதாக வாக்குக் கொடுக்கிறார். ஏற்கனவே அகலிகையும் இந்திரனும் காதல் வயப்பட்டு இருக்கின்றார்கள். அதனால் அவன் தன் ஐராவதத்தில் ஏறி உலகைச் சுற்றக்கிளம்புகிறான். ஆனால் தன்னைத்தானே கௌதமர் மூன்றுமுறை சுற்றி வந்து அகலிகையை அடைந்ததாகக் கூறுகிறார். அகலிகையோ அவருடைய ஆசிரமத்தில் கல்லாக வாழ்ந்ததற்கு இந்திரனின் உறவு மூலம் கல்லாக சாபம் பெற்றதே மேல் என்கிறாள்.
கௌதமன் தவம் செய்பவர், அவருக்கு ரதி போன்ற அழகுடைய, வாழ்வின் ருசிகளில் விருப்பம் உள்ள அகலிகை எதற்கு, தெய்வ யானையை அடைந்த கணபதி இங்கிதம் தெரிந்து தன் தம்பியாகிய சுப்ரமண்யத்துக்கு விட்டுக் கொடுத்த மாதிரி கௌதமன் நடந்து கொண்டிருக்க வேண்டும். என்கிறார் விதுரர். இது வ. ரா. அவர்களின் கோதைத் தீவு நாவலில் இருந்து எடுத்துக் கையாளப்பட்டிருக்கிறது.
வி. திருவேங்கடாச்சாரி எம். ஏ. எல். டி அவர்கள் எழுதிய அகல்யா சாப விமோசனம்  வித்யாசமான கோணத்தை முன்வைக்கிறது. தமயந்தி, சீதை, நளாயினி பற்றிக் குறிப்பிடப்பட்டிருக்கும் இராமாயணத்தில் அகல்யையின் கதை ஏன் படைக்கப்பட்டிருக்கிறது என்றால் பதிவிரதைகளும் சில சமயம் புத்தி மாறலாம். அப்போது சில கஷ்டங்களை அனுபவித்து பாபத்தைப் போக்கி சுத்தமானவளாகலாம் என இக்கதையைச் சேர்த்திருப்பதாகக் கூறுகிறார். தாரை பிரகஸ்பதியையும், சிந்து நதி தீரத்தில் கர்ப்பமான பெண்களையும் ( தேவலரிஷியின் கூற்றாக )  இவர் முன்வைக்கிறார்.
இவரின் இன்னொரு பார்வையும் ஆச்சர்யப்பட வைத்தது. இரவுக்கு அகல்யா என்று பெயர். கௌதமன் என்றால் சந்திரன். சூரியனுக்கு இந்திரன் என்றொரு பெயரும் உண்டு. இரவும் சந்திரனும் ( அகல்யையும், கௌதமனும் ) கணவனும் மனைவியுமாக வர்ணிக்கப்பட்டு உல்லாசமாக இருக்கும்போது சூரியன் உதிக்கிறான். இரவு முடிந்துவிடுகிறது. – இதை தயானந்த சரஸ்வதி எழுதி இருப்பதாகக் கூறுகிறார். புராணங்களின் உட்கருத்தை உணர்ந்து தவறு செய்தவர்களுக்கு தகுந்த தண்டனை அளித்து அதன் பின் சேர்த்துக் கொள்ளவேண்டும் என்கிறார் இவர்.
ஆர். ரங்காசாரியார் அஹல்யையின் கதையில் வீழ்ச்சி கதை, உயர்வு சரித்திரம், சிறப்பியல்புகள் எனக் கொடுத்துள்ளார். பிறன்மனை நயந்தாலே அவன் ஆண்மையில்லாதவன் என்றும், மனம் ஒப்பித் தவறு புரிந்தாலும் மனையாட்டி மேல் சினத்துடன் காதலும் கருணையும் கொண்டு அவளுடன் சேரும் நாளையும் குறிப்பிட்டு கோதமன் செல்வதையும் சிலாகிக்கிறார்.  

பின்னர் தனித்தனியாக சிவனுக்கும் உமைக்கும் கௌதமன், அகலிகை இருவரையும் ஒப்புமை காட்டி இருவரும் அவர் போல  தவ வாழ்வில் ஈடுபடுவதைக் கூறுகிறார். தாமச குணத்துக்கு எடுத்துக்காட்டாய் தாடகையையும் ராஜஸ குணத்துக்கு எடுத்துக்காட்டாய் அகல்யையையும் படைத்து அதன் பின் ஸத்வகுணம் பொருந்திய சீதையுடன் இராமனைச் சேர்க்க இவர்கள் படைக்கப்பட்டிருக்கிறார்கள் என்கிறார் இவர்.
ஸ்ரீ சங்கர கிருப அஹல்யை – இராமாயண சர்ச்சை என்ற தலைப்பில் எழுதி இருக்கிறார். அஹல்யை, த்ரௌபதி, ஸீதை, தாரை, மண்டோதரி ஆகிய ஐவருமே மேலோட்டமாக அவதூறுக்கு ஆளாகி இருந்தாலும் ஈஸ்வர தத்துவம் அறிந்த பதிவிரதைகள் என்கிறார். தவறைத் திருத்திக்கொண்டவர்களைப் பதிவிரதைகளாக ஏற்கலாம் தப்பில்லை என்பதை இவர் மூவர் வாக்குமூலமாக நிறுவுகிறார்.
சிட்டி பெ. கோ. சுந்தராஜன்  மாசறு கற்பினாள் என்ற தலைப்பில் எழுதி இருக்கிறார். இதுவே புத்தகத் தலைப்பு.  அகல்யை, கௌதமன் இருவரும் ஆத்மவிசாரம் செய்கிறார்கள். உணர்ச்சியுடன் போர்தொடுத்தல் பேசப்படுகிறது. முடிவில் ஞானம் மடிந்த கௌதமனை வெறுத்துப் பதுமை போல் அவள் சேவை புரிந்து வருகிறாள். கடைசியில் இரண்டு யுவர்கள் வர ( இராம லெக்ஷ்மணன் ) விசுவாமித்திரன் வாய்மொழி கேட்டு மனைவியைச் சேர்த்துக் கொள்கிறான்.
எம் வி வெங்கட்ராமின் கோடரி உக்கிரம். இதில் சதானந்தனோடு சிரகாரி என்ற மகனும் அகல்யை, கௌதமன் தம்பதிக்கு இருப்பதாகக் காட்டப்படுகிறான். காட்சிப்பிழையும் கனவுப் பிழையுமாக மகனிடம் கோடரி கொடுத்து வெட்டச் சொல்லிவிட்டு கௌதமன் கானகம் ஏக,  இயல்பிலேயே தாமஸ குணம் கொண்ட சிரகாரியால் அனைத்தும் சரியாகிறது. இது ஒரு குறு நாவல்.
அரு. ராமநாதனின் அகல்யாவில் பிரம்மாவின் பேரெழில் படைப்பான அவளை சூரியனும் சந்திரனும் தாரகைகளும் அவளை முத்தமிட்டு வளர்க்கிறார்கள். ஆயினும் இந்திரனின் முத்தத்தில் வித்யாசம் காணும் அவள் அவனைக் காதலிக்கத் துவங்க சூழ்நிலையோ அவளைக் கௌதமன் மனைவி ஆக்குகிறது. இன்பத்தின் கவர்ச்சிக்கும் மனோதர்மத்தின் அலறலுக்கும் நடுவில் அவளின் உணர்வுகளை வடித்துள்ளார் இராமநாதன். ஏகபத்தினி விரதன் ஒருவன் வரும்போது அவள் புனர்ஜென்மம் அடைவாள். அதுவரை கருங்கல் சிலையாவாள் என்று சாபமிடுகிறார் கௌதமன்.
ச. கைலாசபதியின் அகலிகையும் கற்பு நெறியும் பல்கோணப்பார்வை. பழைய காப்பியக் கதைகளை நவீனத்துவமாக எழுதிப்பார்ப்பது குறித்து எடுத்துக் காட்டுக்களோடு கூறியுள்ளார். கோவிந்தன் எனப்படும் விந்தன் ( பாலும் பாவையும் – நவீன அகலிகை கதை ) , ஜெயகாந்தன் ( அக்கினிப் பிரவேசம் )  ஆகியோர் புதுமைப் பார்வையில் படைத்திருப்பதை ஐரிஷ் எழுத்தாளர் ஜேம்ஸ் ஜோய்ஸ் மற்றும் அமெரிக்க நாடகாசிரியர் ஓநீல் ஆகியோரின் எழுத்துக்களோடு ஒப்புமைப் படுத்துகிறார்.
கருத்து முதல் வாதம், வர்க்க சமுதாயம் தோன்றிய பின் பெண்ணினம் பெற்ற இடம். , ஆணின் யதேச்சதிகாரம், தாயுரிமையை ஒழித்துத் தந்தை உரிமையைப் புகுத்தியது, ஆண் தலைமை, அரசியல் அதிகாரம், மத அதிகாரம், வம்ச அதிகாரம், ஆண் அதிகாரம் ஆகியவற்றைச் சாடுவதோடு சாப விமோசனம் பெற பெண்ணுக்குத் தொழிலோ உத்யோகமோதான் முடிவு என்னும் கருத்தை முன் மொழிகிறார். பொதுவான சமுதாய மாற்றமும் பெண்ணுக்குப் பொருளாதார விடுதலையும் ஏற்பட வேண்டும் என்கிறார்.
கம்பரின் அகலிகை பற்றி ஜமதக்னி வான்மீகியின் சம்ஸ்க்ருத ஸ்லோகங்களோடு பகிர்ந்திருக்கிறார். பால காண்டத்திலும் பின்னர் உத்தர காண்டத்திலும் அகலிகை கதை வருகிறது. பிரம்மன் இராவணனிடம் சிறைபட்ட இந்திரனை மீட்டு வந்து அவனிடம் இவ்வாறு கூறுகிறான். ”அஹல்யம் என்றால் உறுப்பு அழகில் குறைபாடு இன்மை. அப்படிப்பட்ட பேரழகியைப் படைத்தேன். மணமாகிச்சென்ற அவளை நீ சிதைத்தாய். அதனால்தான் உனக்கு இந்த அவமானம். ” ”அவளோ கௌதமனிடம் “ ந காம கராத் “அறிந்து செய்த குற்றமில்லை என்று மன்னிப்பு வேண்டினாள். கௌதமனோ இராபிரான் வரும்வரை புழுதியிலே கிடப்பாய் என்று இமயம் சென்றுவிட்டான்”  என்கிறார்.
கம்பரோ விஸ்வாமித்திரர் வாய்மொழியாக “ நெஞ்சினாற் பிழைப்பிலாதாள் நீ அழைத்திடுக “ என்று ”மாசறு கற்பின் மிக்க அணங்கினை அவன் கையீந்து…..” குற்றமற்ற கற்பின் மிக்க அகலிகையைக் கௌதமன் கையில் ஒப்படைத்ததாகக் கூறுகிறார். இராமன் வந்து சாப விமோசனம் பெறும்வரை பல்லாண்டுகள் அகலிகை வருந்தக் கூடாது என்றுதான் அவளைக் கம்பன் “ கல்லியல் ஆதி “ என்று சாபமிட்டதாகக் கூறுகிறார் ஜமதக்கினி. !  
அப்பப்பா எவ்வளவு விதமான பார்வைகள். !!! மொத்தத்தில் ஒரு கதைக்குப் பத்தொன்பது விதமான திரைக்கதை எழுதியது போலிருக்கிறது இத்தொகுப்பு. மேலும் பல இலக்கியவாதிகளின் புதுமை எண்ணங்களையும் அறிந்து வியப்பு ஏற்பட்டது.  
அநேகமாக அனைத்திலும் கம்பீரமாகவே பார்க்கப்படுகிறாள் அகலிகை. கோதமனின் தந்திரமும், இந்திரனின் சூழ்ச்சியுமே வெறுப்பாகப் பார்க்கப்படுகிறது. கைலாசபதியின் ஆய்வு நிச்சயம் அனைவரும் வாசிக்க வேண்டிய ஒன்று.
நூல்:- மாசறு கற்பினாள் அகலிகை (பல்வேறு கோணங்களில் 19 சான்றோர்களின் கருத்துக்கள்)
பதிப்பாசிரியர் – பி. எல். முத்தையா.
பதிப்பகம் – முல்லை பதிப்பகம்
விலை – ரூ 100/- 

1 கருத்து:

  1. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...