எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

புதன், 27 மார்ச், 2019

அகம்பாவம் தந்த அவமானம். தினமலர் சிறுவர்மலர் - 10.

அகம்பாவம் தந்த அவமானம்
மக்குக் கிடைக்கும் எந்த நன்மைக்கும் நாம் நன்றி உடையவர்களாக இருக்கவேண்டும். அதை விடுத்து நாம் பெரிய ஆள் அதனால்தான் எல்லாம் நடக்கிறது., எல்லாரும் பணிகிறார்கள், சேவகம் செய்கிறார்கள் என்று அகந்தையோடு நினைக்க கூடாது. அப்படி அகந்தையோடு நினைத்தான் ஒருவன் அதனால் அவனுக்கு அவமானம் மட்டுமல்ல உயிர் பயமும் நேர்ந்தது. அவன் யார் என்ன தவறு செய்தான் எனப் பார்ப்போம் குழந்தைகளே.
ஞ்சபாண்டவருள் ஒருவன் அர்ஜுனன். இவன் குந்தியின் மகன். இவனுக்குத் தருமன் என்ற அண்ணனும், பீமன், நகுலன், சகாதேவன் ஆகிய தம்பிமாரும் உண்டு. அஸ்தினாபுர அரண்மனையின் ஆட்சி உரிமைப் போட்டியில் குருஷேத்திர யுத்தம் கௌரவர்களுக்கும் பாண்டவர்களுக்கும் நடைபெற்றது.
இருவருமே பெரியப்பா சித்தப்பா மக்கள்தான் என்றபோதும் கௌரவர்களுக்கு நாட்டின் இம்மி இடத்தைக் கூட பாண்டவர்களுக்கு விட்டுக் கொடுக்கும் மனப்பான்மை இல்லாததால் யுத்தம் வந்தது. அப்போது கௌரவர்கள் பாண்டவர்கள் இருவருமே கண்ணனின் துணை நாடிச் சென்றார்கள். துரியோதனன் கண்ணனின் படை பலம் முழுவதையும் தனக்காகப் போரிடுமாறு கேட்க அர்ஜுனனோ கண்ணன் மட்டும் தங்கள் பக்கம் இருந்து போரிட்டால் போதுமெனக் கேட்கிறான்.
இதற்கு ஒத்துக் கொண்ட கண்ணன் குருஷேத்திர யுத்தத்தின்போது அர்ஜுனனுக்கு தேரின் சாரதியாகி கீதா உபதேசம் செய்கிறான். முடிவில் பாண்டவர்கள் ஜெயிக்கிறார்கள். இதனால் அர்ஜுனனுக்கு அகந்தை வந்தது. ’தெய்வமே எப்போதும் என் கூடவே இருக்கிறது ஆகையால் நன்றி என்று நினைத்தான் இல்லை “ “தெய்வமே எனக்குத் தேரோட்டியதே அப்படியானால் இந்த உலகிலேயே நான்தான் மிகச் சிறந்த பக்திமான். என்னைவிட கண்ணனுக்கு சிறந்த பக்திமான் யாருமே இருக்க முடியாது” என்று அகம்பாவமாக நினைத்தான்.

நினைத்ததை எல்லாம் படிக்கக் கூடியவனாயிற்றே கண்ணன். அர்ஜுனனின் அகம்பாவத்தை அடக்க அவர் ஒரு உபாயம் செய்தார்.
“அர்ஜுனா. நான் எனது சிறந்த பக்தையான பிங்கலை என்னும் மூதாட்டியைப் பார்க்கப் போறேன் . நீயும் வருகிறாயா ?”
“என்னது என்னைவிட சிறந்த பக்தையா அப்படியானால் நானும் அவளைப் பார்க்க வேண்டுமே “ என்று உடன்கிளம்புகிறான் அர்ஜுனன்.
”அர்ஜுனா நாம் இப்படியே போனால் நல்லது அல்ல. அதனால் மாறுவேடத்தில் போவோம். ” என்று கூற இருவரும் பெண்கள் போல் உடையணிந்து பிங்கலையைப் பார்க்கச் சென்றார்கள்.
மிக அழகான சுத்தமான குடிலில் இருந்தாள் அந்த மூதாட்டி பிங்கலை. “கிருஷ்ணா கிருஷ்ணா “ என்று நொடிக்கொருதரம் சொல்லிக் கொண்டிருந்தாள். அவளிடம் “ எங்கள் கால்கள் வலிப்பதால் உங்கள் குடிலில் சிறிது இளைப்பாறிச் செல்லலாமா அம்மா ?” என்று கேட்டார் கண்ணன்.
“தாராளமாக உள்ளே வாருங்கள்” என்று அழைத்துச் சென்ற அவள் அவர்களுக்கு உண்டியும் நீரும் கொடுத்து உபசரித்தாள். அவளது பூஜையறையில் வாசனையான பூமாலை அணிந்த கிருஷ்ணரின் சிலையும் அவரின் காலடியில் மூன்று பளபளப்பான கத்திகளும் இருப்பதைக் கண்ணுற்றார் கண்ணன்.
“அம்மா. நீங்கள் கிருஷ்ண பக்தை போலிருக்கிறது. ஆனால் அவர் காலடியில் ஏன் கத்திகளை வைத்திருக்கிறீர்கள்? “ என்று கேட்டார் கண்ணன்.
“இவை என் கிருஷ்ணனைக் கொடுமை செய்த மூன்று விரோதிகளுக்காக வைத்துள்ளேன். அதை நிறைவேற்ற தினம் கிருஷ்ணனிடம் வேண்டி வருகிறேன்.”
“யார் அம்மா அவர்கள் ?” கேட்கிறார் கிருஷ்ணர்.
“தவிட்டு அவலை என் அழகுக் கிருஷ்ணனுக்கு அழுக்குத் துணியில் கட்டிவந்து கொடுத்தானே மாபாவி அந்த குசேலன், அவன் என் முதல் விரோதி. அவனைக் கொல்ல ஒரு கத்தி. “  
“இரண்டாவது.. ?” எனக் கேட்டார் கிருஷ்ணர்.
“கௌரவர் சபையில் மானபங்கப்படும்போது திரௌபதி ’கிருஷ்ணா காப்பாற்று’ என்று அழைக்க புடவை கொடுத்தான். அதைக் களைந்த துச்சாதனனே மயக்கம் போட்டு விழுந்தானே. கை உரிய உரியப் புடவை கொடுத்த கிருஷ்ணனின் கை எவ்வளவு வலித்திருக்கும். கண்ணனைக் கொடுமை செய்த அந்தப் பாதகி திரௌபதி என் இரண்டாவது விரோதி. அவளைக் கொல்ல இரண்டாம் கத்தி. “
”மூன்றாவது ?’ எனக் கேட்டது அர்ஜுனன். அவனுக்கு எதிர்பார்ப்பும் பயமும் ஒருங்கே தோன்றியது.
“வேறு யார் ? என் கிருஷ்ணனையே தனக்குத் தேரோட்ட வைத்தானே அந்தக் கொடும்பாவி அர்ஜுனனுக்குத்தான் அந்த மூன்றாவது கத்தி.. அவன் மட்டும் அம்புடட்டும்..” என்று சொல்லி கோபமாக முகத்தை நெரித்தபடி மூன்றாவாது கத்தியைச் சாணை தீட்டத் தொடங்கினாள். பயத்தில் அர்ஜுனனுக்கு உடம்பெல்லாம் நடுங்கியது. அவமானமாகவும் இருந்தது.  
கண்ணனோ அவளை சமாதானப் படுத்திக் கொண்டிருந்தார். “ அம்மா பிங்கலை, குசேலன் ஏழை என்பதால் தன்னிடம் இருந்ததைக் கொடுத்தான், தங்கையைக் காப்பது அண்ணனின் கடமை என்பதால் திரௌபதியைக் கண்ணன் காத்தான், அர்ஜுனன் பக்கம் இருப்பேன் என உறுதிகொடுத்ததால் குருஷேத்திரப் போரில் கண்ணன் தானே தேரோட்டினான். இவர்கள் மூவரையும் மன்னித்துவிடு “ எனக் கேட்க , யோசித்த பிங்கலை கத்திகளைத் தூக்கிப் போட்டாள்.
“ஆஹா இவ்வளவு பக்தியா ? இவள் பக்தியின் முன் நம் பக்தி எல்லாம் எம்மாத்திரம்? நம்மைப் பெரிதாய் நினைத்தோமே ?” இதை நினைத்ததும் வெட்கினான் அர்ஜுனன். அவன் அகந்தை தணிந்தது. எனவே எப்போதும் எல்லோருடனும் இணக்கமாக இருப்பது மட்டுமல்ல. அகம்பாவம் கொள்ளாமலும் இருக்கவேண்டும் என்பதை உணர்வோம் குழந்தைகளே. 

டிஸ்கி:-  இந்தக் கதை இதிகாச புராணக் கதைகள் என்ற தலைப்பில் 22 . 3. 2019  தினமலர் சிறுவர்மலர் இதழில் இடம்பெற்றுள்ளது. நன்றி தினமலர் சிறுவர் மலர், தனது அழகான ஓவியங்களால் கதைக்கு எழில்கூட்டும் ஓவியர் அஷோக் & எடிட்டர் தேவராஜன் ஷண்முகம் சார்.

டிஸ்கி 2. அரும்புகள் கடிதத்தில் ”ஆணி மாண்டவ்யர்” கதையைப் படித்து தவறைத் திருத்திக்கொண்டதாகக் கூறிய தக்கோலம் வாசகர் எம்.பயாசுதீன் அவர்களுக்கு நன்றி. 

3 கருத்துகள்:

  1. சுவாரஸ்யமான கதை.

    மகாபாரதக்கதைகள் எப்போதுமே சுவாரஸ்யம்.

    வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  2. நன்றி ஸ்ரீராம்

    நன்றி வெங்கட் சகோ

    வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...