எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

புதன், 6 மார்ச், 2019

சமூகவலைத்தளங்களும் பெண்களும்.

சமூகவலைத்தளங்களும் பெண்களும்.
கடந்த இருபது ஆண்டுகளில் சமூக வலைத்தளங்களில் பெண்களின் செயல்பாடு அதிகரித்துள்ளது. கம்ப்யூட்டரில் ஈமெயில் அனுப்புவதே சிரமமாய்ப் பெண்கள் நினைத்தது ஒரு காலம். இன்றோ கைபேசியில் இணையம் வந்தபிறகு முகநூல், வலைத்தளம், வாட்ஸப், ட்விட்டர், ஸ்ம்யூல் ( பாடல் இணையம் ), யூ ட்யூப், டிக்டாக், ப்லாக்ஸ்பாட், தனி வெப்சைட்  எனப் பலவற்றில் பெண்கள் புகுந்து வெளுத்து வாங்குகிறார்கள்.
பேசுவதற்கும் தகவல் அனுப்புவதற்கும் உபயோகப்பட்ட செல்போன் இணையத்தையும் குறைந்த மாதாந்திர தொகையில் வழங்க ஆரம்பித்த பின்பு பெண்களின் உள்ளங்கையில் உலகம் உருள ஆரம்பித்தது. இதனால் ஏற்பட்ட சாதகங்களும் பாதகங்களும் அநேகம்தான்.
முதலில் சாதகங்களைப் பார்ப்போம். முதலில் தனிநபர் & குடும்பப் பயன்பாடு. கையில் செல்ஃபோன் இருப்பதால் வெளியே செல்லும் பெண்கள் தங்கள் இருக்குமிடத்தைச் சொல்ல முடிவதால் பாதுகாப்பு பயம் குறைகிறது. ரூட் தெரியாத இடத்திலும் தானே மேப்பிங் மூலம் வண்டியையோ காரையோ ஓட்டிச் சென்று வர முடிகிறது. குடும்ப மெயில்கள், குடும்பப் புகைப்படங்கள், விழாக்கள், நிகழ்வுகளை அவ்வப்போதே அறிவித்து அனுப்ப முடிகிறது. திருமண, குடிகுபுதல், இன்விடேஷன்கள், வாழ்த்துகளை உடனே பலருக்கும் ஒரு தொடுகையில் அனுப்பலாம். டாகுமெண்ட்களை அஞ்சலில் அனுப்பினால் தொலைய வாய்ப்பிருக்கிறது. அதை செல்ஃபோனில் ஒரு க்ளிக் செய்துஅனுப்பி விடலாம். வயதான பெண்கள் தங்கள் பிள்ளைகளுடன் வாட்ஸப் மூலம் எந்த நாடாக இருந்தாலும் ஒருவர்க்கொருவர் முகம் பார்த்துப் பேசலாம். பணம் பெறவோ செலுத்தவோ வங்கிக்குச் செல்ல வேண்டாம்.

இணையப் பயன்பாட்டினால் பெண்கள், குழந்தைகள் ஆகியோருக்கான அச்சுறுத்தல் இருந்தாலும் சாதிக்கும் பெண்களும்  இளந்தொழில் முனைவோரும் இதனால் பயன் அடைந்துள்ளனர். உணவு ஆர்டர் செய்ய, ட்ரெயின் பஸ் டிக்கெட் புக் செய்ய, சினிமா டிக்கட், ஓலா, சேஃப்ட்ராக் போன்ற டாக்ஸிகள் புக் செய்ய, வீட்டு உபயோகப் பொருட்கள், மளிகைகள், காய்கறிகள், மருந்துகள் வாங்க,  என எல்லாவற்றுக்கும் இப்போது அப்ளிக்கேஷன் இருக்கு. எல்லாமே இன்று ஒரு செல்ஃபோனில் ஒரு பட்டனைத் தட்டினா உங்க கைக்கிட்டயே வரும்.
நமது வங்கிக் கணக்கில் பணம் இருந்தால் அதன் எண்ணைக் கொடுத்து இவ்வசதிகளைப் பெண்கள் பெறுவது எளிதாயிருக்கிறது. வயதான பெண்களும் சரி, மற்ற இளவயதுப் பெண்களும் சரி இருந்த இடத்தில் இருந்தே இவற்றை செல்ஃபோனில் அப்ளிக்கேஷன் மூலமாக அனுப்புவதன் மூலம் இவ்வசதிகளை எளிதாகப் பெறலாம்.
செல்ஃபோனிலே டவுன்லோட் செய்து யூ ட்யூபில் பாட்டுக் கேட்கலாம், சினிமா பார்க்கலாம், இன்று டிவி, விசிஆர், விசிடி, டேப்ரெக்கார்டர், வாக்மென், கைக்கெடிகாரம், பேஜர், ரேடியோ, கால்குலேட்டர், கம்ப்யூட்டர், லாண்ட்லைன் தொலைபேசி, வாழ்த்து அட்டை, அஞ்சல், கூரியர், டாக்குமெண்ட் அனுப்புவது, ஸ்கேனிங், ப்ரிண்டிங் எல்லாம் வழக்கொழிந்து வருகிறது. இதுமட்டுமல்ல. ஜொஹன்னா ப்ளாக்கி என்ற தளம் இணையப் பயன்பாடு ஆண் பெண் என்ற பாலின வேறுபாட்டைக் குறைத்திருக்கிறது என்று கணிப்பு சொல்கிறது. மருத்துவ வசதி, சுற்றுலா பயன்பாடு மட்டுமல்ல பெண்கள் டெக்னிக்கலாகவும் இணையத்தில் தானே எல்லாம் கற்றுத் தேர்ச்சி பெற்று வருகிறார்கள்.
செல்ஃபோன் ஒன்று போதும். புத்தக வாசிப்பு கூட குறைந்து வருகிறது. எல்லாருமே கிண்டில் அல்லது அமேசான், அல்லது கூகுளில் சென்று தேடி வாசித்து வருகிறார்கள். ஆன்லைன் புத்தகங்கள் விலைக்கும் இலவசமாகவும் வாசிக்கக் கிடைக்கின்றன. வாசிக்க மட்டுமல்ல , எழுத்தாற்றல் உள்ள பெண்மணிகள் தங்கள் கதை கவிதை கட்டுரைகளை எழுதி இணையத்தில் பிரசுரிக்கலாம். பத்ரிக்கைகளுக்கு அனுப்பிக் காத்திருக்க வேண்டாம்.
தொழில் முனைவோரான பெண்கள் பல்வேறு வகையான குழுமங்களை எளிதாகத் தொடர்பு கொண்டு தங்கள் பொருட்களை விளம்பரப்படுத்திக் கொள்ளலாம். விற்பனையும் செய்யலாம். நுகர்வோர் வியாபாரி ஆகிய இருவரும் பெண்களாயிருக்கும் பட்சத்தில் தாங்கள் இருக்கும் இடத்தை விட்டு அசையாமல் தங்களுக்கு வேண்டியதைப் பெற சமூக வலைத்தளங்கள் உதவுகின்றன. வெளியே செல்ல துணை வேண்டும் , போய் வரும் ஆட்டோ போன்ற பயண செலவு, தனியாகச் செல்வதால் ஏற்படும் பயம், நேரம் காலம் பார்த்து வெளியே செல்லவேண்டிய கட்டாயம் ஆகிய இடைஞ்சல்களை இந்த இணைய வசதி தீர்த்து வைக்கிறது.
முகநூல் நட்புகள் போன்றவை நல்லவையாக அமையும் பட்சத்தில் அவை பெண்களின் திறமையான செயல்பாடுகளைப் போற்றுவதும், அவர்கள் இன்னும் பல்வேறு சிறப்புக்களை எய்துவதும் நடக்கிறது. ஓரளவு வயதான பெண்களின் தனிமையையும் அச்சத்தையும் போக்குகிறது. பொழுதுபோக்காக அமைகிறது. சுரொயா ஃப்ராக்யுரியோ என்னும் இணையதளம் இளம் பெண்கள் இணையம் மூலம் பார்க்கும் பொருட்களை எல்லாம் வாங்கிக் குவிப்பதால் ஆன்லைன் கன்ஸ்யூமர் மார்க்கெட் ஜெகஜ்ஜோதியாக உயர்ந்திருக்கிறது என்று புள்ளி விவரம் கூறுகிறது..
ஓரளவு பேச்சாற்றல், எழுத்தாற்றல், உள்ள பெண்ணுக்கு பல்வேறு இடங்களில் சிறப்புக் கிடைப்பதோடு அவர் திறமையைக் குன்றிலிட்ட விளக்காக்குகிறது சமூக வலைத்தளம். எனவே அவர் இன்னும் தன்னைக் கூர் தீட்டிக் கொண்டு ஜொலிக்கத் துவங்குகிறார். இதன் மூலம் இல்லத்தரசிகளாய் இருக்கும் பெண்களும் ரேடியோ, பத்ரிக்கை, டிவி ஆகியவற்றில் பங்களிப்புச் செய்யவும் குறிப்பிட்ட தொகை சம்பாதிக்கவும் முடிகிறது. பெண் படிப்பாளிகளும் படைப்பாளிகளும் பெருகிப் போனது இந்த சமூக வலைத்தளங்களால்தான்.
இன்று ஆண்களுக்கு ஈடாக ஏன் அவர்களை விடவும் பெண்கள்தான் அதிக அளவில் சோஷியல் நெட்வொர்க் எனப்படும் இணையத்தையும் சமூக வலைத்தளங்களையும் பயன்படுத்துகிறார்கள். பெண் தொழில் அதிபர்களும் இதன்மூலம் பெரிய அளவில் பெயரும் புகழும் பணமும் சம்பாதிக்கிறார்கள். இன்று அனைவருக்கும் பெண்களின் எழுச்சி ஒரு பயத்துடன் கூடிய எதிர்பார்ப்பை உருவாக்கி இருக்கிறது என்றால் மிகையில்லை.
இனி இந்த இணையப் பயன்பாட்டில் ஏற்படும் தொல்லைகளைப் பார்ப்போம். ஆணும் பெண்ணும் சமம் என்று வளர்க்கப்பட்டாலும் பெண் என்பவள் ஈர்ப்புக்குரியவளாகவே படைக்கப்பட்டிருப்பதால் சமூக வலைத்தளங்கள் மூலம் சில பெண்கள் சிக்கல்களையும் சந்திக்க நேர்கிறது. எல்லா நண்பர்களும் நல்லவர்களாக இருந்தாலும் சிற்சில சந்தர்ப்பங்களில் அவர்கள் மூலமும் பெண்கள் இடர்ப்பாடுகளைச் சந்திக்க நேருகிறது.
பெண்களின் புகைப்படங்கள் தவறாகப் பயன்படுத்தப்படல், அவர்களிடம் தவறான இரகசிய உரையாடல் நிகழ்த்த முற்படும் ஆண்கள், அவர்களைத் தவறாக வழிநடத்தும் நபர்கள், முறையற்ற உறவுகள், திருமணம் தாண்டிய உறவுகள், அதனால் உருவாகும் முறையற்ற குழந்தைகள், பொறுப்பற்ற சமூக பங்களிப்பு, அதன் மூலம் வன்முறை ,கொலை, கொள்ளை, கற்பழிப்பு ஆகியன ஏற்படவும் ஏதுவாகிறது. மேலும் தவறாக அனுப்பப்படும் வாட்ஸப், முகநூல் தகவல்கள் அவர்களை மூட நம்பிக்கையிலோ, அல்லது தவறான அனுமானத்திற்கோ செலுத்துகிறது.
உலகை அறியும் சிலர் உணர்வு பூர்வமாக அன்றி அறிவுபூர்வமாகவும் சிந்திக்கத் தொடங்கி இருக்கிறார்கள் என்பதும் உண்மை. சிலர் விடுதலை என்பதையும் பெண் சுதந்திரம் என்பதையும் கட்டற்ற முறையில் செயல்படுத்துவதும் நிகழ்கிறது. குடித்தல், புகைத்தல், விரும்பியவருடன் இணைந்து வாழ்தல், வெவ்வேறு உறவுகளை நாடுதல், பாலின்பம் பற்றிய கருத்துக்களைப் பகிர்தல், மத இன ஜாதி சண்டை நிகழ்த்துதல், சமூகத்துக்கு எதிராக தனக்குச் சரி என்று தோன்றுபவற்றை எழுதி அடுத்தவருக்கு அதிர்ச்சியளித்தல் ஆகியன நிகழ்கிறது. இந்தியக் கட்டமைப்பான குடும்பங்கள் இதனால் ஆட்டம் காண்கின்றன. தங்கள் சுதந்திரம் பெரிதென்று எண்ணும் ஆணும் பெண்ணும் திருமணம் செய்யவே யோசிக்கிறார்கள். பெருகிவரும் விவாகரத்து மற்றும் கணவன் மனைவிக்கிடையேயான புரிதலின்மை அதிகரிக்கிறது. இணையத் தொடர்பு இல்லறத்தில் இணைந்தவர்களை சிலசமயம் பிரித்துவிடுகிறது.  
தவறான நபர்களின் தொடர்பு ஏற்படுவதால் குழந்தைகளைப் பெற்ற தாயே கொல்வதும், இணையம் மூலமே கண்ட காதலனுக்காகப் பெற்ற தாயைப் பெண்ணே கொல்வதும் நிகழ்கிறது. இதெல்லாம் வெளி வந்த செய்திகள். இன்னும் வெளிவராதவை எவ்வளவோ.
சமூக வலைத்தளங்கள் ஆக்கப்பூர்வமான சிந்தனையோடு பயன்படுத்துபவர்களுக்கு நன்மையையே அருள்கின்றன. இணையம் என்பது இருபுறமும் தீட்டப்பட்ட கத்தி மாதிரி. இரு பக்கத்தையும் எச்சரிக்கயோடு கையாள்பவருக்கு அவை என்றும் காயத்தைப் பரிசளிப்பதில்லை. கனிகளையே கொய்து தருகின்றன என்பது நூற்றுக்கு நூறு உண்மை.

1 கருத்து:

  1. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...