கடந்த இருபது ஆண்டுகளில் சமூக வலைத்தளங்களில் பெண்களின் செயல்பாடு அதிகரித்துள்ளது. கம்ப்யூட்டரில் ஈமெயில் அனுப்புவதே சிரமமாய்ப் பெண்கள் நினைத்தது ஒரு காலம். இன்றோ கைபேசியில் இணையம் வந்தபிறகு முகநூல், வலைத்தளம், வாட்ஸப், ட்விட்டர், ஸ்ம்யூல் ( பாடல் இணையம் ), யூ ட்யூப், டிக்டாக், ப்லாக்ஸ்பாட், தனி வெப்சைட் எனப் பலவற்றில் பெண்கள் புகுந்து வெளுத்து வாங்குகிறார்கள்.
பேசுவதற்கும் தகவல் அனுப்புவதற்கும் உபயோகப்பட்ட செல்போன் இணையத்தையும் குறைந்த மாதாந்திர தொகையில் வழங்க ஆரம்பித்த பின்பு பெண்களின் உள்ளங்கையில் உலகம் உருள ஆரம்பித்தது. இதனால் ஏற்பட்ட சாதகங்களும் பாதகங்களும் அநேகம்தான்.
முதலில் சாதகங்களைப் பார்ப்போம். முதலில் தனிநபர் & குடும்பப் பயன்பாடு. கையில் செல்ஃபோன் இருப்பதால் வெளியே செல்லும் பெண்கள் தங்கள் இருக்குமிடத்தைச் சொல்ல முடிவதால் பாதுகாப்பு பயம் குறைகிறது. ரூட் தெரியாத இடத்திலும் தானே மேப்பிங் மூலம் வண்டியையோ காரையோ ஓட்டிச் சென்று வர முடிகிறது. குடும்ப மெயில்கள், குடும்பப் புகைப்படங்கள், விழாக்கள், நிகழ்வுகளை அவ்வப்போதே அறிவித்து அனுப்ப முடிகிறது. திருமண, குடிகுபுதல், இன்விடேஷன்கள், வாழ்த்துகளை உடனே பலருக்கும் ஒரு தொடுகையில் அனுப்பலாம். டாகுமெண்ட்களை அஞ்சலில் அனுப்பினால் தொலைய வாய்ப்பிருக்கிறது. அதை செல்ஃபோனில் ஒரு க்ளிக் செய்துஅனுப்பி விடலாம். வயதான பெண்கள் தங்கள் பிள்ளைகளுடன் வாட்ஸப் மூலம் எந்த நாடாக இருந்தாலும் ஒருவர்க்கொருவர் முகம் பார்த்துப் பேசலாம். பணம் பெறவோ செலுத்தவோ வங்கிக்குச் செல்ல வேண்டாம்.
