எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

திங்கள், 25 மார்ச், 2019

நல்லவனுக்கு நேர்ந்த சோதனைகள். தினமலர் சிறுவர்மலர் - 9.

நல்லவனுக்கு நேர்ந்த சோதனைகள்.
ருவன் எவ்வளவு நல்லவனாக இருக்கிறானோ அவ்வளவுக்கு சோதனைகளை அனுபவிக்க நேரும். ஆனாலும் சோதனைகளைத் தாங்கிக் கொண்டும் தீய வழியில் செல்லாமல் நல்லவழியிலேயே வாழ்ந்த இராஜா ஒருவரின் கதையைக் கூறுகிறேன் கேளுங்கள் குழந்தைகளே.
குந்தள ராஜ்ஜியம் என்றொரு தேசம் இருந்தது. அந்த நாட்டில் அப்போது யுத்தம் நடந்துகொண்டிருந்தது. பட்டத்து ராணியோ கர்ப்பமான வயிற்றோடு பிரசவ வலியில் தவித்துக் கொண்டிருக்கிறாள். மன்னனோ பகைவர்களோடு சண்டையிட்டுக் கொண்டிருக்கிறான்.
பிரசவ நேரம் நெருங்குகிறது. மன்னனோ யுத்தத்தில் மாண்டுவிட்டான், ராணியோ ஒரு ஆண் குழந்தையைப் பெற்றுவிட்டு அவளும் மரித்து விடுகிறாள். பகை மன்னன் நாட்டை ஆக்கிரமிக்கிறான். பாவம் அந்தக் குழந்தை. தந்தையும் தாயும் மரிக்க நாடும் பறிபோகிறது. நம்பிக்கையான பணிப்பெண் ஒருத்தி அக்குழந்தையை அயல்தேசத்துக்கு எடுத்துக் கொண்டு போய் வளர்க்கிறாள்.
ஐயகோ என்ன துர்ப்பாக்கியம் அந்தத் தாதியும் சில நாட்களில் இறந்து விடுகிறாள். அக்குழந்தையை அங்கேயிருந்த மக்களே வளர்க்கத் தொடங்குகிறார்கள். நதியில் குளித்து கரையில் விளையாடி அம்மக்கள் கொடுத்த உணவை உண்டு வளர்கிறது அக்குழந்தை.

அக்குழந்தையின் பெயர் சந்திரஹாசன். மிகுந்த சூட்டிகையும் அழகும் உள்ள அக்குழந்தை அங்கே அனைவருக்கும் செல்லக் குழந்தையாகிறது. வளர்ந்து அழகான வாலிபனான அவன் ஒரு நாள் அண்டை நாட்டுக்குச் செல்கிறான்.  அவன் முக தேஜசைப் பார்த்த ஜோதிடர் ஒருவர் இவன் ஒருநாள் மாபெரும் ராஜ்ஜியத்துக்கு மன்னனாவான் என கணித்துச் சொல்கிறார்.
அதைக் கேட்டபடியே வந்த அந்த நாட்டு மந்திரி துஷ்டபுத்தி என்பவன் ‘எங்கே இவன் நமக்குப் போட்டியாக வந்து இந்த ராஜ்ஜியத்தினைக் கைப்பற்றி விடுவானோ’ என அஞ்சுகிறான். அவனைக் கொல்ல ஆட்களை அனுப்புகிறான்.
கானகத்தின் வழி சந்திரஹாசன் தன் ஊர் திரும்புகிறான். மறைந்து மறைந்து அவனைப் பின் தொடர்ந்த அந்த ஆட்கள் அவனைக் கொல்லக் கத்தியோடு பாயும் போது எங்கே இருந்தோ மாபெரும் சிம்ம கர்ஜனை ஒன்று கேட்கிறது. பயந்து நடுங்கிய ஆட்கள் மயங்கி விழ சந்திரஹாசன் அவர்கள் மயக்கம் தெளிவிக்கிறான். தங்களுக்கு உதவிய வாலிபனைக் கொல்ல அவர்கள் மனம் ஒப்பவில்லை. அவனது காலில் உள்ள ஆறாவது விரலை மட்டும் வெட்டி எடுத்துப் போகிறார்கள்.
தன் நாட்டுக்குத் திரும்பிய சந்திரஹாசனைப் பார்த்த மன்னன் அவனது வசீகர அழகாலும் வீரத்தாலும் கவரப்பட்டு அவனைத் தன் மகனாக ஏற்று வளர்த்து வருகிறான். ராஜாவின் சார்பில் சந்திரஹாசனும் பல்வேறு போர்களில் ஈடுபட்டு வெற்றி தேடித் தருகிறான்.
இந்நிலையில் இவனது புகழ் கேட்டு அந்நாட்டுக்கு வந்த அண்டை நாட்டு மந்திரி துஷ்டபுத்தி அவனைத் தன் நாட்டுக்கு வருமாறு ஓலையனுப்பி அழைக்கிறான். துஷ்டபுத்தி திக்விஜயத்தில் இருப்பதால் நயவஞ்சகமாக அந்த ஓலையில் சங்கேத மொழியில் தன் நாட்டுக்கு வரும் அவனுக்கு விஷம் கொடுத்துக் கொல்லுமாறு தன் மகனுக்குக் குறிப்பு எழுதி வைக்கிறான்.
சந்திரஹாசனோ கள்ளமில்லா உள்ளத்தோடு அந்நாட்டுக்குச் செல்கிறான். பயணக்களைப்பால் அங்குள்ள சப்ரமஞ்சத்தில் சாய்ந்து சிறிது உறங்கி ஓய்வெடுக்கிறான். அதைக்கண்ட துஷ்டபுத்தியின் மகள் விஷாலை சந்திரஹாசனின் அழகில் மயங்குகிறாள். ஓலையை எடுத்துப் படிக்கும் அவள் திடுக்கிட்டு விஷம் என்பதைத் திருத்தி விஷாலைக் கொடுக்குமாறு எழுதி வைக்கிறாள்.
இது தெரியாத துஷ்டபுத்தியின் மகன் தன் தங்கை விஷாலையை சந்திரஹாசனுக்கு மணம் முடித்து வைக்கிறான். நாட்டுக்குத் திரும்பிய துஷ்டபுத்தி இது கேட்டு அதிர்ச்சியாகிறான். மீண்டும் அவன் சந்திரஹாசனைக் கொல்ல எண்ணுகிறான்.
ஊர் எல்லையில் இருக்கும் ஒரு காளி கோயிலுக்கு பூஜை செய்துவர சந்திரஹாசனை அனுப்புகிறான். அவன் பின்னே கொலையாளிகளையும் அனுப்புகிறான். ஆனால் அங்கே எதிர்பாராத விதமாக வந்த துஷ்டபுத்தியின் மகனைக் கொலையாளிகள் சந்திரஹாசன் என நினைத்துக் கொன்றுவிடுகிறார்கள். இதைப் பார்த்து வருந்திய துஷ்டபுத்தி தன் வாளால் தன்னைத் தானே மாய்த்துக் கொள்கிறான். இதை எல்லாம் பார்த்த  சந்திரஹாசன் மனம் வருந்தி காளியின் முன் தன் உயிரைக் கொடுக்க எண்ணி வாளை உயர்த்துகிறான்.
ஆனால் அவன் இதுவரை பட்ட துன்பம் எல்லாம் போதும் என நினைத்த காளி அவனது வாளைத் தடுத்து இறந்த இருவரையும் சந்திரஹாசனுக்காக உயிர்ப்பிக்கிறாள்.
பாருங்கள் ஒரு மனிதன் பிறந்ததில் இருந்து எத்தனை எத்தனை இடையூறுகள் தொல்லைகள் கொலை முயற்சிகள். தன்னைக் கொல்ல வந்தவர்களையும் பார்த்து இரங்கும் குணம். அவர்களுக்காகத் தன்னையே மாய்த்துக் கொள்ள எண்ணிய அவன் நல்ல உள்ளத்தை என்ன சொல்லிப் போற்றுவது?.
எப்போதும் நல்லவர்களாகவே இருப்பது என்பது மிகக் கடினம்தான் ஆனால்  எப்போதும் நல்லவர்களாகவே இருந்தால் தெய்வமும் துணை நிற்கும் என்பது உண்மையாயிற்றுதானே குழந்தைகளே.

டிஸ்கி:-  இந்தக் கதை இதிகாச புராணக் கதைகள் என்ற தலைப்பில் 15 . 3. 2019  தினமலர் சிறுவர்மலர் இதழில் இடம்பெற்றுள்ளது. நன்றி தினமலர் சிறுவர் மலர், தனது அழகான ஓவியங்களால் கதைக்கு எழில்கூட்டும் ஓவியர் அஷோக் & எடிட்டர் தேவராஜன் ஷண்முகம் சார்.

2 கருத்துகள்:

  1. நன்றி வெங்கட் சகோ

    வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...