எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

திங்கள், 4 பிப்ரவரி, 2019

இது ராஜகனி. !


எல்லாவற்றையும் புதுப்பிக்கும் எலுமிச்சங்கனி.



.

எல்லாவற்றையும் புதுப்பிக்கும் எலுமிச்சங்கனி

  விவேக் ஒரு படத்தில் சொல்லுவார். “ ஏண்டா இந்த வண்டில இருக்குற ஆயிரத்துச் சொச்சம் ஸ்பேர் பார்ட்ஸ்ல ஓடாத வண்டி இந்த எலுமிச்சம்பழத்தை இங்கே தொங்க விட்டதால்தான் ஓடுதா “ என்று.  விளம்பரத்தில் ” ஒரு சொட்டு எலுமிச்சை போதும்” என்று பாத்திரம் விளக்கும் லிக்விடைவிட்டுப் பாத்திரத்தைத் துலக்கிப் பளபளப்பாக்கிக் காட்டுகிறார்கள்.  

  கண் திருஷ்டி போக்கும் என்றும் எதிர்மறை எண்ணங்களையும் எதிர்மறை சக்திகளையும் நீக்குவதாகச் சொல்லி ,மந்திரித்த எலுமிச்சையை வியாபார ஸ்தலங்களில் கல்லாப் பெட்டியிலும், வீடுகளில் நிலைவாசலிலும் கட்டித் தொங்கவிடுகிறார்கள். டம்ளர்களில் நீர் நிரப்பி அதில் எலுமிச்சையைப் போட்டு வைக்கின்றார்கள். இவ்வாறு வைப்பதால் அவை எதிர்மறை எண்ணங்களை நீக்கி நேர்மறை எண்ணங்களை கிரகிப்பதாகக் கூறுகிறார்கள்.

 பில்லி சூன்யம் நீங்க இவற்றை வெட்டி குங்குமம் தோய்த்து வாயிற்படிகளில் வைக்கும் வழக்கமும் தமிழகத்தில் உண்டு. எலுமிச்சையை வெட்டி குங்குமத்தில் தோய்த்து நாலாபுறமும் வீசி திருஷ்டி கழிப்பது என்பதும் சில கோவில்களில் காணப்படுகிறது. முதன் முதலாக வண்டி வாகனங்கள் வாங்கும்போது விபத்து நிகழக்கூடாது என்று அவற்றின் சக்கரங்களுக்கு அடியில் எலுமிச்சையை வைத்து நசுக்கி வண்டியை எடுக்கும் பழக்கம் இருக்கிறது.

  தேவகனி என்றும் ராஜகனி என்றும் புகழப்படும் இந்த எலுமிச்சையின் தாயகம் இந்தியாதான். இது வருடம் பூராவும் பூக்கும் காய்க்கும். இரண்டாம் நூற்றாண்டிலேயே இதை தொற்று நீக்கியாகவும் நச்சு முறிப்பாகவும் பயன்படுத்தி இருக்கிறார்கள். முட்கள் உள்ள இத்தாவரம் அலங்காரச் செடியாகவும் மருந்தாகவும் பயன்பட்டிருக்கு. இதன் துளிர் இலைகளுடன் உப்பு மஞ்சள் சேர்த்து இடித்துச் செய்யப்படும் வேப்பிலைக் கட்டி ஆரோக்ய உணவாக எடுத்துக் கொள்ளப்படுகிறது.

  எலுமிங்காய் காய் & பழத்தின் தோலில் இருக்கும் எண்ணெய். நறுமணம் கொண்டது. இதன் தோல் கசப்பாகவும் சாறு புளிப்பாகவும். இருக்கும். இதன் சாற்றிலிருந்து எலுமிச்சை சாதம் எலுமிச்சை தேநீர் எலுமிச்சை ரசம், எலுமிச்சை ஊறுகாய், எலுமிச்சை இனிப்பு ஊறுகாய் ஆகியன தயாரிக்கப்படுது. ப்ளாக் டீயில் சில துளி எலுமிச்சைச் சாறு கலந்து குடிப்பது சிலரின் வழக்கம்.

,  ஃப்ரைட் ரைஸ், புலவு பிரியாணி, அசைவ உணவுகள், கடல்சார் உணவுகள், தந்தூரி உணவு வகைகளில் சில துளிகள் பிழிந்து சாப்பிட சுவை கூட்டும். பச்சைக் காய்கறிகளால் செய்யப்படும் சாலட்டுகளில் எலுமிச்சை சாறு சேர்க்கப்படுகிறது. இது ஊறுகாய்கள் போன்றவை கெட்டுப் போகாமலிருக்க ப்ரிசர்வேட்டிவ் ஆகவும் பயன்படுகிறது. பூண்டு ஊறுகாய், கலவைக் காய்கறி ஊறுகாய் போன்றவை முழுக்க முழுக்க எலுமிச்சைச் சாறு கொண்டே தயாரிக்கப்படுகின்றன. பாப்சிக்கிள் எனப்படும் பழ குச்சி ஐஸ் வகை, இன்ஃப்யூஸ்ட் வாட்டர் எனப்படும் காய்கறி ஊறவைக்கப்பட்ட தண்ணீர் ஆகியவற்றில் புத்துணர்வு ஊட்ட எலுமிச்சைச் சாறு சேர்க்கப்படுகிறது.  .

  பதினேழாம் நூற்றாண்டில் ஸ்கர்வி என்ற நோய் போக்க எலுமிச்சை சாறைப் பருகக் கொடுத்திருக்கீறார்கள். பெரியவர்களைப் பார்க்கப் போகும்போது மரியாதை நிமித்தம் பூமாலை, சால்வை போட்டு கையில் எலுமிச்சை கொடுத்து வரவேற்பது நம் புராதனப் பண்பாடு. பண்டைய தமிழகக் கோவில்களில் சூலத்தில் எலுமிச்சையைக் குத்தி வேண்டுதல் செய்தல், செவ்வாய் வெள்ளிக் கிழமைகளில் கோவில்களில் துர்க்கைக்கு எலுமிச்சை விளக்கு போடுதல், உக்கிர பெண் தெய்வங்களுக்கு எலுமிச்சை மாலை சாற்றுதல் ஆகியன நடைமுறை வழிபாடுகள்.  

  பஸ் ப்ரயாணங்களில் எலுமிச்சையை முகர்ந்தால் வாந்தியை மட்டுப்படுத்தும். தலைசுற்றலை நீக்கும்.  ஃப்ளைட் ப்ரயாணங்களில் கூட ஆரம்ப பானமாக லெமனேட் கொடுப்பது வழக்கம். புத்துணர்வு அளிக்கும். டெல்லியில் தாகவிடாய் தீர காலா நமக் என்னும் உப்புடன் கொத்துமல்லிச் சாறு,, எலுமிச்சைச் சாறு  கலந்து குடிப்பார்கள். அதன் பெயர் நீபூ பானி. இது ஜீரண சக்தியையும் அதிகரிக்கும்.  சிறுநீரகக் கல்லை நீக்கும். சிறுநீரைப் பெருக்கும். நெஞ்செரிச்சல் தவிர்க்கும். லெமன் வாட்டரில் வாய் கொப்பளித்தால் சுவாசப் புத்துணர்வு ஏற்படும். புளிக்குப் பதிலாக வட இந்திய உணவுகளில் புளியின் இடத்தில் எலுமிச்சையின் சாறு உபயோகிப்பார்கள்.

  பன்னீர் லெமன் எனப்படும் பானம் ( சுதேசி சோடா ) விருந்தினர் வந்தால் கொடுக்கப் பயன்படுகிறது. மேலும் திருமண வீடுகள், புதுமனை குடிபுகுதல், மங்கள நீராட்டு ஆகிய விசேஷங்களிலும் விருந்தினரை உபசரிக்கக் கொடுக்கப்படும் பானம் பன்னீர் லெமன். சர்பத் தயாரிப்பிலும் முக்கியப் பங்கு வகிக்கிறது. எலுமிச்சை இல்லாத சர்பத்தே கிடையாது. நன்னாரி, வெட்டிவேர் என எந்த சர்பத்தை எடுத்தாலும் எலுமிச்சைச் சாறு கலந்தேதான் கொடுப்பார்கள். புதினா தேன், இஞ்சி பட்டை மஞ்சள்தூள் எலுமிச்சை சாறு கலந்து தயாரிக்கப்படும் பானம் உடல் நலத்துக்கு மிகுந்த நன்மை பயப்பது.

  ஃப்ரிட்ஜில் இரண்டாக வெட்டிய எலுமிச்சையை வைத்தால் பல்வேறு பொருட்களை ஃப்ரிட்ஜில் வைப்பதால் வரும் வேண்டாத துர்வாடைகளை நீக்கும். அசைவ உணவுகளை எலுமிச்சை மற்றும் வினிகரால் கழுவிச் சமைக்கும் போது அவற்றில் இருக்கும் கெட்ட வாடை நீங்குகிறது. லெமன் க்ராஸ் எனப்படும் ஒன்று எலுமிச்சை வாசனைக்காக உணவுகளில் சேர்க்கப்படுகிறது.  இதுக்கும் லெமனுக்கும் எந்த சம்பந்தமுமில்லை. எலுமிச்சையின் வாசனை கொண்டிருக்கும் அவ்வளவே.

  நகச்சுத்தி நீங்கவும் வலி தீரவும் விரலில் முழு எலுமிச்சையைக் குத்தி வைப்பார்கள். நல்லெண்ணெயுடன் எலுமிச்சைச் சாறு சேர்த்துக் குளித்து வந்தால் தோல் நோய்கள் வராது முழங்கை முழங்காலில் உள்ள கருமை, கண்களின் கீழ் ஏற்படும் கருவளையம் பருக்கள் ஆகியவற்றையும் இச்சாறு நீக்குகிறது. கடலைமாவு பாலேடு ஆகியவற்றோடு சிலதுளி எலுமிச்சைச் சாறு கலந்து தேய்த்துக் குளித்தால் நல்ல நிறம் கிடைக்கும். இயற்கை அழகு சாதனப் பொருள். கழுத்தில் தேய்த்தால் கருமை போக்கும். எலுமிச்சை உப்பைப் போட்டுப் பல்துலக்கலாம்

  உப்பு கலந்த எலுமிச்சை நீர் அல்கலைன் எனப்படும் இது. சிறுநீர்க்கடுப்பு/நீர்ச்சுருக்கைத் தவிர்ப்பது, தாகவிடாய் போக்குவது. டீஹைட்ரேஷன் எனப்படும் உடல் வறட்சியைப் போக்குவது. ஜூஸ் மட்டுமல்ல இதன் காய்ந்த தோல் கூடப் பயன்படுகிறது. முடி பராமரிப்பில் சீயக்காய் தயாரிக்கும்போது காய்ந்த எலுமிச்சைத் தோல் போட்டு அரைப்பார்கள்.  எலுமிச்சையைத் தலைக்குத்தேய்த்துக்குளிப்பதால் பித்தம் தணியும், பொடுகு நீங்கும், குளிர்ச்சி.

  எலுமிச்சைச் சாறை எல்லா ஜூஸுடனும் கலந்து குடிக்கலாம். லெமன் ரிண்ட்ஸ், லெமன் ஸ்லைஸஸ் எனப்படும் எலுமிச்சைச் துண்டுகள் பானங்களோடும், சாலட்டுகளோடும் உணவுவகைகளோடும் பரிமாறப்படுகின்றன. பெப்பெர்மிண்ட் மிட்டாய்கள், பழச்சாறுகள், ஃபுட் ப்ரசர்வேட்டிவ், நறுமண எண்ணெய்,  சோப்பு ஆயில்.. எலுமிச்சை கலந்த சோப் தயாரிக்கவும் உணவின் வாசனைப் பொருளாகவும் ருசிகூட்டியாகவும் பயன்படுகின்றது.  

   எலுமிச்சையை நாம் உணவாக மட்டும் உட்கொள்வதில்லை. லெமன் பௌல் எனக் கேட்டால் ஸ்டார் ஹோட்டல்களில் கைகழுவ வெந்நீரில் எலுமிச்சைச் துண்டுகள் போட்ட ஒரு சில்வர் பவுலைக் கொடுப்பார்கள். அதில் நாம் சாப்பிட்டவுடன் கைகழுவி டிஷ்யூபேப்பரில் துடைத்துக் கொள்ளலாம். இது உணவு உண்டவுடன் அசைவ உணவுகளின் வாடையோ கொழுப்போ கையில் ஒட்டாமல் புத்துணர்வு கொடுக்கும்.

  இனி அறிவியல் காரணம் :- எலுமிச்சைச் சாறு மூளையின் வளர்ச்சியையும் இயக்கத்தையும் மேம்படுத்தும். இதில் இருக்கும் பாஸ்பரஸும் பொட்டாசியமும்  நரம்பு மண்டலத்தைப் புதுப்பிக்கும். காய்ச்சலின் போது வாய்க்கசப்பு நீங்கும் . விஷம் முறிக்கும். நோய்த்தொற்று நீக்கும். வெந்நீரில் எலுமிச்சைச் சாறு தேன் சேர்த்துப் பருகுவதன் மூலம் உடல் எடையைக் குறைக்க முடியும். கொழுப்பை நீக்கும்.

  இது ஒரு ஆண்டிஆக்ஸிடெண்ட். வயதான தோற்றத்தை நீக்கும். கல்லீரல் மண்ணீரல் அழற்சி காய்ச்சல் கீல்வாதம் சீதபேதி ஆகியவற்றுக்கு மருந்தாகப் பயன்படுது விட்டமின் சி, எடைகுறைக்கும். அனீமியா எனப்படும் ரத்த சோகையையும், கேன்சரையும் தடுக்கும். இதயத்தில் ஏற்படும் அடைப்பைத்தவிர்க்கும். எல்லாவிதத்திலும் நம் உடலையும் மனதையும்  புதுப்பித்துப் புத்துணர்வோடு வைக்கும் எலுமிச்சை நிச்சயம் ராஜ கனிதான்

2 கருத்துகள்:

  1. நல்ல தகவல்கள் சகோதரி. எங்கள் ஊரில் நாரங்கா வெள்ளம் என்று எலுமிச்சை ஜூஸ் பெட்டிக்கடைகளில் எல்லாம் ஃபேமஸ். - துளசி

    எங்க வீட்டுல எலுமிச்சையின் பயன்படுத்துவது அடிக்கடி. ரசம், ஜூஸ் சாலடில் என்று. நல்ல பல தகவல்கள் அறிய முடிகிறது...- கீதா

    பதிலளிநீக்கு
  2. அஹா கேக்கும்போதே இனிமையா இருக்கே. நாரங்கா வெள்ளம் :)

    நன்றி துளசி சகோ & கீத்ஸ்.

    வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...