எனது நூல்கள்.

ஞாயிறு, 17 பிப்ரவரி, 2019

பசுவை அடக்கிய நந்தி.( அ ) ஆணவம் அழிக்கும். தினமலர் சிறுவர்மலர் - 5.


பசுவை அடக்கிய நந்தி.( அ )  ஆணவம் அழிக்கும்.

துரையில் அனந்த குண பாண்டியன் காலத்தில் ஒரு நந்தி பசுவை அடக்கியது. பசுவும் நந்தியும் ஒரு இனம்தானே. இரண்டும் இணக்கமாகப் போனால் என்ன ? அது ஏன் நந்தி பசுவை அடக்கியது ? அப்படி நந்தியால் அடக்கப்படும்படி அந்தப் பசு என்ன செய்தது, என்ன காரணம் எனப் பார்ப்போம் வாருங்கள் குழந்தைகளே.

மதுரையில் அனந்த குண பாண்டியன் என்ற மன்னனின் அரசாட்சிக் காலத்தில் அவுணர்களால் இடர்ப்பாடு அதிகம் ஏற்பட்டது. முதலில் யானையை ஏவியும் அதன் பின் நாகத்தை ஏவியும் தொல்லை கொடுத்த அவர்கள் பாண்டியனை இன்னும் துன்புறுத்த ஒரு மாயப்பசுவை உருவாக்கி ஏவினார்கள்.

பசு என்றால் அனைவரும் வணங்குவார்கள். அதை எதிர்க்க மாட்டார்கள். அதனை தெய்வமாகப் பூஜிப்பார்கள்.  எனவே பசு ரூபத்தில் ஒரு கொடிய அரக்கனை உருவாக்கி அனுப்ப நினைத்தார்கள். மிகப் பெரும்  கொடிய யாகம் ஒன்றை நடத்தி அதில் தீய மந்திர உச்சாடனம் செய்து அந்த அரக்கனை மாயப்பசு ரூபத்தில் உருவாக்கி ஏவினார்கள்.


“அரக்கனே, நீ மாயப்பசு உருவத்தில் சென்று மதுரை மாநகரை அழித்து வா “ அந்த மாயப்பசுவோ மிகப் பிரம்மாண்டமான கொம்புகளோடு மண்ணைக் கிளறியபடி ஆர்ப்பாட்டம் செய்து நகர் முழுவதும் பாய்ந்து சென்றது. எதிர்ப்படுவோரை எல்லாம் கொம்பால் தூக்கி எறிந்தது. எந்த இடத்தையும் விடவில்லை. எந்த மனிதரையும் விடவில்லை. தன் காலடியில் சிக்கியவர்களை மிதித்துச் சிதைத்துச் சின்னாபின்னமாக்கியது அதன் ஆர்ப்பாட்டமும் ஹூங்காரமும் அதிகமாகி மக்கள் அனைவரும் அரண்மனைக்கு ஓடி மன்னனிடம் முறையிட்டார்கள்.

“மன்னா ஒரு பெரிய ராட்சசப் பசு மக்களை எல்லாம் கொம்பால் குத்திக் கிளறி அட்டகாசம் செய்து அழித்துவருகிறது.காப்பாற்றுங்கள் ப்ரபோ “
மதுரைக்கு மட்டும் ஏனிந்த சோதனைகள் என்று வெதும்பிய மன்னன் சொக்கநாதரிடம் முறையிட்டான். பாண்டியன் வருந்துவதைக் கண்ட சிவன் சும்மா இருப்பாரா? அவர் தன் வாகனமான நந்தி தேவரை அழைத்தார்.

“மதுரையை அழிக்கும் மாயப்பசுவை வதைத்து இழுத்துவா “ எனக் கட்டளையிட்டார். மாயப்பசுவை வதைக்க சிவன் போகாமல் ஏன் நந்தியைப் போகச் சொன்னார் தெரியுமா. இந்த நந்தி யார் அவருக்கு எப்படி இவ்வளவு சக்தி கிடைத்தது எனச் சுருக்கமாக அறிந்து கொள்வோம்.

சிலாத முனிவர், சித்ரவதி தம்பதிகளுக்கு நெடுநாட்களாகக் குழந்தை இல்லை. அவர்கள் சிவனிடம் வேண்ட அவர்களுடைய நிலத்திலேயே ஒரு செப்புப் பெட்டகத்தில் நான்கு கால்கள் கொண்ட குழந்தை ஒன்று கிடைத்தது. அதற்கு சிவனைப் போல ஜடாமுடியும் இருந்தது. அக்குழந்தைக்கு செப்பேசன் எனப் பெயரிட்டு முனிவர் தம்பதிகள் வளர்த்து வந்தார்கள். பதினாலு ஆண்டுகாலம் பல்வேறு வேத ஆகமங்கள் கற்றார் செப்பேசன். 

சிவனை நோக்கி ஒற்றைக்காலில் நின்று கடுமையாகத் தவமிருந்தார். மகிழ்ந்த சிவன் தனக்குச் சமமான அதிகாரத்தையும், சிவகணங்களுக்குத் தலைமைப் பதவியையும், முதல் குருநாதன் என்ற தகுதியையும் அளித்தார். இதனால் நந்தி தேவர் சிவனை விட்டு விலகாமல் அவருக்கு வாகனமாகப் பணிபுரிந்து வந்தார்.

இப்பேர்ப்பட்ட பெருமை உடைய நந்திதான் சிவன் ஆணையிட்டதும் மாயப்பசுவை அழிக்கக் கிளம்பியது. மாயப்பசு கொம்பால் கிளறியது என்றால் நந்தியோ தன் திமிலால் அண்டத்தையே திமிலோகப்படச் செய்தது.

மாயப்பசு உருவத்தில் இருந்த அரக்கன் தனக்கு நிகர் யாருமில்லை. எதிர்ப்பார் இல்லவே இல்லை என்ற ஆணவத்தில் மதுரையை அழித்துக் கொண்டிருந்தது. சீற்றம் கொண்ட நந்தி தன் கொம்பாலும் குளம்புகளாலும் பூமியைப் புரட்டிப் புயல் போல் உருண்டு திரண்டு சென்று மாயப்பசுவின் முன் நின்று ஹூங்காரம் செய்தது.

அசுர மாயப் பசுவோ புயல் போல் வந்த நந்தியின் பிரம்மாண்டம் கண்டு பயந்து பின்வாங்கியது. ஆனால் நந்தியோ அதை எண் திசைகளிலும் ஓட ஓட விரட்டியது. நாக்குத்தள்ள மூச்சு வாங்க மாயப்பசுவோ நந்தியின் உக்கிரம் கண்டு மிரண்டு தப்பிக்க ஓடியது. நந்தியோ விடாமல் துரத்தி மாயப்பசுவின் உடலைத் தன் கொம்பால் குத்தித் தூக்கிவீசியது. உருண்டு புரண்டு விழுந்த மாயப்பசு எவ்வளவு துள்ளியும் எவ்விதத்திலும் தப்பிக்க முடியாமல் சுற்றிச் சுற்றி வந்து நந்தி ஆக்ரோஷமாய்த் தாக்கியது.  

ஒரு கட்டத்தில் தப்பிக்க முடியாமல் அந்த மாயப் பசு நந்திக்கு அடங்கியது. மேலும் நந்தியிடம் மண்டியிட்டுச் சரணடைந்தது. அப்போது அதன் உடல் ஒரு மலை போல் சமைந்தது. அப்படியே கல் சிற்பமானது.

மகிழ்ந்த மக்கள் சொக்கநாதன் தன் பிரதியாய் அனுப்பி தம்மை இடையூறிலிருந்து காத்த நந்தியை வணங்கி நன்றி கூறினார்கள். மன்னனும் மக்களின் குதூகலத்தில் கலந்துகொண்டு மாயப்பசு அரக்கனின் ஆணவத்தை அடக்கிய நந்திக்கும் சொக்கநாதருக்கும் நன்றி கூறி வணங்கினான். எனவே ஆணவம் அழிக்கும் என்பதை உணர்வோம் குழந்தைகளே. 

டிஸ்கி:-  இந்தக் கதை இதிகாச புராணக் கதைகள் என்ற தலைப்பில் 15 . 2. 2019  தினமலர் சிறுவர்மலர் இதழில் இடம்பெற்றுள்ளது. நன்றி தினமலர் சிறுவர் மலர், தனது அழகான ஓவியங்களால் கதைக்கு எழில்கூட்டும் ஓவியர் அஷோக் & எடிட்டர் தேவராஜன் ஷண்முகம் சார்.

3 கருத்துகள் :

Thulasidharan V Thillaiakathu சொன்னது…

அருமையான கதை அழகாக சொல்லியிருக்கீங்க வாழ்த்துகள்!

துளசிதரன், கீதா

துளசிதரன் : உங்கள் புத்தகம் காதல்வனம் வெளிவந்தது குறித்து வாழ்த்துகள்! பாராட்டுகள்!

iramuthusamy@gmail.com சொன்னது…

எளிய நடையில் குழந்தைகளுக்குச் சொல்லப்பட்ட கதை.

Thenammai Lakshmanan சொன்னது…

மிக்க நன்றி துளசி சகோ & கீத்ஸ்

நன்றி முத்துசாமி சகோ

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...