ஞாயிறு, 6 செப்டம்பர், 2009

விருந்து

பவள மல்லியும்,
மகிழம் பூக்களும்
இரவுச்சரத்தை வாசமேற்ற...

தலை கலைந்த பனையும்
நிலவு வருடும் தென்னையும்
சிற்பமாக...

குழந்தைகள் சிரிப்பை
அள்ளி விசிறியதாய்
நட்சத்திரங்களும்...

சில்வண்டின் ரீங்காரமும்,
கருங்கல்லும் விழிக்கும்
செம்மண் சாலையில்...

குற்றுச் செடிகளும்,
குறுக்கில் ஓடும் ஊர்வன,
குரைத்து அலையும்
நாய்கள் தாண்டி...

அண்டை வீட்டில் நடக்கும்
தனது குடும்பத்துக்கான
விருந்தில் கலந்து கொள்ள
அயர்ந்தபோது...

சிறு வயதில் கை பிடித்து
பள்ளி அழைத்துச் சென்ற மகன்
ஆதரவாய்க் கைபிடித்து
அழைத்துச் சென்ற போது...

காற்றின் வழி செல்லும்
சருகு போல் மனம் மாற...
அலையோடு செல்லும்
நுரைபோல் உடல் மாற...
கண்களின் வழியே
தாய்மை கசிய...

இருப்பதற்கும்
வாழ்வதற்குமான பற்றுக்கோடு
இதயத்தில் தளும்ப...

பால் ஊற்றிய
நிலவுப் பாதையில்...
நிலத்தில் போகிறோமோ,
நிலவில் போகிறோமோ
என தாய் நெகிழ...

உணர்வின் கதகதப்பில்...
உறவின் கலகலப்பில்...
நெருங்கி வந்தது
உணவிற்கான வீடு..!

7 கருத்துகள் :

எம்.ஏ.சுசீலா சொன்னது…

கவிதைக்கனலை நீறுபூத்த நெருப்பாய் அடை காத்து வைத்திருந்த என் அன்பு மகளுக்கு...செல்லப்பெண்ணுக்கு ....பிரிய மாணவிக்கு என் அன்பும் ஆசிகளும்....
நெடுநாள் இடைவெளிக்குப் பின் உன்னைப் புகைப்படத்தில் கண்டுபெருமகிழ்வு கொண்டேன்.விரைவில் நேரில் காணும் கணத்திற்காகக் காத்திருக்கிறேன்.
ஓசைப்படாமல் ஆங்கில பிளாக் வேறு தொடங்கியிருக்கிறாயே......சுட்டிப்பெண்தான்.
வாழ்க வளமுடன்.
எம்.ஏ.சுசீலா

thenammailakshmanan சொன்னது…

thanks amma

அண்ணாமலையான் சொன்னது…

சுட்டிப்பெண்தான்.
வாழ்க வளமுடன்.

ரிஷபன் சொன்னது…

நெருங்கி வந்தது
உணவிற்கான வீடு..!

உணர்விற்கான கவிதை!

thenammailakshmanan சொன்னது…

நன்றி அண்ணாமலையான் உங்க வாழ்த்துக்கு

thenammailakshmanan சொன்னது…

நன்றி ரிஷபன்
முதல் முறையாக என் வலைத்தளத்துக்கு வர்றீங்க நன்றி
உங்க கவிதையின் குழந்தைகளுக்கான ஆதங்கம் என் மனதைத்தொட்டது

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...