எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

திங்கள், 16 மார்ச், 2020

தமிழ் சினிமாவில் பெண்கள்

தமிழ் சினிமாவில் பெண்கள்.


இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ஆரம்பமாயிற்று செல்லுலாயிட் பிம்பங்களின் ஆட்சி. இருபது வருடங்கள் பேசாப்படம் அதன் பின்பேசும் படமாக வந்து ஒரு நூற்றாண்டுக்குள் இந்தியர்களின் வாழ்விலும் செல்ஃபோனிலும் புகுந்து விட்டது.
சினிமாவை முதன் முதலில் உருவாக்கியது ஃப்ரெஞ்சு நாட்டைச் சேர்ந்த லூமியர் சகோதரர்கள் என்றபோதும் அதன் கோட்பாட்டை உருவாக்கிய பேல பெலாஸ் என்பார் ”நம்மை இனங்காணுதல் “ சினிமா என்ற கலையில்தான் நிகழ்கிறது என்கிறார். உண்மைதானே சாதாரணப் பெண்களும் சினிமா ஹீரோயின்கள் போல் உடை உடுத்துவதும் நகைகள் போடுவதும் இன்றும் உள்ளதுதானே.  
ஆதியில் ஆண்களே பெண் வேடமிட்டு நடித்திருக்கிறார்கள். மணிமேகலை, ஔவையார், காரைக்காலம்மையார் ஆகிய கதாபாத்திரங்களாக நடித்த கேபி சுந்தராம்பாள் ஆண் வேடமுமேற்று நந்தனாராகவும் நடித்திருக்கிறார். இவர் சட்ட மேலவை உறுப்பினராகி பத்மஸ்ரீ விருதும் பெற்றார். அதே போல் சேவாசதனம், பக்த மீரா, சாவித்ரியாக நடித்த எம் எஸ் சுப்புலெட்சுமி நாரதராக ஆண் வேடமேற்றும் நடித்திருக்கிறார். பாரத ரத்னாவும் ஆகியிருக்கிறார்.
ஹேமாமாலினி, வைஜெயந்திமாலா, விஜயசாந்தி ரம்யா, போன்றோர் எம்பிக்களாகவும். பலர் தேர்தல் பிரச்சாரத்தோடும் நின்று விட கொள்கை பரப்புச் செயலாளராக அறிமுகப்படுத்தப்பட்ட நடிகை ஜெயலலிதா முதல்வரானார்.

கே ஆர் விஜயாவையும் ரம்யா கிருஷ்ணனையும் அம்மனாகவே விழுந்து வணங்கியது தமிழ்க்குலம். பானுமதி, குஷ்பூ, ராதிகா போன்றோர் இயக்குநரையும் மீறி ஜெயித்த ஆளுமைகள். தெலுங்கில் ஹீரோயினுக்கு சூப்பர் ஸ்டார் பட்டம் கொடுக்கப்பட்டது விஜயசாந்திக்கு மட்டுமே. கஸ்தூரி, சுஷ்மிதா சென், சமந்தா ஆகியோரும் சமூக சேவகிகளாகப் பரிணமிக்கிறார்கள்.
லெக்ஷ்மியின் சில நேரங்களில் சில மனிதர்கள், ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள். ஷோபாவின் பசி, சாரதாவின் துலாபாரம், போன்ற வெகுசில படங்களே யதார்த்தத்தைப் பிரதிபலிக்கின்றன.
90 எம் எல் படத்தில் ஐந்து பெண்கள் மது அருந்துவது, செக்ஸ் குறித்துப் பேசுவது, கஞ்சா உள்ளிட்டபோதைப் பொருட்களைப் பயன்படுத்துவது, புகைப்பது போன்றவை கால மாற்றத்தைப் பிரதிபலிக்கும் கண்ணாடி என்று சொல்கிறார்கள்.
முதல் பெண் எழுத்தாளர் வை மு கோதை நாயகி அம்மாள். முதல் ஒளிப்பதிவாளர் மீனாக்ஷி ,ஓரிரு படங்களே நடித்து முத்திரை பதித்த டி ஆர் ராஜகுமாரி என்று பெருமைப்படும் அதேகணம் கோயில் பணியாளராக வாழ்ந்து முடிந்த காஞ்சனா, கோடம்பாக்கத்தில் பெரும்பகுதியை ஒரு காலத்தில் உரிமையாகக்  கொண்டு கடைசியில் குடிசையில் மறைந்த சாவித்ரி, சில்க் ஸ்மிதா, படாஃபட் ஜெயலெக்ஷ்மி, ஷோபனா, ஆகியோரின் மர்ம மரணம் என வருந்தவைக்கும் எடுத்துக்காட்டுகளும் உண்டு.
நடிகை ஒரு விளம்பர உயிரி. அழகுப் பொருட்களின் மார்க்கெட் டார்கெட். தொழிலில் ஏற்படும் பாலியல் துன்புறுத்தல்களை வெளிப்படையாக மீடூவில் தெரிவிக்கும் அளவு இப்போதுதான் வெளிவந்திருக்கிறார்கள். திருமணம் செய்துகொள்ளவும் அதன்பின்னான சீரான வாழ்க்கைக்கும் ப்ரொஃபஷன் ஒரு தடையாகிறது.
திரைக்கும் அசல் வாழ்க்கைக்கும் அதிக சம்பந்தமில்லை. அன்றைய கே ஆர் விஜயா பணிவும் இன்றைக்கு 90 எம் எல் குடியும் அதீதம். பைத்தியக்கார விடலைப் பெண்கள், குடும்பப் பாங்கான கதாநாயகிகள், அல்லது வில்லிகள் & சூப்பர் வில்லிகள் இவையே படங்களில் பெண்களின் நிலை. ஹீரோக்கள் இவர்களின் திமிரை அடக்கி மூக்கணாங்கயிறு போல் மூன்று முடிச்சுப் போட்டவுடன் குங்குமத்துடன் குடும்பப்பாங்காக மாறிவிடுவார்கள்.
கதாநாயகனைக் கொண்டாடும் அளவு கதாநாயகிகள் கொண்டாடப்படுவதில்லை. கூத்துக்கள், புராணங்கள், நாடகங்கள் திரைப்படமான காலத்திலிருந்தே இதுதான் நிலை. தாசி வீட்டில் தவங்கிடக்கும் நாயகர்கள், அவர்களை அங்கே தூக்கிச் சென்றுவிட்டுத் தம் கற்புத்திறத்தால் மாற்றும் நாயகிகள் எல்லாம் மஞ்சக் கயிறு செண்டிமெண்ட்.  தியாக பூமி, அலை ஓசை போன்ற ஓரிரு படங்கள் பெண்களின் சுதந்திரப் போராட்டத்தைக் கூறின.  வேலைக்காரி, பூம்புகார், பராசக்தி, மனோகரா பெண்களை எழுச்சி வீராங்கனைகளாக்கின.
பெண்களின் பிரச்சனைகளை வீடு, சிறை போன்ற படங்கள் பேசினாலும் இரட்டை வால் குருவி, மன்னன், சகலகலா வல்லவன் போன்றவை பெண்களை அடக்கியாளும் முறைகளையே பேசின. பெண்கள் போகப் பொருளாக, படத்தின் வசூலை வாரிக்குவிக்க, கவர்ச்சிக்காந்தங்களாக அநேகப் படங்களில் இரண்டாம்படி நிலையில் ஆணுக்கு அடிமையாக, என்னதான் வீரதீரப் பெண்ணாக இருந்தாலும் கடைசியில் கதாநாயகனோடு காதலில் வீழ்ந்து கதாநாயகனின் பங்கை உயர்த்தவே உபயோகப்பட்டு வந்திருக்கிறார்கள். நெஞ்சில் ஓர் ஆலயம் முதல் காதல் வரை அவள் ஒரு காதல் பாண்டமும் கூட.
வெகுஜன ஊடகம் பெண்களை அமைத்த பிம்பம் அப்படி. அதையும் மீறி அவள் அப்படித்தான், மறுபடியும், கோவில்பட்டி வீரலெட்சுமி, குட்டி, கனவுமெய்ப்பட வேண்டும், சிந்துபைரவி, இந்திரா, மேரி கோம், இறைவி, அறம், பாகுபலி, தரமணி, மஹாநதி, டங்கல், மகளிர் மட்டும், பிங்க், நேர்கொண்டபார்வை என அரிதாக சில படங்கள் வருகின்றன.  
பெண் இயக்குநர்கள் எடுக்கும் அநேக படங்களும் கூட மோதலையும் காதலையுமே சித்தரிக்கின்றன. . பெண்களுக்குப் பாதுகாப்பான இடம் சினிமாதான் என 40 வயதில் நடிக்க வந்த லெட்சுமி ராமகிருஷ்ணன் சொல்கிறார். பாலினப் பாகுபாடுகள் இல்லை என இயக்குநர் பிரியாவும் படைப்பாற்றலில் ஆண் பெண் பேதம் இல்லை என ரேவதியும் கூறி இருக்கிறார்கள்.
நிறம், உடை, வயது, கவர்ச்சியான வெளிப்பாடு ஆகியவற்றுக்கு முக்கியத்துவம், திணிக்கப்படும் எதிர்பார்ப்பு, பழமையான கோட்பாடு, நவீன அடிமைத்தனம், ஆண்களின் உதவி கொண்டே ஜெயிப்பது இதுதான் தமிழ் சினிமாவில் கதாநாயகிகளின் என்றன்றைக்குமான நிலை. அம்மா, தங்கை, மனைவி என்றால் செண்டிமெண்டை அதிகரிக்க அழவேண்டும். குடும்பத்தில் பெண்களுக்கான இரண்டாம் மூன்றாம் தர இடம்தான் சினிமாவிலும்.
பாலியல் வன்முறை ஆடைக்குறைப்பினால்தான் ஏற்படுகிறது என்று ஆண்கள் பண்பாட்டு வகுப்பெடுப்பார்கள் செந்தமிழ்நாட்டுத் தமிழச்சியே என்று ஹீரோ பாட அதற்கேற்றாற்போல் ஹீரோயின்கள் எல்லாம் அரைக்கால் டவுசரோடு ஆட ஆண்கள் புல் சூட் கோட்டில் டான்ஸ் ஆடுவார்கள்.
கதாநாயகிகள் காதலிப்பார்கள், சூப்பர் ஹீரோக்கள் , கதாநாயகர்கள் காதலிக்கப்படுவார்கள். இல்லாவிட்டால் காதலிக்காத பெண்ணைப் பாடிப் பணியவைக்க முயல்வர்கள். அல்லது கெடுப்பார்கள் புதிய பாதை படம் போல் அவள் தன்னைக் கெடுத்தவனை மணந்துகொண்டு திருத்துவாள். பெண் கதாபாத்திரங்கள் மூலம் சமூகம் கட்டமைக்கப்பட்டதா அல்லது சமூகத்தைப் படம் பிரதிபலித்ததா என்று சொல்லமுடியவில்லை. இரண்டும் இயைந்து நின்றன.
நடிப்புத்துறை தவிர பெண்கள் உடையலங்காரம், இயக்கம், வசனம், பாடல்கள், நடன அமைப்பு ,இசை, ஒலிப்பதிவு, தொழில் நுட்பம், தயாரிப்பு என பல்வேறு துறைகளிலும் சாதித்து வருகிறார்கள்.  ஸ்டண்ட் இயக்குநராக வரவில்லை என நினைக்கிறேன்.
நடிப்பிலும் கூட ஆண்போல குடிப்பது , அடிப்பது என மனோரமா, கோவை சரளா போன்ற நகைச்சுவை நாயகியர் பெற்ற வாய்ப்புகூடக் கதாநாயகிக்குக் கிடைப்பதில்லை. ஆபாச நடனங்கள் குத்துப் பாடல்கள், ஐட்டம் சாங் ஆகியவற்றோடு பத்ரிக்கைகளிலும் அட்டைப்படக் கதாநாயகிகள், நடுப்பக்கக் கவர்ச்சிக் கன்னிகளாகவே உபயோகப்படுகிறார்கள். புனிதப்படுத்துதல் அல்லது அசிங்கப்படுத்துதல். இந்த இரண்டு எக்ஸ்ட்ரீம்களுக்கிடையே அல்லாடுகிறது சினிமா.
தண்ணீர் தண்ணீர், பாண்டிட் க்வீன், மதர் இந்தியா, இங்கிலீஷ் விங்கிலீஷ், அரங்கேற்றம், புதுமைப்பெண், மனதில் உறுதிவேண்டும் , 36 வயதினிலே  போல போராட்டம், சமூகப் புரட்சி, மறுமணம், பெண் விடுதலை, பெண்கல்வி, உத்யோகம் பற்றிப் பேசின படங்கள் குறைவே.  ,
சினிமா பலகோடி மூலதனத்தில் கட்டப்படும் ஒரு மாளிகை. அதனால் கமர்ஷியல் வால்யூஸுக்காக அற மதிப்பீடுகள் அற்றது. கோமல் சுவாமிநாதன், ருத்ரய்யா, பாலசந்தரின் சில படங்கள் பாலுமகேந்திராவின் வீடு ஆகிய சில படங்களே கதாநாயகியை முழு வீச்சோடு யதார்த்தமாகப் படைத்தவை.
வெற்றிக்கான ஃபார்முலா ஹீரோ வொர்ஷிப், நாலு ஃபைட், நாலு ரொமான்ஸ் பாட்டு, ரெண்டு செண்டிமெண்ட் காட்சி, க்ளைமாக்ஸ் நெகிழ்ச்சி இதுதான் வசூலை வாரிக் குவிக்கும். ஹீரோவைச் சுற்றும் கதையில் ஹீரோயின்கள் போதைக்கு ஊறுகாய் போல .முக்கியப் பண்டிகை தினங்களில் எல்லாம் தொலைக்காட்சியில் ஸ்பெஷல் சினிமா உண்டு. எப்படியிருந்தாலும் செல்லுலாய்ட் பிம்பங்களை முதலமைச்சர்களாக உருவாக்கியது, ஆட்சி பீடத்தில் அமரவைத்தது சினிமாதான் என்றால் மிகையில்லை.

5 கருத்துகள்:

  1. நல்லதொரு தொகுப்பு... நிறைகுறைகளையும் சொன்னதும் அருமை...

    பதிலளிநீக்கு
  2. பெண்களைப் பெண்களாகவே காட்டினால் போட்ட முதலை எடுக்க முடியாது கவர்ச்சியே நடிகைக்களின் மூலதனம் அதை பார்க்கவே ரசிகர்கள் திரை அரங்குகளுக்கு வருகிறர்கள்

    பதிலளிநீக்கு
  3. அருமையான கண்ணோட்டம்
    பாராட்டுகள்

    கொரோனா தொற்றில் இருந்து முற்காப்பு எடு!
    http://www.ypvnpubs.com/2020/03/blog-post_15.html

    பதிலளிநீக்கு
  4. நன்றி டிடி சகோ

    உண்மைதான் பாலா சாஅர்

    நன்றிப்பா குமார்

    நன்றி யாழ்பாவண்ணன் சகோ .

    வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...