எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

புதன், 16 ஜனவரி, 2019

குங்குமப் பொட்டின் மங்கலம்.

குங்குமப் பொட்டின் மங்கலம்.

  ”குங்குமம் மங்கல மங்கையர் குங்குமம், குங்குமம் மதுரை மீனாக்ஷி குங்குமம்” என்ற பாடலும், ”குங்குமப் பொட்டின் மங்கலம் நெஞ்சமிரண்டின் சங்கமம்” என்ற பாடலும் குங்குமத்தின் மங்களகரத்தை அறிவிக்கின்றன.

”மனாலக்கலவை” என்று குங்குமத்தை புலவர் குமட்டூர் கண்ணனார் பதிற்றுப்பத்தில் விவரிக்கிறார்.

  ”மலைபடு திரவியம்” என்று மிளகு, அகில், குங்குமத்தை தமிழ் இலக்கிய அகராதி தெரிவிக்கிறது. இவற்றிலிருந்து மணமான மகளிர் வகிட்டில் குங்குமம் வைக்கும் பழக்கம் சங்ககாலத்தில் இல்லாதிருந்தும் குங்குமத்தின் பயன்பாடு இருந்திருக்கிறது எனத் தெரிகிறது.

  இந்தக் குங்குமத்தில் மல்லிகை மணம் தாழம்பூ மணம் கொண்டவையும் உண்டு. அதேபோல் சிவப்பு நிறம் மட்டுமில்லாமல் பிங்க் நிறம், பச்சை நிறம் ஆரஞ்சு நிறம் அரக்கு நிறக் குங்குமங்களும் உண்டு. மதுரை மீனாட்சி குங்குமம், காசிக்குங்குமம் சிலோன் குங்குமம் ஆகியனவும் புழக்கத்தில் உள்ளன.

  நீண்ட நேரம் கலையாமல் இருக்க வேண்டுமென்று பொட்டு வைக்குமுன் அம்பர், வாசலின் ஆகியவை வைத்துக் குங்குமப் பொட்டு வைக்கும் வழக்கமும் உண்டு. பிந்தி , சிந்தூரம், ரக்த சிந்தூரம் சிந்தூர், செஞ்சாந்து, சாந்தகம் ,திலகம் ஆகியன குங்குமத்தைக் குறிப்பன.

  சாக்த வழிபாட்டில் குங்குமம் ப்ரத்யேக இடம் வகிக்கிறது. திருவிளக்கு பூஜையில் திருவிளக்கை அம்பாளாக உபாசித்து குங்கும அர்ச்சனை நடைபெறுகிறது. சக்தி உபாசகர்கள் நெற்றியில் குங்குமம் வைப்பதை வழக்கமாகப் பின்பற்றுகின்றார்கள். ஆண்களும் சித்தர்களும் சுவாமிகளும் துறவிகளும் கூட குங்குமம் வைத்துக் கொள்வதுண்டு.

  தட்சனின் யாகத்தின் போது சிவன் அவமதிக்கப்பட அதனால் மனம் நொந்த தாட்சாயிணி யாகத்தில் பாய்ந்து உயிர்துறக்க அதனால் கோபமுற்ற சிவன் சதியின் உடலைக் கையில் ஏந்தி நர்த்தனமாட சக்தியின் அந்தரங்க பாகம் விழுந்த இடம் காமாக்யா கோவிலாகும். இங்கே அம்மனின் மாதப் போக்கு உதிரமே காமாக்யா சிந்தூர் என்று குங்குமமாக வழங்கப்படுவதாக ஐதீகம்.

  மாகாளி வழிபாட்டில் மட்டுமல்ல குபேரன், ஆஞ்சநேயர் ஆகியோர் வழிபாட்டிலும் குங்குமம் இடம் வகிக்கிறது. ஆச்சரியமாக இருக்கிறதல்லவா. ஆம் குபேரன் வழிபாட்டில் பச்சைக்குங்குமம் பிரசாதமாக அளிக்கப்படுகிறது. இரணியூர் ஆட்கொண்டநாதர் சிவபுரந்தேவி கோவிலில் வளர்பிறை அஷ்டமியில் குபேர ஹோமம், அபிஷேகம் செய்து பச்சை குங்குமம் பிரசாதமாக வழங்கப்படுகிறது.

  ஆஞ்சநேயருக்கு வெண்ணெயுடன் ஆரஞ்சு சிந்தூரத்தைச் சாற்றி வழிபடுகிறார்கள் வடநாட்டார். மஞ்சள் சந்தனம் குங்குமம் ஆகியன வீட்டின் கதவு, நிலை, வாயில்படியை அலங்கரிக்கவும், திருவிளக்குக்கு இடவும், மாவிளக்குப் போடும்போதும் நவராத்திரி போன்ற பண்டிகைகளின் போது வண்டி, வாகனம், ஆயுதங்கள் புத்தகங்களுக்கு இட்டு வணங்கவும் பயன்படுகின்றன. மேலும் கோயிலில் அபிஷேக ஆராதனைகளின் போதும் தீபாராதனையின் போதும் சந்தனம் குங்குமம் இட்டே ஆரத்தி காட்டப்படுகின்றன.

  நம் ஊரில் திருமணமான பெண்கள் வகிட்டில் குங்குமமிடுவார்கள். அது மகாலெக்ஷ்மி உறையும் இடமாகக் கருதப்படுகிறது. அங்கே குங்குமம் வைத்தால் ஐஸ்வர்யம் பெருகுமாம். இப்போது அதை ஸ்டிக்கர் பொட்டுகளும், பிந்திகளும் ( வெல்வெட் துணி & கற்களிலான ஒட்டுப் பொட்டுகள்) அந்த இடத்தைப் பிடித்து வருகின்றன. திருமணமான நேபாளப் பெண்கள் மற்ற வடநாட்டுப் பெண்கள் வகிடு முழுவதும் குங்குமமிட்டு அலங்கரித்துக் கொள்வார்கள்.  

  ரக்‌ஷா பந்தனில் சகோதரர்கள் நீளாயுள் நிறைசெல்வம் ஆரோக்கியம் பெற்று வாழ வாழ்த்தி  நெற்றித் திலகமிட்டு கையில் ராக்கி கட்டி பந்தத்தை இன்னும் வலுவாக்குவார்கள் சகோதரிகள். 

  வங்காளத்தில் துர்க்கா பூஜையின்போது அம்மனுக்குப் பூசியபின் திருமணமான மகளிர் ஒருவருக்கொருவர் நெற்றி வகிட்டிலும் கன்னங்களிலும் பிங்க் நிற குங்குமத்தைப் பூசி இனிப்பு ஊட்டி மகிழ்வர் இது சிந்தூர் கேலா,சிந்தூர் ஹோலி எனப்படுகிறது.

  சங்கராந்தி சமயத்தில் ஜாதி ரீதியாக தள்ளிவைக்கப்பட்டோரையும் வீட்டிற்கு அழைத்து மஞ்சள் குங்குமம் வழங்கச் சொல்லிய தன் தந்தை ரணதிவே பற்றி அகல்யா ரங்கனேகர் என்ற விடுதலைப் போராட்ட வீராங்கனையின் சரித்திரம் சொல்கிறது. ஹல்தி குங்கும் திருவிழா குடியரசு தினத்தன்று மும்பையில் கொண்டாடப்படுகிறது.

  பதினெட்டாம் நூற்றாண்டிலேயே ஜான்சிராணி ஹல்தி குங்கும் திருவிழாதான் கொண்டாடினார் என்றாலும் பெண்கள் படையைச் சேர்க்கிறாரோ என்று அஞ்சியது ஆங்கிலேய அரசு.

  புராண காலத்திலும் மன்னர்களின் யுத்த சமயங்களிலும் ராஜாக்கள் வீரர்களுக்கு ராணிகள் ஆரத்தி கரைத்துச் சுற்றி அதிலிருந்து கட்டைவிரலால் நெற்றித் திலகமிட்டு அனுப்புவது துணிவைக் கொடுக்குமாம்.

  பரதநாட்டியத்தில்  குங்குமம் வைப்பது போல் அபிநயம் பிடிக்கும் நடனச் சிலைகளைக் கோயில்களில் காணலாம். இடது கையில் கண்ணாடி பிடித்து அதைப் பார்த்து வலது கை மோதிர விரலால் குங்குமம் தொட்டு வைப்பது போல் அபிநயிக்கும் மகளிர் நடனச் சிலைகள் கோயில்கள் பல்வேறு கோயில்களில் இடம்பெற்றுள்ளன. 

 சுத்தமான குங்குமம் என்பது விரலிமஞ்சள் கஸ்தூரி மஞ்சள் சுண்ணாம்பு எனப்படும் வெண்காரம் படிகாரம், ஆகியன கலந்து அரைக்கப்பட்ட பொடியுடன் நல்லெண்ணெய் கலந்து தயாரிக்கப்படுகிறது. வாசனைக்காக மல்லிகை, தாழம்பூ ஆகியனவற்றின் எசன்ஸ் சேர்க்கிறார்கள். நெற்றியைக் கறுப்பாக்காத குங்குமம் இப்படித்தான் கெமிக்கல் சேர்க்காமல் தயாராகிறது. மதுரையில்சிவப்பு &  மெரூன் குங்குமம் குடிசைத்தொழிலாகவும் தயாரிக்கப்படுது

  மரச் சிமிழ், பித்தளைச் சிமிழ், வெள்ளிச் சிமிழ் ஆகியவற்றில் மரச்சிமிழில் வைப்பது நல்லது. ஈரம் படாமல் காக்கவேண்டும். திருமண சீர் நலங்கு சீரில் மஞ்சள் குங்குமம் தடவி வாழ்த்துவதும் மற்றும் நிச்சயதாம்பூலம் சீமந்தத்தின் போது மஞ்சள் குங்குமம் வைத்துக் கொடுப்பதும் மரபு. நலுங்கு சீமந்தம், திருமணத்தில் திருப்பூட்டும் போது தாலியில், நெற்றியில் மற்றும் வகிட்டில் மணமகன் மணமகளுக்கு குங்குமம் வைப்பது மரபு.

 இனி அறிவியல் காரணம்:- ஆன்மீகம் அழகு, அறிவியல்படியும் நெற்றியின் புருவமத்தியில் குங்குமம் இடுவது சிறப்பு. ஹிப்னாடிசத்தை முறியடிக்கும் நரம்பு உஷ்ணத்தைக் கட்டுப்படுத்தும். ஆக்ஞா சக்கரத்தைத் தூண்டிவிடும் பணி செய்கிறது. திருஷ்டி படுதல், கண்படுதல் ஆகியன தவிர்க்கிறது. எதிர்மறை எண்ணங்களின் தாக்கங்களில் இருந்து விடுவிக்கிறது.

  குங்குமத்தைக் காய்ச்சி நெற்றிப் பற்று போட்டால் நீர்க்கோவையை நீக்கும். மங்கலம், சுபம். மற்றும் மருத்துவமுறையில் நன்மை தருகிறது. தெய்வீகத்தன்மை, உடல் குளிர்ச்சி அளிக்கிறது. சுயக் கட்டுப்பாடு தருவதோடு கிருமி நாசினியாகவும் செயல்படுகிறது.

  வகிட்டில் சுமங்கிலிப்பெண்கள் அணிகிறார்கள். புருவமத்தியில்  குங்குமம் வைப்பதால் அதன் மின் கடத்தும் தன்மை மூளையில் உள்ள பீனியல் க்ளாண்ட் எனப்படும்( நெற்றிக்கண் ) சுரப்பியுடன் தொடர்பு கொள்ள ஏதுவாகிறது. சுழிமுனை எனப்படும் இப்பகுதியில் யோகம் தியானம் செய்யும்போது கவனம் குவித்துச் செய்யப்படும்போது நுண்ணறிவை எட்ட உதவுகிறது.

  நவராத்திரி, காரடையான் நோன்பு வரலெக்ஷ்மி விரதம் போன்றவற்றில் தாம்பூலம் தரும்போதும் சாதாரண நாட்களிலும் வீட்டிற்குவரும் சுவாசினிகள் சுமங்கலிகளுக்குக் குங்குமம் கொடுப்பதும் வழக்கமாக உள்ளது. திருமணம் முடிந்த பெண் மக்களை ”மஞ்சள் குங்குமத்தோட நீ நீடுழி வாழணும் தாயே”,  என்று பெரியவர்கள் இன்றும் வாழ்த்தி வருவதே மஞ்சள் குங்குமத்தின் சிறப்பையும் முக்கியத்துவத்தையும் சொல்லுகிறது. 

2 கருத்துகள்:

  1. குங்குமம் மஞ்சளுக்கு என்றுமே நல்ல நாள்தான்!

    பதிலளிநீக்கு
  2. அஹா அருமையான பாடல் ஸ்ரீராம் !

    வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...