வெள்ளி, 11 ஜனவரி, 2019

மாதொருபாகன் – ஒரு பார்வை.


மாதொருபாகன் – ஒரு பார்வை.

புதினம் புனைவாய் இருக்கும்வரை அதில் ப்ரச்சனையில்லை. அதில் யூக வரலாற்றுத் தரவுகள் இருக்கின்றன என்று கோடு காட்டினால் ப்ரச்சனைகளை எதிர்கொள்ளத்தான் வேண்டும். 2010 இல் வெளிவந்த இந்த நாவலை இந்த வருடம் காரைக்குடி புக்ஃபேரில் வாங்கினேன்.

தேவாத்தா, மாச்சாமி, கூளாயி என்று தெய்வங்களையும் கரட்டூர், ஆட்டூர், அடையூர் என்று ஊர்களையும் குறிப்பிட்டு வெளியாகி இருக்கும் இந்நூல் பன்னிரெண்டாம் பதிப்பு. மாடர்ன் சிந்தனைகள் கொண்ட இன்றைக்கும் இதை இப்படியே குறிப்பிட்ட இனத்துக்கு சார்பாகக் காட்டினால் குத்திக் கொல்லத்தான் வருவார்கள் என்பதில் சந்தேகமேயில்லை.

பேசும் படங்கள் வந்த காலகட்டம் என்பதால் இது 1930 – 40 களாக இருக்கலாம். நூலில் சில பல பக்கங்கள் வந்தபின்பே இந்நூல் மாந்தர்கள் பற்றிய சித்திரம் அக்கால கட்டத்தைச் சார்ந்தது ( குடுமி வைத்த ஆண், ரவிக்கை அணியாத பெண் ) எனப் புலப்படுகிறது.


பேச்சு மொழி வழக்கிலும் எல்லா வார்த்தைகளும் தடையில்லாமல் இடம் பெறுகின்றன, ஒரு பேராசிரியர் எழுதிய புதினமா என்று அதிர்வேற்படுத்துகின்றன. விதம் விதமான இடங்களில் குடிப்பதும் களிப்பதும் பொழுதுபோக்காகக் காட்டப்பட்டுள்ளது.

கதை நாயகன் காளியண்ணன், கதை நாயகி பொன்னாயி. இவர்களுக்குத் திருமணமாகி பத்துப் பன்னிரெண்டு வருடங்கள் குழந்தையில்லாமல் இருக்கிறது. இவர்களை சந்தர்ப்பம் வாய்க்கும்போதெல்லாம் அவ்வூரார் வறடன் வறடி என இகழ்கிறார்கள். இதற்கான பல்வேறு சந்தர்ப்பங்கள் ( திருமணம், திருவிழா, சடங்கு, சீர் என ) அமைய, உறவினர்கள், அண்டைவீட்டார், ஊரார் என அனைவரிடத்தும் அவமானங்களைச் சந்தித்துத் தனிமைப்படுகின்றனர் தம்பதியர்.

இதிலும் காளி பிடிவாதமாக இன்னொரு மணம் வேண்டாம், தாம் இருவர் மட்டுமே தனித்து ( நல்லையன் சித்தப்பா போல்) வாழ்ந்துவிடலாம் என உறுதியாயிருக்க பொன்னாவோ அவள் குடும்பத்தார் எடுக்கும் முடிவுக்கு கட்டுப்பட்டு நடந்துகொள்வதாகக் காட்டப்படுகிறது. யாருக்கும் தெரியாமல் தப்பு செய்தால் தப்பில்லை என்கிறார்கள். 

மாதொருபாகனாயிருந்த மனிதன் மனதளவில் பிரிந்து மரித்து வீழ்கிறான். முடிவில் பூவரசு போல் விதையற்று வேரற்று வீழும் காளியண்ணனை மதிக்கும் மனம் வெட்டொன்று துண்டு இரண்டு எனப் பேசும் பொன்னாவையும் மதிக்கிறது. ஆனால் சந்தர்ப்பத்துக்கு ஏற்ப மாறும் ( புருஷனுக்கு ஏற்றபடி பேசி நடிப்பதாய்ப் பொன்னா கூறும் தருணத்தில் ) பொன்னாவை வெறுக்கத்துவங்கி விடுகிறது.

அந்த ஊரில் நடக்கும் திருவிழாவில் சாமி கரடேறும் பெருவிழாவின் நோம்பில் சாமி தந்த கொடையாக குழந்தை வரம் கிடைக்கும் எனச் சொல்லப்பட தந்தை தாயுடன் பொன்னா செல்லும் இடமே ஐயறவு கொடுத்தது. அங்கேயே அபஸ்வரம் தட்டிவிடுகிறது.

இன்றைய ஐவிஎஃப் கூட தம்பதிகள் சேர்ந்து முடிவெடுக்கும்போது ஒரு நூற்றாண்டுக்கு முன்னான வாழ்வில் (இணைபிரியாமல் வாழும் தம்பதி வேறு)  கணவனின் எண்ணத்துக்கு மாறானதைச் செய்ய அப்பெண் முடிவெடுத்தாள் என்று காட்டியிருப்பதே அபத்தம். அதிலும் ஏதோ மார்டன் பெண்கள் போல 24 ஆம் அத்யாயத்தில்

“எனினும் நான் உன்னைத் தேடி வருகிறேன். நான்கு பேருக்கு முன்னால் அவன் தலை நிமிர்ந்து நிற்கட்டும். தொண்டுப்பட்டிக்குள்ளே அடங்கிக் கிடக்கும் அவன் துள்ளல்கள் திரும்பட்டும். அவன் அணைப்பில் முன்னிருந்த காதல் பெருகட்டும். எல்லாரையும் போல் நாங்களும் எங்கும் போகவும் எதிலும் கலக்கவும் நீதான் உதவ வேண்டும். தேவாத்தா ..” என வேண்டுகிறாள். பேச்சு வழக்கெல்லாம் பாமரத்தனமாயிருக்க சிந்தனை மட்டும் எப்படி பத்தொன்பதாம் நூற்றாண்டுப் பெண்ணுக்கு இருபத்தியோராம் நூற்றாண்டுச் சிந்தனை & இலக்கிய மொழி வாய்க்கும் ?

இன்னொருவரின் மூலம் பெற்ற குழந்தை என்றால் அதை எப்படித் தன் குழந்தையாகப் பார்க்க முடியும் என்று காளி நினைப்பதுதான் சரி என்று நமக்கும் தோன்றுகிறது. உருவத்திலேயே வித்யாசம் தெரிந்துபோகும்போது எப்படி இவர்கள் ஊராரோடு கலக்க முடியும். ? அது இன்னும் அவமானமில்லையா. ( கதையில் இன்னொரு இடத்தில் இது காட்டுக் கேசனைப் பற்றிய குறிப்பில் வருகிறது. )

நண்பர்கள் சேர்ந்து குடிக்காத இடமில்லை. ஆனாலும் முத்துவுக்கு தன் தங்கையின் தொண்டுப்பட்டியில் பண்ணையாளாய் இருந்த மண்டையனைப் பற்றித் தெரியவில்லை. !

இந்த நூலில் திருத்தப்பட்ட பதிப்பைத்தான் படித்தேன் என்றாலும் புதினம் என்பது புனைவாய் மட்டுமே இருக்கும்வரை அதை அப்படியே விட்டுவிடலாம். ஆனால் புதினத்தில் வரலாறு இருக்கிறது பூகோளம் இருக்கிறது என்றால் அதன் அறிவியலை, அறவியலை எழுத்தாளர் ஓய்ந்து போகும்வரை அனைவருமே ஆய்ந்து சிக்கலாக்கத்தான் செய்வார்கள்.  

நூல் :- மாதொரு பாகன்
ஆசிரியர் :- பெருமாள் முருகன்
பதிப்பகம் :- காலச்சுவடு.
விலை :- ரூ 145/-

4 கருத்துகள் :

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University சொன்னது…

இவ்வாறாக சிக்கல்கள் உண்டாக்கப்படும் நிலையில் நாம் உண்மையை அறிய இயலா நிலை ஏற்படுகிறது. நாம் நம் வரலாறுகளை அறிந்துகொள்ளும் வாய்ப்பினையும் இழக்க நேரிடுகிறது.

Ramani S சொன்னது…

நடுநிலையான அருமையான விமர்சனம் வாழ்த்துக்கள்

வருண் சொன்னது…

***அந்த ஊரில் நடக்கும் திருவிழாவில் சாமி கரடேறும் பெருவிழாவின் நோம்பில் சாமி தந்த கொடையாக குழந்தை வரம் கிடைக்கும் எனச் சொல்லப்பட தந்தை தாயுடன் பொன்னா செல்லும் இடமே ஐயறவு கொடுத்தது. அங்கேயே அபஸ்வரம் தட்டிவிடுகிறது.

இன்றைய ஐவிஎஃப் கூட தம்பதிகள் சேர்ந்து முடிவெடுக்கும்போது ஒரு நூற்றாண்டுக்கு முன்னான வாழ்வில் (இணைபிரியாமல் வாழும் தம்பதி வேறு) கணவனின் எண்ணத்துக்கு மாறானதைச் செய்ய அப்பெண் முடிவெடுத்தாள் என்று காட்டியிருப்பதே அபத்தம். அதிலும் ஏதோ மார்டன் பெண்கள் போல 24 ஆம் அத்யாயத்தில் ***

பரவாயில்லை. நீங்களாவது நான் உணருவதுபோல் எழுதியிருக்கீங்க. நான் பார்த்தவரைக்கும் "மரியாதைக்குரிய" பல பெரியமனுஷர்/மனுஷிகள், உங்களை/என்னைப் போல் சிந்திக்கவோ உணரவோ இல்லை. கொஞ்சம் பயந்துவிட்டேன், என்னடா இது, நம்மைப்போல் யோசிப்பவர்கள் இல்லாமல்ப் போயிவிடுவார்களோ என்று.


நான் ஏற்கனவவே சொன்னதுதான்..பொன்னாளை உருவாக்கியவன் ஒரு ஆம்பளை (பெருமாள் முருகன்). தன்னை பொன்னாளுடன் உறவுகொள்ளும் சாமியாக கற்பனை பண்ணிக் கொண்டு எழுதிய ஃபாண்டஸிதான் இந்தக் கதை. நான் பொன்னாளையோ காளியையோ கவனிக்கவில்லை, பெருமாள் முருகனின் ஃபேண்டஸி உலகைத்தான் பார்த்தேன். I did not see many readers ever realizing that fact that perumaaL murugan is running the show. :)

சிவா சொன்னது…

அருமையான விமர்சனம்

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...