எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

திங்கள், 21 ஜனவரி, 2019

சூதால் வென்ற துஷ்டச் சகுனி. :- தினமலர் , சிறுவர்மலர் - 1.

சூதால் வென்ற துஷ்டச் சகுனி. :-
த்தினாபுரம் அரண்மனை. ‘தாயம்.. தாயம்.’. என்று சொல்லி நெற்றியில் தட்டிக்கொண்டு தாயக்கட்டைகளை உருட்டிப் போடுகிறான் ஒருவன். அவன் சொன்னபடியே தாயம் விழ. கௌரவர்கள் குதூகலிக்கிறார்கள். பாண்டவர்களோடு பீஷ்மர் விதுரர் துரோணர் கிருபர் ஆகியோரும் அமைதியாக அமர்ந்திருக்கிறார்கள். குள்ளநரிப்புன்னகையோடு இவர்கள் நடுவில் அமர்ந்து தாயம் உருட்டும் அவன் தான் சகுனி. சூதால் அவன் செய்த வினை கொஞ்சமா நஞ்சமா. இதற்கெல்லாம் காரணம் என்னவென்று பார்ப்போம் குழந்தைகளே.
திருதராஷ்டிரன் மனைவி காந்தாரி காந்தார நாட்டில் பிறந்தவள். தந்தை சுவலன். அவளுக்கு நூறு சகோதரர்கள். அவர்களின் ஒருவன் சகுனி. திருதராஷ்டிரனுக்கு மணம் முடிக்கு முன்பு காந்தார தேசத்தில் அவளுக்கு திருமணதோஷம் இருந்ததால் ஒரு ஆட்டுக்கு மணம் செய்து தோஷம் கழித்தார்கள். இது பீஷ்மருக்குத் தெரியவர அவர் கோபமாக காந்தாரியின் தந்தை சுவலனையும் அவரது பிள்ளைகள்  நூறுபேரையும் சிறையில் அடைக்கிறார்.
போதிய உணவு இல்லாமல் அனைவரும் சிறையில் வாடுகிறார்கள்.  தங்களுக்குக் கொடுக்கப்படும் உணவை அவர்கள் சகுனிக்குக் கொடுத்துத் தாங்கள் மரிக்கிறார்கள். சகுனியின் தந்தை சுவலன் சாகும் தருவாயில் சகுனியின் கணுக்காலை அடித்துஉடைத்துத் ” நம் வம்சத்தைச் சிறையில் சாகடித்த குருவம்சத்தைப் பழிவாங்கவேண்டும்” என்று கோபமாய்ச் சொல்கிறார்.

“நான் இறந்ததும் என் விரல்களில் தாயக்கட்டையை உருவாக்கு.அதில் என் கோபம், ஆத்திரம் எல்லாம் நிறைந்து இருக்கும். நீ என்ன எண்ணிக்கை கேட்கிறாயோ அதுவே விழும். “ இதைச் சொல்லிவிட்டு இறக்கிறார் சுவலன்.
துரியோதனின் அபிமானத்தைப் பெறும் சகுனி பாதாளச் சிறையிலிருந்து விடுதலையாகி வெளியே வருகிறான். அப்போதும் எப்போதும் அவன் நயவஞ்சகச் சிரிப்பு மாறுவதில்லை. குருவம்சத்தின் அழிவுக்கு இவனே காரணம்.
ந்திரப்பிரஸ்தத்தில் சொர்க்கலோகம் போல் நிர்மாணிக்கப்பட்டிருந்த பாண்டவர்களின் நகரத்தைப் பார்த்துவந்த துரியோதனனுக்கோ சொல்ல முடியாத ஆத்திரம். அங்கே நீர் என்று நினைத்து அவன் தரையில் தடுமாறி நடந்ததைப் பார்த்து த்ரௌபதை சிரித்தது வேறு அவனுக்கு அவமானத்தை உண்டாக்கி இருந்தது. பழிவாங்கத் துடித்துக் கொண்டிருந்தான்.
இதுதான் சரியான சந்தர்ப்பம். இதைத்தானே எதிர்நோக்கி இருந்தான் சகுனி.
“துரியோதனா அவர்களை நம்முடன் சூதாட வரச்சொல். என்னிடம் இருக்கும் தாயக்கட்டையில் நான் கேட்ட எண்ணிக்கைதான் விழும் . அவர்களை வீழ்த்திவிடலாம் “
மாமன் கொடுத்த நம்பிக்கையில் பாண்டவர்களைச் சூதுக்கு அழைக்கிறான் துரியோதனன். அத்தினாபுரம் அரண்மனை புதுப்பிக்கப்பட்டுள்ளது அதைக் காண வாருங்கள் என்று அழைத்துவிட்டு வந்தவர்களைச் சூதாட அழைக்கிறான் துரியோதனன்.
சூது வினை அறியாத பஞ்சபாண்டவர்கள் சம்மதிக்கிறார்கள். தேவலோகம் போன்ற இந்திரப் பிரஸ்தத்தை விட்டுக் கிளம்பி வருகிறார்கள். அவர்களுடன் அத்தினாபுரத்தைப் பார்க்க திரௌபதியும் வந்திருக்கிறாள்.
சபையில் சூதாட்டம் தொடங்குகிறது. பாண்டவர்கள் சார்பாக அவர்களின் மூத்த சகோதரரான தர்மர் ஒரு பக்கமும். கௌரவர்கள் சார்பாக அவர்களின் மாமன் சகுனி ஒரு பக்கமும் அமர்ந்திருக்கிறார்கள்.
சூதாட்டம் விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. துவக்கத்தில் சிறிய பொருட்களை வைத்து விளையாடியவர்கள் அடுத்து அடுத்து யானைகள், குதிரைகள், சேனைகள், ரதங்கள், பணிப்பெண்கள், பணியாட்கள், அரண்மனை, நாடு என்று அனைத்தும் வைத்து விளையாடிக் கொண்டிருக்கிறார்கள். ஒவ்வொன்றாக இழந்துகொண்டிருந்தார் தர்மர்.
ஒவ்வொரு முறையும் சகுனி என்ன கேட்டானோ அதே எண்ணிக்கையே அந்த மாய தாயக்கட்டையில் விழுந்து கொண்டிருந்தது.
அதன் பின்னும் தர்மர், நகுலன், சகாதேவன், பீமன், அர்ஜுனன் என்று ஒவ்வொருவராகப் பணயம் வைத்து ஆடிக் கொண்டிருந்தார். தர்மர் மட்டுமே பாக்கி. தன்னையும் அடுத்துப் பணயம் வைத்தார். அஹோ சகுனி கேட்ட தாயமே விழுந்தது.
” அவ்வளவுதானா.. சீக்கிரம் முடிந்துவிட்டதே ஆட்டம். இன்னும் ஏதாவது இருந்தால் வைத்து ஆடு. இல்லாவிட்டால் நாந்தான் ஜெயித்தேன்” என்று கொக்கரித்தார் சகுனி. எல்லாரையும் இழந்தபின்பும் திரௌபதி ஞாபகம் வந்தாள் தருமருக்கு. அவளும் அவருக்கு உடைமையானவள் என்று நினைத்து ” திரௌபதியையும் வைத்து ஆடுகிறேன் “ என்று கூறினார். இதற்காகத்தானே காத்திருந்தார்கள் கௌரவர்கள். பதினேழாவது முறையாக அவர்களுக்காகத் தாயக்கட்டையை உருட்ட சகுனி கேட்ட எண்ணிக்கையே விழுந்தது.
நல்லோர்கள் கூடிய சபையில் திரௌபதி அழைத்துவரப்பட்டு மானபங்கம் செய்யப்பட்டாள். பீமன் கொதித்து எழுந்து கௌரவர்களைப் பழிவாங்குவதாக சூளுரைத்தான்.
தன் காரணமாக குருஷேத்திரப் போர் நிகழ்ந்தது. இரு பக்கமும் யுத்தத்தால் ரத்தமயமானது. கௌரவர்கள் நூறு பேரும் அழிந்தார்கள். பாண்டவர் பக்கம் உப பாண்டவர்களும் அபிமன்யுவும் அழிந்தார்கள்.
தந்தை சுவலன் குருவம்சத்தை அழிக்கச் சொன்னதைத் தன் சூதால் நிறைவேற்றினான் சகுனி. இதற்கெல்லாம் காரணம் பீஷ்மர் சகுனியின்  தொண்ணூற்று ஒன்பது சகோதரர்களையும் தந்தை சுவலனையும் சிறையில் அடைத்துக் கொடுமைப்படுத்தி இறக்கத் தூண்டியதுதான் காரணம்.
குருவம்சத்தினரைத் தனது சூதால் வென்ற துஷ்டச் சகுனியும் குருஷேத்திரப் போரின் முடிவில் சகாதேவனால் கொல்லப்பட்டார். அதனால் சூதும் வாதும் எப்போதும் வெல்லாது, உண்மையும் நன்மையுமே வெல்லும் என்பதைத் தெரிந்து கொள்வோம் குழந்தைகளே. 

டிஸ்கி:-  இந்தக் கதை இதிகாச புராணக் கதைகள் என்ற தலைப்பில் 18 . 1. 2019  தினமலர் சிறுவர்மலர் இதழில் இடம்பெற்றுள்ளது. நன்றி தினமலர் சிறுவர் மலர், தனது அழகான ஓவியங்களால் கதைக்கு எழில்கூட்டும் ஓவியர் அஷோக் & தேவராஜன் ஷண்முகம் சார்.

2 கருத்துகள்:

  1. சிறுவருக்கு ஏற்றார்ப்போல
    மிகப் பெரிய பெரியவர்களும் அறியாத
    விஷயத்தைச் சொல்லிப் போனவிதம் அருமை
    வாழ்த்துக்களுடன்..

    பதிலளிநீக்கு
  2. நன்றி ரமணி சகோ

    வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...