எனது பதிமூன்று நூல்கள்

புதன், 2 ஜனவரி, 2019

தந்தைக்கு நிகராக உயர்ந்த மைந்தன் க்ருதவர்மா. தினமலர். சிறுவர்மலர் - 50.

தந்தைக்கு நிகராக உயர்ந்த மைந்தன் க்ருதவர்மா:-
ருப்பாக இருக்கிறான் என்று ஒரு குழந்தையை அவனைப் பெற்ற தந்தையே வெறுக்க முடியுமா. ஆனால் வெறுத்துவிட்டாரே. அவர்தான் சூரிய பகவான். அதோ காலைச் சாய்த்து சாய்த்து மனவருத்தத்தோடு நடந்து செல்கிறானே ஒரு சிறுவன், அவன்தான் அவரது புத்திரன் க்ருதவர்மா என்ற சனி. தன்னை அடியோடு வெறுத்த தந்தையிடம் நற்பெயர் வாங்க அவன் பட்டபாடு கொஞ்சமா நஞ்சமா. அதனால் சூரியன் மனம் மாறினாரா எனப் பார்ப்போம் வாருங்கள் குழந்தைகளே.
சூரியனின் மனைவி பெயர் உஷாதேவி. அவர்களுக்கு முன்று குழந்தைகள் பிறந்தபின்பு உஷாதேவியால் சூரியனின் வெப்பத்தைத் தாங்க முடியவில்லை. தன்னைப் போல உருவம் கொண்ட ஒரு பெண்ணைப் படைத்து அவளை சூரியனுடன் குடும்பம் நடத்தச் சொல்லிவிட்டு தவம் செய்யப் பூலோகம் சென்று விட்டாள். அவள்தான் சாயாதேவி.
சூரியனுக்கும் சாயாதேவிக்கும் இரண்டு குழந்தைகள் பிறக்கிறார்கள். அவர்கள் கிருதவர்மா என்ற ஆண் குழந்தையும் , தபதி என்ற பெண் குழந்தையும். உஷாதேவியின் நிழலிலிருந்து உருவானவர்தான் சாயாதேவி என்பதால் அவருக்குப் பிறந்த கிருதவர்மா என்ற சனீஸ்வரன் கருமை நிறமாகப் பிறக்கிறார்.

குழந்தை பிறந்ததும் ஆவலோடு வந்து பார்க்கிறார் சூரிய பகவான். தந்தையோ செக்கச்சிவந்த நிறத்தையும் கதிர்களையும் உடையவர். ஆகிருதியானவர். ஆனால் அவரது மகனோ அவருக்கு நேர் எதிரான கருப்பு நிறத்தோடு சின்ன உருவமாக இருக்கிறார். பார்த்ததும் வெறுப்பு மண்டுகிறது சூரியனுக்கு. குழந்தையைக் கூடக் கொஞ்சாமல் கோபத்தோடு சென்று விடுகிறார்.
அதைக் கண்டு வருந்திய சாயாதேவி மனம் வருந்தி அழுகிறார். தாயின் கண்ணீரையும் தந்தையின் அலட்சியத்தையும் பார்த்தே வளர்கிறான் சனி. அவனுக்கோ தன் தந்தை தன்னை எடுத்துக் கொஞ்சவில்லையே என்ற ஏக்கம் நாளுக்கு நாள் வளர்கிறது.
எல்லாக் குழந்தைகளும் ஓடி ஆடித் தந்தை மடியில் அமரும்போது தனக்கு மட்டும் அந்தப் பாக்கியம் கிட்டவில்லையே என்று ஏங்கிய சனி ஒரு கட்டத்துக்குப் பிறகு தந்தையை வெறுக்க ஆரம்பிக்கிறார். அவரை விரோதி போல எண்ணி அவர் முகத்தை இவர் பார்ப்பதே இல்லை.
தந்தைபோல தானும் சக்தி உடையவனாக ஆக வேண்டும் என்ற எண்ணம் அவரை ஆட்டிப் படைக்கிறது. இதற்கெல்லாம் உகந்த இடம் காசி மாநகரம்தானே.
சூரிய உலகத்திலிருந்து பூலோக வந்து காசிக்குச் சென்று சிவலிங்கம் ஒன்றை வைத்து கடுந்தவம் செய்கிறார். பல்லாண்டுகள் தவம். நாள் கிழமை, வருஷம் எல்லாம் பார்க்காமல் மெய்வருத்தம் கொள்ளாமல் கண் துஞ்சாமல் ஈசனை நோக்கிக் கடுமையான தவத்தில் இருக்கிறார் சனி. 
சனிபகவானின் கோரத்தவத்தைக் கண்டு மனமகிழ்ந்த சிவன் தோன்றி என்ன வரம் வேண்டும் என்று கேட்கிறார். அவரை வணங்கிப் பணிந்து போற்றுகிறார் சனிபகவான்.
“குழந்தாய் உன் உக்கிர தவம் கண்டு மெச்சினேன். என்ன வரம் வேண்டும் உனக்கு ? எதாக இருந்தாலும் தருவேன். “ என்று சனியின் சிரசில் கரம் வைத்து அருள்கிறார் சிவபெருமான்.
“ ஈசனே , நான் மக்களின் தலை எழுத்தை நிர்ணயிக்கும் நவக்கிரகங்களில் ஒன்றாக விளங்கவேண்டும். ”
”அப்படியே ஆகட்டும்” என்கிறார் சிவன்.
”என் தந்தையை விடவும், என் கூடப்பிறந்தவர்களை விடவும் நான் வலிமையாக இருக்க வேண்டும். என் பார்வைக்கு அதிக பலம் தர வேண்டும். ”
”அதையும் தந்தேன்” என்று கூறி ” உன் கடுந்தவம் கண்டு மெச்சி உனக்கு நான் ஈஸ்வரப் பட்டம் அளிக்கிறேன். இன்றுமுதல் எனக்கு அடுத்து நீ சனீஸ்வரன் என்று அனைவராலும் வணங்கப்படுவாய் “ என்று ஆசி அளிக்கிறார்.
சனியின் பலம் பெருகுகிறது. அவரது பார்வைக்கும் அதீத பலம் கிடைக்கிறது.  தேவாதி தேவர்களும் அவரது பார்வைக்கு அஞ்சுகிறார்கள்.
சூரிய லோகம் திரும்புகிறார் சனிபகவான். ஒரு முறை தந்தை தாய் சாயாதேவியிடம் கோபப்பட அதைக் கண்டு சனி வெகுள்கிறார். அவர் தன் தாய் சாயாதேவியின் கண்ணீரைப் பார்த்து வருந்தி கோபத்தோடு சூரியபகவானை வக்கிரப் பார்க்க சூரிய கிரகணம் பீடிக்கிறது.
சனியின் சக்தியைக் கண்டு வியந்த அதே தருணம் தன்னைக் கிரகணம் பீடித்ததைக் கண்டு வருந்திய சூரியன் பரமேஸ்வரனிடம் அதற்கான காரணத்தை விசாரிக்கிறார். அதற்கு பரமேஸ்வரன் ” மக்கள் செய்யும் பாவ புண்ணியத்துக்கு ஏற்ப கர்மபலன் வழங்கவே படைக்கப்பட்டவன் சனி. அதனால்தான் கருமையாக இருக்கிறான். அதனால்தான் வக்கிரப் பார்வையும் அமைந்துள்ளது. அவனது வக்கிரப் பார்வை தீயோர்களை மட்டுமே தண்டிக்கும். அவன் உன் மகனாகப் பிறந்தது உனக்குத்தான் பெருமை ” என்று கூறுகிறார்.
தன் மகனின் பிரலாபத்தை ஈசனின் வாயால் கேட்ட சூரியன் மகிழ்ந்து சனியைத் தன் மகனாக ஏற்றுக் கொள்கிறார். சனியும் தன் தவறை உணர்ந்து தந்தையிடம் மன்னிப்புக் கேட்கிறார். சாயாதேவி இதைக் கண்டு மகிழ்கிறாள். இப்போது அவள் கண்களில் ஆனந்தக் கண்ணீர் வடிகிறது. தாய் சாயா தேவியின் கண்ணீரைத் துடைக்கிறான் அன்பு மகன் சனி.
தந்தை வெறுத்தாலும் தந்தைக்கு நிகராக உயர்ந்து நின்று தந்தையாலே அங்கீகரிக்கப்பட்ட சனி என்னும் கிருதவர்மா பாராட்டுக்குரியவர்தானே.

டிஸ்கி:-  இந்தக் கதை இதிகாச புராணக் கதைகள் என்ற தலைப்பில் 28 . 12. 2018  தினமலர் சிறுவர்மலர் இதழில் இடம்பெற்றுள்ளது. நன்றி தினமலர் சிறுவர் மலர், தனது அழகான ஓவியங்களால் கதைக்கு எழில்கூட்டும் ஓவியர் அஷோக் & தேவராஜன் ஷண்முகம் சார்.

5 கருத்துகள்:

 1. வாழ்த்துகள்! கதை நன்றாக இருக்கிறது.

  பதிலளிநீக்கு
 2. இந்தக்கதை கேள்விப்படாதது/உஷாதேவியால் சூரியனின் வெப்பத்தைத் தாங்க முடியவில்லை. தன்னைப் போல உருவம் கொண்ட ஒரு பெண்ணைப் படைத்து அவளை சூரியனுடன் குடும்பம் நடத்தச் சொல்லிவிட்டு தவம் செய்யப் பூலோகம் சென்று விட்டாள். அவள்தான் சாயாதேவி/.

  பதிலளிநீக்கு
 3. நன்றி துளசி சகோ & கீத்ஸ்

  நன்றி ஜம்பு சார்

  நன்றி பாலா சார்

  நன்றி செந்தில் :)

  வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
  என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

  பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...