எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வெள்ளி, 4 ஜனவரி, 2019

அஃகப் பானை முதல் வெள்ளாவிப் பானை வரை.

அஃகப் பானையும் எஃகுப் பானையும்/ பானை பிடித்தவள் பாக்கியசாலி.
  அஃகப் பானையும் எஃகுப் பானையும்

  “தஞ்சாவூரு மண்ணு எடுத்துத் தாமிரபரணித் தண்ணியவிட்டு சேர்த்து சேர்த்து செய்ததிந்தப் பொம்மை” என்ற பாடலைக் கேட்டிருக்கலாம். பெண்ணைக் குறித்துப் பாடப்பட்ட பாடலானாலும் பானை வகைகள் டெல்டா போன்ற பகுதிகளில் இருக்கும் களிமண் கொண்டு ஆற்று நீரால் பிசையப்பட்டு வனையப்படுவதை இப்பாடல் அழகாக விவரிக்கின்றது. அதே போல் திருமணமானதும் தம்பதியர் வாழ்வு செல்வச் செழிப்போடு சிறந்தோங்கினால் ’பானை பிடித்தவள் பாக்கியசாலி’ என்று சொல்வதும் உண்டு.  


  மட்பாண்டம் கிட்டத்தட்ட 2000 ஆண்டுகாலப் புழக்கத்தில் உள்ளது. கீழடி, அரிக்கமேடு, ஆதிச்சநல்லூர், அழகன்குளம், கொடுமணல் ஆகிய இடங்களில் நடத்தப்பட்ட தொல்பொருள் ஆய்வில் கிடைத்த 6000 க்கும் மேற்பட்ட பொருட்கள் 2200 ஆண்டுகளுக்கு முற்பட்டவை என்கிறார்கள். திருக்குறளில் கூட

“சலத்தாற் பொருட்செய்தே மார்த்தல் பசுமட் 
கலத்துணீர்ப் பெய்திரீ இயற்று “ என்று பிறர்பொருளை விரும்பாமை பற்றிப் பாடப்பட்டுள்ளது. ’திருடிச் செல்வம் சேர்ப்போம் என்பது சுடப்படாத பசுமட் கலத்தினுள் நீரை நிரப்புவதற்கு ஒப்பாகும்’ என்கிறார் வள்ளுவர்.

  இந்த ஆய்வுகளில் கண்டுபிடிக்கப்பட்டவை மண்மூடியும் அழிவுறாத சுட்ட மண்ணால் செய்யப்பட்ட அதிசயப் பொருட்கள். அவை மிளிர் அணிகலன்கள், கூரை ஓடுகள், உறை கிணறுகள், சுடுமண் முத்திரைக் கட்டைகள், சுடுமண் பொம்மைகள், சுடுமண் கழிவுநீர்க் கால்வாய்கள், வண்ணம் அடிக்கப்பட்ட கருப்பு சிவப்பு மட்பாண்டத் துண்டுகள், செம்பழுப்புக் காவிபூசப்பட்ட மட்பாண்டத் துண்டுகள். ரோமப்பேரரசுடன் கொண்ட தொடர்பை நிரூபிக்கும்படியாக அழகன் குளத்தில் கண்டுபிடிக்கப்பட்ட ரௌலட், அரிட்டையன் ஆகிய மட்பாண்டங்களும் கிடைத்துள்ளன.  

  தென் தமிழ் நாட்டில் மட்டுமல்ல வட நாட்டிலும் கூட மட்பாண்ட சமையல் பிரசித்தம். புல்கா போன்ற ரொட்டிகள், தந்தூரி அடுப்புகளில் சுடப்படுகின்றன. சாய் எனப்படும் டீ மண் கப்புகளிலேயே வழங்கப்படுகிறது. தமிழர்கள் பல்வேறு வகையான பண்ட பாத்திரங்களை உபயோகப்படுத்தி நோய்க்கூறு கண்டபின் இன்று ஆரோக்கியம் பேண பாரம்பரியமான மட்பாண்ட சமையல் முறைக்கே திரும்பி இருக்கிறார்கள்.

  மட்பாண்டத் தொழிலில் பலவகையான களிமண்கள் பயன்படுத்தப்படுகின்றன. வெண்களிமண் எனப்படும் சீனாக்களிமண் கப் & சாஸர், பீங்கான் தட்டுக்கள் செய்யப்பயன்படுகிறது. இவ்வாறு உபயோகப்படுத்தப்பட்டு உடைந்து நொறுங்கிப் போன கப் & சாஸர்களின் துண்டுப் பகுதிகளைக் கொண்டு பஞ்சாபின் சண்டிகரில் ஒருவர் விதம் விதமான உருவங்களை மண்ணில் பிசைந்து அவற்றில் இவற்றைப் பதித்து வண்ணச் சிலைகளை உருவாக்கி உள்ளார்.  இது பத்தர் கார்டன்,, ராக் கார்டன் என்ற பெயரில் இன்று உலகப் பிரசித்தி பெற்ற சுற்றுலா இடமாக விளங்குகிறது.

  மட்பாண்டத் தொழிலில் இழுத்துக் கொடுக்கும் தன்மைக்காக பந்துக் களிமண், வெப்பம் தாங்க தீக்களிமண், மாக்கல் பாண்டம் செய்ய தனிக் களிமண், ஆகியன பயன்படுகின்றன. சிவப்புக் களிமண் என்ற சேல் களிமண் அசுத்தம் கொண்டது எனவே அதை செங்கல் தயாரிப்பில் பயன்படுத்துகிறார்கள்.  

  இக்களிமண்கள் ஆற்று நீர் கொண்டு நன்கு விழுதாகப் பிசையப்பட்டு கைகளால் வடிவமைக்கும் முறையிலோ ( அகல் போன்றவை செய்ய ) குயவரின் சக்கரம் கொண்டு வீசுதல் முறையிலோ வனையப்படுகின்றன.  சுழல் மேடையில் சக்கரத்தலை என்ற பகுதியில் வைக்கப்பட்டுக் களிமண் மோட்டாராலோ கையாலோ சுற்றப்பட்டு மையத்தில் திறப்புக் கொண்ட வெற்றுக்  கோளத்தை உருவாக்கி அதன் பின் பானையோ ஆப்பக் கல்லோ, பூச்சாடியோ, பூந்தொட்டியோ , பருப்புச்சட்டியோ, குடைச்சட்டியோ, வாயகன்ற பானைகளோ, மீன் சட்டியோ, குழம்பு வைக்கும் மண்சட்டிகளோ வனைகிறார்கள்.

  பச்சை மட்பாண்டத்தை நன்கு காயவைத்தபின் சூளையில் இட்டு உயர்வெப்பத்தில் சுடுகிறார்கள். சில சமயம் இவற்றை மெருகிட்டும் சுடுவார்கள். சுட்டபின் எடுத்தும் காவி பூசுவார்கள். மண்பானையில் சமைத்தால் ருசியாக இருக்கும் என்பது மட்டுமல்ல வேறு உடல் உபாதைகளையும் ஏற்படுத்தாது என்பது உண்மை. மண் சட்டியில் சமைக்கப்படும் மீன் குழம்பு மாபெரும் உணவகங்களில் கூட பிரசித்தம்.

 பொங்கல் அன்று கோவில்களிலும் இல்லங்களிலும் புது மண் பானையில் சர்க்கரைப் பொங்கலும் மஞ்சட்டியில் கூட்டுக் குழம்பும் வைப்பார்கள். திருமணமான பெண்ணுக்கு வருடாவருடம் பொங்கல் சீர் கொடுப்பதை பொங்கப்பானை கொடுத்தல் என்பார்கள் காரைக்குடியில்.

  கஞ்சிக் கலயம் கஞ்சிப் பானை என்றும் சோறு வடிப்பது சோற்றுப் பானை என்றும் வழங்கப்படுகிறது. பொங்கல் வைப்பது பொங்கல் பானை. அடிசில் ( சோறு ) வைப்பது அடிசிற்பானை. தவலைப்பானை & சருவப்பானை நீர் வைக்கப் பயன்படுகின்றன. வெண்ணெயை வைத்து உறியில் கட்டித் தொங்கவிடப் பயன்படுவது உறிப்பானை.

  திருமணத்தில் அடுக்குப் பானை, அரசாணிப் பானை, மங்கலக் கூலப்பானை – திருமண நிகழ்வுகளில் தவசத்தை நிரப்பி தானியங்களை தவசம் வைக்கப்படும் பானை ஆகியன பயன்படுகின்றன. கரகப் பானைகள் கரகம் வைக்கும்போதும் கலசப் பானைகள் மங்கல நிகழ்வுகளில் கலசம் வைக்கும் போதும் பயன்படுகின்றன. கழுநீர்ப் பானை எனப்படும் காடிப்பானை மாட்டுக்குக் கழுநீர் ஊற்றி வைக்கப் பயன்படுவது. இவை பெரிதாக இருக்கும். துணிகளை சலவை செய்ய வெள்ளாவி வைக்கவும் பானைகள் பயன்படுகின்றன. கோவில் கோபுரங்களில் இடி மின்னல் தாக்காமலிருக்க சாமை போன்றவை சிறு கலசப்பானைகளில் கொட்டி பதிக்கப்படுகின்றன.

  சீனர்கள் மட்பாண்டத் தொழிலில் முன்னோடிகள். இவர்களின் அலங்காரப் பானைகள். சைனாக்களிமண்  கொண்டு செய்யப்பட்ட சீனப்பானை, பூந்தொட்டி, சித்திரப் பானை, ஓவியப்பானை, எழுத்துப் பானை, மட்பாண்டங்கள் , ஓட்டுச் சில்லுகள் ஆகியன தொல்பொருள் ஆராய்ச்சி நடைபெறும் தளங்களில் கிடைக்கப்பெறுகின்றன..

  ஓர்மப் பானை  என்பது கடம் வாசிக்கப் பயன்படும் பானை. கடம் என்ற வாத்தியமாகப் பயன்படுவது. மொட்டைப் பானை என்பது.  கழுத்தில்லாதது. உசும்பியப்பானை எனப்படும் எழும்புப் பானை பெங்களூரு லால்பாகில் ஓவியம் வரைந்து காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.

  இன்று குழாய் பொருத்திய தண்ணீர்ப் பானைகள் புழக்கத்தில் வந்துள்ளன. பல்கேரியா நாட்டுப் பானைகள் குளுதாடி என்னும் தண்ணீர்த்தொட்டியாகப் பயன்படுகின்றன. அஃகப்பானை என்ற ஒன்று குதிர் போல்–தானியம் சேமித்துவைப்பது. இவ்வளவு ஏன் இரும்பு உருக்கி எடுக்கக் கூடப் பானைகள் உதவுகின்றன. அதிக சூட்டைத் தாங்கும் அவற்றின் பெயர் எஃகுப் பானை.

  கண் பேர் பானை என்ற ஒன்று உண்டு. காணும் பொங்கல் திருநாளில் உறியடித்தல் நடைபெறும். இது வாலிபர்களின் வீர விளையாட்டு. பொங்கல் தவலையில தண்ணீரில் சுண்ணாம்பு மஞ்சள் போட்டுக்கலக்கி சிவப்பு நீராக்கி அதில் பூக்கள், வேப்ப இலை சேர்த்து நன்றாக ஒரு வடம் போன்ற கயிற்றினால் இறுக்கக் கட்டி தொங்க விடுவார்கள். இதை விளையாடும் வாலிபரின் கண்கள் பூவரசு இலையால் மூடி பின் ஒரு துண்டாலும் இறுக்கக் கட்டப்படும். கட்டி விடப்பட்ட பானைக்குச் சிறிது தொலைவிலேயே அவர்களை நிறுத்திச் சுற்றி விடுவார்கள். கண் கட்டப்பட்ட இளைஞர்கள் எவ்விக் குதித்து பானை இருக்கும் திசையை உத்தேசமாகக் கணித்து அதை அடிப்பார்கள். அதை அடிப்பவர் அதில் இருக்கும் பரிசுப் பொருட்களைப் பெறுவார்.  

   பானைகளைப் பற்றிச் சொல்லும்போது முதுமக்கள் தாழியைப் பற்றியும் சொல்ல வேண்டி இருக்கிறது. இவை கழுகு மலை, ஆரோவில் ஆகிய இடங்களில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. இந்த முதுமக்கள் தாழி எனப்படும் ( பிணப்பானை, சவப்பானை யில் ) ஈமத்தாழியில் இறந்தவர்களின் உடலை வைத்து அவர்கள் உபயோகப்படுத்திய பொருட்களுடன் புதைக்கப்பட்டுள்ளன. இவை பற்றி சங்கப்பாடல்களில் குறிப்பாகப் புறநானூற்றுப் பாடல் ( 228 ஆவது பாடல் ) ஒன்றில் குறிப்பு உள்ளது. சில சமயம் செயல் இழந்த முதியவர்களையும் வைத்துப் புதைப்பார்களாம்.

  தீபாவளியின் போதும் கார்த்திகை தீபத்தின் போதும் விதம் விதமான தீபங்களும் களிமண்ணால் செய்யப்படும் அகல் கொண்டு ஏற்றப்படுகின்றன.

  மண்ணை வெட்டிப் பிசைந்து கனமாகச் செய்து சுட்டு எடுக்கப்படும் கோட்டை அடுப்புகள் பிரசித்தமானவை. பெரிய பெரிய அண்டாக்களையும் வைத்து இதில் சமைக்கலாம். கரி அடுப்பு, உமி அடுப்பு, சிரட்டைத்தூள் அடுப்பு, ரம்பத்தூள் அடுப்பு எல்லாம் மண்ணில் வனையப்பட்டவைகளே. செங்கல் போல ஓட்டு வீடுகளில் பாவும் சீமை ஓடும் நாட்டு ஓடும் கூட மண்ணைப் பிசைந்து சுட்டு உருவாக்கப்படுபவை.

   ஆண்டுதோறும் கோயில்களில் நடக்கும் புரவி எடுப்புத் திருவிழாக்களில் சேங்கை வெட்டுதல் என ஊருணியில் மண் எடுத்துக் குதிரைகள், மற்ற பூச்சி, விலங்கினங்களை மண்ணில் செய்து சுட்டு உலாவாகக் கொண்டுவந்து கோவிலில் வைக்கும் வழக்கம் இருக்கிறது.

  மண்பானைச் சமையல் பற்றிச் சொல்லும்போது இது உடலுக்கு நல்லது. சமைக்க அதிகம் எண்ணெய் பிடிக்காது. சத்துக்களைப் பாதுகாக்கும். ஆவியில் வைத்த உணவுபோல பக்குவமாய் இருக்கும். மற்ற உலோகப் பாத்திரங்கள் போல பாத்திரத்தோடு உணவுப் பொருள் வினை புரியாது. பானைகள் உபயோகத்தையும் சுடுமண் பொருட்களையும் வைத்து கார்பன் டேட்டிங் மாதிரி எந்தக்காலத்தையது என்பதைக் கண்டுபிடிக்க புராண மட்பாண்டங்கள், பொருட்கள் உதவுகின்றன.

மண்பானையில் நீர், நீராகாரம், கஞ்சி, கூழ் போன்றவை வைத்து அருந்தினால் அவை உடலைக் குளுமையாக வைக்கும். வெக்கை நோய்கள் ஏற்படாது. பழசான பின் மக்க காலம் பிடிக்கும் என்றாலும் இயற்கையின் சுழற்சியை இவை சீராக வைப்பதோடு கெடுதி ஏதும் உண்டாக்குவதில்லை என்பது ஆசுவாசம்.

கடந்த சில வருடங்களாக கீழ்முகத்தில் போய்க்கொண்டிருந்த மட்பாண்டத் தொழில் இப்போது இயற்கை ஆர்வலர்களால் மேல்முகம் கண்டு வருகிறது. மூலப்பொருட்கள் தட்டுப்பாட்டால் நலிந்து வருகிறது இத்தொழில். இயற்கையை அழிக்காத இப்பாண்டங்களை வாங்கி இதைத் தயாரிப்பவர்களை ஊக்குவித்து நம் நலத்தையும் காப்போம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...