கருப்பாக இருக்கிறான் என்று ஒரு குழந்தையை அவனைப் பெற்ற தந்தையே வெறுக்க முடியுமா. ஆனால் வெறுத்துவிட்டாரே. அவர்தான் சூரிய பகவான். அதோ காலைச் சாய்த்து சாய்த்து மனவருத்தத்தோடு நடந்து செல்கிறானே ஒரு சிறுவன், அவன்தான் அவரது புத்திரன் க்ருதவர்மா என்ற சனி. தன்னை அடியோடு வெறுத்த தந்தையிடம் நற்பெயர் வாங்க அவன் பட்டபாடு கொஞ்சமா நஞ்சமா. அதனால் சூரியன் மனம் மாறினாரா எனப் பார்ப்போம் வாருங்கள் குழந்தைகளே.
சூரியனின் மனைவி பெயர் உஷாதேவி. அவர்களுக்கு முன்று குழந்தைகள் பிறந்தபின்பு உஷாதேவியால் சூரியனின் வெப்பத்தைத் தாங்க முடியவில்லை. தன்னைப் போல உருவம் கொண்ட ஒரு பெண்ணைப் படைத்து அவளை சூரியனுடன் குடும்பம் நடத்தச் சொல்லிவிட்டு தவம் செய்யப் பூலோகம் சென்று விட்டாள். அவள்தான் சாயாதேவி.
சூரியனுக்கும் சாயாதேவிக்கும் இரண்டு குழந்தைகள் பிறக்கிறார்கள். அவர்கள் கிருதவர்மா என்ற ஆண் குழந்தையும் , தபதி என்ற பெண் குழந்தையும். உஷாதேவியின் நிழலிலிருந்து உருவானவர்தான் சாயாதேவி என்பதால் அவருக்குப் பிறந்த கிருதவர்மா என்ற சனீஸ்வரன் கருமை நிறமாகப் பிறக்கிறார்.