77. புயல் :- கோபிகிருஷ்ணன். மத்தியதர வர்க்கத்து கணவன் மனைவி பற்றிய கதை. வெளியுலகில் ஏற்படும் வினோத அனுபவங்கள் பற்றி கணவன் முடிவில் மனதுள் அங்கலாய்ப்பது யோசிக்க வைத்தது. அப்பா அம்மா பண்ணின பாவம் பிள்ளைகள் மேல் விடியும் என்பது போல கணவன் பண்ணின பாவம் மனைவி மேல் விடியும் என்று எந்தப் பெரியவரும் சொன்னதாக நினைவில்லை என்று நினைக்கும் கணவன் செய்த பாவம் என்னவென்றால் ஒரு மாது போட்ட கோலத்தை மிதித்ததும் கடையில் இன்னொரு மாதுபக்கம் தான் பிடித்த சிகரெட் புகை சென்றதால் அவர் முகம் மாற (அந்த சிகரெட்டைப் போட்டு மிதித்ததும்தான்) வைத்ததும்தான்.
78. மதினிமார்கள் கதை :- கோணங்கி. பழைய ஞாபகங்கள் மீள ஒரு கிராமத்தின் தெற்குத் தெருவுக்குள் செம்பக்கத்துடன் நுழைந்து மதனிமார்களைத் தேடிக் களைத்த விரக்தி துரத்தியது இக்கதையில். எல்லாரும் ஒரே நேரத்தில் காணாமல் போய் ஊரே மாறிவிடுவது குறித்து வருத்தம் ஏற்பட்டது. ஒரு முறை ரயில் பிரயாணத்தில் திருச்சியில் வயலை விட்டுவிட்டு ஹைதையில் பிள்ளையுடன் வசிக்கச் சென்ற இரு பெரியவர்கள் பற்றி ஏற்பட்ட அவசம்போல் ஒன்று மனத்தைத் தாக்கியது. நிலத்துக்கும் வீட்டுக்கும் உயிர் இல்லையா என்ன.
79. கருப்பு ரயில் :- கோணங்கி. ரயில் என்றதும் சின்னப் பாப்பா போல் குழந்தையானதாய்த் தோன்றியது. தீப்பெட்டி அடுக்கும் குழந்தைகளின் வாழ்வை வைத்து பொன்வண்டையும் தீப்பெட்டி ரயிலையும் உவமை கூறியது அபாரம். ஆனால் அவர்கள் வாழ்வியல் அவலம் விடியலில் அவர்களுடன் ஓடி அலையும் ஆதிநிலவாய் திக்கென்று உறைத்தது.
80. வெயிலோடு போய் :- தமிழ்ச்செல்வன். உறவுகள். உணர்வுகள் கொண்ட சிறுகதை மிக அந்தரங்கமான மன உணர்வுகளை துல்லியமாக வெளிப்படுத்துகிறது. ஏக்கமும் பாசமும் கொண்ட உறவுகள் பிரிவதை தனித்திருந்து அனுபவிக்கிறார்கள் கதை மாந்தர்கள் சொல்ல இயலா வலியுடன்.
81. பத்ம வியூகம். - ஜெயமோகன். இதைப் பற்றி முன்பே எழுதிவிட்டேன்.. சொல்ல ஏதுமில்லை. கதை நம்மை ஊடுருவிப் பாய்வதுபோலிருந்து. இதை மிகச்சிறப்பான கதையாகக் கருதுகிறேன்.
இந்த நூறிலும் இது மிகச்சிறந்த கதை. அருமையான தேர்வு தேர்ந்தெடுத்த எழுத்தாளர் ராமகிருஷ்ணன் மிகச்சிறந்த ரசனையாளர். இதிகாசம், புராணத்தைக் கதையாகப் படைப்பதில் ஜெமோவுக்கு நிகர் அவரே.
இது எனது 2015ம் ஆண்டு முகநூல் நிலைத்தகவல்.
////உள்ளூர ஒரு பதற்றம் ஓடிக்கொண்டே இருந்தது. ஒரு நூறில் நிச்சயம் இது நூற்றிலொன்றுதான்.
நாம் அபிமன்யூவா, சுபத்திரையா, கிருஷ்ணனா, அர்ஜுனனா. பத்மவியூகத்திலிருந்து வெளிவரமுடியாமல் மாட்டிக் கொண்டு விழிப்பது அவர்கள் மட்டும்தானா.
தூக்கம் வரவில்லை . நிழல் ஒரு தாமரை போல என்னை மூட இரவு சுற்றிக் கொண்டது பத்மவியூமாய். என்னை நானே வேட்டையாடிக்கொண்டிருந்தேன். பிறப்பு, இறப்பு என்பதெல்லாம் என்ன.. நான் உண்மையா..
ஜெமோ உங்களை நிச்சயம் சந்திக்கிறேனோ இல்லையோ த்ரில்லர் எழுதியது நீங்களா என வியக்கிறேன். வன்முறையை துப்பாக்கியை நேசிக்கத் தூண்டிய கதை அது. மற்றபடி எதுவும் பிடிக்கவில்லை
பாடலி புத்திரம் கத்தியை கழுத்தைச் சுற்றிய குழந்தையாக்கிய கதை.. துப்பாக்கி தொடத்தூண்டும் பூவாகவும். கத்தி சுமக்கத்தூண்டும் குழந்தையாகவும் ஆக முடியுமா .. விந்தை..
எழுத்தை நேசிக்கும் யாராயிருந்தாலும் ஜெமோவை விலக்க முடியாது.
நல்ல தொகுப்பு ராமகிருஷ்ணன் சார்.
-- 100 சிறந்த சிறுகதைகள். Vediyappan Discovery
Book Palace & Chandrapraba Ramakrishnan///////
82. பாடலிபுத்திரம். :- ஜெயமோகன்.சரித்திரக் கதைகளிலும் இது வித்யாசமாகக் கவர்ந்த கதை. துப்பாக்கியை திரில்லரில் ரசிக்கவைத்த ஜெயமோகன் இதில் வாளை இன்னொரு கரமாக வாளை மீனாக மாற்றுவதும் அதன் சாத்தானிய செயல்பாடுகளை விவரிக்கும் இடமும் சிலிர்க்க வைத்தன.
83. ராஜன் மகள் :- பா.வெங்கடேசன். கிட்டத்தட்ட 60 பக்கங்கள் கொண்ட சிறுகதை இது. இன்செப்ஷன் என்னும் ஆங்கிலப் படத்தை நினைவூட்டியது கரு. ஏ அப்பா. இவ்வளவு பெரிய கதை எழுத நிறைய சரக்கு வேண்டும். அது போக தொடர்ந்து ஒரு மாய யதார்த்ததைப் படைக்கும் இவர் முடிவில் தற்போது ஒரு நகரம் நரகமாக இப்போதும் திகழ்வதை ருசுப்படுத்தி முடிக்கிறார்.
84.தாவரங்களின் உரையாடல் :- எஸ். ராமகிருஷ்ணன். தாவரங்களை ஆராயும் ஒரு அந்நிய நாட்டவனின் அனுபவங்கள். இந்திய வனம், சுவாமிகள் என ஒரு வனவியலோடு தாவரங்கள். பச்சை குத்துதல் ஆதிவாசிகளின் வாழ்வு என அருமையான சித்தரிப்புகளோடு நகர்கிறது கதை. முடிவு ஆங்கிலப் படம்போலவே அமைந்துள்ளது.
85. புலிக்கட்டம் :- எஸ். ராமகிருஷ்ணன். கிராமத்தில் கட்டிப் போடப்பட்டு துன்புறுத்தப்படும் திருடர்களின் கதியை விளக்கிய கதையில் ஒருவன் தான் மரமாகவே மாறியதாகக் காணும் கற்பனை சிறப்பு.
86. இருளப்பசாமியும் 21 கிடாயும் :- வேல. இராமமூர்த்தி. இதைப் படித்ததும் தன்னையறியாமல் குற்றப் பரம்பரை ஞாபகம் வந்தது. அதைப் போன்ற கதையில் முடிவில் மக்கள் மனம் மாறி தங்கள்சொந்தக் கிடாயை வெட்டுவதோடு ஒரு கோரிக்கை வைக்கிறார்கள். முடிவு என்னவோ புன்னகை புரியவைத்தது. :)
87. ஒரு திருணையின் பூர்விகம். :- சுயம்புலிங்கம். ஒரே பக்கம் கொண்ட திருணையின் 'சுருக்' கதை இது.
88 காலத்தின் விளிம்பில் :- பாவண்ணன். முதியோர் இல்லத்துக்குச் செல்லும் ஒருவரின் பகிர்வு. நாம் பேசுவது எதுவுமே முதியவர்களின் சிந்தனைக்குள் புகுவதில்லை என்ற யதார்த்தம் சுடுகிறது. அவர்கள் வாழும் உலகே வேறு , பூர்வீகத்திலேயே வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள் என்பதை புரியவைத்த கதை.
89. காசி :- பாதசாரி. நிலையற்ற மனதோடு, நிலையற்ற செயல்கள் செய்யும் மனிதர்களைப் பார்க்கும்போது ஏற்படும் பதட்டம் காசியைப் படிக்கும்போது ஏற்பட்டது.
90. சிறுமி கொண்டு வந்த மலர். :- விமலாதித்த மாமல்லன். தங்க ரோஜாப்பூவை அடகுபிடிக்கும் ஒரு சேட் பின்னர் அது சாதா ரோஜாப்பூ என்பதைக் கண்டு திடுக்கிடும் கதை. இதில் அவர் வருடக்கணக்காகக் கற்றுக்கொண்ட தொழிலில் இப்படி ஒரு ஏமாற்றம் எப்படி நிகழ முடியும் என்ற சிந்தனை அவரைப் போலவே நம்மையும் பிடித்தாட்டுகிறது. பேராசை பெருநஷ்டம் என எடுத்துக் கொள்வதா. ஷேர் டிரேடிங்கில் இப்படி நிகழ்வது சகஜம்.
91. மூன்று பெர்னார்கள் :- பிரேம் ரமேஷ். வள்ளலார் என்று சொல்லி ஒரு சாமியாரின் உடலை பதப்படுத்தி அதை போகியன்று எரித்து பிரச்னையைத் தீர்க்கிறார்கள் கதை மாந்தர்கள்.
92. மரப்பாச்சி. :- உமா மகேஸ்வரி .குழந்தைகள் எதிர்கொள்ளும் பாலியல் அத்துமீறலை வெளிப்படுத்தும் கதை. அதே சமயம் அந்தப் பதின்பருவப் பெண்ணின் வளர்ச்சியிலும் மனநிலையிலும் ஏற்படும் மாறுதல்கள் அருமையாக சித்தரிக்கப்படுகின்றன.
93. வேட்டை:- யூமா வாசுகி. கூர்க்காக்களின் திருமண நிகழ்வில் நிகழும் அசம்பாவிதம் கதை. திடுக்கிட வைத்த முடிவு.
94.நீர் விளையாட்டு :-பெருமாள் முருகன்.விளையாட்டு வினையாகும் கதை. பம்ப்செட்உள்ள, படிஅமைந்த கிணற்றில் நீச்சல் போட்டி நடத்துவது எவ்வளவு அபாயம் என எனக்கும் தெரியும். ஹ்ம்.
95. அழகர்சாமியின் குதிரை .:- பாஸ்கர் சக்தி. காணாமல் போன சாமியின் குதிரையும் பிடிபட்ட உண்மைக்குதிரையுமாக விறுவிறுப்பான நகைச்சுவை கலந்த கதை.
96. கண்ணியத்தின் காவலர்கள்.:- திசேரா. ஓரின சேர்க்கையாளர்களின் உணர்வுகள் பற்றிய கதை. அவர்களின் மன உணர்வுகள் படித்ததும் அதிர்ந்தது.
97. ஹார்மோனியம். :- செழியன். சங்கீதம் கற்றுக்கொள்ளுதல் & இசைக்குறிப்புகள் விவரங்கள் நிரம்பிய கதை. ஒரு இன்ஸ்ட்ருமெண்டின் விபரம் தெரியாமல் அக்குவேறு ஆணிவேறாகப் பிரித்துவிடக்கூடாது என்பதைத் தெரிவித்த கதை.
98. தம்பி. கௌதம சித்தார்த்தன். கற்பனை உருவங்களுக்கு நிஜ உருவம் கொடுத்து அவற்றை நிஜம் என்று என்னும் கதை. வித்யாசமான கதை & அவல முடிவு.
99. ஆண்களின் படித்துறை :- ஜே. பி.சாணக்யா. தாயும் மகளும் முற்றிலும் வெவ்வேறான குணாதிசயத்துடன் படைக்கப்பட்டிருக்கிறார்கள். முடிவு அதிர்ச்சி ரகம்.
100.பூனைகள் இல்லாத வீடு :- சந்திரா. நம்மைச்சுற்றி நிகழ்வதை வலியோடு ஏற்றுக்கொண்டு வாழப்பழகும் மதியவர்க்கத்து குடும்பத்தின் கதை. இதில் பூனைகள் உருவகங்களாக வருகிறார்கள்.
இத்தொகுப்பில் வெளியான கதைகள் அனைத்துமே சிறந்த தரத்தேர்வில் ரசனையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுத் தொகுக்கப்பட்டுள்ளன.. இதில் ஒரே எழுத்தாளரின் இரு கதைகளை பிரசுரிப்பதற்குப் பதிலாக ஸ்டெல்லா புரூஸ், தோப்பில் முகம்மது மீரான், எம்.ஏ.சுசிலா(ம்மா), ராகவன் சாம்யேல். ஐயப்ப மாதவன், நர்சிம், கவிதா சொர்ணவல்லி, கனவுப் பிரியன். ஆகிய சிறந்த கதைசொல்லிகளுக்கும் இடம் கொடுத்திருக்கலாம் என்பது எனது எண்ணம்.
இவ்வருமைப் தொகுப்பை வழங்கிய எழுத்தாளர் திரு. எஸ் ராமகிருஷ்ணன் அவர்களுக்கும் டிஸ்கவரி புத்தக நிலையத்தாளருக்கும் மனமார்ந்த நன்றிகள். வாசிப்பின் பல்வேறு அம்சங்களையும் கட்டங்களையும் பன்முகத்தையும் உய்த்துணர இந்நூலை வாசியுங்கள்.
நூல் :- 100 சிறந்த சிறுகதைகள்.
தொகுப்பு :- எஸ்.ராமகிருஷ்ணன்
பதிப்பகம் :- டிஸ்கவரி புத்தக நிலையம்.
பக்கம் :- 1092.
விலை :- ரூ. 650.

தொடர்ந்து மதிப்பீட்டினை வாசித்து வருகிறேன்.
பதிலளிநீக்குNandri Jambu sir
பதிலளிநீக்குவலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!