எனது நூல்கள்.

செவ்வாய், 19 செப்டம்பர், 2017

வட்டார நூல்கள் மூன்று - நூல்முகம்.

நமது செட்டிநாடு , நகரத்தார் திருமகள், ஆச்சி வந்தாச்சு ஆகிய மூன்று பத்திரிக்கைகள் உறவினர் மூலம் வாசிக்கக் கிடைத்தன.

இன்னும் நகரத்தார் மலர்,  நகரத்தார் குரல் தற்போது தனவணிகன் என்ற பெயரிலும் ,  காரைக்குடியையும் செட்டிநாட்டையும் மையமாக வைத்து வெளி வரும் பத்திரிக்கைகள் ஆகும். குமரி மலர் முன்னர் வெளிவந்த பத்திரிக்கை. நகரத்தார் போஸ்ட் என்றொரு பத்திரிக்கையும் வெளிவந்துகொண்டிருக்கிறது.

ரோஜாவின் நகரத்தார் திருமகள் பத்திரிக்கையின் ஆசிரியர் திருமதி வள்ளிக்கண்ணு நாகராஜன்  திரு ரோஜா முத்தையா அவர்களின் புதல்வி. இதன் விலை ரூ 25/- , இது 2014 இல் இருந்து கோட்டையூரில் இருந்து வெளிவருகிறது. இதில் தலையங்கம், செட்டிநாட்டில் உள்ள ஏதேனும் ஒரு கோயில் பற்றிய விபரங்கள், சமையல் குறிப்பு, தமிழறிஞர்கள் மற்றும் தமிழ் மாதங்களின் சிறப்பு ஆகியன தொடர்ந்து வெளியாகின்றன. சிலசமயம் சிறுகதைகளும் வெளியாகின்றன.

நகரத்தார் என்னும் சந்திரகுல தனவைசியர் என்ற தலைப்பில் மின்சாரத் தந்துவிடு தூது என்ற பகுதியை - தசாங்கம் என்ற கவிதையாக - (பாட்டுடைத்  தலைவனின் மலை, நதி, நாடு, ஊர், மாலை, குதிரை, யானை, முரசு, கொடி, செங்கோல் ஆகிய பத்து அம்சங்களை )  கவிஞர் சக்தி என்பவர் பகிர்ந்து உள்ளார். இன்னும் வெளியிடப்படாத பழைய நூலில் உள்ளது இது என்கிறார்.

நகரத்தார் சங்கத் தகவல்கள், வாசகர் கடிதம், சோம வள்ளியப்பன் அவர்களின் கட்டுரை, நகரத்தார் திருப்பணிகள், அறக்கட்டளைகள், சிறுவர் பகுதி, செட்டிநாட்டு வட்டகை & 72 ஊர் ( ஒவ்வொரு மாதமும் ஒரு ஊர் )  விபரம், கம்பன் பற்றிய இலக்கியச்சுவை, கர்ணன் கதை, தீபாவளிப் பண்டிகை, சுற்றுலாக் கட்டுரை, தமிழ்க்கடல் இராயசொ, அரசர் முத்தைய வேள், ஆகிய கட்டுரைகள் உள்ளன.

இத்துடன் அன்புள்ள ஐயா என்ற தலைப்பில் திரு. ஏ. கே. செட்டியார் பற்றிய வள்ளிக்கண்ணுவின் அபாரமான கட்டுரை கண்களில் நீர் கோர்க்கச்செய்தது. மனம் தொட்ட பகுதி அது. திரு ஏ கே செட்டியாரின் முழுப்பெயர். ஏ கருப்பஞ்செட்டியார். உலகம் சுற்றிய முதல் தமிழர்., முதல் உலகப் பயணக் கட்டுரையாளர்.

குமரி மலரின் விலை 25 பைசா . அதை சிறிது உயர்த்தலாமே என்று ரோஜா முத்தையா அவர்கள் கூற "எனக்குத் தேவை 2 செட் கதர் வேஷ்டி, சட்டை, துண்டு, அதுபோக மூன்றுவேளை சுமாரான சைவ உணவு இதுதானே. அதுபோக நான் வெளியூர் போக வர போட்மெயில் ( ட்ரெயின் ) டிக்கெட்டுக்கு நம்மூர் பணக்காரர்கள் ஏற்றுக்கொள்கிறார்கள். எனவே ஏற்றுவது பற்றி யோசிக்க இப்போது தேவையில்லை "என்றாராம். எவ்வளவு எளிமையான மனிதர்.

மேலும் வள்ளிக்கண்ணு அவர்கள் "பீஷ்மருக்குக் குழந்தைகள் இல்லையென்பதால் யார்வேண்டுமானாலும் தர்ப்பணம் கொடுக்கலாம்" என்று ஜோதிட வல்லுநர்கள் கூற்றை எழுதி சேதுக்கரையில் மாளயபட்ச அமாவாசையின்போது இவருக்கும் சேர்த்துத் தர்ப்பணம் கொடுத்தது பற்றிக் கூறி அத்துடன் "பிள்ளை இருப்பவர்களுக்கு ஒன்றோ இரண்டோதான் பிள்ளைகள் ஆனால் பிள்ளை இல்லாதோருக்கு அனைத்துக் குழந்தைகளும் அவர்களின் குழந்தைகள்தானே" என்று சொல்லியது மனம் தொட்டது.

ஆச்சி வந்தாச்சு பத்திரிக்கை மதுரையிலிருந்து கிட்டத்தட்ட 17 ஆண்டுகளாக வெளிவருகிறது. இதன் ஆசிரியர் நாச்சியாபுரம்  திரு நா. பழனியப்பன் துணை ஆசிரியர் ஒக்கூர் திரு எல் சுந்தரம். இதிலும் தலையங்கம், புதுக்கவிதைகள், மரபுக்கவிதைகள், நினைவஞ்சலிகள், வாழ்த்துகள், புகைப்படத்துடன் திருமண அறிவுப்புகள், என்பிக்கின் ஐபிசிஎன் கட்டுரைகள், பொதுநல உடல்நல தகவல்கள், நகரத்தார் புள்ளிகள் செட்டிநாட்டரசர் எம் ஏ  எம் )  & தமிழண்ணல்  பற்றிய விரிவான கட்டுரைகள் ( . மீனாட்சி தாலாட்டு ( தொகுப்பு மணிமேகலை ஆச்சி ) ஆகியன சிறப்பு. இதன் விலை ரூ 25/-  

நமது செட்டிநாடு இதழ்  சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டு வெளிவருகிறது. இதன் ஆசிரியர் திரு ந. ஆவுடையப்பன். புரவலர்  திரு இராஜாமணி முத்துகணேசன்.   ஒரு இதழ் விலை ரூ 20./- இதில் அந்தந்த மாதங்களில் நிகழும் பிரச்சனைகளை விவாதித்துத் தலையங்கம், கல்வி உதவிகள், செட்டிநாட்டின் பாரம்பரிய விழாக்கள், சமையல் கலை, சிறுகதை , திருமண சேவை, சிறுவருக்கான ஓவிய பகுதி, இதிகாச புராண கேள்வி பதில்கள், பங்குச்சந்தை, கோயில் உலா, நகர் உலா, இது நம்ம நாடு என்ற தலைப்பில் நகரத்தார் ஊர்களில் நிகழும் கும்பாபிஷேகம்  திருமணம், சதாபிஷேகம், ஆகியவை பற்றிய தகவல்களும் வெளிவருகின்றன.       

இத்துடன் காரைக்குடி  நாராயணன் எழுதும் நகரத்தார் சிகரத்தார், சிலம்பின் கதை, பட்டினத்தார், முல்லை முத்தையா, காசிஸ்ரீ அருசோ , தமிழ்க்கடல் இராய சொ. டத்தோ திரு சிதம்பரம்கணேஷா போன்ற  நகரத்தார் புள்ளிகள் பற்றிய விரிவான கட்டுரைகளும் இடம்பெற்று வருகின்றன.

இதில் செட்டிநாடும் செந்தமிழும் என்ற தலைப்பில் என் நூல்களை ஆய்வு செய்த சிங்கை முனைவர் திருமதி எம் எஸ் ஸ்ரீலக்ஷ்மி அவர்கள் ஆசிரியர் குழுவில் இடம் பெற்றுள்ளார்கள். கடந்த  மூன்று ஆண்டுகளாக இந்தப் பத்திரிக்கை வெளிவந்துகொண்டிருக்கிறது.

தொடர்ந்து செயல்பட்டு இலக்கிய சேவை செய்துவரும் இம்மூன்று இதழாசிரியர்களுக்கும் ஆசிரியர் குழுவுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.

2 கருத்துகள் :

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University சொன்னது…

நூல்கள் விமர்சனம் அருமை. வாய்ப்பு கிடைக்கும்போது இவற்றைப் படிப்பேன்.

Thenammai Lakshmanan சொன்னது…

nandri Jambu sir.

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...