திங்கள், 20 மார்ச், 2017

புயலிலே ஒரு தோணி – ஒரு பார்வை.புயலிலே ஒரு தோணி – ஒரு பார்வை.

”உண்மையாகப் பார்த்தால் எல்லாரும் தனிமையில்தான் இருக்கோம்.” என்று என்னை நச்சென்று அறைந்த வரிகள். ந. முருகேச பாண்டியனுக்கு அளித்த நேர்காணலில் கடலுக்கு அப்பால் & புயலிலே ஒரு தோணி என்ற அற்புதமான இரு நாவல்களின் ஆசிரியர் ப. சிங்காரம் அவர்களின் கூற்று அது. வெகுஜன மக்களால் இனம் காணப்படாமல் மறைந்த நூற்றாண்டுக்கான எழுத்தாளரில் சிங்காரம் அவர்களின் பெயர் பொன்னெழுத்தில் பொறிக்கப்பட வேண்டிய ஒன்று . 

தமிழின் முதல் புலம்பெயர் நாவல்கள், புதிய வாசிப்பனுபவத்தை உண்டாக்கிய நாவல்கள், தென்கிழக்கு ஆசியாவின் இன்னொரு முகத்தையும் இரண்டாம் உலகப் போரின் பாதிப்புகள் பற்றியும், இந்திய தேசிய ராணுவத்தைப் பற்றியும் ( போஸ் பற்றி சிறிது ) விரிவாகச் சொல்லிய நாவல்கள், ஏகாதிபத்திய நாடுகளின் காலனி ஆதிக்க அரசியல் பின்புலத்தில் அமைந்தது என பல்வேறு சிறப்புகள் உண்டு இவ்விரு நாவல்களுக்கும். உலக எழுத்தாளர் வரிசையில் சிங்காரம் அவர்களுக்கென்று தனி இடம் கொடுக்கவேண்டியது காலத்தின் கட்டாயம்.


ஒற்றை மேற்கோள் இல்லாமல் தன்னுடைய எழுத்தைப் படித்த ஒரு பத்ரிக்கையாளர் யார் யாரிடம் பேசுகிறார்கள் என்றே புரியவில்லை என்று சொன்னதாகவும் எதையும் பெருவெட்டாக விளக்கிச் சொன்னால்தான் இங்கே எல்லாருக்கும் புரிகிறது என்றும் சிங்காரம் அலுப்புடன் கூறியிருக்கிறார். என்னிடமும் ஒரு பத்ரிக்கை ஆசிரியர் அவ்வாறு கூறி இருக்கிறார். கதையின் சுவாரசியமான ஓட்டத்தில் எல்லாமே புரிந்துவிடும் இதைத் தனிப்பட்டு விளக்கி மேற்கோள் போட்டு எல்லாம் சொல்ல வேண்டாம் என்பது எனது திண்ணமான எண்ணமும் ஆகும். 

சிங்காரம் அவர்களின் எழுத்து பாணி அலாதியானது. சுருங்கச்சொல்லி விரிவான அர்த்தம் கொடுத்த வாக்கியங்கள் அநேகம். ஒரு விலைமாதைக் குறிப்பிடும்போது  “ தங்க தந்தப் பளிங்கு பட்டுச் சிலை.” இந்த ஐந்து வார்த்தைகளுக்குள் அவள் நிறம் உருவம் தன்மை அனைத்துமே விளங்கிவிடுகிறதே.  ஆயிஷா நன்மனம், நல்லுடல், நன்மணம். 

சிங்கம்புணரிக்குப் பக்கத்தில் உள்ள பாலையம்பட்டியில் பிறந்து பதின்ம வயதில் சிங்கப்பூருக்குப் பிழைக்கச் சென்று அங்கே இரண்டாம் உலக யுத்தம் காரணமாகத் தமிழ் நூல்கள் கிடைக்காததால் நூலகங்களில் கிடைத்த ஆங்கில இலக்கிய புத்தகங்களை வாசித்து அந்த வாசிப்பனுபவத்தில், தனது எழுத்துச் சாரத்தில் நெருக்கமாகப் படைத்திருக்கும் நூல்தான் புயலிலே ஒரு தோணி. 

புலம் பெயர்தல் இன்றும் நிகழ்கிறது. ஆனால் கிட்டத்தட்ட முக்கால் நூற்றாண்டுக்கு முன்னர் கப்பல் போக்குவரத்து மட்டுமே இருந்த சமயம், இரண்டாம் உலகப்போரை ஒட்டி சிங்கப்பூர் ( அலோர் ஸ்டார் ), மியான்மர் (சைகோன், ரங்கூன்) , மலேயா ( பினாங்கு ) , சுமத்ரா, ஆகிய நாடுகளுக்குப் பிழைப்பின் நிமித்தம் பல்லாயிரம் பேர் சென்று வந்திருக்கிறார்கள். இராமநாதபுரம் பகுதியில் இருந்து அவர்களுள் ஒருவராகச் சென்று வந்த சிங்காரத்தின் நாவல் அதிகபட்ச யதார்த்த நிகழ்வுகளோடு சிறிது கற்பனையும் இணைந்த புதினம். 

மலரின் பருவங்கள் கொண்டு நுனை, அரும்பு, முகை, மலர் என்று நான்கு பாகங்களாகக் கதை சொல்லப்பட்டிருக்கிறது. பாண்டியன் என்னும் புலம்பெயர் மனிதனின், சாகச அனுபவங்களே கதை. போர் பற்றிய நடப்பு சம்பவங்களோடு செறிவான மொழி நடை, சொல்வளம் கதையை உலகத்தரத்துக்கு உயர்த்துகிறது. வாழ்வின் அன்றாடச் செயல்பாடுகள் மீது மட்டுமே நம்பிக்கை கொண்ட மரணம் பற்றி பெரிதாய் அக்கறைப் படாத ஒரு பரபரப்புக்காரனின் சரித்திரம் இது. அதே நேரம் தமிழ் மொழியின் பால் அவன் கொண்டுள்ள அறிவு வியக்கத்தக்கது. அங்கங்கே மணிமேகலை, சங்ககாலப் புனைவுகளின் மீதான எக்காளம். தொழுவ வாழ்க்கை மீதான சலிப்பு. 

வட்டிக்கடைகள், சிட்டை முறைகள், கொண்டு விக்கச் சென்ற செட்டியார்கள், அதே போல்அந்தக் காலகட்டத்தில் சென்ற மற்றைய ஆட்கள், மேலாட்கள், அடுத்தாட்கள், சமையல் ஆட்கள், பெட்டியடிப் பையன்கள், கிஸ்தி, கிட்டங்கி, பற்று, வரவு, கைப்பெட்டி,ஆச்சிகள், போர்வீரர்கள், விலைமகளிர், வெளிநாட்டு வாழ்க்கை முறை, இரண்டாம் உலகப்போர், அதில் யுத்த தளவாடங்களுடன் தோணியில் பயணிப்பது, ரகசியப் பள்ளியில் சிறப்புப் பயிற்சிகள், ஒற்று வேலைகள், இந்தோனேஷியா விடுதலைப் போர், சைக்கிள்களில் வரும் ஜப்பானியத் துருப்புக்களின் ஆக்கிரமிப்பு, டச்சுக்காரர்கள், ப்ரெஞ்சுக்காரர்கள், ஆங்கிலேயத் துருப்புக்கள், மதுவருந்துதல், தமிழர்களின் புனைவு பற்றிய விவாதங்கள், அனைத்துத் தரப்பு மக்களின் இல்வாழ்க்கை, இரகசிய வாழ்க்கை, கள நடவடிக்கைகள், ஆயுதப் பயிற்சி, ரகசிய பயிற்சி, கொரில்லாத் தாக்குதல்கள் ஆகியன கதையில் இடம் பெறுகின்றன. 

தமிழர்களின் கற்பிதப் பெருமைகளின் மேல் எல்லாம் கல் எறிகிறான் பாண்டியன். நிறைய இடங்களில் மலாயும் சீன மொழியும் காரைக்குடிச் சொல்வழக்கும் அப்படியே தரப்பட்டிருந்தாலும் படிக்கும்போது சரளமாகப் புரிகிறது. க்ளப்பு, கோப்பி, ஸ்ட்ராட், பன்ஸாய், மெர்டேக்கா, தபே, துவான், தபே, தவ்க்கே, கெமேஜா, நீதகா யாமா நோபுரே ( கூகமொழி ), மட்டுமல்ல எச்சிப் பணிக்கம், குரிச்சி, கடகப் பெட்டி ஆகியன பற்றியும் வருகிறது. 

ஒவ்வொருவரையும் பாவன்னா, நாவன்னா என்று பெயரின் முதல் எழுத்தைக் கொண்டு கூப்பிடுவது, வேசையர் , இராணுவவீரர்கள், அரசியல்வாதிகள் பற்றிய நையாண்டி என நிறைய விஷயங்கள் உண்டு. பாண்டியனின் நண்பர்களுடனான இந்தியச் சூழல் பற்றிய விவாதங்கள்,மொழி விவாதங்கள், இலக்கிய விவாதங்கள் பழம்பாடல்களில் விதந்தோதப்படும் தமிழர் வீரம் பற்றிய எள்ளல், தமிழர்கள் மாட்டுக்கறி தின்பது, பரத்தையர் உறவுகள், துறவிகளின் வாழ்வு பற்றிய கிண்டல் எல்லாமே சுருக்கும் நறுக்குமாகத் தரப்பட்டிருக்கின்றன.

ராணுவப்பயிற்சிப்பள்ளியில் சேரும் பாண்டியன் லெஃப்டினெண்ட் ஆவது, நேதாஜியை சந்தித்தது, அவருடனான பாண்டியனின் உரையாடல்கள், ஹோட்டல்களில்/க்ளப்புக் கடைகளில் நடக்கும் சதியாலோசனைகள், காட்டிக் கொடுத்த ஒருவனை கொலை செய்யாமலே இறப்புக்குத் தூண்டும் வித்யாசமான கொலை ( இதை சில சினிமாக்கள் மற்றும் கதைகள் காப்பி அடித்துள்ளன ), ஜப்பானியர்கள் மற்றும் அமெரிக்கரிகளின் ஆக்கிரமிப்பு, வேசையை ஏமாற்றி அரசாங்கக் கடிதத்தைக் கொண்டு வருவது, தோட்டாப் பெட்டிகள், தளவாடங்கள் கடத்தல்,  முக்கிய கடிதங்களை மீட்பது என்று கதை எல்லாக் கட்டத்திலும் சூடுபிடித்தே கிடக்கிறது போருடன். 
 
இந்தோனேஷியாவின் மெடான் நகரம், மொஸ்கி ஸ்ட்ராட், ஹிந்து ஸ்ட்ராட் ஆகியவற்றில் நாமும் ராஜா உத்தாங் என்ற பாண்டியனோடு பயணிக்கிறோம். யுத்தம், அது தொடர்பான இருண்மையான வேலைகள், நம்மை எங்கெங்கோ இழுத்துச் செல்கிறது. வார்த்தைகளிலும் நிகழ்ச்சிகளிலும் அதிவேக செயல்பாடு கொண்ட கதை இது. போர், சூழ்ச்சி, இருட்டு மனிதர்கள், வேசைகள், கொலைகள், கொள்ளை, ராணுவத்தின் துரத்தல் என ஒரு பரபரப்புத் தொற்றுவதைத் தவிர்க்கவே இயலாது.  ஒரு சாகசக்காரன் உடன் பயணிக்கும் நம்மை முடிவில் அவனது எதிர்பாரா மரணம் திகைக்க வைக்கிறது. துப்பாக்கியை ஏந்தியவன் துப்பாக்கியாலே துர்ப்பாக்கியத்தோடு சாவான் என்ற கழிவிரக்கத்தை உண்டாக்கியது. 

கீர்த்தியின் விலை என்ன ? கீர்த்தியின் பலன் என்ன ? கீர்த்தியின் முடிவு என்ன ? அச்சமற்று வாழ்தலா, எதையும் துணிவோடு எதிர்கொள்ளலா. ? பெரிதும் சிந்திக்க வைத்தது புயலிலே ஒரு தோணி.


நூல் :- புயலிலே ஒரு தோணி
ஆசிரியர் :- ப. சிங்காரம்
பதிப்பகம்:- டிஸ்கவரி புத்தக நிலையம்
விலை :- ரூ 230/-.

2 கருத்துகள் :

ஆரூர் பாஸ்கர் சொன்னது…

நல்லதோரு அறிமுகம். நாவல் 75 வருடங்களுக்கு முன் எழுதப்பட்டதால் இது ஆவணத்தரம் பெறுகிறது.

Thenammai Lakshmanan சொன்னது…

நன்றி ஆரூர் பாஸ்கர்

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...