திங்கள், 6 மார்ச், 2017

வீரம் மிக்க ராணி அப்பக்காதேவி சௌதா. கோகுலம் - விடுதலை வேந்தர்கள்.


ராணி அப்பக்காதேவி சௌதா:-

பதினாறாம் நூற்றாண்டிலேயே போர்த்துகிசியர்களின் காலனி ஆதிக்கத்தை எதிர்த்து போரிட்டவர், கர்நாடகாவின் உல்லால் ராஜ்ஜியத்தின் சௌதா குடும்பத்தைச் சேர்ந்த வீரதீரமிக்க ராணி அப்பக்காதேவி சௌதா. ஜான்சி ராணிக்கு 300 ஆண்டுகளுக்கு முன்பே முதன் முதலில் விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்ட ராணி இவர்

கிட்டூர் சென்னம்மா, கிலாடி சென்னம்மா, ஒனகே ஒப்பாவா ஆகிய சுதந்திரப் போராட்ட வீராங்கனைகள் இவர் காலத்தவர்கள்பயம் என்றால் என்னவென்றே அறியாதவர் என்ற பொருளில் அபய ராணி என்றும் அப்பக்கா ராணி என்றும் அழைக்கப்படுகிறார்

இவருடைய தாய்மாமா திருமலாராயா சிறுவயதிலேயே இவருக்கு முறையான போர்ப்பயிற்சிகளை அளித்தார். இவர் வில் வாள் வேல் வித்தைகளில் மட்டுமல்லஅக்னி வாணா” என்ற தீ அம்புகள் விடுவதிலும் வல்லவர்

அலிய சந்தானாஎன்ற முறைப்படி தாய்வழி சமூக ராஜ்ஜியமாக இவருடைய தாய்மாமா திருமலாராயா இவரை உல்லாலுக்கு ராணியாக முடி சூட்டினார்.  மங்களூரின் பங்கர் ராஜ்ஜியத்தின் அரசன் லக்ஷ்மப்ப அரசா என்பவருடன் மணமுடித்து வைத்தார். அந்தத் திருமணவாழ்வு கசந்துவிட இவர் உல்லாலுக்கே திரும்பினார்

1525 இல் நமது நாட்டைக் கொஞ்சம் கொஞ்சமாக ஆக்கிரமித்திருந்த போர்த்துக்கீசியர்களுக்குத் தமது அயல்நாட்டு வியாபாரம் நிமித்தமாகத் துறைமுகநகரமான உல்லால் தேவைப்பட்டது எனவே அதை  அப்பக்காதேவியிடம் இருந்து கைப்பற்ற வேண்டி ஆக்கிரமித்தார்கள்

தமது நாட்டை ஆட்சி செய்ய அந்நியருக்குக் கப்பம் கட்டுவது என்பதைத் தீவிரமாக எதிர்த்தார் அப்பக்கா. பங்கா ராஜ்ஜியம் போன்ற அண்டை நாடுகளுடன் கூட்டு வைத்துக் கொண்டு தனது நாட்டை ஸ்திரப்படுத்தினார். பிந்தூரைச்சார்ந்த பேரரசர் வெங்கடப்பநாயகா அளித்த அரசியல் படை பலத்தோடு போர்ச்சுக்கீசியர்களின் மிரட்டல்களைச் சமாளித்தார்.  1555 இல் அவர்களின் ஆதிக்கம் அதிகமானபோது கப்பம் கட்ட மறுத்து  போர்ச்சுக்கீசிய அட்மிரல் டான் அல்வாரோ டா சில்வெய்ராவை எதிர்த்துப் போரிடத் துவங்கினார்

மிகக் கடுமையான யுத்தத்தில் 1557 இல் ஜெனரல் ஜோஷ் பேஷோடோ உல்லால் கோட்டையைப் பிடித்துவிட ராணி ஒரு மசூதியில் சரணடைந்தார். அன்றிரவே 200 வீரர்களுடன் கோட்டையை ஆக்கிரமித்து ஜெனரல் பேஷோடோ உட்பட 70 போர்த்துக்கீசிய வீரர்களைக் கொன்றார். எஞ்சிய வீரர்களையும் அட்மிரல் மாஸ்கரேனசையும் 500 இஸ்லாமிய வீரர்கள் தாக்கினார்கள்

ராணி அப்பக்கா தேவி சமண மதத்தினராக இருந்தும் இந்து முஸ்லீம் என அனைத்து மக்களின் அபிமானத்தையும் பேரன்பையும் பேராதரவையும் பெற்றிருந்தார் அப்பக்கா. இதுவே அவரது பெரும்பலம். அவரது தொடர் வெற்றிகளுக்கும் காரணம். 

வீரர்களின் தீரத்தால் மங்களூரு கோட்டையைத் தக்கவைத்துக் கொண்ட அப்பக்கா பிஜப்பூர் சுல்தான் அகமது, கோழிக்கோடு சமுத்ரி அரசவம்சத்தினருடன் இணைந்து போர்த்துக்கீசியர்களை எதிர்த்தார்

1569 இல் போர்த்துக்கீசியர்கள் மங்களூரு கோட்டையைக் கைப்பற்றி இவரையும் சிறைப்பிடித்தனர். சமுத்ரிகளின் தளபதியான குட்டி போர்க்கர் மார்க்கர் அப்பக்காதேவியின் சார்பாக போரிட்டு போர்த்துக்கீசியத் தளத்தைப் பிடித்தாலும் நாடு திரும்பும்வழியில் போர்த்துக்கீசியர்களால் கொல்லப்பட்டார். இவரின் பிரிவால் கோபமுற்றிருந்த இவரது கணவர் லக்ஷ்மப்ப அரசா போர்த்துக்கீசியர்களுடன் சேர்ந்து கொண்டு இவரது போர் வழிமுறைகளைக் காட்டிக் கொடுக்க இவர் சிறைப்படுத்தப்பட்டார் அதன்பின் அந்தச் அந்தச் சிறையிலும் போராட்டத்தைத் தொடர்ந்து மாண்டார்

வீரராணி அப்பக்காதேவியின் உத்சவம் வருடாவருடம் உல்லாலில் கொண்டாடப்படுகிறது. இவர் பெயரில் வீர ராணி அப்பக்கா ப்ரஷாந்தி விருது சிறந்த சாதனைப் பெண்மணிகளுக்கு அளிக்கப்படுகிறது. 2003 இல் தபால்துறை இவருக்காக விசேஷ அஞ்சல் உறை வெளியிட்டுச் சிறப்பித்தது. ஒரு விமானநிலையத்துக்கும் இவர் பெயர் சூட்டப்பட்டுள்ளது. கர்நாடகா இதிகாச அகாடமி தலைநகரமான பெங்களூருவில் இருந்த ”ராணி சாலை” என்ற சாலையின் பெயரை ”ராணி அப்பக்காதேவி சாலை” என மாற்றி அமைத்துள்ளது.

உல்லாலிலும் பெங்களூரிலும் வெண்கலச் சிலைகள் நிர்மாணிக்கப்பட்டுள்ளன. கர்நாடகத் தலைநகரின் ஒரு சாலையும் இவர் பெயரால் அழைக்கப்படுகிறது. விசாகப்பட்டினத்தின் இந்திய கடற்படையின் காவல் கப்பலுக்கு ( ஐசிஜிஎஸ்) ராணி அப்பக்கா மஹாதேவியின் பெயர் வைக்கப்பட்டுள்ளது

கன்னட நாடகவடிவமான யக்ஷ கானமும் , சடங்கு நாட்டிய வடிவமான பூதரதனாவும், அப்பக்கா மகாதேவி என அழைத்து அவரைத் தெய்வமாகப் போற்றுகின்றன. தலைமுறை தலைமுறையாக நாட்டுப்புறப் பாடல்களும், வாய்மொழிக்கதைகளும், இவரது பெருமையை எடுத்துச் செல்கின்றன

புட்டாகோலா என்ற சடங்கு நடனத்தில் அப்பக்கா மஹாதேவியின் மாபெரும் செயல்கள் நிகழ்த்தப்படுகின்றன. சாதாரணர்களைப் போல உடையணிந்து எளிமையான ராணியாகத் திகழ்ந்த இவர் நாட்டைக் காப்பாற்ற இரவு பகல் பாராமல் நள்ளிரவு வரையும்கூட தீரத்துடன் புறப்பட்டு நீதி பரிபாலனம் செய்து வந்ததாக நாட்டிய நாடகங்களில் காட்டப்படுகிறது.  இவருடைய இரு வீரத்திருமகள்களும் கூட அப்பக்கா மகாதேவி என்றும் ராணி அப்பக்கா என்றும் முன்னிறுத்திப் புகழ் பாடப்படுகின்றனர்

இவ்வீரராணிகள் மூவரும் 1530 இல் இருந்து 1599 வரை 70 ஆண்டுகள் போர்த்துக்கீசியரின் ஆக்கிரமிப்பை எதிர்த்துப் போரிட்டிருக்கிறார்கள் என்பது பிரமிப்புக்குரிய விஷயம். இவ்வீரராணிகளுக்கு நம் வீர வணக்கத்தைச் சமர்ப்பிப்போம்


ிஸ்கி :- விடைவந்தர்குக்கானாசர் கித்ுக்கு நன்றி. 


4 கருத்துகள் :

கரந்தை ஜெயக்குமார் சொன்னது…

வாழ்த்துக்கள் சகோதரியாரே

Dr B Jambulingam சொன்னது…

மனம் நிறைந்த வாழ்த்துகள்...அப்பக்காதேவி பற்றி இப்போதுதான் அறிந்தேன். நன்றி.

G.M Balasubramaniam சொன்னது…

பெரும்பாலும் தமிழக வீர வீராங்கனைகளை அறிந்த அளவு பிற மாநிலத்தாரைப் பற்றிஅறிய முடிவதில்லை. தகவல்களுக்கு நன்றி மேம்

Thenammai Lakshmanan சொன்னது…

நன்றி ஜெயக்குமார் சகோ

நன்றி ஜம்பு சார்

நன்றி பாலா சார்.

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...