புதன், 25 ஜூலை, 2012

மனித ஆயுதம்.. ”உலோகம்” . ஒரு பார்வை

ஜெயமோகன் அவர்களின் ”உலோகம்” த்ரில்லர் நாவல் என்ற பெயரில் டிஸ்கவரி புத்தக நிலையத்தில்பார்த்ததும் வாங்கி வந்தேன். மூன்று மாதமிருக்கும். இன்றைக்குத்தான் படிக்க அமர்ந்தேன். 4 மணி நேரங்களில் கீழே வைக்க முடியாமல் படித்த ஒரு மனித ஆயுதம் பற்றின கதை அது.இது இலக்கிய நயம் வாய்ந்த சாகசப் புதினம்.

ஈழ மொழியில் புனைவுத்தியில் சொல்லப்பட்டிருக்கும் கதை அது. எப்போதும் கிடைக்கும் சுஜாதா., ராஜேந்திர குமார்., ராஜேஷ் குமார் நாவல்கள் போலில்லாமல் வேறோரு மனம் சார்ந்த மொழியிலான த்ரில்லர்.
இந்தியாவின் உளவு அமைப்புக்களும் எந்த விதமான செயல்களில் ஈடுபடுகின்றன என அதில் படித்தபோது மனம் கனமானது. வன்முறையை வேரறுக்க வன்முறை.. எதற்காக யாரைக் கொல்கிறோம்., என மனசாட்சி இல்லாமல் இப்படி நடக்கும் கொலைகளைப் பகிர்ந்தது அதிர்ச்சியாக இருந்தது.

ரஸ்கோல்னிகோவின் மனநிலையை இதில் ஒப்பிட்டுப் பார்க்கத் தோன்றியது. மிக வறண்ட வெறுமையான மனநிலை. ஒரு மாணவனாக தனித்த அறையில்( சவப்பெட்டி போன்றதொரு அறை) வாழும் ரஸ்கோல்னிகோவ் போல சார்லஸ் அலைவதும் படிக்கும் காலத்தில் இயக்கத்தின் பால் ஈர்க்கப்பட்டு வரலாற்றில் இருக்க விரும்பி வந்து வரலாற்றால் மூழ்கடிக்கப்பட்ட ஒரு மனிதனாய் ஆவதும் துயர சம்பவங்கள். நிஜமாக பாதிக்கப்பட்ட ஒருவன் வன்முறையைக் கைக்கொள்வதும்., பேச்சினாலும் சாகச உணர்வுகளாலும் ஈர்க்கப்பட்ட ஒருவன் வன்முறையைக் கையாள்வதும் ஒன்று போல தீவிரமாய் இருக்க முடியுமா.

சார்லசின் குடும்பம் பற்றி அவன் படிப்பு தவிர மற்ற நிகழ்வுகள் சரிவர தெரியவில்லை. இந்தியாவில் அவன் மனித ஆயுதமாக புகுத்தப்பட்டதன் பிண்ணனியில் யாரிடமிருந்து அந்த ஆணைகள் வருகின்றன எனவும் கடைசிவரை புரியவில்லை. எந்த குழுவுக்காக எந்தத் தலைமையிடம் இருந்து ஆணைகள் வருகின்றன என்பதும். அதேபோல் அவரது வயது 37., அந்தப் பெண்ணின் வயது 27. அவர்கள் அம்மா சந்திரா கல்லூரி சென்றபோது இவருக்கு வயது பத்துதான் இருந்திருக்கும். சென்னையில் சினிமா., விகடன் ., குமுதம் இவைதான் தமிழருக்கு பொதுவான ஆர்வங்களாக அடையாளப்படுத்தப்படுகின்றன. இதில் இலங்கை வானொலி என்ற ஒன்றை நாம் யாரும் மறக்கவோ விடவோ முடியாது. ட்ரான்சிஸ்டரில் பாட்டு கேட்டாலும் இது பற்றி சின்ன விவரமும் கூட இல்லை.


பெண்களை அவன் ஜேம்ஸ்பாண்ட் படங்களில் வரும் ஹீரோ போல காதலோடே அணுகுகிறான். அதற்கு அவர்கள் உடன்படுகிறார்கள். வெறும் போகப்பொருளாகவும்., தன்னலமிக்கவளாகவுமா கையறு நிலையில் உள்ள பெண்கள் மாறிவிடுவார்கள். பெண்ணைக் போல காமத்தைப் போல சாகசம் என்பதும் ஒரு வேட்டையாடும் மிருகமாக அவனை சித்தரிக்கிறது. தான் துன்பப்படும் போது மட்டும் கண்ணீர் விடும் அவனுடன் மனம் வருந்தினாலும் ஜோர்ஜ் இறக்கப்போகிறான் எனத் தெரிந்தும் மனதுக்குள் புன்னகைத்தபடி இருந்தது வெறுப்பை உண்டாக்கியது.

எல்லா ஆண்களுக்கும் உள்ள இயல்பான பெண்களைப் போகப்பொருளாகக் கருதும் தன்மை அவனுடைய மனித ஆயுதம் என்ற பங்கிற்கு பங்கம் ஏற்படுத்துகிறது. பொன்னம்பலத்தாரை மிகக் கோழையாகப் பார்த்தது இப்படித்தான் சுயநல அரசியல்வாதிகளும் இருப்பார்களோ என்ற எண்ணத்தைத் தோற்றுவித்தது. சிறீ மாஸ்டரைக் கொன்று, பின் கடைசியில் நிராயுதபாணியான பொன்னம்பலத்தாரையும் ( இயக்கத்தில் தான் இருந்த காலத்தில் தன் பேச்சின் மூலம் பலரையும் ஈர்த்து கெடுத்திருந்தாலும், )கொன்றது மனித வெடிகுண்டு., போன்று உலவியவர்களின் மனநிலையையும் செயல்பாடுகளையும் உணர்த்தியது.

வெறுப்பின் உச்சத்தில் ஆண்கள் போராளிகளாக மாறுவதும்., பெண்கள் எல்லாவற்றையும் ஏற்று கொள்பவராக மாறுவதும்., அகதிகள் குடியிருப்பும் அவர்கள் வாழ்வும் மிக வருத்தத்திற்குரியது.

இதில் வரும் வன்முறைகளை ., ரத்தவாசனையை ரசிக்கும் மனிதர்களை (ராம்கோபால் சர்மாவின் த கம்பெனி என்ற படத்தை) நினைவூட்டியது.. அம்பையின் ஆற்றைக் கடத்தல் என்ற நாடகத்தில் சீதை என்றால் ராமனின் மனைவியா., ஜனகனின் மகளா., தசரதரின் மருமகளா., ரவிவர்மாவின் ஓவியத்தில் சித்தரிக்கப்பட்டவளா என்றால் அதற்கு அவர் சொல்வார் , என்னை பிரதிமைகளுடன், முன் முடிவுகளுடன்., சாயல்களுடன் அணுகாதீர்கள் என்று. ஆனால் ஒரு விஷயத்தைக் கவனகப் படுத்திக் கொள்ள அது சம்பந்தமாக நமக்குத் தெரிந்த விஷயங்களுடன் பொருத்திப் பார்ப்பது என்பது தவிர்க்க இயலாதாதாகிறது.

நாம் நேரடியாக பங்குபெறாத., அறிய முடியாத , உணர்ந்து வாழாத ஒரு விஷயத்தை படங்கள் மூலமாவும்., புதினங்கள் மூலமாகவும்., வீடியோக்கள் மூலமாகவுமே தெரிந்து கொள்ள முடிகிறது. மனம் பல விஷயங்களைக் கோர்த்து அந்த சம்பவங்களைப் புரிந்து கொள்கிறது. அதன்படி உலோக நாயகனின் உள் புதைந்த உலோகத்திலிருந்து ஈயத்தினாலான தளிர்களும்., ஈய இலைகளும் கொண்ட செடி முளைப்பதான கற்பனை., நிராதரவாக மணற்தேரியில் விட்டுச்செல்லும் படகு தம்மைவிட்டு தூரச் செல்லும் தாய்நாடுபோல் தோற்றம் தருவதும் வித்யாசம். ( நேற்று கூட வெளிநாட்டில் வாழும் ஒரு ஈழத்து முகப்புத்தக நண்பர் சொன்னார் .. இன்னும் ஈழம் செல்ல கடுமையான நடைமுறை பின்பற்றப்படுவதாகவும்., அவருடைய பாஸ்போர்ட் ஆறுநாட்கள் தேவையில்லாமல் முடக்கி வைக்கப்பட்டிருப்பதால் தன் புத்தகம் சம்பந்தமான சென்னை விஜயம் மிக அவசர கதியில் இருக்கும் என்றும், உடனே தான் இருக்கும் நாட்டிற்குத் திரும்பவேண்டும் என்றும் சொன்னார்).

ரெஜினாவும்., வைஜெயந்தியும் எல்லாவற்றையும் சகஜமாக எடுத்துக் கொள்வது கொஞ்சம் அதிர்ச்சியளித்தது. பெண்களுக்கு சுயகௌரவம் என்ற ஒன்றே இல்லையா. உயிர் வாழவும்., சௌகர்யமாய் வாழவும்., என்ன குற்றம் வேண்டுமானாலும் செய்வார்களா. தந்தையைக் கொல்ல பேரம் பேசுவது., கணவனைக் கொன்றவனுடன் இருப்பது எல்லாம் ஜீரணிக்க முடியவில்லை.

துப்பாக்கியைக் கையில் வாங்கியதும் ஒப்புக் கொடுப்பதற்காகவே உடலெடுத்தது அது என்பதும்., கைகளின் வெற்றிட வெளியை நிரப்புகிறது என்பதும்., கருங்கல்., கோடாலியாகி., வில்லாகி., வாளாகி., துப்பாக்கியாக பரிணாமமெடுத்ததை ஜெவின் எழுத்தில் படித்தபோது ஒரு துப்பாக்கியை நேரடியாகவே தொட்டுப் பார்க்கவேண்டும் என்ற ஆவலை உருவாக்கியது. கொஞ்சம் கொஞ்சமாக இந்த வன்முறை என்பது எப்படி மனிதர்களை சாகச வலை போட்டு ஈர்க்கிறது என உணர்ந்து கொண்டேன் அப்போது. மணிதான் 4 ஆகிவிட்டபடியால் ஒரு மணல்தேரியில் படுத்து ஜன்னல் வழி நிலவையும், இரவு விளக்கையும் பார்த்துக் கொண்டே அடுத்த படகுக்காகவும் அடுத்த கட்டளைக்காகவும் காத்திருக்கும் ஒரு மனித ஆயுதமாக உணர்ந்தபடியே இருந்தேன்.

நூல் :- உலோகம்.

ஆசிரியர்:- ஜெயமோகன்

பதிப்பகம் :- கிழக்கு.

விலை :- ரூ. 50.

டிஸ்கி:- இந்த விமர்சனம்  2011,அக்டோபர் முதல் வாரம் உயிரோசையில் வெளியானது.

4 கருத்துகள் :

மதுமதி சொன்னது…

இக்கதையை வாசித்திருக்கிறேன் சகோதரி..

சென்னையில் ஆகஸ்டு மாதம் 19 ம் நாள் பதிவர் சந்திப்பு தயாராகி வருகிறது.தங்கள் வரவையும் எதிர்பார்க்கிறோம்..

பிரபல பதிவர்கள் சங்கமிக்கும் சென்னை பதிவர் சந்திப்பு

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

நல்லதொரு நூலை அறிமுகப்படுத்தியதற்கு நன்றி சகோ ! வாழ்த்துக்கள்...

திண்டுக்கல் தனபாலன்

Thenammai Lakshmanan சொன்னது…

நன்றி மதுமதி .முடிந்தவரை முயற்சிக்கிறேன் வர.

நன்றி தனபால்

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...